இந்திய அளவில் உயர் கல்வியில் சேர்கிறவர் களின் எண்ணிக்கை தமிழகத்தில் அதிகரித்து வருவது மகிழ்ச்சிக்குரிய செய்திதான். ஆனால், நகை வழிப்பறி, திருட்டு, வன்முறை, கொள்ளை, கொலை செய்கிறவர்களில் பள்ளி-கல்லூரியிலும் பயிலும் மாணவர்கள் அல்லது அந்த வயது உடையவர்களும் இருக்கிறார்கள் என்பது சமீபகாலமாக மிகுந்த கவலையூட்டும் போக்காக மாறிவருவதையும் நாம் கவனித்தே ஆக வேண்டும்.
“பள்ளி இறுதித் தேர்வு முடிந்து மாணவர்கள் அமைதியாகப் பள்ளி வளாகத்தைவிட்டுச் செல்லக் காவல் நிலையங்கள் மூலமாகப் பாதுகாப்பு பெற்றுக்கொள்ளுங்கள்” என முதன்மைக் கல்வி அலுவலர் தலைமை ஆசிரியர்களுக்கு எழுதுகிறார். “சிறுவர்களுக்குப் பணம் கொடுத்து மனநிலையை மாற்றிக் குற்றங்களில் ஈடுபடச் செய்கிறவர்களிடம் கவனமாக இருங்கள்” எனத் தமிழக சட்டப்பேரவைத் தலைவர் குறிப்பிடுகிறார். அதாவது, பள்ளிக்கூடத்தி லேயே மாணவர்கள் வன்முறையில் இறங்குவார்கள் என்றும் கூலிப்படையில் மாணவர்களைச் சேர்க்கிறார்கள் கவனமாக இருங்கள் என்றும் அரசாங்கம் கவலையுடன் அறிவுறுத்துகிறது.
பள்ளி மாணவர்களான பதின்பருவத்தினரும், கல்லூரி மாணவர்களான இளைஞர்களும் அந்தந்தப் பருவத்தில் தங்களுக்கான அடையாளத்தைக் கட்டமைக்கவும், சமூகத்தில் அங்கீகாரம் பெறவும் வாய்ப்புகளைத் தேடுகிறார்கள். கூடுதலாக, கல்லூரிக் காலத்தில் நெருக்கமான நட்புறவுகளை உருவாக்குகிறார்கள். உலகம் முழுவதும் உள்ள உண்மை இது.
வெளிநாடுகளில், மாணவர்களும் இளைஞர்களும் ஆடை அணியும் நேர்த்தி, சுத்தமான காலணி, தலை வாரும் அழகு, பேசும் தொனி, பழகும் விதம் அனைத்தின் வழியாகவும் தாங்கள் பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவர்கள் என்பதைக் கல்விக்கூடத்துக்கு உள்ளேயும் வெளியேயும் வெளிப்படுத்துவதைக் கண்டு நான் வியந்திருக்கிறேன். நடை, உடை, பாவனைகளில் தங்களைச் சிறப்பாகக் காட்டிக்கொள்வதே தாங்கள் படிக்கிறவர்கள், நாகரிகமானவர்கள் என்பதன் முதல்கட்ட அடையாளம் என்பதை அவர்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.
அச்சுறுத்தும் நிலவரம்: அதே வயதுடைய நம் இளைஞர்கள், விதிமுறைகள் கடுமையாக இல்லாத கல்லூரிகளில் பேராசிரியர்களை எதிர்ப்பது, குழுவாகத் திரண்டு பிறரை மிரட்டுவது, பெண்களைக் கேலி செய்வது, வகுப்புகளைப் புறக்கணிப்பது, பாடங்களில் தோல்வி அடைவதைப் பெருமையாகப் பேசுவது, கல்லூரி வளாகத்துக்கு உள்ளேயும் பிற கல்லூரி மாணவர்களிடமும் வன்முறையில் ஈடுபடுவது, பேருந்துகளில் அடாவடித்தனம் செய்வது, ஆடை, காலணி, தலைமுடி, பேசும் தொனி என எதிர்மறையாகத் தங்களை வெளிப்படுத்தி, தங்களின் அடையாளத்தை உருவாக்கிக்கொள்கிறார்கள். கல்லூரிகளில் இருந்த இந்நிலை பள்ளிகளிலும் பரவி, பணத்துக்காக எதையும் செய்யும் கூலிப்படையாகச் செயல்படும் அளவுக்கு வளர்ந்திருக்கிறது.
தள்ளு - இழு கோட்பாடு: இவர்கள் ஏன் எதிர்மறைச் செயல்களால் தங்கள் அங்கீகாரத்தையும் அடையாளத்தையும் உருவாக்குகிறார்கள்? குற்றம் இழைப்பவர்களை நண்பர்களாக ஏன் தேர்வு செய்கிறார்கள்? உயிருக்கு ஆபத்து இருக்கும் எனத் தெரிந்தும் ஏன் பணத்துக்காகக் குற்றச் செயல்களில் பங்கெடுக்கிறார்கள்? டெக்கர் - வான் வின்கிளே (Decker and van-Winkle) இருவரும் தள்ளு – இழு (Push & Pull) எனும் கோட்பாட்டின் வழி இதை விளக்குகிறார்கள். குடும்பம், சமூகம், கல்விக்கூடம், தனிநபர் காரணங்கள் போன்றவை குற்றங்களிலும் வன்முறையிலும் ஈடுபடும் குழுக்களை நோக்கி இளைஞர்களைத் தள்ளுகின்றன. அதில், குடும்பம் மிக முக்கியப் பங்கு வகிக்கிறது.
பெற்றோரின் போதை - மதுப் பழக்கம், குடும்பத்தில் நடக்கும் அடிதடி வன்முறை, அல்லது குடும்பத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபடுவது போன்ற காரணிகளால் இவர்களின் பிள்ளைகள் குற்றக் குழுவை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.
பள்ளிக்கூடத்தில் ஒரு தவறு நடந்துவிட்டால், பொறுமையும் இல்லாமல், சட்டத்தின் மீதான நம்பிக்கையும் இல்லாமல் வன்முறையில் இறங்கி, பள்ளிக் கட்டிடத்தை அடித்து உடைக்கும் பெற்றோர்களாக நாம் இருக்கும்போது, நம் பிள்ளைகளும் வன்முறையை நோக்கித்தானே தள்ளப்படுவார்கள்? அதேவேளையில், பெற்றோரின் கண் காணிப்பு, கனிவு, மனநல ஆதரவு உள்ள குடும்பங்களிலும், மகன் அல்லது மகளின் நண்பர்களைப் பெற்றோர்கள் தெரிந்து வைத்திருக்கின்ற குடும்பங்களிலும் குற்றக் குழுவை நோக்கி மாணவர்களும் இளைஞர்களும் தள்ளப்படுவது குறைவாக உள்ளதை ஆய்வுகள் மெய்ப்பிக்கின்றன.
சமூகத்தின் சமத்துவமற்ற வளர்ச்சி, குறிப்பிட்ட பிரச்சினைகளின் தீவிரத்தைக் கண்டு, ‘இப்பிரச்சினையை யாருமே சரி செய்ய மாட்டார்களா?’ என்கிற கோபம், குற்றங்களை நியாயப்படுத்தும் நிகழ்வுகள், திரைப்படக் காட்சிகள், தாராளமாகக் கிடைக்கும் போதைப் பொருள் - மது, நண்பர்களுடனும் உறவினர்களுடனுமான விபரீதமான உரையாடல்கள் குற்றக் குழுவை நோக்கி இளைஞர்களைத் தள்ளுகின்றன.
அவர்கள் வாழும் பகுதியில் அல்லது படிக்கும் கல்லூரியில் ஏற்கெனவே உள்ள குழுவில் எளிதில் சேர்ந்துகொள்கிறார்கள். கல்லூரி என்றாலே ஒழுங்கீனமாக இருப்பதுதான் கெத்து, மரியாதை என்பதைத் திரைப்படங்கள் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து கட்டமைத்து வைத்திருக்கின்றன. இச்சூழல், அங்கீகாரம் தேடும் இளைஞர்களைக் குற்றக் குழுவை நோக்கித் தள்ளுகிறது.
எளிதில் கோபப்பட்டு அடிதடியில் இறங்கும் மாணவர்கள் தங்களைப் போன்று குற்றக் குணம் உள்ளவர்களுடன் எளிதில் சேர்ந்துகொள்கிறார்கள். தான் தவறே செய்யாவிட்டாலும், தவறிழைக்கும் மாணவர்கள் நண்பர்களாக இல்லாவிட்டாலும், கற்றல் குறைபாடுகளால், இன்ன பிற காரணங்களால் பிறர் தங்களை ஒதுக்கும்போதும், ஆசிரியர்கள் எதிர்மறை முத்திரை குத்தும்போதும், நல்ல முன்மாதிரி ஆசிரியர்கள் போதுமான அளவு இல்லாதபோதும் நற்குணம் மிக்க மாணவர்கள்கூடக் குற்றக் குழுவை நோக்கித் தள்ளப்படுகிறார்கள் என்கின்றன ஆய்வுகள். மேலும், தன்னம்பிக்கைக் குறைவுள்ளவர்கள், எளிதில் உணர்ச்சிவசப்படக்கூடியவர்கள் சமூகத்தின் மீது நம்பிக்கை இழக்கும்போது குற்றக் குழுக்களை நோக்கித் தள்ளப்படுகிறார்கள்.
இழு என்பது, ஏற்கெனவே குற்றக் குழுக்களில் இருக்கிறவர்கள் மற்ற இளைஞர்களைத் தங்கள் வசம் இழுப்பது. முடிவெடுக்க இயலாமல் தடுமாறுகிறவர்கள், மாற்றங்கள் உடனே நிகழ வேண்டும் என நினைக்கிறவர்கள், எதுவுமே சரியில்லை எனக் குறை சொல்கிறவர்கள், தங்களை யாரும் மதிக்கவில்லை எனப் புலம்புகிறவர்கள் மிக எளிதாக இழுக்கப்படுகிறார்கள்.
தண்டனைக்கு உரிய குற்றம் செய்தாலும், அவர்களுக்கு ஒருவகையான அங்கீகாரம் கிடைக்கிறது. மற்றவர்கள் அவர்களைக் கண்டு பயப்படுவதால் ‘மதிப்பு உயர்கிறது’. நண்பர்கள் கிடைக்கிறார்கள். பணம் கிடைக்கிறது. பயமுறுத்தி இழுக்கப்படுகிறவர்களும் உண்டு. சேர்ந்த பிறகு விலக நினைத்தால் மூளைச்சலவை செய்து தக்கவைப்பார்கள். மறுத்தவர்கள் கொல்லப்பட்ட வரலாறும் தமிழ்நாட்டுக்கு உண்டு.
ஒருங்கிணைந்த செயல்பாடுகள்: குற்றம் இழைத்த பிறகு தண்டிப்பதற்குச் சட்டங்கள் உள்ளன. ஒருவேளை, மிகவும் கொடூரமான குற்றங்களைச் (Heinous) செய்கிறவர்கள் 16 – 17 வயதுடையவர்களாக இருந்தாலும், அவர்களைப் பெரியவர்களாகக் கருத இந்திய சிறார் நீதிச் சட்டம் அறிவுறுத்துகிறது. ஆனாலும், வருமுன் காப்பதுதானே தமிழகத்தின் முழக்கம். குடும்பத்தில் இருந்தும் சமூகத்தில் இருந்தும் குற்றக் குழுக்களை நோக்கி இளைஞர்களைத் தள்ளும் காரணிகளை இனம் கண்டு சரி செய்ய வேண்டும்.
அதற்கு, போதைப் பொருள்களும் மதுவும் தடையின்றிக் கிடைப்பதைத் தடுக்க வேண்டும்; கூலிப்படையாகப் பயன்படுத்துகிறவர்களைத் தண்டிக்க வேண்டும்; கல்விக்கூடங்களை வன்முறைக் கூடமாகக் காட்டும் திரைக் காட்சிகளுக்குத் தடை விதிக்க வேண்டும்; தரமான கல்வியும், அதற்கேற்ற வேலையும் கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும்; நல்லொழுக்கக் கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்; விளையாட்டு, கலை, நேர்மறை நிகழ்ச்சிகளுக்கு ஊக்கமளிக்க வேண்டும்; பெற்றோரும் ஆசிரியர்களும் நல்ல முன்மாதிரிகளை அடையாளம் காட்ட வேண்டும்; பிள்ளைகள் எங்கே போகிறார்கள், வருகிறார்கள் என்பதைப் பெற்றோர் கண்காணிக்க வேண்டும்.
பெற்றோருக்கும் பிள்ளைகளுக்கும் இடையே கலந்துரையாடல் நிகழ வேண்டும்; கல்விக்கூடத்தில் பிரச்சினைகள் ஏற்படும்போது, அது குறித்து மாணவர்கள் மத்தியில் உரையாட வேண்டும்; தேவைப்பட்டால் சட்டத்தின் துணை கொண்டு உடனடியாகத் தீர்வு காண வேண்டும்.
குற்றக் குழுக்களால் இழுக்கப்பட்டவர்கள் மீது கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்: சட்டத்துறை, சமூகச் செயல்பாட்டாளர்கள், பள்ளி - கல்லூரி நிர்வாகம் - குடும்பத்தினர் இணைந்து திட்டமிட்டுச் செயல்பட வேண்டும்; தவறிழைத்தவர்களைப் பாரபட்சமின்றிச் சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும். இளைஞர்களின் வாழ்வை மிகுந்த பொறுப்புடன் கையாண்டு, அவர்களுக்குச் சரியான வழிகாட்டுவதன் மூலம்தான் பாதுகாப்பான சமூகத்தை உருவாக்க முடியும் என்பதை அனைவரும் உணர வேண்டும்.
- தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.co