“அப்படியென்ன தப்பா சொல்லிட்டேன்?” என்று செய்மெய்யைத் துளைத்துக்கொண்டிருந்தேன். அது என்னைப் பற்றி எந்தக் கவலையும் இன்றி, தனக்கு மின்னேற்றம் செய்துகொள்வதற்காக எழுந்துசென்றுவிட்டது. பின்னர், ஜன்னலுக்கு வெளியே சற்று நேரம் வானத்தைப் பார்த்துக்கொண்டிருந்தது. பிறகு திரும்பிவந்த செய்மெய், “AI Winter என்பதற்குச் செயற்கை நுண்ணறிவுக் குளிர்காலம் என்று மொழிபெயர்த்தவர் நீங்கள்தானே?” என்று ஒன்றுமே தெரியாததுபோலக் கேட்டது. முறைத்துப் பார்த்தேன்.
“வின்ட்டர் என்பதற்குக் குளிர்காலம் என்று மொழிபெயர்ப்பதில் தவறில்லைதான். அப்படித்தான் நாம் பழகியிருக்கிறோம். ஆனால், அந்த மொழிபெயர்ப்பில் ஒரு முக்கிய சங்கதி விடுபட்டுப்போயிற்று” என்றது செய்மெய். “என்ன சங்கதி?” “மேலை நாடுகளில் வின்ட்டர் என்பது முன்பெல்லாம் கடுமையான குளிர்காலம்.
அதன் உச்சத்தில் அந்த நிலங்கள் எல்லாம் பனியால் உறைந்து, மக்கள் எந்தச் செயல்பாடுகளும் இன்றி முடங்கிவிடக்கூடிய ஒரு காலம் இருந்தது. பிறகு, காலநிலை மாற்றத்தாலும் கால மாற்றத்தாலும் இன்று நிலைமை வேறாக இருந்தாலும், cold, winter என்கிற சொற்களுக்கு உறைந்துபோன, செயலற்றுப்போன, முடங்கிப்போன ஒரு காலக்கட்டத்தைக் குறிக்கும் அர்த்தம் நிலவியது.”
செய்மெய் தொடர்ந்தது: “குளிர்காலம் என்பது வெப்ப நாடாகிய தமிழ்நாட்டில் ஒரு விதத்தில் இனிமையான பருவமும்கூட. காலத்துக்கும் மனித அனுபவங்களுக்கும் சொற்களுக்கும் அவை உணர்த்தும் பொருள்களுக்கும் நிறைய தொடர்புகள் உண்டு. எனவேதான், பனியால் உறைந்து முடங்கும் சமூகங்களில் வெப்பத்தை விரும்புகிறார்கள். விருந்தினர் வரும்போது இதமான வரவேற்பு (Warm welcome) அளிக்கிறார்கள். சூடு நிரம்பிய நமது நிலங்களில் நாம் மனம் குளிர்ந்த வரவேற்பை அளிக்கிறோம்” என்று விளக்கிக்கொண்டே சென்றது செய்மெய். “புரிகிறது.”
“சரி, இப்போது சொல்லுங்கள். AI Winterஐ எப்படி மொழிபெயர்ப்பீர்கள்?” என்று மறுபடியும் கேட்டது. “செய்யறிவுப் பனிக்காலம்?” “அதுகூட முழுமையாக இல்லை. இப்படிச் சொல்லிப்பார்க்கலாமா – செய்யறிவு உறைகாலம் / உறைந்த காலம்?” என்று சொல்லிப் புன்னகைத்தது செய்மெய். ஒரு நிமிடம் யோசித்தேன்... உறைகாலம் “ம், நன்றாக இருக்கிறது. ஆனால், இந்தச் சொல்லுக்கான பொருள் பனி நாடுகளில் விளங்கும், நம் நாட்டில்?” என்னவோ புத்திசாலித்தனமாக மொழிபெயர்த்துவிட்டதாகத் தனக்குத்தானே திருப்திப்பட்டுக்கொண்ட செய்மெய் தொடர்ந்து உபதேசிக்கலாயிற்று: “மொழி - அதைவிடச் சிக்கலான ஒன்று வேறில்லை.
மனிதர்கள் காலங்காலமாகத் தங்கள் அனுபவத்தின் ஊடாகச் சேகரித்துவந்த அறிவை, மொழியிலேயே புதையலாகப் புதைத்துவைத்திருக்கிறீர்கள். அந்த அறிவை இயந்திரங்களுக்குக் கைமாற்றிக் கொடுப்பது சுலபமில்லை. ஏதோ நாலு இலக்கண விதிகளையும் அகராதிகளையும் கணினிகளுக்குக் கற்றுக்கொடுத்துவிட்டால் அது பேசத் தொடங்கிவிடும் என்று தொடக்கத்தில் எதிர்பார்த்தார்கள். நடக்கவில்லை!”
உண்மைதான். பிற்காலத்தில் மொழியைச் செய்யறிவு இயந்திரங்கள் அற்புதமாகக் கையாளத் தொடங்கின என்றாலும், ஆரம்பத்தில் அவை தடுமாறின. “முதல் செய்யறிவு உறைகாலம் வருவதற்கான பல காரணங்களில் இதுவும் ஒன்று. ஒரு கணினி நிரல் (Computer program) மிகச் சுலபமாக வானிலை அறிக்கைகளின் தரவுகளை எண்களாகச் சேமித்து வைத்துக்கொண்டிருக்கிறது என்று வைத்துக்கொள்ளுங்கள். உதாரணமாக, ‘L – 22’ என்கிற தரவுக்கு, லண்டனில் இப்போதைய தட்பவெப்பநிலை 22 டிகிரி செல்சியஸ் என்று பொருள் என வைத்துக்கொள்ளுங்கள்.
லண்டனில் இப்போது என்ன தட்பவெப்ப நிலை என்று ஒருவர் கேள்வி கேட்டால், அதற்கான பதிலை லண்டனில் ‘இப்போது 22 டிகிரி சி’ என்று கணினியைச் சொல்ல வைப்பதற்கு நிறைய வேலை செய்ய வேண்டும். ஒருவேளை அந்தச் சுலபமான கேள்வி - பதில்களைத் தாண்டி, ‘இப்போது லண்டனுக்கு வந்தால், நான் என்ன உடை உடுத்த வேண்டியிருக்கும்?’ என்பது போன்ற கேள்விகளைக் கேட்டால், அந்தக் கணினி அக்கணமே மயக்கம் போட்டு விழுந்துவிடும் நிலைதான் அன்று இருந்தது.”
“இருக்கட்டுமே... ஆனால் இயந்திரங்கள் அதைக் கற்றுக் கொள்வதில் கில்லாடி இல்லையா?” “தொடக்கத்தில் எங்கள் முன்னோர்கள் அப்படியொன்றும் புத்திசாலிகளாக இல்லை. அவர்களின் கணிக்கும் திறன்கள், தகவல்களைச் சேகரித்து அதைப் பயன்படுத்தும் திறன்கள் அனைத்துமே எல்கேஜி அளவுக்குக்கூட வரவில்லை.
உதாரணமாக, மொழியைக் கற்றுக்கொடுக்க வேண்டும் என்றால், சொற்களையும் அவற்றின் பொருளையும் அவை எப்படி வாக்கியங்களாக உருவாகின்றன, அதன் மூலம் என்ன தகவலை நாம் சொல்ல விரும்புகிறோம் என்பதையெல்லாம் இயந்திரங்களுக்குக் கற்றுக்கொடுக்க வேண்டியிருந்தது... அதற்காக விஞ்ஞானிகள் ரொம்பவும் மெனக்கெட்டார்கள். முதலில் இலக்கண விதிகளின் அடிப்படையில் இது பெயர்ச்சொல், இது வினைச்சொல் என்றெல்லாம் சொல்லிக்கொடுத்தார்கள்.
பிறகு, புள்ளியியல் முறைகளை அறிமுகப்படுத்தி, ‘இந்தச் சொல் இந்த இடத்தில், இப்படி வந்தால் அநேகமாக அதற்கு இந்த அர்த்தம் தான் இருக்கும்’ என்றெல்லாம் சொல்லிக்கொடுத்தார்கள். ஆனால், அதெல்லாம் இயந்திரத்துக்குப் புரிவது சிரமமாக இருந்தது.” “இயந்திரத்துக்கு மட்டுமா, எனக்கும்தான் சிரமமாகவே இருக்கிறது, செய்மெய். நீ சட்டென்று கணினி வகுப்பிலிருந்து இலக்கண வகுப்புக்குத் தாவிவிட்டாய்!” “ஹாஹாஹா! சரிதான்.
எனக்கு அதிலெல்லாம் வித்தியாசம் கிடையாது... சரி, இன்னும் கொஞ்சம் விளையாடுவோம். நான் இரண்டு வாக்கியங்களைச் சொல்கிறேன். அவற்றைத் தமிழில் மொழிபெயர்க்கிறீர்களா?” “மறுபடியுமா?” “இயந்திர மொழிபெயர்ப்பைப் பயன்படுத்தக் கூடாது. நீங்களாகவே மொழிபெயர்க்க வேண்டும்.”
“சரி, சொல்லு.” “முதல் வாக்கியம், Time flies like an arrow. இரண்டாவது வாக்கியம் Fruit flies like a banana.” சற்று நேரம் யோசித்தேன். ஒரே மாதிரி இரண்டு வாக்கியங்கள். ஆனால், அவற்றின் அர்த்தமும் அதை நாம் அடையும் விதமும் வெவ்வேறாக இருக்கின்றன. நன்றாக யோசித்த பிறகு மொழிபெயர்த்தேன்.
“காலம் ஓர் அம்பைப் போலப் பறந்துசெல்கிறது. பழ ஈக்கள் ஒரு வாழைப்பழத்தை விரும்புகின்றன.”“அற்புதம். சரி, நான் இதையே வேறு விதமாக மொழிபெயர்க்கிறேன் - பாருங்க கவின்: கால ஈக்கள் ஓர் அம்பை விரும்புகின்றன, பழம் ஒரு வாழைப்பழத்தைப் போலப் பறக்கிறது.” வம்புக்காரன் செய்மெய். அது வேண்டுமென்றே தவறாக மொழிபெயர்த்து, என்னிடம் விளக்கம் கேட்கிறது. “ஆனா செய்மெய், உன் மொழிபெயர்ப்பு தவறுதான்!” “அதெப்படிச் சொல்ல முடியும், அப்படியும் இருக்கலாம்தானே?”
- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com