பண்டைய இந்திய ஆய்வாளர்களில் குறிப்பிடத்தக்கவர் நயன்ஜோத் லாஹிரி. வரலாற்றாளர், தொல்லியல் ஆய்வாளர். சிந்து சமவெளி நாகரிகம் தொடங்கி அசோகர் வரை இவர் எழுதியிருக்கும் நூல்கள் பொது வாசகர்களின் கவனத்தையும் வெகுவாகக் கவர்ந்தவை. ஒரு கருத்தரங்குக்காகச் சமீபத்தில் சென்னைக்கு வந்திருந்தபோது அவரைச் சந்தித்து மேற்கொண்ட உரையாடலிலிருந்து சில பகுதிகள்...
சிந்து சமவெளி நாகரிகம் தொடர்ந்து நம்மை ஈர்த்துவருவது ஏன்? - சிந்து சமவெளி நாகரிகம் கண்டறியப்பட்ட செய்தியை இந்தியத் தொல்லியல் கழகத்தின் தலைவரான ஜான் மார்ஷல் 20 செப்டம்பர் 1924 அன்று ‘இல்லஸ்ட்ரேட்டட் லண்டன் நியூஸ்’ நாளிதழில் அறிவித்தார். இந்திய வரலாற்றை மாற்றியமைத்த இந்த முக்கியமான நிகழ்வு, நம் தொன்மத்தைப் பின்னுக்குத் தள்ளியதோடு, காணாமல் போயிருந்த (பொ.ஆ.மு.) 3000 ஆண்டுகால வரலாற்றை மீட்டெடுத்துத் தந்தது. இந்திய வரலாற்றுக்கு ஒரு புதிய தொடக்கப்புள்ளி இதன்மூலம் கிடைத்தது.
இந்தியாவுக்கு மட்டுமல்ல தெற்காசியாவுக்குமேகூட இது முக்கியமான கண்டுபிடிப்பு என்னும் வகையில், இயல்பாகவே சிந்து சமவெளி நாகரிகம் (ஹரப்பன் பண்பாடு) நம் அனைவரையும் ஈர்த்துவருகிறது. வரலாற்றாளர்களுக்கு மட்டுமல்ல, அரசியல், பண்பாடு, அறிவியல், மொழியியல் என்று தொடங்கிப் பல துறைகளைச் சேர்ந்தவர்கள் சிந்து சமவெளியை ஆர்வத்தோடு ஆராய்ந்துவருகின்றனர். இலக்கியத்தையும் இதில் சேர்க்க வேண்டும். முல்க் ராஜ் ஆனந்த் குழந்தைகளுக்காக எழுதிய ஒரு சிறுகதையின்மூலம்தான் எனக்கு அது அறிமுகமானது.
சிந்து சமவெளி மீதான நம் ஆர்வத்துக்குக் காரணம் அதன் பழமை மட்டும் அல்ல; அதில் அடங்கியிருக்கும் ஏராளமான புதிர்களும்தான். இந்தியத் துணைக் கண்டத்தின் வடக்கு, மேற்குப் பகுதிகளில் லட்சக்கணக்கான சதுர கி.மீ. பரப்பளவில் நூற்றுக்கணக்கான ஹரப்பன் தளங்கள் பரவியிருக்கின்றன.
சிந்து மக்கள் குறித்து நமக்குச் சில சித்திரங்கள் கிடைத்திருக்கின்றன என்றாலும் நமக்குத் தெரியாதவை, இதுவரை கண்டறிய முடியாதவை அதிகம். சிந்து மக்கள் யார்? அவர்களுடைய தொடக்கப் புள்ளி எது? சிந்து சமவெளி நாகரிகம் எப்படி வீழ்ச்சியடைந்தது? இதுபோன்ற அடிப்படையான கேள்விகளுக்குப் பலவிதமான கருதுகோள்கள் மட்டுமே இருக்கின்றன.
இக்கேள்விகளுக்கு விடைகள் கிடைக்குமா? - நம்பிக்கையோடு ஆய்வுகளைத் தொடர்வது மட்டுமே நம் பணி. குறிப்பிடத்தக்க அளவில் தொல்லியல் ஆய்வுகள் நடைபெற்றுள்ளன. இன்றும் நூற்றுக்கணக்கான இடங்களில் அகழ்வாய்வுகள் நடத்தப்பட வேண்டியிருக்கிறது. அவை நடைபெற்றால் புதிய தரவுகள் கிடைக்கலாம். ஏற்கெனவே நடைபெற்ற தொல்லியல் ஆய்வுகளின் முடிவுகளும் வெளிவர வேண்டியிருக்கிறது. கிடைத்திருக்கும் ஆய்வு முடிவுகளை வெவ்வேறு துறையினர், வெவ்வேறு கோணங்களில் ஆய்வுசெய்து வருகின்றனர். அவர்கள் முன்வைக்கும் கருதுகோள்கள் விவாதிக்கப்பட வேண்டியவை.
சிந்து சமவெளி நாகரிகம் அடிப்படையில் ஒரே தன்மை கொண்டது என்றுதான் நாம் நினைத்து வந்தோம். எடுத்துக்காட்டுக்கு, பஞ்சாப், சிந்து, குஜராத் ஆகிய இடங்களில் கிடைத்த சிந்து சமவெளிச் சான்றுகள் முதல் பார்வையில் ஒன்றுபோல் காட்சியளிக்கும். ஆனால், பாறைப்படிவ இயல் உள்ளிட்டவற்றைக் கணக்கில் கொண்டு கவனமாக ஆராய்ந்தால், அவற்றுக்கு மத்தியில் உள்ள வேறுபாடுகள் புலப்படும்.
சிந்து சமவெளி ஆய்வுகள் முக்கியம்தான். ஆனால், மற்ற அகழ்வாய்வுகளைப் புறக்கணித்துவிட்டு இதற்கு மட்டும் முழுமையான முக்கியத்துவம் கொடுக்க வேண்டியதில்லை. வட இந்தியாவில் மிக மிகக் குறைவான தொல்லியல் ஆய்வுகளே நடத்தப்பட்டிருக்கின்றன. தமிழகத்திலிருந்து கிடைக்கும் தரவுகள் கணக்கில் கொள்ளப்பட வேண்டும். மற்றபடி, விடைகளைக் காட்டிலும் கேள்விகள்தான் மிக முக்கியமானவை.
யார் ஆரியர், யார் திராவிடர், யார் முதலில் வந்தது என்பது போன்ற கேள்விகளை எப்படி எதிர்கொள்வீர்கள்? - மரபணுச் சோதனைகள் இக்கேள்விகளை உறுதியோடு எதிர்கொள்கின்றன. தெற்கு, வடக்கு என்று பேதமில்லாமல் நாம் அனைவருமே கலப்பினத்தவர். பரம்பரையின் வேரைத் தேடிப் பின்னோக்கிச் செல்வதில் பயனில்லை. கலப்பில்லாத தூய மனிதன் இன்று எங்கும் இல்லை. இது கொண்டாடப்பட வேண்டிய செய்தி. வேற்றுமைதான் நம் இயல்பு. சாதியோ மதமோ குலமோ இன்னபிற பெருமிதங்களோ அல்ல, வேற்றுமைதான் நம் அனைவரின் அடையாளம்.
வரலாற்றின் மீது மாணவர்களுக்கு ஆர்வத்தைத் தூண்டுவது எப்படி? - என் மகன் டெல்லியில் லோதி பூங்காவுக்கு எதிரில் உள்ள ஒரு பள்ளியில்தான் படித்தான். பள்ளிப் படிப்பு முடியும்வரை ஒருமுறை, ஒரேயொரு முறைகூட சாலையைக் கடந்து மறு பக்கத்திலிருக்கும் லோதி பூங்காவுக்கு ஆசிரியர்கள் மாணவர்களை அழைத்துச் சென்றதில்லை. வரலாற்றின் முக்கியத்துவத்தை இளம் வயதிலேயே ஊட்டினால்தான், அத்துறையின்மீது மாணவர்களுக்கு ஆர்வம் பிறக்கும். பாடப் புத்தகங்களிலிருந்து மட்டும் வரலாற்றை எவரும் புரிந்துகொண்டுவிட முடியாது.
நான்கு இடங்களைப் பார்த்தால் கண்டிப்பாக வரலாற்றின்மீது மாணவர்களுக்கு ஆர்வம் பிறந்துவிடும். ஆனால் வரலாறு, தொல்லியல், சமூகவியல் உள்ளிட்ட துறைகளைக் கற்றுக்கொடுக்கும் கல்லூரிகள் இந்தியாவில் எத்தனை இருக்கின்றன? வரலாற்றில் பட்டம் பெற்று வெளிவரும் ஒருவருக்கு இங்கே எத்தகைய வேலைவாய்ப்புகள் இருக்கின்றன? பலனளிக்கக்கூடிய ஒரு துறையாக மட்டுமல்லாமல் பணமளிக்கக்கூடிய ஒரு துறையாகவும் வரலாறு மாற வேண்டும்.
அரசு ஏதேனும் செய்ய முடியும் என்று நினைக்கிறீர்களா? - வரலாற்றின் அவசியத்தை வலியுறுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பொதுமக்களுக்காக நடத்தலாம். அறிஞர்களைக் கொண்டு கருத்தரங்குகள் நடத்தலாம். வரலாறு, தொல்லியல் துறைகள் கல்லூரிகளில் அதிகரிப்பதற்கான முன்முயற்சிகளை மேற்கொள்ளலாம். காலத்தைக் கடந்து நிற்கும் பல கட்டுமானங்கள் இன்று வேகவேகமாக மறைந்துகொண்டு இருக்கின்றன.
அவற்றின் முக்கியத்துவத்தை மக்கள் உணரும்படியான பரப்புரைகளை மேற்கொள்ளலாம். முக்கியமாக, தொல்லியல் ஆய்வுகளுக்குத் தேவைப்படும் நிதியை அளிக்க வேண்டிய கடமை அரசுக்கு இருக்கிறது. ஆய்வுகள் சீராகவும் காலதாமதம் இன்றியும் நடத்தப்பட்டால் பல வரலாற்று உண்மைகளைக் கண்டறிய முடியும்.
உள்ளூர் வரலாறு எந்த அளவுக்கு முக்கியம் என்று நினைக்கிறீர்கள்? - வரலாற்றில் படிநிலை கிடையாது. ஒரு சிறிய இடத்தின் வரலாறுகூட நமக்கு மிகப் பெரிய வெளிச்சத்தை அளிக்க முடியும். நான் பணியாற்றும் அசோகா பல்கலைக்கழகம் சோனிபத்தில் அமைந்துள்ளது. அங்கே வழக்கமான பாடத்திட்டத்தோடு புதிதாக ஒன்றைச் சேர்த்து மாணவர்களுக்கு நடத்திவருகிறேன். அதன் தலைப்பு, சோனிபத்.
நாம் எங்கே நிலைகொண்டிருக்கிறோமோ அந்த இடத்தின் வரலாற்றைப் புறக்கணிக்க முடியாது, இல்லையா? பாடத்திட்டத்தில் சோனிபத் இல்லை என்பதால், அதை நான் கடந்து செல்ல முடியாது. உலக வரலாற்றைப் போலவே தங்கள் சொந்த இடத்தின் வரலாற்றையும் மாணவர்கள் தெரிந்துகொள்வது அவசியம்.
உங்களுடைய அடுத்த திட்டம்? - அசோகரின் கல்வெட்டுகளை ஆராயும்போது அவை அமைந்திருக்கும் காட்டுப்பகுதிகள் குறித்தும் ஆராயும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. முழுக்க முழுக்கக் காட்டை மையப்படுத்தி ஆராய விரும்புகிறேன். இப்படிக் காட்டை மையப்படுத்தும் போது வரலாறு வேறொன்றாக மாறுவதை நாம் பார்க்கலாம்.
ஒடுக்கப்பட்ட மக்களின் கடந்த காலங்களை எவ்வாறு மீட்டெடுப்பது? - எனது அடுத்த கனவு இந்தக் கேள்வியிலிருந்து தொடங்குகிறது. ஒவ்வொரு முறை தொல்லியல் ஆய்வுகள் நடைபெறும்போதும் கிடைக்கும் சான்றுகளை நம் பெருமிதங்கள் என்று உரிமையோடு கொண்டாடுகிறோம். இந்த ஆய்வுகள் நடைபெற்ற தளங்களிலிருந்து சற்றுத் தள்ளித்தான் தீண்டப்படாத மக்கள் வாழ்ந்திருப்பார்கள். அவர்களுடைய இருப்பிடம் வெளிப்புறங்களில் அமைக்கப்பட்டிருக்கும். மைய நீரோட்டத்திலிருந்து அவர்கள் வாழ்க்கை விலகி இருந்திருக்கும்.
வணிகர்கள் அவர்களைச் சந்தித்திருப்பார்கள். பரிமாற்றங்கள் நிகழ்ந்திருக்கும். ஆனால், அப்பகுதிகளில் அவர்களைத் தவிர மற்றவர்கள் தங்கியிருக்க வாய்ப்பில்லை. இந்தத் தீண்டப்படாத மக்களின் வரலாறுகளை எப்படி எழுதுவது? இவர்களுடைய கடந்தகால வாழ்விடங்களை எப்படி அடையாளம் காண்பது? எப்படித் தொல்லியல் ஆய்வுகள் நடத்துவது? அப்படியே நடத்தினாலும் எத்தகைய தரவுகள் நமக்குக் கிடைக்கும்? இம்மக்கள் குறித்துக் கல்வெட்டுகள் உள்ளிட்ட எழுத்துப் பதிவுகள் எப்படியும் கிடைக்கப்போவதில்லை. இவர்கள் இருளிலேயே மறைந்துவிட வேண்டியதுதானா?
இன்றும் இரட்டைச் சுடுகாடுகள் வழக்கத்தில் இருக்கின்றன. இதுபோன்ற வழக்கங்களை எல்லாம் ஆராய வேண்டியிருக்கிறது. சிந்து சமவெளி நாகரிகம், பேரரசுகளின் ஆட்சி, பிரமிக்கத்தக்கக் கட்டுமானங்கள் போன்ற பெருங்கற்பனைகள்மீது மட்டுமே நாம் கவனத்தைக் குவித்து வருகிறோம். நம் பார்வையையும் அக்கறையையும் வேண்டிப் பல உலகங்கள் நமக்கு அருகிலேயே அமைந்துள்ளன. இந்த உலகங்களும் நம் கடந்த காலங்களின், மரபுகளின், பண்பாடுகளின் பகுதிகள்தான். இவையும் நம் வரலாறுதான்.
- தொடர்புக்கு: marudhan@gmail.com