சிறப்புக் கட்டுரைகள்

இலங்கைப் பண்பாட்டு ஆய்வின் முன்னோடி | கணநாத் ஒபயசேகர (1930-2025) அஞ்சலி

ஸ்ரீரவி

மானுடவியல், வரலாறு போன்ற கல்விப்புலங்களில் 1990களின் இறுதியில் ஒரு பெரும் விவாதம் நிகழ்ந்தது. பகுத்தறிவு என்பது உலகம் முழுவதும் ஒன்றுதானா அல்லது ஐரோப்பியரைத் தவிர, மற்ற மக்களுக்கு அவரவர் இடம், காலம், பண்பாட்டைப் பொறுத்து அது மாறுபடுமா என்பதுதான் அந்த விவாதத்தின் மையப் புள்ளி.

பூர்வகுடிகளும் கடவுளும்: கேப்டன் குக் என்ற ஆங்கிலேயர் 1778இல் ஹவாய் தீவுகளில் இறங்கிய முதல் ஐரோப்பியர். இதன் பிறகு இரண்டு வருடங்கள் கழித்து இரண்டாம் முறை ஹவாய்க்கு அவர் சென்றிருந்தபோது அத்தீவின் பூர்வ குடிகளுடன் நடந்த மோதலில் மரணமடைந்தார்.

இது நடந்து சுமார் 200 வருடங்கள் கழித்து, 20ஆம் நூற்றாண்டின் முன்னோடி மானுடவியலாளர்களில் ஒருவரான மார்ஷல் சாலின்ஸ் ‘வரலாற்றில் தீவுகள்’ (Islands of History [1976]), ‘பூர்வகுடிகள் எவ்வாறு சிந்திக்கின்றனர்: உதாரணமாக கேப்டன் குக்கைப் பற்றி’ (How Natives Think: About Captain Cook for Example [1995]) என்கிற இரு ஆய்வு நூல்களில், ஹவாய் பூர்வகுடிகள் கேப்டன் குக்கை, அவர்களின் கடவுளர்களில் ஒருவரான, ‘லோனோ’வாகக் கருதினர் என்று எழுதினார்.

இதற்கு எதிர்வினையாக ஒரு கேள்வி எழுப்பப்பட்டது. அதாவது - ‘உண்மையிலேயே ஹவாய் பூர்வகுடிகள் இப்படி ஒரு ஐரோப்பியக் கடவுளை உருவாக்கினார்களா அல்லது இக்கடவுளை ஐரோப்பியர்கள் பூர்வகுடிகளுக்காக உருவாக்கினார்களா?’ இந்த எதிர்வாதத்தை முன்வைத்து, ‘கேப்டன் குக் கடவுளான கதை’ (The Apotheosis Of Captain Cook: European Mythmaking in the Pacific [1992]) என்கிற ஆய்வு நூல் வெளிவந்தது.

இவ்விவாதம் கல்விப்புலத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியது. ‘ஹவாயின் அகழ்வாராய்ச்சித் தரவுகளின் அடிப்படையிலும், வாய்மொழி வரலாறுகளின் அடிப்படையிலும் எழுதப்பட்ட நூல் சொல்வதுதான் சரி’ என்று சாலின்ஸுக்கு ஆதரவாக ஒருபுறமும், ‘இல்லை, இது ஐரோப்பிய, காலனியப் பார்வை எந்த அளவுக்குப் பூர்வகுடிகளை மலினப்படுத்துகிறது என்பதற்குச் சிறந்த உதாரணம்’, ‘ஒட்டுமொத்த மனித குலத்துக்குக் காலம், இடம் என எல்லாப் பரிமாணங்களையும் தாண்டிய, பொதுவான ஒரு பகுத்தறிவுக் கட்டமைப்பு என்பது இல்லை’ என்று சாலின்ஸுக்கு எதிராக மறுபுறமும் வாதங்கள் முன்வைக்கப்பட்டன. ‘கேப்டன் குக் கடவுளான கதை’ நூலை எழுதியவர் இலங்கையைச் சேர்ந்த கணநாத் ஒபயசேகர (Gananath Obeyesekere). மார்ச் 25இல் மறைந்த ஒபயசேகர மிகச் சிறந்த மானுடவியலாளர்; பண்பாட்டு ஆய்வாளர்.

மிக முக்கியமான நூல்கள்: ஒபயசேகர 1930இல் பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த இலங்கையில் பிறந்தவர். பேராதனைப் பல்கலைக்கழகத்தில் பி.ஏ. ஆங்கில இலக்கியத்தில் பட்டம் பெற்றார். பின்னர், வாஷிங்டன் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் எம்.ஏ. பட்டமும், முனைவர் பட்டமும் பெற்றார்.

மீண்டும் இலங்கை திரும்பி பேராதனைப் பல்கலைக்கழகத்தில் சில காலம் பேராசிரியராகப் பணியாற்றிய ஒபயசேகர, அதன் பின்னர் அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா பல்கலைக்கழகத்திலும், வாஷிங்டன் பல்கலைக்கழகத்திலும் இறுதியாக பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்திலும் பணிபுரிந்தார்.

ஒபயசேகரவின் முதல் ஆய்வு இலங்கை கிராமங்களில் நில உடைமை என்பது பிரிட்டிஷ் காலனிய அரசின் கொள்கைகள், குடும்பக் கட்டமைப்பு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்கள், பொருளாதாரத்தில் ஏற்பட்ட மாற்றங்கள், சாதி, வர்க்கம், அரசியல், வேளாண் உறவுகள் என்று எல்லாம் இணைந்து எவ்வாறு கட்டமைக்கப்படுகின்றன என்பதைக் காட்டியது.

ஆவணக் காப்பகங்களில் உள்ள ஆவணங்களை ஆராய்ந்தும், மானுடவியல் ஆய்வு முறைகளைப் பின்பற்றிக் களஆய்வு செய்தும், இரு புலங்களின் கோட்பாடுகளையும் இணைத்து 1967இல் வெளிவந்த ‘இலங்கை கிராமங்களில் நில உடைமை முறை: ஒரு சமூகவியல் - வரலாற்று ஆய்வு’ (Land Tenure in Village Ceylon: A Sociological And Historical Study) இவரது முதல் நூல். இதன் பின் மனோதத்துவத்தால் ஈர்க்கப்பட்ட ஒபயசேகர, அந்தக் கோட்பாடுகள் மற்றும் இலங்கை மக்களின் நாட்டார் நம்பிக்கைகளின் அடிப்படையில் பல கட்டுரைகளையும் ‘மெடூசாவின் தலைமுடி’ (Medusa’s Hair: An Essay On Personal Symbols And Religious Experience [1981]) என்கிற நூலையும் எழுதினார்.

பத்தினி - கண்ணகி ஆய்வு: இந்த நூலுக்காகச் சிங்கள மக்களின் நாட்டார் தெய்வங்களை ஆராய்ந்தபோது, அக்கலாச்சாரத்தில் பரவலாகக் காணப்படும் பெளத்த ‘பத்தினி’ தெய்வ வழிபாட்டுக்கும், தமிழர்களின் ‘கண்ணகி’ வழிபாட்டுக்கும் இடையே உள்ள தொடர்ச்சியைக் கண்டு வியந்தார். அது குறித்து மேலும் ஆராய்ந்து ‘பத்தினி வழிபாட்டு மரபு’ (The Cult of Pattini [1984]) என்கிற நூலை எழுதினார். இந்த நூல், பத்தினி வழிபாடு குறித்த முக்கியமான ஆய்வாகும். தமிழர் பண்பாட்டிலும் மதச்சடங்குகளிலும் ‘பத்தினி’ (கண்ணகி) வழிபாட்டின் இடத்தை இது ஆராய்கிறது.

இவ்வழிபாட்டில் பௌத்த மதத்தின் தாக்கம், சங்க இலக்கியத்தில் வெளிப்படும் மத நம்பிக்கைகள், புராணங்களுடன் இந்த வழிபாடு எவ்வாறு தொடர்புபட்டுள்ளது என்பதை இந்நூல் விளக்குகிறது. மேலும், சிலப்பதிகாரத்தின் மதச் சூழல், சமூக அரசியல் மாற்றங்கள் எப்படிப் பத்தினி வழிபாட்டை வடிவமைத்தன என்பதையும் ஆய்வுசெய்கிறது.

இந்த வழிபாட்டின் வழியாகக் காலப்போக்கில் பௌத்தமும், சைவமும், வைணவமும் எந்தெந்த வகையில் செறிந்து வந்தன என்ற கேள்விக்கும் இந்நூல் விடையளிப்பதாக உள்ளது. சிங்களப் பேரினவாதம் தலை விரித்தாடியபோது சிங்களர் வழிபாடு, வரலாறு, தொன்மங்கள் இவை எல்லாம் எப்படித் தமிழ் வரலாறு, பண்பாட்டுடன் பின்னிப்பிணைந்துள்ளன என்பதைத் தெளிவாக்கியது.

இதைத் தொடர்ந்து ரிச்சார்ட் கோம்ப்ரிச்சுடன் இணைந்து அவர் எழுதிய ‘உருமாற்றப்பட்ட பெளத்தம்’ (Buddhism Transformed) என்கிற நூல், பிரிட்டிஷ் காலனியாதிக்கமும், புராட்டஸ்டன்ட் கிறித்துவமும் மேல்சாதி, மத்தியதர வர்க்க சிங்களர்களின் வழிபாட்டு முறைகளில் ஏற்படுத்திய தாக்கத்தை ஆராய்ந்து புதியதொரு பெளத்தம் உருவாக்கியதை நிறுவியது.

நாட்டார் பெளத்த நம்பிக்கைகள், சடங்குகள் போன்றவற்றை மறுத்து மேற்கத்திய நவீனப் பகுத்தறிவு சார்ந்த ஒரு புதிய பெளத்தம் உருவாக்கப்பட்டதே பின்னர் சிங்களப் பேரினவாதத்துக்கு இட்டுச்சென்றது என்றால், அது மிகையாகாது.

பல பத்தாண்டுகளாக இலங்கையில் ஏற்பட்ட சமூக அரசியல் மாற்றங்களைக் கூர்ந்து கவனித்து, சிந்தித்துத் தொடர்ந்து எழுதிவந்த சிந்தனையாளர் ஒபயசேகர. அவர் இறுதியாக எழுதிய நூல் ‘கண்டி அரசின் கீழ் வேடர் பழங்குடியினர்’. இந்நூலை எழுதியபோது அவருக்கு 92 வயது. அவருடைய விடா முயற்சிக்கும் அயரா உழைப்புக்கும் இதைவிட வேறென்ன சாட்சி வேண்டும்?

இலங்கையின் பண்பாட்டு வரைபடத்தைப் புரிந்துகொள்ள ஒபயசேகரவின் ஆய்வுகள் இன்றியமையாதவை. ஆராய்ச்சி, எழுத்து எல்லாவற்றையும் தாண்டி ஒபயசேகரவின் மாணவர்கள், நண்பர்கள் அனைவரும் சிலாகித்துச் சொல்வது, அவருடைய எளிமையையும் மனித நேயத்தையும்தான். நான் ஆய்வு மாணவனாக இருந்தபோது எங்கள் துறையில் இரண்டு முறை உரையாற்றியபோதும், பின்னர் அவர் சில காலம் நியூயார்க்கில் வாழ்ந்தபோதும் அவருடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு எனக்கு அமைந்தது.

அந்தச் சில மாதங்களில் ஓர் ஆய்வு மாணவனாக நான் அவரிடம் கற்றுக்கொண்டது, ஒரு முதுகலை மாணவனாக இரண்டு வருடங்களில் கற்றுக்கொண்டதைவிட அதிகம் என்று சொன்னால் மிகையல்ல. இலங்கை, தெற்காசியக் கல்வியாளர்களால் ஒபயசேகர என்றும் நினைவுகூரப்படுவார் என்பதில் ஐயமில்லை.

- தொடர்புக்கு: ravindran.sriramachandran@ashoka.edu.in

SCROLL FOR NEXT