அன்றாடம் என்பதே இயற்கையின் காலப் பரிமாணம் ஆகும். மானுடம் நினைவுசேகரம், அறிவுசேகரம் போன்றவற்றால் கடந்தகாலம், நிகழ்காலம், எதிர்காலம் என்று பிரித்து, வரலாற்றுத் தொடர்ச்சியை உருவாக்கிக்கொள்கிறது. அதன் விளைவுகளைத் தத்துவார்த்த மானுடவியல் நோக்கில் ஆராயும் கட்டுரைத் தொடர் இது.
மானுட இருப்பு உடல், சுயம், தன்னிலை என்கிற மூன்று பரிமாணங்களில் இயங்குகிறது என்பதைக் கண்டோம். உடல் இயற்கையின் அங்கமாக உள்ளது; அது முற்றிலும் அன்றாடம் என்ற காலப்பரிமாணத்தில் இயங்குகிறது. நேற்றைக்கு உணவருந்தியதை நினைவுகொள்வதன் மூலம் இன்றைய பசியைப் போக்க முடியாது. தொடர்ந்து சுவாசிக்காமல் உடல் இயங்க முடியாது. இதனை ஒட்டி உடலின் இயக்கம் பகல், இரவு காலச்சுழற்சியில் இயங்குவதை விவாதித்தோம்.
உடல் தனது நரம்பு மண்டலம் உருவாக்கும் சாத்தியத்தால் தனது இயக்கம் சார்ந்த நினைவுகளைப் பிம்பங்களாகச் சேகரிக்கிறது. அந்தப் பிம்பங்களின் துணை கொண்டு புலனுலகில் தனது இயக்கத்தைச் செப்பனிட்டுக்கொள்கிறது. தனக்குத் தேவையான பொருள்களைத் தேடிப்பெறுகிறது; உருவாக்கிக்கொள்கிறது. பிற மனிதர்களுக்கும் புலன் அனுபவம் பொதுவாக இருப்பதால் அதன் அடிப்படையில் புலன் அனுபவங்களைப் பகிர்ந்துகொள்வதால் சமூக வாழ்க்கை உருவாகிறது.
இத்தகைய பகிர்தலுக்காக மொழி உருவாகும்போது தன் சுயத்தை ‘நான்’ என்று சுட்டிக்கொள்ளும் தன்னிலை உருவாகிறது. அதற்கு ஒரு பெயர் வைக்கப்படுகிறது. அது இன்னாருடைய மகன் என்று ஒரு வம்சாவளி கூறுவது சாத்தியமாகிறது. அதையொட்டிப் பல்வேறு சமூக அடையாளங்கள் உருவாகின்றன. மொழியால் குறிக்கப்பட்டுச் சமூகத்தில் இயங்கும் அந்தத் தன்னிலை, உடலிலிருந்து வேறுபட்ட ஒன்றாகத் தன்னைக் கருதிக்கொள்வதில்தான் அன்றாடத்திலிருந்து விலகிய மானுட இருப்பு உருவாகிறது.
மொழியாலான இந்தத் தன்னிலை கொள்ளும் தன்னுணர்வு தன்னைப் பலவாறாக உருவகித்துக்கொள்வது சாத்தியமாகிறது. தனக்குப் புலனாகும் ஒட்டுமொத்த இயல்புவெளியையும் உள்ளடக்கிய பேரிருப்பைக் கடவுளாக உருவகித்து, அந்தக் கடவுளின் அங்கமாகத் தன் ஆன்மாவைக் கருதிக்கொள்வது சாத்தியமாகிறது.
தன்னுடைய உடல் இயக்கம் நின்ற பிறகு அந்த ஆன்மா மீண்டும் வேறொரு உடலில் பிறப்பு எடுக்கும் என்பது போன்ற கற்பனைகள் சாத்தியமாகின்றன. இதையெல்லாம் ஒட்டித்தான் பல்வேறு கதையாடல்கள் உருவாகின்றன. கலை, அழகியல் எல்லாம் சாத்தியமாகின்றன. அவையெல்லாம் சமூக வாழ்க்கையைக் கட்டமைத்துக்கொள்ள, தகவமைத்துக்கொள்ள உதவுகின்றன.
மொழியால் உருவான தன்னிலைக்கும், உடலின் இயக்கத்துக்கும் இடையில் புலனுலகின் நினைவுசேகரமான சுயம் இருக்கிறது. அதேநேரம், சுயத்தின் நினைவுசேகரம் முழுவதும் தன்னிலையின் கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. சாதாரணமாக நாம் மறந்துவிட்ட ஒன்றை, மற்றொரு தருணத்தில் திடீரென நினைவுகொள்கிறோம். அதனால் நம்மால் சேகரிக்கப்பட்டு, ஆனால் நினைவாக இயக்கம்பெறாமல் இருப்பதை நினைவிலி மனம் (unconscious) என்கிறோம்.
அதுதான் நாம் உறங்கும்போது பல பிம்பங்களைக் கனவாக உருவாக்குகிறது. ‘நாம் காணும்’ பல கனவுகள் புதிராக இருக்கின்றன; நம்மை வியப்படைய வைக்கின்றன. ‘நாம் காணும் கனவுகள்’ என்று சொன்னாலும் அவற்றை நமது தன்னிலைத் தன்னுணர்வுடன் உருவாக்குவதில்லை என்பதால், அவற்றை நமக்கு ‘வரும்’ கனவுகள் என்று சொல்வதுதான் துல்லியமானது.
பொதுவாக, தன்னுணர்வின் தளத்தை மேலடுக்காகவும், கனவுகளை உருவாக்கும் நினைவிலி மனதை ‘ஆழ்மனம்’ என்று சொல்வதும் உண்டு. இத்தகைய மேற்பரப்பு, ஆழம் என்கிற உருவகம் பயனுள்ளதல்ல. சுயத்தின் பரப்பில் நினைவுசேகரம் வரையும் கோடுகள் தொடர்ந்து உருமாற்றம் பெருகின்றன; சில தன்னுணர்வுடன் அழுத்தமாக வெளிப்படுகின்றன – பல மங்கலாகத் துலக்கமின்றி இருக்கின்றன.
அவற்றுக்கு இடையிலான ஊடாட்டம் எத்தகையது என்பதை நிர்ணயிப்பது கடினமானது. இதன் காரணமாகத்தான் நினைவுசேகரமாக உள்ள சுயத்தைத் தன்னிலையாகக் கட்டமைப்பதற்குக் கதையாடல்கள் தேவைப்படுகின்றன.
காலமும் கதையாடலும்: குழந்தைகளுக்கு உணவளிப்பது போலவே முக்கியமானது கதை சொல்வதும். பல சமூகங்களில் இரண்டும் சேர்ந்து நடப்பது உண்டு. ஒவ்வொரு கவளமாக உணவை ஊட்டியபடி கதை சொல்வது, தூங்கவைக்கக் கதை சொல்வது ஆகியவை முக்கியமான மானுடவியல் செயல்பாடுகள். நினைவுசேகரத்தை எப்படிச் செயல்பாட்டுத் தர்க்கமாகத் தகவமைத்துக்கொண்டு தன்னிலையாக்கிக்கொள்வது என்கிற தொழில்நுணுக்கத்தை இந்தக் கதைகள் பயிற்றுவிக்கின்றன. அதனால்தான் கதையில் ஒரு வரியைச் சொன்னவுடன், அதனைக் கேள்வியாகக் கேட்டு பதில் சொல்லவைப்பது அவசியம்.
அப்படிக் கதையில் பல்வேறு செயல்பாடுகள் ஒன்றன்பின் ஒன்றாக நடக்கும்போது, காலம் நேர்க்கோட்டுப் பரிமாணத்தைப் பெறுவது முக்கியமானது. இந்தச் செயல்களுக்குக் காரண காரியத் தொடர்ச்சியும் கொடுக்கப்பட்டால், அங்கே வரலாற்று உணர்வு துளிர்விடத் தொடங்குகிறது.
‘கதை கதையாம் காரணமாம், காரணத்தில் தோரணமாம்’ என்பது சொலவடை. ‘கதை கதையாம், கதை கதையாம், காரணமாம், அதை வரி வரியாய் பாடிடுவேன், பாடிடுவேன்’ என்று ஒரு பாடல் உண்டு. இப்படியாகச் செயல்களின் அடுக்கான கதை, அதனுள் காரண காரியத் தொடர்ச்சி என்பது அன்றாடம் என்கிற காலப் பரிமாணத்திலிருந்து வரலாறு என்ற காலப் பரிமாணத்துக்குச் செல்வதற்கான பாதை எனலாம்.
பாடல், உரைநடை, ஓவியம், சிற்பம், நடனம், நாடகம், பிம்பத் தொகுப்பு என்று பல்வேறு வடிவங்களைக் கதையாடல்கள் தொடர்ந்து எடுத்துவந்துள்ளன. அவை எல்லாமே இன்றியமையாமல் புலன் உணர்வுக்களத்தின் பரப்பில் நினைவுசேகரம், அறிவுசேகரம் என்று கோலங்கள் இடுபவை என்பதால், இரண்டு திசைகளில் எப்போதுமே செயல்படுபவை. ஒருபுறம் சுய உறுதிப்பாட்டின் மூலம் தன்னிலையாக்கத்தை நிகழ்த்துபவை; மற்றொருபுறம் புலன் உணர்வுத் தளத்தில் தன்னிலையைப் பரப்புவதன் மூலம் சுய கலைப்பை முயற்சிப்பவை.
உணர்ச்சியையும் செயல்தர்க்கத்தையும் பிணைத்துத் தன்னிலைக்குத் தீனி போடலாம்; அல்லது உணர்வுத் தளத்தின் விகசிப்பு (மலர்தல்) மூலம் சுயம் - தன்னிலைகளுக்கு இடையே ஊடாட்டம் கொண்டு பரவச் செய்யலாம். ஒவ்வொரு கதையாடலும் அதன் தொழில்நுணுக்கத்தில் இந்தச் சாத்தியங்களை வெவ்வேறு விதங்களில் பிணைக்கிறது எனலாம்.
அதன் காரணமாகக் கதையாடல்கள் அன்றாடம், வரலாறு ஆகிய இரண்டு பரிமாணங்களிலும் தொடர்ந்து இயங்குகின்றன. ஒரு கப்பல் உடைந்து மூழ்கி, பேரரசனும், அடிமையும் ஓர் ஆளற்ற தீவில் ஒதுங்கும்போது, அங்கே வரலாற்றுத் தொடர்பு அறுந்துபோய் அன்றாடம் பரிணமிக்கிறது. கதையாடலிலிருந்து வாழ்க்கை விடுபடத் தொடங்குகிறது.
- தொடர்புக்கு: rajankurai@gmail.com