உலகின் மிக மகிழ்ச்சியான நாடு எது? ஃபின்லாந்து. அப்படித்தான் கூறுகிறது, சமீபத்தில் ஐ.நா. அவை வெளியிட்டிருக்கும் ஒரு கணக்கெடுப்பு. 147 நாடுகளுக்கிடையே நடத்தப்பட்ட கணக்கெடுப்பு இது. ஆண்டுதோறும் இப்படி ஒரு கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளாக ஃபின்லாந்து முதல் இடத்தைத் தக்கவைத்துக்கொண்டிருக்கிறது. அடுத்தடுத்த இடங்கள் டென்மார்க், ஐஸ்லாந்து, ஸ்வீடன் ஆகியவற்றுக்குக் கிடைத்திருக்கின்றன.
‘நார்டிக் பகுதி’ (Nordic Region) என அழைக்கப்படும் பிராந்தியத்தைச் சேர்ந்த இந்த நாடுகளில் வசிக்கும் மக்கள்தான் அவ்வளவு மகிழ்ச்சிகரமாக வாழ்கிறார்கள். வட ஐரோப்பாவில் உள்ள சில நாடுகள் நார்டிக் நாடுகள் எனப்படுகின்றன. டென்மார்க், ஸ்வீடன், நார்வே, ஃபின்லாந்து, ஐஸ்லாந்து, கிரீன்லாந்து போன்ற சில தீவுப் பகுதிகள் இவற்றில் அடங்கும். வரலாறு, புவியியல், கலாச்சாரக் காரணங்களால் இவை ஒன்றுபட்டுள்ளன. நார்டிக் என்ற சொல்லுக்கு ஸ்காண்டிநேவியன் மொழியில் வடக்கு என்று பொருள்.
அக்கறை உள்ள அரசுகள்: எல்லாம் சரி, எப்படி இவர்களால் இவ்வளவு மகிழ்ச்சியாக வாழ முடிகிறது என்பதுதான் கேள்வி. சொல்லப்போனால் ஃபின்லாந்தில் வரி விகிதம் அதிகம். நீண்ட காலத்துக்குக் கடும் குளிர்காலம் நீள்கிறது. எனினும் நார்டிக் நாடுகளில் அரசுகள் உறுதியாக உள்ளன. மக்களுக்கு மிகுந்த பாதுகாப்பை அளிக்கின்றன.
பெண்களுக்குப் பணியிடங்களில் சுதந்திரத்தையும் சமத்துவத்தையும் அளிக்கின்றன. இந்தப் பகுதிகளில் தற்கொலை சதவிகிதம் பெரிதும் குறைந்துவருகிறது. அதுமட்டுமல்ல, தனிநபர் சராசரி வருமானம் இங்கு அதிகம்.
அமெரிக்கா, ஜெர்மனி போன்றவை இந்தப் பட்டியலில் முதல் 20 இடங்களில் இருந்து வீழ்ந்திருக்கின்றன. சமூக ஊடகங்கள், மாறுபட்ட சூழல்கள், மனநலம் குறித்த விழிப்புணர்வு போன்றவை இப்படி மாறுபட்டதற்குக் காரணமாக இருக்கக்கூடும். உக்ரைன் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு பட்டியலில் கொஞ்சம் முன்னேறி வந்திருக்கிறது. போர்ச் சூழலில், ஒன்றிணைந்த தேசிய ஒற்றுமை இதற்குக் காரணமாக இருக்கக்கூடும்.
உணர்வுகளுக்கு மதிப்பெண்: மக்களின் மகிழ்ச்சி அளவை எப்படி இவர்கள் அளவெடுக்கின்றனர்? ஐ.நா. அவை இதற்காக ‘கால்அப்’ (Gallup) என்ற அமைப்பைப் பயன்படுத்திக்கொள்கிறது. பங்கேற்பவர்களிடம் ‘நீங்கள் எந்த அளவுக்கு மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை பூஜ்யத்திலிருந்து 10 என்கிற எண்ணுக்குள் ஒன்றைக் குறிப்பிட்டு உணர்த்துங்கள்’ என்கிறது. மிக வருத்தமாக இருந்தால் பூஜ்ஜியம்.
மகிழ்ச்சியின் உச்சத்தில் இருந்தால் 10. தனிநபர் வருமானம், சமூக ஆதரவு, ஆரோக்கியமான ஆயுள், தாங்கள் விரும்புவதைத் தேர்ந்தெடுக்கும் சுதந்திரம், நாட்டில் நிலவும் தர்ம சிந்தனை, அரசிடம் அவர்கள் கொண்டுள்ள நம்பிக்கை போன்றவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்த மகிழ்ச்சியின் அளவு கணக்கிடப்படுகிறது. ஒவ்வோர் ஆண்டும் ஒவ்வொரு நாட்டில் உள்ள 1,000 பேரிடம் இந்தக் கணக்கெடுப்பு நடத்தப்படுகிறது. இப்படி நடத்தப்பட்ட சமீபக் கணக்கெடுப்பில்தான் ஃபின்லாந்தைச் சேர்ந்தவர்கள் சரசரியாக 7.7 என்கிற மதிப்பெண்ணை வெளிப்படுத்தி இருக்கிறார்கள் (உலக அளவில் இது 5.6 மட்டுமே).
இந்தக் கணக்கெடுப்பில் வருமானம் குறைவாக இருந்தாலும், தாங்கள் மகிழ்ச்சியாக இருப்பதாக லத்தீன் அமெரிக்காவைச் சேர்ந்த பலர் கூறியிருக்கிறார்கள். தாங்கள் அடிக்கடி சிரிப்பதாகவும் மகிழ்ச்சியடைவதாகவும் கூறியிருக்கிறார்கள். இது குறித்த ஆய்வில் அங்கு உள்ளவர்கள் தனியாக உணவு உண்ணாமல் பலரோடு சேர்ந்து சாப்பிடுவதால் தங்கள் மகிழ்ச்சி நேரம் அதிகரிப்பதாக, ஒரு முடிவுக்கு வந்திருக்கிறார்கள்.
லத்தீன் அமெரிக்காவில் உள்ளவர்கள் குடும்பமாகவோ நண்பர்களுடனோ சேர்ந்து வாரத்துக்கு ஒன்பது முறையாவது சாப்பிடுகிறார்களாம். இதன் காரணமாக அவர்கள் தனிமை உணர்வு பெரிதும் குறைகிறது. அமெரிக்காவில் தனியாகச் சாப்பிடும், வாழும் பழக்கம் அதிகரித்துவருகிறது. அங்கு நடத்தப்பட்ட ஒரு கணக்கெடுப்பில் 18% இளைஞர்கள் தங்களுக்கு நெருக்கமானவர் என்று யாரையும் குறிப்பிட முடியாது என்கிறார்கள்.
கணக்கெடுப்பின் முக்கியத்துவம்: பொருளாதார வளர்ச்சி மட்டுமே ஒரு நாட்டின் மக்களை மகிழ்ச்சிகரமாக ஆக்கிவிடாது என்பதை இது உணர்த்துகிறது. சமூக இணைப்பு என்பது வாழ்வின் தரத்தை நிர்ணயிக்கும் மிக முக்கியமான அளவீடு என்பதும் இதன்மூலம் தெரிகிறது. சரி, இந்த 147 நாடுகளில் இந்தியா எங்கே இருக்கிறது? 118ஆவது இடத்தில்! (கடந்த ஆண்டு பெற்றிருந்த 126 என்கிற இடத்தைவிட இப்போது பரவாயில்லை என்று வேண்டுமானால் ஆறுதல் பட்டுக்கொள்ளலாம்).
வியப்பை அளிக்கக்கூடிய ஒரு புள்ளிவிவரம் என்ன தெரியுமா? பாகிஸ்தான் நம்மைவிட முன்னணியில் இருக்கிறது (109). தெற்கு ஆசிய நாடுகளில் நேபாளம் தன்னை அதிக மகிழ்ச்சிகரமான நாடாக வெளிப்படுத்திக்கொண்டுள்ளது. 92ஆவது இடத்தில் அந்நாடு இருக்கிறது. தங்கள் வாழ்க்கை மிகவும் துயரமாக இருக்கிறது என்பதை உணர்த்தும் வகையில் இந்தப் பட்டியலில் கடைசி இடத்தைப் பெற்றிருப்பது ஆப்கானிஸ்தான். தொடர்ந்து போரினால் சீரழிந்துவரும் நாடு இது.
இந்த மக்கள் 1.4 என்றுதான் தங்கள் மகிழ்ச்சியின் அளவை உணர்த்தியிருக்கிறார்கள். அரசியல், பொருளாதாரம், சமூகச்சூழல் போன்ற பல கோணங்களில் வஞ்சிக்கப்பட்டுள்ள மக்கள் இவர்கள்! இந்தப் புள்ளிவிவரத்திலிருந்து பொருளாதார வளர்ச்சி அவசியம்தான் என்றாலும், அதை மட்டுமே எல்லாவற்றுக்கும் முன்னிறுத்துவது தவறு என்பது தெரியவந்திருக்கிறது. இந்தப் பின்னணியில் பெரிதும் பின்தங்கியுள்ள தெற்காசிய நாடுகள் மற்ற அம்சங்களில் கவனம் செலுத்தத் தயாராக வேண்டும். அதுவே மக்களின் மகிழ்ச்சியை உறுதிப்படுத்தும்.
- தொடர்புக்கு: aruncharanya@gmail.com