மனநல மருத்துவத் துறையில் இந்திய அளவில் அறியப்பட்ட ஆளுமை, மருத்துவர் லட்சுமி விஜயகுமார். 1986இல் இவர் தொடங்கிய ‘சினேகா’ என்கிற அமைப்பு, தற்கொலைத் தடுப்புப் பணிகளில் நாட்டுக்கே முன்மாதிரியாக விளங்குகிறது. ஐ.நா. போன்ற உலக அளவிலான அமைப்புகளின் மனநல மேம்பாட்டுப் பணிகளிலும் பங்கேற்றுள்ள இவரது நேர்காணல்:
மனநலச் சிக்கல் குறித்த புரிதல் சமூகத்தில் முன்பைவிட மேம்பட்டுள்ளதா? - மக்களிடையே மனத்தடை முழுமையாக நீங்கவில்லை என்றாலும், விழிப்புணர்வு ஏற்பட்டுள்ளது. மனநல மருத்துவத்துக்கு அங்கீகாரம் கிடைத்துள்ளது; கரோனா பெருந்தொற்றுக் காலத்தில் மனநலம் எவ்வளவு முக்கியமானது என்பது பரவலாக உணரப்பட்டது. மனச்சிதைவு (Schizophrenia), இருமுனையக் கோளாறு (Bipolar disorder) போன்ற பிரச்சினைகள் எப்போதுமே இருக்கின்றன. கடந்த 30 ஆண்டுகளில் மன அழுத்தம், மனப் பதற்றம் (Anxiety) ஆகிய பிரச்சினைகள் அதிகரித்துள்ளன. மாற்றம் வேகமாக நடக்கிறது. நேற்று கற்றுக்கொண்டது, இன்றைக்குத் தேவையற்றதாகிவிடுகிறது.
குழந்தைகளும் மாணவர்களும் மன அழுத்தத்துக்கு உள்ளாவது அதிகரித்துள்ளதே? - ஏறத்தாழ 30 ஆண்டுகளுக்கு முன், தங்கள் குழந்தைகளின் படிப்பு குறித்த பெரிய திட்டமிடல்கள் பெற்றோருக்கு இல்லை. இப்போது குழந்தைகளின் படிப்பு குறித்துப் பெற்றோருக்குப் பல ஆசைகள் இருக்கின்றன. ஆனால், தங்கள் ஆசைகளைக் குழந்தைகள் மீது திணிக்கும்போது, பல குழந்தைகளால் சமாளிக்க முடிவதில்லை. எல்லாரும் ஒரே மாதிரி இருக்க முடியாது. ஒவ்வொருவருக்கும் ஒரு தனித்தன்மை இருக்கிறது.
மதிப்பெண்ணை முன்னிறுத்தும் கல்வி அமைப்பையும் நாம் குறைகூற வேண்டியுள்ளது. பொறியியல், மருத்துவப் படிப்புக்கான தேர்வுகளில் ஒரு மதிப்பெண், இரண்டு மதிப்பெண் வித்தியாசத்தில் மாணவர்கள் வாய்ப்பை இழக்கின்றனர். ஒரே ஒரு தேர்வில் வெற்றி பெறுவதை மட்டும் தகுதியாகக் கருதாமல், ஆண்டு முழுவதும் மாணவர் பெறும் மதிப்பெண், அவர்களது விருப்பம் போன்றவையும் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட வேண்டும்.
தற்கொலை எண்ணத்தில் இருந்த ஒரு பள்ளி மாணவி, 2024இல் என்னிடம் அழைத்து வரப்பட்டார். அம்மா, அப்பா இருவருமே மருத்துவர்கள். மாணவி மிக நன்றாகப் படிக்கக்கூடியவர். தேர்வு நேரத்தில் அவருக்கு டைபாய்டும் சின்னம்மையும் வந்துவிட்டன. 90% மதிப்பெண் எடுத்திருந்தாலும், மருத்துவப் படிப்பில் சேர முடியாததால், மன அழுத்தத்துக்கு அவர் உள்ளாகியிருந்தார். “பாடங்கள், டென்னிஸ், பரத நாட்டியம் எல்லாம் எனக்குக் கற்றுத்தந்தனர். தோல்வி ஏற்பட்டால் எப்படி எதிர்கொள்வது என யாருமே கற்றுத் தரவில்லை” என அந்த மாணவி கூறினார். பிரச்சினைக்குத் தீர்வு காணும் மனநிலையைச் சிறு வயதிலேயே குழந்தைகளிடம் உருவாக்க வேண்டும்.
பெண்கள் மனநலச் சிக்கல்களுக்கு உள்ளாகும் சாத்தியம் அதிகம் இருக்கிறதா? - எல்லா நாடுகளிலும் மன அழுத்தத்துக்கு அதிகம் உள்ளாவது பெண்கள்தான். ஆனால், அதிகமாக ஆண்கள்தான் தற்கொலை செய்துகொள்கின்றனர். பெண்கள் தங்களுக்குப் பிரச்சினை எனில், யாரிடமாவது அதைப் பற்றிப் பேசுகின்றனர். ஆண்கள் அப்படிப் பேசுவதால் தங்கள் மரியாதை பாதிக்கப்படும் எனக் கருதுகின்றனர்; பலர் மன அழுத்தத்தைச் சமாளிக்க மது அருந்துகின்றனர்; மதுவுக்குப் பழகி, நாளடைவில் தற்கொலை முடிவை எடுக்கின்றனர். இந்தியாவில் 30% தற்கொலைகள் குடிபோதையில் இருக்கும்போது நிகழ்கின்றன. இந்தியாவில் பெண்கள் இறப்பதற்கான காரணிகளில் பிரசவ மரணங்களைவிட, தற்கொலைகள் முன்னணி வகிக்கின்றன என்பதும் கவலைக்குரியது.
தற்கொலை குறித்த செய்திகளை வெளியிடும்போது ஊடகங்களின் பொறுப்பு என்ன? - ஊடகங்கள் இதில் பரபரப்பை உருவாக்க முயலக் கூடாது. படம் போட்டு, ஆர்வத்தைத் தூண்டும் தலைப்பு வைத்து, தற்கொலை செய்த விதத்தை விவரமாகக் கூறும்போது, அதைத் தொடர்ந்து தற்கொலைகள் அதிகரிக்கின்றன. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் தற்கொலையை அடுத்து, நாங்கள் ஓர் ஆய்வை மேற்கொண்டோம். ஊடகங்களின் பரபரப்பு பாணி அணுகுமுறையால், தற்கொலைகள் 15% அதிகரிப்பது ஆய்வில் தெரியவந்தது.
பல ஆண்டுகளுக்கு முன், ஒரு நிகழ்ச்சிக்காக இயக்குநர் பாலசந்தரைப் பார்க்கச் சென்றிருந்தேன். “தற்கொலைக்கு எதிரான விழிப்புணர்வைப் பரப்பும் உங்கள் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் தகுதி எனக்கு இல்லை” என மறுத்த அவர், தனக்கு வந்த சில கடிதங்களைக் காட்டினார்.
அவர் இயக்கிப் பெரும் வெற்றி பெற்ற ‘ஏக் துஜே கேலியே’ படத்தைப் பார்த்துவிட்டுச் சிலர் எழுதிய கடிதங்கள் அவை. அந்தப் படத்தின் நாயகனும் நாயகியும் முடிவில் தற்கொலை செய்துகொள்வார்கள். ‘எங்களுடைய பிரச்சினைக்காக நாங்களும் இதே முடிவை எடுக்கிறோம்’ என அந்தக் கடிதங்களில் எழுதப்பட்டிருந்தது. “எத்தனை பேர் இப்படித் தவறான முடிவெடுத்தார்களோ?” என பாலசந்தர் வருந்தினார்.
அதற்குத் தீர்வாக, “தற்கொலை எண்ணத்தில் இருப்பவர்கள், அதிலிருந்து வெளியேறி வாழ்க்கையை எதிர்கொள்வதுபோல ஒரு படம் எடுங்கள்” என நான் கூறினேன். அவர் ‘வானமே எல்லை’ எடுத்தார். அந்தப் படத்தைப் பார்த்துத் தற்கொலை முடிவைக் கைவிட்டதாகப் பலர் அவருக்குக் கடிதம் எழுதினர். ஊடகத்தால் தற்கொலையைப் பரபரப்பாக்கி, அதிகப்படுத்தவும் முடியும்; அதிலிருந்து மீண்டு வரலாம் எனக் கூறித் தடுத்துநிறுத்தவும் முடியும்.
‘சினேகா’வின் முக்கியமான பங்களிப்புகளைப் பகிர முடியுமா? - தேர்வு முடிவுகள் வெளியாகும்போது, மாணவர்கள் தற்கொலை செய்வது அதிகம் நிகழ்வது குறித்து ஓர் ஆய்வு நடத்தினோம். தற்கொலை செய்வோரில் மாணவிகள்தான் அதிகம். தேர்ச்சி பெறாத மாணவனுக்கு மீண்டும் படிக்கக் குடும்பத்தில் வாய்ப்பு அளிக்கப்படும். மாணவிகள் தேர்ச்சி பெறாதபோது அவர்களது படிப்பே நிரந்தரமாக நிறுத்தப்பட்டு விடுவதுதான் இதற்குக் காரணம். 2003இல் பெற்றோர் சார்பாக ஒரு கடிதத்தை அன்றைய தமிழகக் கல்வித் துறையிடம் அளித்தோம்.
“நாம் இந்த மாணவர்களுக்கு ஒரு நம்பிக்கையைக் கொடுத்தால் போதும். ஒன்று அல்லது இரண்டு பாடங்களில் தேர்ச்சி பெறாதோர்தான் தற்கொலை செய்வோரில் அதிகம். இதற்காக அவர்கள் ஓராண்டையே தவறவிடும் நிலை உள்ளது. தேர்வு முடிவுக்கு அடுத்த இரண்டு மாதங்களுக்குள் இந்த வகையினருக்காகக் கூடுதல் தேர்வு நடத்துங்கள்.
‘விரைவிலேயே மீண்டும் தேர்வு எழுதி மற்றவர்கள்போல நாமும் படிப்பைத் தொடரலாம்’ என்கிற நம்பிக்கையில் தற்கொலை முடிவுகள் தவிர்க்கப்படும்” எனக் கோரிக்கை வைத்தோம். எங்கள் ஆலோசனையைப் பாராட்டிய அன்றைய முதலமைச்சர் ஜெயலலிதா, அன்றே அதை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்காகச் செயல்படுத்த உத்தரவிட்டார். இந்தியாவிலேயே முதன்முதலாகத் தமிழகத்தில்தான் கூடுதல் தேர்வு முறை (Supplementary exam) கொண்டுவரப்பட்டது. தமிழகத்தில் தேர்வு முடிவுகளால் நிகழும் தற்கொலை, முன்பைவிட 70% குறைந்துள்ளது.
கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோயில் பகுதியில் மக்கள் பூச்சிக்கொல்லியை அருந்தித் தற்கொலை செய்வது முன்பு அதிகம் நிகழ்ந்தது. அதைத் தடுப்பதற்காக கண்டமங்கலம் என்னும் ஊரில் ஒவ்வொரு விவசாயிக்கும் தனித்தனி லாக்கர்களை அமைத்தோம். ‘பூச்சிக்கொல்லியைத் தோட்டத்திலோ, வீட்டிலோ வைக்காதீர்கள். இந்த லாக்கரில் வைத்துப் பூட்டுங்கள். தேவைப்படும்போது மட்டும் எடுத்துக்கொள்ளலாம்’ எனக் கூறினோம்.
இந்த நடைமுறைக்குப் பின்னர், கடந்த பத்து ஆண்டுகளாக அங்கே பூச்சிக்கொல்லி காரணமான தற்கொலை நிகழவில்லை. ‘குறைந்த செலவிலான தடுப்பு நடவடிக்கை’ என இதை உலகச் சுகாதார நிறுவனம் பாராட்டியது.தற்கொலைத் தடுப்புக்கெனத் தேசிய அளவிலான செயல்திட்டத்தை உருவாக்கி மத்திய அரசிடம் முன்வைத்துள்ளோம். இதை அரசு ஏற்றுக்கொண்டாலும், இன்னும் அமல்படுத்தவில்லை. அதை மாநில அளவில் அமல்படுத்துமாறு தமிழக அரசிடமும் கூறிவருகிறோம். விரைவில் அது அமலுக்கு வரும் என நம்புகிறேன்.
- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in