அண்மையில், வாட்ஸ்அப் தகவல் ஒன்று பரவலாகப் பகிர்ந்துகொள்ளப்பட்டது. ‘பூமி சூரியனை நீள் வட்டப்பாதையில் சுற்றிவரும்போது, ஒரு பகுதியில் இரண்டுக்கும் இடையில் சற்று தூரம் குறைவாகவும் மற்றொரு பகுதியில் அதிகமாகவும் இருக்கும். இதை பெரிஹீலியன் (perihelion), அப்ஹீலியன் (aphelion) என்று கூறுவோம்.
பெரிஹீலியன் சமயத்தில் வெப்பம் அதிகரிக்கும், இதனால் பூமிக்கும் மனிதர்களுக்கும் பெரும் பாதிப்பு ஏற்படும்’ என்று பரப்பப்பட்ட தகவல், நன்கு படித்தவர்களாலும் நம்பப்பட்டது. இதுபோன்ற முழுமையற்ற, தவறான புரிதல்களை உருவாக்கும் தகவல்கள், சமூகத்தில் ஏற்படுத்தும் பாதிப்புகள் சொல்லி மாளாதவை.
அறிவியல் குறித்த பார்வையும் ஆர்வமும் அரும்பாடுபட்டு வளர்த்தெடுக்கப்பட்டவை. தகவல் தொழில்நுட்பம் அபரிமிதமாக வளர்ந்திருக்கும் இந்தக் காலக்கட்டத்தில், அறிவியலுக்குப் புறம்பான தகவல்கள் பரவுவதைத் தடுப்பதும், உரிய விளக்கங்களை அளிப்பதும் முக்கியமானது.
மாறிவந்த பார்வை: ஒருமுறை முதுகுளத்தூர் பள்ளி ஒன்றில் நடந்த மாணவர்கள் சந்திப்பின்போது, ‘மழை வர என்ன செய்ய வேண்டும்?’ என்று கேட்டேன். “மரம் நட வேண்டும்!” என்று ஒரு மாணவன் சொன்னான். இது ஒரு முழுமையான பதில் இல்லையென்றாலும், ஒரு வகையில் அறிவியல் சார்ந்தது எனலாம். நான் சிறுவனாக இருந்தபோது இதே கேள்விக்கு, ‘பூஜை செய்தால் மழை வரும்’ என்று என் தாத்தா கூறியது அப்போது நினைவுக்கு வந்தது.
முதுகுளத்தூர் பள்ளி மாணவனுக்குச் சென்றடைந்த அறிவியல் பார்வையை உருவாக்கியதில் நம் அறிவியலாளர்களின் பங்கு மிக முக்கியமானது. 1981இல் குன்னூரில் பி.என்.ஹக்சர் உள்ளிட்டோர் பங்குபெற்ற அறிவியல் மனப்பான்மை பிரகடனக் கூட்டத்தில், ‘நாட்டின் வளர்ச்சிக்கு அறிவியல் தொழில்நுட்பங்களின் நடைமுறைப்படுத்துதல் முக்கியப் பங்கு வகித்தது.
அத்துடன், அதைப் புரிந்துகொள்வதற்கும், மூடநம்பிக்கைகள் அகன்று விழிப்புணர்வு பெறுவதற்கும் அறிவியல் பிரச்சாரத்தை மக்களிடம் தீவிரப்படுத்த வேண்டும்’ என்று விஞ்ஞானிகள் ஒன்றிணைந்து பிரகடனம் செய்தனர். அதன் அடிப்படையில் என்.சி.எஸ்.டி.சி. (NCSTC) என்கிற அமைப்பு உருவாக்கப்பட்டு, அறிவியல் பிரச்சாரம் தீவிரப்படுத்தப்பட்டது.
இப்படியாக அறிவியல் கல்வியும் அறிவியல் பரப்புதலும் தீவிரப்படுத்தப்பட்டாலும் இன்றைய காலக்கட்டத்திலும் அறிவியல் புரிதல் மேம்படவில்லை என்றே தெரிகிறது. மேலோட்டமான புரிதல், மேற்சொன்ன வகையில் அரைகுறை அறிவாகவே பெரும்பாலானோரிடமும் புதைந்துள்ளது.
அறிவியலைச் சோதனை மூலம் செய்து பார்க்கும் அறிவியல் வழிமுறை பள்ளிகளிலேயே அவசியம் என்பதை இது உணர்த்துகிறது. இந்தச் சோதனைகளை உற்றுநோக்குவதன் மூலம் மாணவர்களுக்கு அறிவியல் புரிதல் மேம்பட வாய்ப்பு உள்ளது. அதேபோன்று, மாணவர்களும் சுயமாகச் சோதனை செய்துபார்த்து விடை காணவோ அல்லது சந்தேகம் இருந்தால் பிறரிடம் கேட்டுத் தெரிந்துகொள்ளவோ ஒரு தூண்டுதல் தேவை.
ஸ்டெம் திட்டம்: இந்த வகையில், ‘ஸ்டெம்’ (STEM-Science, Technology, Engineering and Maths) திட்டம் மூலம் அறிவியல் பட்டதாரிகளைக் கொண்டு நடுநிலைப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல் கோட்பாடுகளை எளிய அறிவியல் சோதனைகள் மூலம் விளக்கிவருகிறது தமிழ்நாடு அரசு. இது அறிவியல் புரிதலை மேம்படுத்தும் ஒரு முக்கியமான செயல் திட்டம். பள்ளிகளில் இந்நிகழ்வுகள் ‘வானவில் மன்றங்கள்’ என்கிற பெயரில் நடத்தப்படுகின்றன. இதை, தமிழ்நாடு அறிவியல் இயக்கம் உள்ளிட்ட சில தன்னார்வ அமைப்புகள் அரசுடன் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.
சுமார் 700க்கும் மேற்பட்ட அறிவியல் பட்டதாரிகள் மாதம்தோறும் சுமார் 20-25 பள்ளிகளில் இத்திட்டம் மூலம் அறிவியல், கணிதச் செயல்பாடுகளைச் செய்துவருகின்றனர். ‘வானவில் மன்றக் கருத்தாளர்கள்’ என்று அழைக்கப்படும் இவர்கள் மூலம், மாதத்துக்குச் சுமார் 15,000 பள்ளிகளில் இந்நிகழ்வு நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் செய்முறை அறிவியல் நிகழ்வு மூலம் அறிவியல், கணிதக் கோட்பாடுகள் மட்டுமல்லாது, அவை எந்தெந்தத் தொழில்நுட்பங்களில் எவ்வாறு பயன்படுத்தப்படுகின்றன என்கிற எடுத்துக்காட்டுகளும் சொல்லப்படுகின்றன. இது முறையான ஆசிரியர்கள் மூலம் கற்பிக்கப்படும் அறிவியலுக்குப் பக்கபலமாக இருக்கிறது என்றே சொல்லலாம்.
வானவில் மன்றக் கருத்தாளர்களுக்கு மாதாந்திரப் பயிற்சியும் பரிசீலனையும் நடைபெறுகின்றன. இதில் மாணவர்கள் எவ்வாறு கற்றுக்கொள்கிறார்கள் என்பது குறித்தும் அவர்களிடம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது என்பது குறித்தும் அறிந்துகொள்ளப்படுகிறது. அதற்கேற்றபடி பயிற்சி மேம்படுத்தப்படுகிறது.
பள்ளிகளில் சோதனை செய்து காண்பிக்கும்போது கேள்வி கேட்கவும் தூண்டப்படுகிறது. இந்தக் கேள்விகளுக்கு மாநில அளவில் நிபுணர்கள் மூலம் விடைகளைப் பெறவும் முயற்சித்துவருவதாகக் கூறுகின்றனர். பல்வேறு மாவட்டங்களில் இக்கருத்தாளர்களின் அறிவியல் திறனை மேம்படுத்த தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தினர் நுண்ணிய அளவில் பயிற்சி அளித்தும் வருகின்றனர். ஒரு மாயாஜால நிகழ்ச்சிபோல அறிவியல் பரிசோதனைகளைச் செய்துகாட்டாமல் ஏன், எப்படி என்கிற காரணத்தோடு இப்பயிற்சிகளில் விளக்கம் அளிக்கப்படுகிறது.
தேடல்கள்... கேள்விகள்... மதுரை மாவட்டத்தில் இக்கருத்தாளர்களின் அறிவியல் புரிதலை மேம்படுத்த பேராசிரியர்கள் குழு மாதந்தோறும் இணைய வழியில் மிகவும் ஆழமான முறையில் ஏன், எப்படி என்கிற கேள்விகளின் அடிப்படையில் பயிற்சி அளித்துவருகின்றனர். இக்குழுவில் நானும் இருப்பதால் அதன் தாக்கத்தை அறிய முடிகிறது.
அறிவியல், கணிதக் கோட்பாடுகள்வழி உருவாகும் சிந்தனை என்பது மிகவும் ஆழமாகப் புரியவைக்கப்படுகிறது. எடுத்துக்காட்டாக ‘மிதைல் ஆரஞ்சு’ என்கிற நிறங்காட்டி அமிலத்தில் ஒரு நிறமாகவும், காரம் சேர்க்கும்போது அதனுடைய மூலக்கூறில் ஏற்படும் மாற்றம் காரணமாக அதன் நிறம் வேறாகவும் மாறுகிறது என்கிற புரிதல் உருவாக்கப்பட்டது. இதன் மூலம் கருத்தாளர்களிடம் ஒரு நுண்ணிய அறிவையும் ஆச்சரியத்தையும் உருவாக்க முடிகிறது. இந்த அறிவும் ஆச்சரியமும் பள்ளி மாணவர்களுக்குக் கடத்தப்படுகின்றன.
இதேபோல் இந்நிகழ்வில் பங்குபெறும் மாணவர்களிடமும் பாடப்புத்தகத்துக்கு அப்பால் விநோதமான செய்முறைகளும் கேள்விகளும் எழுந்தவண்ணம் உள்ளன. மதுரை, டி.கல்லுப்பட்டி ஒன்றியத்தில் இருந்து ஒரு மாணவன் வாட்ஸ்அப் வழியாக ஒரு காணொளியை எனக்கு அனுப்பியிருந்தான். அதில் தீக்குச்சியை எரிக்கும் முன் அதன் மருந்து தடவிய பகுதியைக் காந்தத்தில் காண்பிக்கிறான்.
அப்போது காந்தம் அக்குச்சியின் மருந்தை ஈர்க்கவில்லை. பின்னர் தீக்குச்சியை எரித்து, அதன் சாம்பலில் காந்தத்தைக் காண்பிக்கிறான். அது சாம்பலை ஈர்க்கிறது. இது ஏன் எனக் கேட்கிறான். இதைத்தான் அறிவதற்கான ஆர்வம் (curiosity) என்கிறோம். இதை வானவில் மன்றங்கள் வளர்த்தெடுக்கின்றன. இது ஓர் ஆழமான அறிவியல் புரிதலை உருவாக்கும் என நம்பிக்கை கொள்வோம்.
- தொடர்புக்கு: rajamanickamponniah@gmail.com