பத்துப் பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னால் காலநிலை மாற்றம் குறித்துத் தமிழில் பேசினால், அது ஏதோ அறிவியலாளர்களுக்கான உரையாடல் என்றே பொதுவாகப் பார்க்கப்பட்டது. காலநிலை மாற்றம் இன்று நம் கண் முன்னால், உலகின் ஒவ்வொரு நிலப்பகுதியிலும் தீவிரமாக அரங்கேறத் தொடங்கிவிட்டது. ஆனால், இப்போதும் நமது அலட்சியமும் அக்கறையின்மையும் தொடரவே செய்கின்றன.
இந்தியா ஒரு வெப்பமண்டல நாடு. மேற்கத்திய நாடுகளைப் போலக் கதகதப்புக்காக ஏங்குபவர்கள் அல்ல நாம். வளத்தை வாரித்தரும் மழைக் காலத்துக்காகவும், கோடையில் இதமான வெப்பநிலைக்காகவும் ஏங்குவதே நம் வழக்கம். ஹோலி, வைசாகி, சித்திரைத் திருவிழா, போஹாக் பிஹு போன்று நாட்டின் ஒவ்வொரு பகுதியிலும் நடைபெறும் விழாக்கள் வசந்தத்தின்-இளவேனிலின் வருகையை வரவேற்றுக் கொண்டாடுபவை. ஆனால் ஒன்று தெரியுமா, வசந்தம் நம்மிடம் இருந்து அதிவேகமாகக் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது.
நாட்டின் பல பகுதிகளில் பகல் வெப்பநிலையும் இரவு வெப்பநிலையும் இயல்பைவிட அதிகரித்திருக்கின்றன. இளவேனில் என்பது இல்லாமலாகி, வேனிலே ஒரே காலமாகிவரும் ஆபத்து உருவாகியிருக்கிறது. கோடைக் காலத்தில்தான் வெப்ப அலைகள் வீசும் என்பது மாறி, முன்கூட்டியே வெப்ப அலைகள் வீசும் ஆபத்தும் ஏற்பட்டு இருக்கிறது.
குலையும் சமநிலை: 2024இன் 11 மாதங்களில் இரவு நேரச் சராசரி வெப்பநிலை அதிகமாகவே இருந்திருக்கிறது. வரலாற்றின் ஜனவரி, பிப்ரவரி மாதங்களிலேயே அதிக சராசரி வெப்பநிலை பதிவானவையாக 2025 ஜனவரி, பிப்ரவரி மாதங்கள் மாறியுள்ளன. இந்த இரண்டு மாதங்களிலும் தொழில்புரட்சிக்கு முந்தைய காலத்தைவிட 1.75 டிகிரி செல்சியஸ் அதிகமாக சராசரி வெப்பநிலை பதிவாகியுள்ளது. இது மிகவும் ஆபத்தானது, பாரிஸ் காலநிலை ஒப்பந்தத்தின்படி 1.5 டிகிரி செல்சியஸ் அதிகரிப்புக்குள் சராசரி வெப்பநிலையைக் கட்டுப்படுத்தியாக வேண்டும்.
கடந்து சென்ற குளிர்காலம் முழுவதும் பகல் வெப்பநிலையும் இரவு வெப்பநிலையும் இயல்பைவிட அதிகமாகவே இருந்தன. குளிர்கால வெப்பநிலை வேகமாக அதிகரித்துவருகிறது. சில நாட்களில் இரவு குளிராக இருந்தாலும் பகல் நேர வெப்பநிலை கடுமையாக அதிகரித்ததால், பலரால் சமாளிக்க முடியாத நிலை ஏற்பட்டது.
காரணம், குறைந்தபட்ச-அதிகபட்ச வெப்பநிலைகளுக்கு இடையிலான இடைவெளி பெரிதாக அதிகரித்ததே. அதிலும் தென்னிந்தியாவில் டிசம்பர், ஜனவரி மாதத்தில் வெப்பநிலை அதிகரித்துக் காணப்பட்டது. நாடு முழுவதும் பிப்ரவரி, மார்ச் மாதச் சராசரி வெப்பநிலை சட்டென்று அதிகரித்ததால், வசந்தம் இல்லாமலாகி வருவதும் தெரிகிறது. வெப்பநிலை படிப்படியாக அதிகரிப்பதுதான் பருவகால வழக்கம். இது வேகமாக மாறிவருகிறது.
ஆய்வு சொல்லும் முடிவு: குளிர் நிறைந்த ஜனவரிக்கும் தகிக்கும் வெப்பம் நிறைந்த ஏப்ரல் மாதத்துக்கும் இடையிலான வசந்த காலம் குறுகிவருவதாகவும் இந்தக் காலத்திலும் வெப்பநிலை அதிகரித்துவருவதாகவும் 50 ஆண்டு வானிலை ஆய்வுத் தரவுகளை ஆராய்ந்ததில் தெரியவந்துள்ளது.
‘கிளைமேட் டிரெண்ட்ஸ்’ என்கிற முகமையும் ‘கிளைமேட் சென்ட்ரல்’ என்கிற காலநிலை ஆராய்ச்சியாளர் குழுவும் தனித்தனியாக மேற்கொண்ட இந்த ஆய்வில் 1970 தொடங்கித் தரவுகள் ஆராயப்பட்டன. இந்த ஆராய்ச்சிக்கு 1970-க்குப் பிந்தைய தரவுகள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்குக் காரணம், இந்தக் காலத்தில்தான் புவி வெப்பமடைதலின் தாக்கம் நேரடியாக உணரப்பட்டது, இந்தக் காலத்துக்குத்தான் தொடர்ச்சியான தரவுகளும் நம்மிடம் இருக்கின்றன.
இந்த ஆராய்ச்சிகளின் அடிப்படையில் இந்தியாவில் வசந்த காலம் காணாமல் போய்க்கொண்டிருக்கிறது. வெப்பநிலை அதிகரிப்பின் காரணமாக வசந்த காலம் குறுகுகிறது. இது தாவர வளர்ச்சியையும் பாதிக்கிறது. பயிர்கள், காய்கள் பழமாகவும் தானியமாகவும் முதிர்வதற்கான காலம் குறுகுவதால், உணவு உற்பத்தி பாதிக்கப்படலாம்.
கடந்த ஆண்டில் மாங்காய் விளைச்சல் தாமதமானது நினைவிருக்கலாம். காலநிலை மாற்றத்துக்கான நாடுகளுக்கு இடையிலான குழுவின் (ஐ.பி.சி.சி.) 6ஆவது அறிக்கையின்படி, 1-4 டிகிரி செல்சியஸ் வெப்பநிலை உயர்வு இருந்தால் தெற்கு ஆசியாவில் சோள சாகுபடி 25-70 சதவீதமும் நெல் விளைச்சல் 10-30 சதவீதமும் சரியும் என்கிறது.
இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் வசந்தம் தாமதமாகிறது/குறுகிவருகிறது. ஜப்பானில் செர்ரி மரங்கள் மலர்வது பலரையும் ஈர்க்கும், அது பெரும் கொண்டாட்டமாக இருக்கும். 1953 தொடங்கி இந்த செர்ரி மரங்கள் மலர்வது ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கும் 1.2 நாள் முன்னதாக நகர்ந்துவருகிறது. குளிர்காலம் குறுகுவதும், வெப்பநிலை அதிகரிப்புமே செர்ரி மலர்தலை விரைவுபடுத்தி வருகின்றன.
“மாறிவரும் காலநிலை குறித்த உருமாதிரிகள் கூறுவதன்படி குளிர்ச்சி குறைந்து புதிய விஷயங்கள்/வளர்ச்சிகளின் தொடக்கமாகவும், வேளாண்மைக்கு அவசியமானதுமான உற்சாகமூட்டும் வசந்த காலம் பெரும் ஆபத்துக்குத் தள்ளப்பட்டுள்ளது. வேளாண்மை, உயிர்ப்பன்மை, பண்பாட்டு நடைமுறைகள் போன்றவை பருவகால உருமாற்றங்களில் ஆழமாக வேரூன்றியிருப்பவை.
இவை எல்லாமே ஆபத்தில் உள்ளன. எனவே, வசந்த காலம் குறுகுவதால் ஏற்படும் தாக்கம் காலநிலையில் மட்டுமல்லாமல், மேற்கண்ட அம்சங்களிலும் தாக்கத்தைச் செலுத்தும். பருவகாலங்களின் சீர்மையைப் பாதுகாக்கவும் விளைவுகளை மட்டுப்படுத்தவும் ஒருங்கிணைந்த, உடனடி முயற்சிகள் அவசியம்” என்கிறார் ஐ.பி.சி.சி. ஆராய்ச்சிக் குழுவில் அங்கம் வகிக்கும் பேராசிரியர் அஞ்சல் பிரகாஷ்.
கவலைக்குரிய எதிர்காலம்: வரலாற்றில் மிகவும் வெப்பமான ஆண்டு 2024. 2023 ஜூன் தொடங்கி 2024 ஆகஸ்ட் வரையிலான 15 மாதங்கள் தொடர்ச்சியாக வெப்பநிலை அதிகமாக இருந்த மாதங்களாகப் பதிவாகியுள்ளது. இந்த வெப்பநிலை தொழில்புரட்சிக்கு முந்தைய கால வெப்பநிலையைவிட 1-1.5 டிகிரி செல்சியஸ் அதிகமான வெப்பநிலை என்பதும் குறிப்பிடத்தக்கது. இப்படிப் புவியின் சராசரி வெப்பநிலை அதிகரித்துவருவது உலகெங்கிலும் பரவலாகவும், பருவகாலங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்திவருகிறது.
அனைத்து உலகப் பெருங்கடல்களின் சராசரி வெப்பநிலையும் அதிகரித்தே காணப்படுகிறது. பெருங்கடல்கள்தான் 90 சதவீத வளிமண்டல வெப்பத்தை உள்வாங்கிக்கொண்டு, வெயிலின் உக்கிரத்திலிருந்து நம்மைக் காத்துவருகின்றன. பெருங்கடல்கள் மூலமே புவியின் வெப்பநிலை முறைப்படுத்தப்படுகிறது. அதேநேரம் பெருங்கடல் மேற்பரப்பு வெப்பநிலையில் ஏற்படும் அதிகரிப்பும், வெப்பத்தைத் தணிக்கும் கடலின் செயல்பாடும் சிறிது சிறிதாக மட்டுப்பட்டுவருகின்றன. இது கவலைக்குரிய எதிர்காலத்தையே முன்வைக்கிறது.
காலநிலைப் பேரிடரின் விளைவாக இயற்கைச் சீற்றங்கள் நாடுகளைத் தாக்கத் தொடங்கிவிட்டன. காலம் கரைந்துகொண்டிருக்கிறது. வசந்தங்கள் மட்டும் குறுகிக் கொண்டிருக்கவில்லை. புவியின் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்தால், மற்ற பருவகாலங்களும் முற்றிலும் இல்லாமல் போகக்கூடும். வசந்த காலம் இல்லாமல் ஆகிவிட்டால், அடுத்து இலையுதிர்காலமும் விரைவில் இல்லாமல் போகும்.
கோடையும் குளிரும் மட்டுமே பருவகாலங்களாக எஞ்சக்கூடும். அதிலும் அக்டோபர் மாதம் முதல் பிப்ரவரி வரை இந்தியாவில் நிலவிவந்த குளிர்காலம், தற்போது இரண்டு மாதங்களுக்கானதாகச் சுருங்கிவருவது குறிப்பிடத்தக்கது. மற்றொருபுறம் தாவரங்கள், உயிரினங்கள், மனிதர்களை வெப்பநிலை உயர்வு மோசமாகப் பாதிக்கத் தொடங்கியிருக்கிறது.
உலக வெப்பநிலையைக் கட்டுப்படுத்துவதில் ஒவ்வொரு நாடும் உரிய வகையில் பங்களிக்காவிட்டால், காலநிலை மாற்றத்தின் தீவிர எதிர்விளைவுகளை எதிர்கொண்டே ஆக வேண்டும். ஆனால், பல்வேறு நாடுகள் பங்கேற்புடன் ஆண்டுதோறும் நடைபெறும் காலநிலை மாற்றப் பேச்சுவார்த்தைகள் பெரிய பலன்களை அளிப்பதில்லை. இப்படிக் காலநிலை மாற்றம் அடுத்தடுத்து விடுத்துவரும் எச்சரிக்கைகளை அரசுகளும் ஆட்சியாளர்களும் புறக்கணித்தால், இயற்கைப் பேரழிவுகளையும் பருவகாலச் சுழற்சிகளையும் யாராலும் தடுக்கவோ பாதுகாக்கவோ முடியாது.