சிறப்புக் கட்டுரைகள்

பிரசவ இறப்புகளை முழுமையாகத் தவிர்ப்போம்!

கு.கணேசன்

இன்று உலக அளவில் கொண்டாடப்படும் உலக நலவாழ்வு நாளை ஒட்டி (World Health Day), உலகச் சுகாதார நிறுவனம் (WHO) இந்த ஆண்டு முழுவதும் கர்ப்பிணிகளின் நலத்தையும், பிறக்கும் குழந்தைகளின் நலத்தையும் மேம்படுத்தும் விதமாக, ‘ஆரோக்கியமான தொடக்கம், நம்பிக்கையான எதிர்காலம்’ (Healthy beginnings, hopeful futures) என்னும் கருப்பொருளை முன்னிறுத்திச் செயல்பட உள்ளது.

தற்போது உள்ள தரவுகளின் அடிப்​படை​யில், உலகில் ஒவ்வோர் ஆண்டும் ஏறத்தாழ 3 லட்சம் பெண்கள் கர்ப்​பத்​தி​னாலோ, பிரசவம் காரணமாகவோ தங்கள் உயிரை இழக்கின்​றனர்; 20 லட்சத்​துக்கும் அதிகமான குழந்தைகள் பிறந்து முதல் மாதம் முடிவதற்குள் இறந்து​விடு​கின்றன. மேலும், 20 லட்சம் குழந்தைகள் இறந்தே பிறக்​கின்றன. இந்த இறப்புகள் எல்லாமே ‘தடுக்​கக்​கூடிய இறப்புகள்’ (Preventable deaths) என்னும் வகைமையில் வருவதால், இவற்றுக்கான காரணி​களைக் கட்டுப்​படுத்து​வதில் அதிகக் கவனம் செலுத்த வேண்டும் என்று உலக நாடுகளிடம் உலகச் சுகாதார நிறுவனம் வலியுறுத்து​கிறது.

அடுத்து, 2030க்குள் ‘ஒரு லட்சம் பிரசவங்​களில் 70க்கும் குறைவாகவே தாய் இறப்புகள் (Maternal deaths) இருக்க வேண்டும்’ என்பது ஐ.நா. கொடுத்​திருக்கும் இலக்கு. இப்போது உள்ள பிறப்பு – இறப்பு விகிதங்​களைப் பார்த்​தோ​மா​னால், உலகளவில் ஐந்தில் நான்கு நாடுகள் 2030க்குள் கர்ப்​பிணி​களின் உயிர்​வாழ்வை மேம்படுத்து​வதற்கான இலக்குகளை அடையத் தவறிவிட்டன.

இனியும் இந்தப் போக்கு நீடிக்​கு​மா​னால், மூன்றில் ஒரு நாடு புதிதாகப் பிறக்கும் குழந்தை​களின் இறப்பு​களைக் குறைப்​ப​தற்கான இலக்குகளை அடையத் தவறிவிடும். எனவே, உலகச் சுகாதார நிறுவனம் எடுத்​திருக்கும் இந்த முன்னெடுப்பு காலத்​துக்கும் தேவையானது என்று வரவேற்​கப்​படு​கிறது.

என்னென்ன காரணங்கள்? - வறுமை, கல்வியறிவு இல்லாதது, குழந்தைத் திருமணம், மருத்​துவச் சேவைகளின் பற்றாக்​குறை, தொலைதூரங்​களில் உள்ள பல்நோக்கு மருத்​துவ​மனைகளை அணுகு​வதில் சிரமம், ‘வீட்டில் சுகப்​பிரசவம் - தனிமனித உரிமை’ என்பது போன்ற போலி அறிவியல் நடைமுறைகள், மூடநம்​பிக்கைகள் ஆகியவை தாயின் இறப்புக்கு வழிவகுக்​கின்றன.

உலகளவில் 2017இல் 2.95 லட்சம் பிரசவ இறப்புகள் நிகழ்ந்துள்ளன. அதில், இந்தியாவில் மட்டும் 44 ஆயிரம் பெண்கள் கர்ப்​பத்​தின்​போதும், பிரசவத்​தின்​போதும் இறந்த​தாகக் கணக்கிடப்​பட்​டுள்ளது. இவற்றில், 94% பிரசவ இறப்புகள் ஏழைச் சமூகங்​களில்தான் நிகழ்ந்துள்ளன. வறுமை​யும், அதனால் கிடைக்​காமல் போன கல்வி அறிவும்தான் இதுபோன்ற இறப்பு​களுக்கு முக்கியக் காரணம் என்பதை இது உறுதிப்​படுத்து​கிறது.

தாயின் இறப்பு தடுக்​கக்​கூடிய ஒன்றுதான் என்றாலும், உடல்நலம் குறித்த விழிப்பு​ணர்வு இல்லாதது, உரிய நேரத்தில் மருத்துவ வசதி கிடைக்​காதது ஆகியவற்றால் இவை தொடர்​கின்றன. தரமான மருத்​துவப் பராமரிப்பு இல்லாத நாடுகளி​லும், தனிநபர் வருமானம் குறைவாக உள்ள நாடுகளிலும் தாய் இறப்பு விகிதம் அதிகமாக உள்ளது. உதாரணமாக, 2017இல் எடுத்த கணக்கெடுப்​பின்படி, குறைந்த வருமானம் உள்ள வளரும் நாடுகளில், 45 பிரசவங்​களில் ஒரு தாய் உயிரிழந்​திருக்​கிறார்; அதிக வருமானம் கொண்ட வளர்ந்த நாடுகளில் 5,400 பிரசவங்​களில் ஒரு தாய் உயிரிழந்​திருக்​கிறார்.

இந்தியாவின் முன்னெடுப்புகள்: தடுக்​கக்​கூடிய குழந்தை இறப்பு​களைக் குறைப்​பதில் இந்தியா, நேபாளம், செனகல், கானா, புருண்டி ஆகிய ஐந்து நாடுகள் சிறப்​பாகச் செயல்​பட்டு வருவதாக ஐ.நா. பாராட்​டி​யிருக்​கிறது. குறிப்பாக, ஒவ்வொரு குடும்பத்​துக்கும் வருடத்​துக்கு ரூ.5 லட்சம் மருத்​துவக் காப்பீடு வழங்குகிற ‘ஆயுஷ்மான் பாரத்’ திட்டத்தின் மூலம் இந்தியா லட்சக்​கணக்கான இளம் உயிர்​களைக் காப்பாற்றி​யிருப்பதாக ஐ.நா. சுட்டிக்​காட்​டி​யுள்ளது. மேலும், ‘பிரதான் மந்திரி சுரக் ஷித் மாத்ரித்வா அபியான்’ திட்டத்தின் (PMSMA) மூலம் கர்ப்​பிணி​களுக்குப் பிரசவத்​துக்கு முந்தைய சேவைகளைத் தரமாக வழங்கிப் பாதுகாப்பான பிரசவங்களை உறுதிப்​படுத்​தி​யுள்ளது.

மருத்​துவர்​களுக்கு மட்டுமல்​லாமல், சமூகச் சுகாதாரப் பணியாளர்கள், உதவியாளர்கள் ஆகியோ​ருக்கும் தொடர்ந்து துறைசார் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் அளிக்​கப்​படு​கின்றன. குழந்தை பிறப்பு, இறப்பு, குழந்​தையின் உடல்நலன் சார்ந்த குறியீடுகள் ஆகியவை எண்ணிம முறையில் கண்காணிக்​கப்​பட்டுத் தரவுகள் சேகரிக்​கப்​படு​கின்றன. இவை குழந்தை இறப்பு விகிதத்தைக் குறைப்​ப​தற்கான முன்னெடுப்புகளை மேம்படுத்த உதவுகின்றன. இவற்றின் மூலம் ஒவ்வோர் ஆண்டும் ஆரோக்​கியமான முறையில் குழந்தைகள் பிறப்பதை இந்தியா உறுதிப்​படுத்து​கிறது என்கிறது ஐ.நா.

உதவிக்கு வந்த தடுப்பூசி: ஐந்து வயதுக்கு உள்பட்ட குழந்தைகள் தட்டம்மை பாதிப்பால் அதிகம் பாதிக்​கப்பட்ட நாடாக 2000இல் இந்தியா இருந்தது. அப்போது இந்த நோய் பாதிப்பால் 1.89 லட்சம் குழந்தைகள் உயிரிழந்​தனர். அந்த ஆண்டில், 56% குழந்தை​களுக்கு மட்டுமே தட்டம்மைத் தடுப்பூசி செலுத்​தப்​பட்​டிருந்​ததுதான் இதற்குக் காரணம். ஆனால், 2023இல் தட்டம்மைத் தடுப்பூசி செலுத்​தப்பட்ட குழந்தை​களின் எண்ணிக்கை 96 சதவீதமாக அதிகரித்தது. இதன் பலனாக, தட்டம்​மையால் உயிரிழந்த குழந்தை​களின் எண்ணிக்கை 5,200ஆகக் குறைந்தது.

முன்மாதிரி தமிழ்நாடு: கரோனா​வுக்குப் பிந்தைய காலக்​கட்​டத்தில் தமிழ்​நாட்டில் பிரசவகாலத் தாய் – சேய் இறப்பு விகிதம் வெகுவாகவே குறைந்து​வரு​கிறது. 2021-22 புள்ளி​விவரப்படி, ஒரு லட்சம் பிரசவங்​களில் 90 தாய்மார்கள் உயிரிழந்த நிலையில், 2022-23இல் இந்த எண்ணிக்கை 52 ஆகவும், 2023-24இல் 45 ஆகவும் குறைந்துள்ளது. இதுபோலவே, பச்சிளம் குழந்தைகள் இறப்பதும் குறைந்துள்ளது. 2022-23இல் உயிருடன் பிறந்த 1,000 குழந்தை​களில் 10 பேர் உயிரிழந்த நிலையில், 2023-24இல் இந்த எண்ணிக்கை 8 ஆகவும் குறைந்துள்ளது.

பிரசவத்​தின்போது தாய் – சேய் இறப்பு முற்றிலும் இல்லை என்னும் நிலைமைக்குத் தமிழ்​நாட்டின் மருத்​துவக் கட்டமைப்புகளை மேம்படுத்து​வதற்கான முன்னெடுப்பு நடவடிக்கைகளைத் தமிழ்நாடு அரசு தொடர்ந்து மேற்கொண்டு​வரு​கிறது. இதை உறுதிப்​படுத்தும் விதமாக நாட்டில் முதன்​முறையாக விருதுநகர் மாவட்டம் தாய் இறப்பு இல்லாத மாவட்டமாக அறிவிக்​கப்​பட்டு உள்ளது. இங்கு 2023 ஏப்ரல் மாதம் முதல் 2024 மார்ச் மாதம் வரையிலான 7,991 பிரசவங்​களில், உயிரிழப்பு எதுவும் இல்லை என்பது ஒரு வரலாற்றுச் சாதனை​யாகக் கருதப்​படு​கிறது.

வீட்டில் பிரசவம் தவிர்ப்போம்: தடுக்​கக்​கூடிய குழந்தை இறப்புகள் குறைந்து​வருவது ஒரு சாதனைதான் என்றாலும், விருதுநகர் மாவட்​டத்தைத் தொடர்ந்து தமிழ்​நாட்டில் மற்ற மாவட்​டங்​களும், நாட்டில் மற்ற மாநிலங்​களும் இதுபோன்ற உயிரிழப்புகள் நிகழ்வதை முற்றிலும் தடுப்​ப​தற்கான வழிமுறை​களைத் தீவிரப்​படுத்த வேண்டியது அவசியம்.

குறிப்பாக, போக்கு​வரத்து குறைவாக இருக்கிற இடங்களில் வசிக்கும் கர்ப்​பிணி​களுக்​கும், குழந்தை​களுக்கும் முறையாகத் தடுப்பூசி செலுத்துவது, ஊட்டச்​சத்​து​மிக்க உணவு கொடுப்பது, பாதுகாப்பான குடிநீரை உறுதி​செய்வது, குழந்தைத் திருமணங்​களைத் தடுப்பது, வீட்டில் பிரசவம் பார்ப்​பதைத் தடுப்பது ஆகிய முன்னெடுப்புகள் முக்கிய​மானவை.

18 வயதுக்கு முன்னர் திருமணம் செய்து​கொள்​பவர்​களின் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்து​விட்​டாலும், நாடு முழுவதும் 27% பெண்கள் நிர்ண​யிக்​கப்பட்ட வயதுக்கு முன்பே திருமணம் செய்து​கொள்​கின்​றனர். குடிநீரில் கழிவுநீர் கலப்பதும், தரமற்ற குடிநீர் விநியோகிக்​கப்​படு​வதும் இன்றள​விலும் நடந்து​கொண்​டுதான் இருக்​கின்றன.

சமீபத்தில் சென்னையில் குடிநீர் கலப்படத்தால் உயிரிழப்புகள் ஏற்பட்டதை இங்கே நினைவு​கூரலாம். அடுத்​ததாக, சமூக ஊடகங்​களில் பகிரப்​படுகிற ‘வீட்​டிலேயே சுகப்​பிரசவம் பார்ப்பது மனித உரிமை’ என்பது போன்ற போலி அறிவியல் செய்தி​களுக்குத் தடை விதிப்பது காலத்தின் கட்டாயம்.

தமிழ்​நாட்டில் மட்டுமல்​லாமல், வீட்டில் பிரசவம் பார்த்ததன் காரணமாகக் கடந்த ஒன்பது மாதங்​களில் ஒன்பது குழந்தைகள் இறந்து​போன​தாகக் கேரளத்​திலிருந்து வந்திருக்கும் செய்தி இதன் முக்கி​யத்து​வத்தை உணர்த்து​கிறது.

எனவே, கர்ப்​ப​காலத்தில் மூடநம்​பிக்கைகளைக் கைவிடும் விதமாக​வும், கர்ப்​பிணி​களின் உடல்நலம் பேணுதல் தொடர்​பாகவும் விழிப்பு​ணர்வுப் பரப்பு​ரைகளைத் தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும். அத்துடன், போதிய நிதி ஒதுக்கிச் சாமானியருக்கும் கடைநிலைப் பகுதி​யிலும் மருத்துவ வசதிகள் உரிய நேரத்தில் கிடைப்​ப​தற்கு மருத்​துவக் கட்டமைப்பை இன்னும் அதிக அளவில் விரிவுபடுத்து​வதும் நாட்டில் பிரசவ இறப்புகளே இல்லை என்னும் இலக்கை எட்ட உதவும்.

ஏப்ரல் 7: உலக நலவாழ்வு நாள்

- தொடர்புக்கு: gganesan95@gmail.com

SCROLL FOR NEXT