சிறப்புக் கட்டுரைகள்

டீப்சீக் ஒரு மாற்றுத் தயாரிப்பு மட்டும்தானா?

அருண் அசோகன்

2025 ஜனவரி மாதம் செயற்கை நுண்ணறிவுத் துறையின் (ஏ.ஐ.) நெடும்பரப்பில் ‘புராஜெக்ட் ஸ்டார்கேட்’ (PROJECT STARGATE) என்னும் அறிவிப்பு வெளியானது. அமெரிக்காவின் தொழில்நுட்ப வல்லமையை உலகுக்கு அறிவிக்கும் வண்ணம் இருந்தது அந்த அறிவிப்பு.

சாட்ஜிபிடி செயலியை உருவாக்கிய ஓபன் ஏ.ஐ. நிறுவனம், ஆரக்கிள், சாஃப்ட்பேங், எம்.ஜி.எக்ஸ். ஆகிய தனியார் பெருநிறுவனங்கள் மேற்கொண்டுள்ள ஒரு கூட்டு முன்னெடுப்புதான் இந்தத் திட்டம். அடுத்த நான்கு ஆண்டுகளில் ஏ.ஐ. கட்டமைப்புகளில் 500 பில்லியன் அமெரிக்க டாலர் முதலீட்டை உள்ளடக்கியதாக இந்தத் திட்டம் உருவாகியுள்ளது.

ஸ்​டார்கேட் - டீப்சீக் மோதல்: ஏ.ஐ. துறையில், அமெரிக்கா அதன் மேலதி​காரத்தை நிறுவுவதற்குப் பெரும் விருப்பம் கொண்டிருப்பதை இந்த அறிவிப்பும் வெளிப்​படுத்​தியது. இந்தத் திட்டத்தை அமெரிக்​காவின் தொழில்​நுட்பத் தலைமைக்குக் கிடைத்த மாபெரும் வெற்றி என்று கூறுகிறார், இந்தத் திட்டத்தின் அரசியல் முகமாக இருக்கும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். ஸ்டார்கேட் திட்டம் அறிவிப்பு வெளியான ஒரே வாரத்தில் வெளியான மற்றொரு செய்தி அந்தத் திட்டத்தின் மீது ஒரு பேரிடியாக வந்து இறங்கியது.

குறைந்த முதலீட்​டில், அசல் மூலக் குறியீடு இலவசமாகக் கிடைக்​கக்​கூடிய முறையில் (ஓபன் சோர்ஸ்) உருவாக்​கப்பட்ட ஏ.ஐ. செயலியான டீப்சீக் (DeepSeek), ஓபன் ஏ.ஐ. நிறுவனத்தின் சாட்ஜிபிடி செயலியைக் காட்டிலும் அதிகமாகப் பதிவிறக்கம் செய்யப்​பட்டது. ஏ.ஐ. துறையில் ‘பிரம்​மாண்ட முதலீடு’, ‘வேலை​வாய்ப்பு உருவாக்கம்’ என்று அமெரிக்கா கட்டமைத்த பெரும் பிம்பத்தை​யும், அதன் தொழில்​நுட்பச் செயல்​திறமின்​மை​யையும் டீப்சீக்கின் பாய்ச்சல் அம்பலப்​படுத்​தி​யதுடன், அது போன்ற பெரும் முதலீடு தேவைதானா என்கிற அடிப்​படைக் கேள்வியையும் உலக அரங்கில் முன்வைத்தது.

இதன் விளைவாக, முதலீட்​டாளர்கள் நம்பிக்கை இழந்தனர்; உலக பங்குச் சந்தை​களில் பெரும் வீழ்ச்சி ஏற்பட்டது. என்விடியா (NVIDIA) நிறுவனத்தின் சந்தை மதிப்பு ஒரே நாளில் (2025 ஜனவரி 27) சுமார் 600 பில்லியன் டாலர் (ரூ.51.36 லட்சம் கோடி) அளவுக்குச் சரிந்தது. சில பெருநிறு​வனங்கள் மட்டுமே எதிர்​கொண்ட சவால் அல்ல இந்தச் சரிவு.

அமெரிக்கா, சீனா ஆகிய இரு நாடுகளுக்கு இடையிலான வர்த்தகப் போர் என்றும் இதனைச் சுருக்​கிவிட முடியாது. லாபம், ஏகபோக உரிமை, அதிகாரம், கட்டுப்பாடு ஆகிய காரணி​களால் நமது இன்றைய பொருளாதார முறை எவ்வாறு இயக்கப்​படு​கிறது என்பதைத்தான் இந்த ஸ்டார்கேட் - டீப்சீக் மோதல் அத்தி​யாயமும் நமக்கு எடுத்​துக்​காட்டு​கிறது.

டீப்சீக் வெற்றியின் சூட்சுமம்: எதிர்​கொண்ட சவால்களை எல்லாம் வெற்றிக்கான படிக்​கற்களாக டீப்சீக் நிறுவனம் மாற்றிக்​கொண்டது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் இயந்திரங்கள் தயாரிப்​புக்கு அவசியமான வன்பொருள் (Hardware) உற்பத்​தியில் என்விடியா நிறுவனம் முன்னணியில் இருக்​கிறது. அந்நிறு​வனத்தின் H800 செயலாக்க அலகுகள் (Graphics Processing Units) கூட ஏற்றுமதிக் கட்டுப்​பாடு​களு​டன்தான் சீனாவுக்கு விற்கப்​படு​கின்றன. இது போன்ற செயலாக்க அலகுகளைப் பயன்படுத்து​வதால் ஏற்படும் தொழில்​நுட்பப் பின்னடைவு​களில் இருந்து மீண்டெழ வேண்டிய கட்டாயம் டீப்சீக் நிறுவனத்​துக்கு ஏற்பட்டது.

தொழில்​நுட்​பரீ​தி​யாகப் பல அசாதாரண தீர்வுகளை, கணினி அமைப்பு​களைக் (Mixture of Experts Architecture, Multi-head latent attention) கொண்டு, டீப்சீக் நிறுவனம் அதன் மாதிரிகளை (Models) அதிகச் செயல்​திறன் மிக்கவையாக வடிவமைத்தது; குறைந்த செலவில் அதிகமான செயல்​திறன் என்னும் இலக்கை எட்டிப் பிடித்தது. ஓபன் ஏ.ஐ. போன்ற பெருநிறு​வனங்கள் நிர்ண​யித்த விலையைக் காட்டிலும் பன்மடங்கு குறைந்த விலையில், அதேவேளை மிக அதிகமான செயல்​திறன் கொண்ட ஏ.ஐ. மாதிரிகளை டீப்சீக் நிறுவனம் தயாரித்து, தொழில் துறைப் பயன்பாட்டுக்கும் வழங்கத் தொடங்​கியது.

ஓபன் சோர்ஸ் முறையில் உருவாக்​கப்பட்ட இது போன்ற ஏ.ஐ. மாதிரிகள், இந்தத் துறையில் பெரும் செல்வாக்​குடன் திகழும் பெருநிறு​வனங்கள் நிர்ண​யித்த விலை - செயல்​திறன் அளவீடு​களுக்கு மிகப்​பெரும் சவாலாக எழுந்தன. அது மட்டுமன்றி, ஒரு மென்பொருள் (Software) மற்றொரு மென்பொருளுடன் தொடர்​பு​கொள்​வதற்கான ஒருங்​கிணைப்புக் குறியீடுகளை (Application Programming Interface) டீப்சீக் மிகக் குறைந்த செலவில் வழங்கியது.

இதன் விளைவாக, தெற்குலக நாடுகளும், செயற்கை நுண்ணறிவுத் துறையில் இயங்கிவரும் சிறிய நிறுவனங்​களும் ‘அமெரிக்கச் சார்புநிலை’ என்னும் நிலையில் இருந்து தங்களை விடுவித்​துக்​கொள்ள முடியும் என்கிற புதிய சூழலை டீப்சீக் உருவாக்கி​யுள்ளது குறிப்​பிடத்​தக்​க​தாகும்.

மாபெரும் மூலதனப் பாய்ச்சலை (Massive Capital Inflow) நியாயப்​படுத்திய பொருளாதார வாதங்களை எல்லாம் தகர்த்​தெறிந்த டீப்சீக், செயற்கை நுண்ணறிவுத் துறையில் பலரும் பங்கேற்​கலாம் என்கிற சாத்தி​யக்​கூறையும் அறிமுகப்​படுத்​தி​ உள்ளது. செயற்கை நுண்ணறிவுத் துறையில் நிலவும் ஏகபோக உரிமை, கட்டுப்​பாடுகள் என்னும் கோட்டைக்குள் டீப்சீக் என்னும் ஜனநாயக மின்னல்​கீற்று ஒரு மகத்தான அதிர்​வலையைத் தோற்று​வித்​துள்ளது என்றே கூறலாம்.

டீப்சீக் எதிர்​கொள்ளும் சவால்: டீப்சீக்கின் ஓபன் சோர்ஸ் புரட்சி என்பது தொழில்​நுட்பத் துறையில் இயங்கிவரும் பெருநிறு​வனங்​களுக்கு ஒரு சிக்கலான பிரச்சினை மட்டுமல்ல. ஏகபோகம், லாப வேட்கை, தேவையற்ற நுகர்வு ஆகியவற்றால் கட்டமைக்​கப்​பட்​டிருக்கும் ஏ.ஐ. நெடும்​பரப்பில் மாற்றத்தை ஏற்படுத்​தக்​கூடிய அவசியமான அதிர்வலை ஆகும். மிகக் குறைந்த விலையில் ஏ.ஐ. கருவிகளை வழங்குவதன் மூலம், பெருநிறு​வனங்​களின் ஆதிக்​கத்தை முன்னிறுத்தும் பொருளா​தாரத் தர்க்​கத்தை டீப்சீக் தகர்த்​தெறிகிறது. மேலும், தொழில்​நுட்ப வளர்ச்சிக்கான அடித்​தளங்கள் குறித்த மாற்றுச் சிந்தனைகளை முன்வைக்​கிறது.

செயற்கை நுண்ணறிவுத் துறையின் அடிப்​படைக் கட்டமைப்பு, அதன் பலவீனங்கள், முரண்​பாடுகள், சாத்தியமான மாற்றங்கள் பற்றி ஆராய்ந்து, விமர்சனரீதியாக உரையாடல்களை மேற்கொள்​வதற்கான தளங்களை டீப்சீக் உருவாக்கி​யிருக்​கிறது. தற்போதைய சர்வதேசப் பொருளாதார அடித்​தளத்தையே அதிரவைத்த டீப்சீக் செயலி, பெரும் சைபர் தாக்குதலுக்கும் உள்ளாகிவருகிறது. எனவே, டீப்சீக்கை வெறுமனே ஒரு மாற்றுத் தயாரிப்பு என்று கருதி நாம் கடந்துவிட முடியாது.

சந்தையின் உள்முரண்​பாடுகளை, அவற்றின் பலவீனங்களை எதிர்​கொள்ள சந்தை சக்தி​களையே உந்தித்​தள்ளும் ஆற்றல் கொண்ட ஓர் அதிர்​வலையாக டீப்சீக் திகழ்​கிறது. ‘முதலா​ளித்துவ முரண்​பாடு​களில் இருந்தே முதலா​ளித்துவ நெருக்கடி உருவாகிறது’ என்கிற கார்ல் மார்க்ஸின் கருத்தையும் டீப்சீக் அத்தி​யாயம் நமக்கு நினைவூட்டு​கிறது. இதுநாள் வரையில் தொழில்​நுட்பத் துறையின் எதிர்​காலத்தைத் தங்கள் பிடிக்குள் வைத்திருந்த பெருநிறு​வனங்​களும் ஏகபோக சக்தி​களும் கட்டவிழ்த்து​விடும் தாக்குதல்​களையும் ச​வால்​களையும் டீப்சீக் எவ்வாறு எ​திர்​கொள்ள இருக்​கிறது என்கிற கேள்வி​க்குக் ​காலம்​தான் பதில் கூற முடியும்​.

- தொடர்புக்கு: ashokan.arun@gmail.com

SCROLL FOR NEXT