2024ஆம் ஆண்டுக்கான உலகளாவிய காலநிலை அறிக்கை சமீபத்தில் வெளியிடப்பட்டிருக்கிறது. இந்த முக்கியமான அறிக்கையை உலக வானிலை ஆய்வு அமைப்பு (World Meteorological Organisation) தயாரித்திருக்கிறது. காலநிலை மாற்றம் எவ்வளவு தீவிரமானதாக மாறிவருகிறது என்பதை இந்த அறிக்கையின் தரவுகள் தெளிவாக எடுத்துக்காட்டுகின்றன.
அதிகரித்துவரும் வெப்பம்: தொழிற்புரட்சிக்கு முந்தைய காலத்துடன் ஒப்பிடும்போது உலகளாவிய சராசரி வெப்பநிலை எவ்வளவு அதிகரித்திருக்கிறது என்பதே காலநிலை மாற்றத்தின் முக்கியமான அலகு. உலகளாவிய சராசரி வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸுக்கு மேல் அதிகரிக்கக் கூடாது எனவும், முடிந்தால் அதை 1.5 டிகிரி செல்சியஸுக்குள் கட்டுப்படுத்த வேண்டும் எனவும் காலநிலைக்கான பாரிஸ் ஒப்பந்தத்தில் தெரிவிக்கப்பட்டு
இருந்தது.
175 ஆண்டுகளாக வெப்பநிலைத் தரவுகள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அந்த அடிப்படையில் பார்த்தால், இதுவரை ஆவணப்படுத்தப்பட்ட ஆண்டுகளிலேயே அதிக வெப்பநிலை கொண்டது 2024தான். 2015 முதல் 2024 வரையிலான 10 ஆண்டுகளுமே மிகவும் அதிக வெப்பநிலை கொண்டிருந்தன என்றும் இந்த அறிக்கை கூறுகிறது. 2024ஆம் ஆண்டின் உலக சராசரி வெப்பநிலை தொழிற்புரட்சிக்கு முந்தைய அளவைவிட 1.55 டிகிரி அதிகரித்திருந்தது.
அதாவது, உலக வெப்பநிலை முதன்முறையாக 1.5 டிகிரி செல்சியஸ் அளவுக்கு அதிகரித்திருக்கிறது. ஓர் ஆண்டை மட்டுமே வைத்து 1.5 டிகிரி உச்சவரம்பை எட்டிவிட்டோம் என்று சொல்லிவிட முடியாது. ஆனால், இது ஓர் ஆரம்பக்கட்ட எச்சரிக்கை என்பதில் சந்தேகமில்லை. அடுத்தடுத்த ஆண்டுகளிலும் இதே வெப்பநிலை தொடர்ந்தால் பாரிஸ் ஒப்பந்தத்தின் அதிகபட்ச இலக்கை எட்ட முடியாத சூழல் ஏற்படும்.
சில ஆண்டுகளுக்கு முன்பாக இந்த உச்சவரம்புகளைப் பற்றிப் பல ஆய்வுகள் நடந்தன. அப்போது இருந்த காலநிலைச் செயல்பாடுகளை முன்வைத்தே இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டிருந்தன. கரிம உமிழ்வுகள் இப்படியே தொடர்ந்து, சராசரி வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியஸைத் தாண்டிவிட்டால், பிறகு வெப்பநிலையைக் கட்டுப்படுத்தவே முடியாது எனப் பல காலநிலை வல்லுநர்கள் கூறியிருக்கிறார்கள். 2 டிகிரி செல்சியஸ் உச்சவரம்புக்குள் இருப்பதற்கும் நாம் அதிகமான முயற்சிகள் எடுக்க வேண்டும் என்று அவர்கள் எச்சரித்திருந்தார்கள். அந்தப் பின்னணியில் பார்த்தால் இந்த வெப்பநிலைத் தரவு கவலையளிக்கக்கூடியது. நாம் ஏற்கெனவே உச்சவரம்பின் முதற்படியைத் தொட்டுவிட்டோம்.
1.5 டிகிரி செல்சியஸ் என்கிற இலக்கைத் தாண்டும்போது பல புதிய சிக்கல்கள் உருவாகலாம். காலநிலையின் பல சுழற்சிகளும் வலைப்பின்னல்களும் நிரந்தரமாக அறுபடலாம். அதற்கான முன்னேற்பாடுகள் நம்மிடம் இல்லை. அது மட்டுமல்லாமல், ஒரு குறிப்பிட்ட உச்சவரம்பைத் தாண்டிய பிறகு, ஏற்கெனவே இருக்கும் பாதிப்புகளின் தீவிரத்தன்மையும் அதிகரிக்கக்கூடும்.
இதை Positive Feedback Loop என்பார்கள். பூமியின் காலநிலைக்கும் இந்தப் பண்பு உண்டு என ஏற்கெனவே வல்லுநர்கள் தெரிவித்திருக்கிறார்கள். ஆகவே, புதிய பாதிப்புகள் மட்டுமல்லாது, ஏற்கெனவே நாம் எதிர்கொண்டுவரும் பாதிப்புகளும் தீவிரமடையலாம். அதற்கும் நாம் தயாராக இருக்க வேண்டும். பொதுவாக, சூரியனிலிருந்து வரும் வெப்பத்தில் 90% கடலில் சென்று சேர்கிறது. ஆகவே, கடல் வெப்பத்தின் அளவும் காலநிலையின் ஒரு முக்கிய அலகாகப் பார்க்கப்படுகிறது. 2024இல் கடல் வெப்பம் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கிறது.
கடந்த 65 ஆண்டுகளில் இல்லாத அளவுக்குக் கடலில் சேரும் வெப்பம் அதிகரித்திருக்கிறது. இதனால் கடல் சூழல் பாதிக்கப்படும் எனவும், வெப்பமண்டலக் கடற்பகுதிகளில் புயல்கள் தீவிரமடையும் எனவும் இந்த அறிக்கை தெரிவிக்கிறது.
கடலுக்கு ஏற்படும் பாதிப்புகள்: வெப்பம் மட்டுமல்லாது, கடலின் பல்வேறு அம்சங்களிலும் சென்ற ஆண்டு பல மாற்றங்கள் ஏற்பட்டிருக்கின்றன. 2024இல் கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரித்திருக்கிறது. குறிப்பாக, இந்தியப் பெருங்கடல், தென்கடல் ஆகிய பகுதிகளில் உள்ள கடல்நீரின் அமிலத்தன்மை அதிகரித்திருக்கிறது. 1993 முதல் 2002 வரையிலான காலக்கட்டத்தில் கடல் மட்ட உயர்வானது ஆண்டுக்கு 2.1 மி.மீ. என்கிற அளவில் இருந்தது. 2015-2024 காலக்கட்டத்தில் இது 4.7 மி.மீ ஆக உயர்ந்திருக்கிறது. அதாவது, கடல்மட்ட உயர்வு இரு மடங்காக அதிகரித்திருக்கிறது. இந்தப் போக்கு தொடர்ந்தால், கடலோரத்தில் வசிக்கும் மக்கள் அதிகமான பாதிப்புக்கு உள்ளாக நேரிடும்.
1979 முதல் கடலில் உள்ள பனிப்பாறைகளின் தரவுகள் சேகரிக்கப்பட்டிருக்கின்றன. எல்லா ஆண்டுகளோடும் ஒப்பிடும்போது 2024இல் கடல் பனிப்பாறை மிகவும் குறைவாக இருந்தது என்று இந்த அறிக்கை தெரிவிக்கிறது. குறிப்பாக, ஆர்க்டிக் பகுதிகளில் உள்ள பல பனிப்பாறைகள் சென்ற ஆண்டு உருகியிருக்கின்றன. நிலப் பகுதிகளைப் பொறுத்தவரை நார்வே, ஸ்வீடன், ஸ்வால்பார்ட் ஆகிய பகுதிகளில் உள்ள பனிப்பாறைகள் அதிகமாக உருகியிருக்கின்றன.
பேரிடர்களும் இடப்பெயர்வுகளும்: கடந்த ஆண்டில் ஒட்டுமொத்தமாக 151 தீவிர வானிலை நிகழ்வுகள் ஏற்பட்டிருக்கின்றன. வெப்பமண்டலப் புயல்கள், வெப்ப அலைகள், காட்டுத்தீ நிகழ்வுகள், வறட்சி எனப் பல பேரிடர்கள் நிகழ்ந்திருக்கின்றன. இதுபோன்ற நிகழ்வுகளாலும் காலநிலை சார்ந்த பிரச்சினைகளாலும் கடந்த ஆண்டில் மட்டும் உலக அளவில் 3.6 கோடி பேர் இடம்பெயர்ந்திருக்கிறார்கள். காலநிலைப் பிரச்சினைகளால் ஏற்படும் இடப்பெயர்வுகள் கடந்த பதினாறு ஆண்டுகளாகச் சேகரிக்கப்பட்டுவருகின்றன. இந்தப் பதினாறு ஆண்டுகளிலும் மிக அதிகமான இடப்பெயர்வு ஏற்பட்டிருப்பது 2024இல்தான். இது இப்படியே தொடர்ந்தால் பல சமூகச் சிக்கல்கள் தீவிரமடையலாம்.
சுருக்கமாகச் சொல்ல வேண்டுமென்றால், கடந்த ஆண்டில் பல உலகளாவிய காலநிலை அலகுகள் புதிய உச்சத்தைத் தொட்டிருக்கின்றன. “நாம் விழித்துக்கொண்டாக வேண்டும், அதற்கான அறைகூவலே இந்த அறிக்கை” என்கிறார் உலக வானிலை அமைப்பின் பொதுச்செயலாளர் செலஸ்ட் சாலோ. காலநிலை பெரிய அளவில் மாறி வருகிறது என்று இந்த அறிக்கை அழுத்தம்திருத்தமாக முன்வைக்கிறது. “அலாரத்தை அணைத்துவிட்டுத் தூங்குவதுபோல நாம் இனியும் காலம் தாழ்த்த முடியாது” என்கிறார் அறிவியலாளர் சாரா பெர்க்கின்ஸ்.
இவ்வளவு பாதிப்புகளை உலகம் எதிர்கொண்ட அதே 2024இல், கரிம உமிழ்வுகளும் உச்சத்தைத் தொட்டிருக்கின்றன என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். ஒருபக்கம் நெருப்பு கொழுந்துவிட்டு எரிந்துகொண்டிருக்கும்போது, அதை அணைக்க எந்த முயற்சியும் செய்யாமல், புதிய இடங்களில் தீவைப்பதுபோன்ற அபத்தமான செயல்பாடு இது. அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் ஒரு காலநிலை மறுப்பாளர். பதவிக்கு வந்த உடனேயே பாரிஸ் ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்காவை அவர் விலக்கினார்.
உலகளாவிய காலநிலைச் செயல்பாடுகளில் இது பெரிய தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல், காலநிலை மறுப்பாளர்களும் புதைபடிவ எரிபொருள் ஆதரவாளர்களும் இப்போதும் தீவிரமாகச் செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்கள். இந்தப் பின்னணியில் இதுபோன்ற அறிக்கைகள் முக்கியமானவை. உடனடியாகவும் தீவிரமாகவும் நாம் செயல்பட வேண்டியது எவ்வளவு அவசியம் என்பதை இந்த அறிக்கை மீண்டும் வலியுறுத்துகிறது. இதுபோன்ற அறிக்கைகளைப் பார்த்த பின்னராவது காலநிலைச் செயல்பாடுகள் முடுக்கிவிடப்படுமா என்பதே நம் முன் இருக்கும் முக்கியமான கேள்வி.
- தொடர்புக்கு: nans.mythila@gmail.com