சிறப்புக் கட்டுரைகள்

மயன்மார் நிலநடுக்கம்: இந்தியாவுக்கு ஒரு பாடம்!

பாலசுப்ரமணியன் கோவிந்தசாமி

2025 மார்ச் மாதம் 28ஆம் தேதி, தென்கிழக்கு ஆசியாவிலேயே நிலநடுக்கச் செயல்பாடுகள் அதிகம் உள்ள பகுதியான சகைங் பிளவு (Sagaing Fault) அருகே 7.7 ரிக்டர் அளவு நிலநடுக்கம் ஏற்பட்டது. இது மயன்மாரில் பேரழிவுச் சேதத்தை ஏற்படுத்தியது. மோசமான கட்டமைப்பு / வடிவமைப்புகளால் பல கட்டிடங்கள் இடிந்து விழுந்தன.

குறிப்பாக, வலுவூட்டப்படாத செங்கல் அல்லது தரம் குறைந்த பொருள்களால் ஆன கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாகின. பொருளாதாரக் கட்டுப்பாடுகள், பழமையான கட்டிட விதிமுறைகள் போன்ற காரணிகள் சேதத்தை மேலும் அதிகரித்து, கணிசமான உயிரிழப்புகளை ஏற்படுத்தின.

அண்டை நாடான தாய்லாந்​திலும் நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் பாங்காக், நிலநடுக்க மையத்​திலிருந்து தொலைவில் இருந்​த​தால், தாக்கம் குறைவாகவே இருந்தது. 33 மாடிக் கட்டிடம் ஒன்று வடிவமைப்பு குறைபாடு காரணமாக இடிந்து விழுந்தது. பாங்காக்கின் சில பழைய கட்டமைப்பு​களில் உள்ள பலவீனங்கள் வெளிப்​பட்டன.

இருப்​பினும், மயன்மாருடன் ஒப்பிடு​கையில் பாங்காக்கில் உயிரிழப்புகள் குறைவு. நவீன நிலநடுக்க விதிமுறைகள், தீவிரமான நடைமுறைப்​படுத்​துதல், சிறந்த கட்டு​மானப் பொருள்கள் ஆகியவை பாங்காக்கைப் பாதுகாத்தன. இந்தச் சூழலில், நிலநடுக்கப் பாதிப்புகளை எதிர்​கொள்​வதில் இந்தியாவின் நிலவரம் குறித்தும் பார்க்க வேண்டும்.

கட்டமைப்பு வடிவமைப்பு வேறுபாடுகள்: நிலநடுக்கத்தின்போது ஏற்படும் சேதங்கள் கட்டமைப்பு வடிவமைப்பின் பங்கை அடிக்​கோடிட்டுக் காட்டு​கின்றன. புதுப்​பிக்​கப்பட்ட நிலநடுக்க விதிமுறை​களின் காரணமாக 2007, 2021 ஆண்டு​களில் கடுமையான சேதங்​களி​லிருந்து பாங்காக் தப்பியது. சர்வதேசக் கட்டிட விதிமுறை (IBC), கட்டிடங்கள் - பிற கட்டமைப்புகள் தொடர்பான அளவுகோல்கள் (ASCE 7) ஆகியவற்றின் அடிப்​படையில் இந்த விதிமுறைகள் உருவாக்​கப்​பட்டன.

சகைங் பிளவுக் கோடு மயன்மாரை ஊடறுத்துச் செல்வதால், அந்நாடு அதிக நிலநடுக்க ஆபத்தை எதிர்​கொள்​கிறது. ஆனால், அதைச் சமாளிக்க உள்கட்​டமைப்பு வசதி இல்லை. கட்டிட விதிமுறைகள் பழமையானவை மட்டுமல்ல, அவற்றைக்கூட மயன்மார் மக்கள் முறையாகக் கடைப்​பிடிப்​ப​தில்லை. விதிமுறை​களைப் பின்பற்றுவது செலவு பிடிக்கும் விஷயம் எனக் கருதிப் பலரும் அவற்றைத் தவிர்க்​கின்​றனர். பல கட்டமைப்பு​களுக்கு வலுவூட்​டப்படாத செங்கற்​களைப் பயன்படுத்து​கின்​றனர்.

இந்தியாவைப் பொறுத்​தவரை, நிலநடுக்கப் பாதிப்​பானது இந்தியத் தட்டு - யுரேசியத் தட்டு மோதலால் ஏற்படு​கிறது. இது ஆண்டுக்கு 47 மி.மீ. வேகத்தில் நகர்கிறது. இந்தியத் தரநிலைகள் பணியகம், இந்தியாவை நான்கு நிலநடுக்க மண்டலங்களாக (2,3,4,5) வகைப்​படுத்து​கிறது: மண்டலம் - ஐந்து மிக அதிகமான ஆபத்தை எதிர்​கொள்​கிறது; இது வட கிழக்கு இந்தியா, இமயமலைப் பகுதிகள், குஜராத்தின் ரான் ஆஃப் கட்ச், அந்தமான் - நிகோபார் தீவுகளை உள்ளடக்​கியது. டெல்லி, சிக்கிமை உள்ளடக்கிய மண்டலம் - நான்கு அதிக ஆபத்தை எதிர்​கொள்​கிறது. மிதமான ஆபத்தை எதிர்​கொள்ளும் மண்டலம் - மூன்றில் சென்னை, மும்பை, கொல்கத்தா உள்ளிட்ட முக்கிய நகரங்கள் உள்ளன. கேரள மாநிலம் முழுவதும் இந்த மண்டலத்​துக்​குள்தான் இருக்​கிறது.

அதிக ஆபத்து கொண்ட நகரங்கள்: மண்டலம் - ஐந்தில் உள்ள நகரமான குவஹாத்தி, இந்தியாவில் நிலநடுக்​கத்தால் மிகவும் பாதிக்​கப்​படக்​கூடிய நகரமாக உள்ளது. இது இந்தோ-மயன்மார் வளைவுக்கு அருகில் பிரம்​மபுத்​தி​ராவின் வெள்ளப்​பெருக்குப் பகுதியில் அமைந்​திருக்​கிறது. இந்நகரத்தில் 10% கட்டிடங்கள் மட்டுமே நிலநடுக்​கத்தைத் தாங்கும் திறன் கொண்டவை. பலவற்றில் வலுவூட்​டப்படாத செங்கல் அல்லது சரியான அடித்தள வடிவமைப்பு இல்லை. மண்டலம் - நான்கு, டெல்லி - இமயமலை நிலநடுக்கப் பகுதிக்கு அருகில் இருப்​பதால் கணிசமான ஆபத்தை எதிர்​கொள்​கிறது. சுமார் 80% கட்டிடங்கள் நிலநடுக்​கத்தால் பாதிக்​கப்​படும் அபாயத்தில் உள்ளன.

மண்டலம் - ஐந்தில் உள்ள குஜராத்தின் புஜ் நகரம் நிலநடுக்கப் பாதிப்பை அதிகம் எதிர்​கொள்ளும் நகரமாக உள்ளது. 2001இல் புஜ் நகரில் ஏற்பட்ட நிலநடுக்​கத்தில் 20,000க்கும் மேற்பட்டோர் உயிரிழந்​தனர். அகமதாபாத் நகரிலும் கடும் உயிர்ச் சேதம் ஏற்பட்டது.

கட்டமைப்பு வடிவமைப்பு ஒப்பீடுகள்: இந்தச் சூழலில், நிலநடுக்​கத்தை எதிர்​கொள்ளும் விஷயத்தில் இந்திய நகரங்கள் எந்த அளவுக்குத் தயாராக உள்ளன? இந்தியாவின் ஐ.எஸ். 1893:2016 விதிமுறை, மண்டலம் - ஐந்தில் நிலநடுக்​கத்தைத் தாங்கும் வடிவமைப்பைக் கட்டாய​மாக்கு​கிறது. ஆனால், இந்த விதிமுறை முறையாகப் பின்பற்​றப்​படு​வ​தில்லை. பல கட்டிடங்​களில் வலுவூட்​டப்படாத செங்கற்கள் பயன்படுத்​தப்​படு​கின்றன; மென்மையான மண்ணுக்கு ஏற்ப உயரமான கட்டிடங்​களில் சரியான அடித்தள வடிவமைப்பு இல்லை.

டெல்லி ஐ.எஸ். 1893:2016ஐப் பின்பற்றுகிறது. நவீன, உயரமான கட்டிடங்களில் வலுவூட்​டப்பட்ட கான்கிரீட் பிரேம்​களைப் பயன்படுத்து​கின்றனர். ஆனால், நடைமுறைப்​படுத்​துதல் ஒரே மாதிரியாக இல்லை. 2000ஆம் ஆண்டுக்கு முன் உள்ள பல உயரமான கட்டிடங்கள் ஃபிளாட்​-ஸ்லாப் (flat slab) அமைப்புகள் அல்லது வலுவூட்​டப்படாத செங்கற்​களைப் பயன்படுத்தி உருவாக்​கப்​பட்​டிருக்​கின்றன.

2001க்குப் பிறகு, குஜராத் கடுமையான நிலநடுக்​கங்களை எதிர்​கொள்​வதற்கான தரக் கட்டுப்​பாட்டு விதிமுறைகளை நடைமுறைப்​படுத்​தியது. மறுகட்​டமைக்​கப்பட்ட பல கட்டிடங்கள் சிறப்பாக வடிவமைக்​கப்​பட்​டுள்ளன. ஆனால், பழைய கட்டமைப்புகள், கிராமப்புறக் கட்டு​மானங்கள் வலுவூட்​டப்

படாத செங்கற்​களைப் பயன்படுத்தி உருவாக்​கப்​பட்டவை. புஜ் நகரின் மண் வெப்பத்தால் திரவமாதலுக்கு (Liquefaction) ஆளாகிறது (திரவ​மாக்கல் என்பது மண் போன்ற ஒரு திடப்​பொருளைத் திரவப் பொருளாக மாற்றும் ஒரு செயல்​முறை. இது இயற்கையாக நிகழ்​வதுதான் என்றாலும், மனிதர்​களின் செயல்​பாடு​களும் இதற்கு வழிவகுக்​கின்றன). இங்கு தேவைப்​படும் ஆழமான குவியல் அடித்​தளங்கள் (Pile foundations) பரவலாகப் பயன்படுத்​தப்​பட​வில்லை.

பாங்காக்கின் குறைந்த நிலநடுக்க ஆபத்து (0.1g முதல் 0.2g) சிறந்த வடிவமைப்பு நடைமுறை​களால் ஈடுசெய்​யப்​படு​கிறது. நவீன, உயரமான கட்டிடங்களில் வலுவூட்​டப்பட்ட கான்கிரீட் பிரேம்கள், வெட்டுச் சுவர்கள் (shear walls), ஆழமான குவியல் அடித்​தளங்கள் ஆகியவற்றைப் பயன்படுத்து​கின்றனர். இருப்​பினும், சமீபத்திய நிலநடுக்​கத்​தின்​போது, பழைய கட்டிடங்கள் சேதமடைந்தது பிளாட்​-ஸ்லாப் அமைப்பு​களின் பலவீனத்தைக் காட்டியது.

இந்தியா செய்ய வேண்டியவை: பாங்காக்கின் நவீன நிலநடுக்க விதிமுறைகள் இந்தியா​வுக்கு ஒரு நல்ல முன்மா​திரியை வழங்கு​கின்றன. விதிமுறைகளை வலுப்​படுத்துவது, மறுசீரமைப்பைத் துரிதப்​படுத்துவது, மேம்பட்ட கட்டமைப்பு அமைப்புகளை ஏற்றுக்​கொள்வது ஆகியவற்றின் மூலம், இந்தியா மீள்திறனை மேம்படுத்​திக்​ கொள்ள முடியும், எதிர்கால நிலநடுக்கச் சவால்​களுக்கு இந்தியாவின் நகர்ப்பு​றங்கள் சிறப்பாக, தயாராக இருப்பதை இதன் மூலம் உறுதி​செய்ய முடியும். மீள்திறன் சார்ந்த வடிவமைப்பு என்பது ஒரு தொழில்​நுட்ப அவசியம் மட்டுமல்ல - இது உயிர்​களைக் காப்பாற்​றுவதற்கான கட்டாய தார்மிகத் தேவையும்​கூட!

- தொடர்புக்கு: balathebest@gmail.com

SCROLL FOR NEXT