தி.க.சி. 
சிறப்புக் கட்டுரைகள்

21E, சுடலைமாடன் தெரு, நெல்லை | தி.க.சி. நூற்றாண்டு நிறைவு

இரா.காமராசு

தி.க.சி. (திருநெல்வேலி கணபதியப்பன் சிவசங்கரன்), எழுபத்தைந்து ஆண்டுகளுக்கு மேல் ஓர் இலக்கிய இயக்கமாக வாழ்ந்தவர். இளமைப் பருவத்திலேயே தாய், தந்தையரை இழந்து, தாத்தாவின் அரவணைப்பில் வளர்ந்தவர். பள்ளிப்பருவத்திலேயே அவர் பயின்ற திருநெல்வேலி மந்திரமூர்த்தி உயர்நிலைப்பள்ளி அவரின் நாற்றங்காலாய் அமைந்தது. பாடநூல்களைக் கடந்த தேடலும், நாட்டுப்பற்றும், மகாத்மா காந்தி மீதான ஈடுபாடும் பொது நல நாட்டத்தை விதைத்தன.

‘சுதந்திரச் சங்கு’ இதழில் வந்த சங்கு சுப்பிரமணியன் கவிதை ‘வர்க்க’ வேறுபாட்டை உணர்த்திற்று. ‘சூத்திரப்’ பட்டத்துக்கு எதிரான பெரியாரின் குரல் ‘வர்ண’ வேறுபாட்டை உணர்த்திற்று. அக்காலத்தில் திருநெல்வேலி வட்டாரத்தில் பலரையும் ஈர்த்த சிந்துபூந்துறை சண்முகம் அண்ணாச்சி வழி பொதுவுடைமை இலக்கியங்கள் அவருக்கு அறிமுகமாயின.

தி.க.சி.க்குப் புகழ்பெற்ற இந்துக் கல்லூரியில் பயிலும் வாய்ப்பு அமையப் பெற்றது. தமிழ்ப்பேராசிரியர்கள் கு.அருணாசலம், ஆ.முத்துசிவன் ஆகியோரின் ஊக்குவிப்பில் பாரதியோடு, பாரதிதாசனிலும் ஈடுபாடு வந்தது. ஆங்கிலப் பேராசிரியர் அ.சீனிவாசராகவன் வழி தமிழ், ஆங்கில இலக்கிய உலகு அறிமுகமானது.

புதுமைப்பித்தனையும் இவர் மூலமே வாசித்தார். நாட்டின் விடுதலைப் போரில் ஈடுபாடும், காந்தியைப் பார்த்து, நூல்களைப் படித்து காந்திய ஈர்ப்பும், பொதுவுடைமை இயக்க நூல்கள் படித்து, தலைவர்கள் பேச்சுகள் கேட்டு, மார்க்சிய ஈடுபாடும் இளம் தி.க.சி.யை ஒரு செயற்பாட்டாளராக உருவாக்கின.

1947இல் திருநெல்வேலியில் கலைஞர் கழகம் உருவானது. இதன் தலைவர் தொ.மு.சி.ரகுநாதன். செயலாளர் தி.க.சி. நா.வானமாமலை, என்.டி.வானமாமலை, பாளை. சண்முகம், சீனிவாசன், சிந்துபூந்துறை சண்முகம் முதலியோர் முக்கியச் செயற்பாட்டாளர்கள்.

மேடைப்பேச்சு, இலக்கியப் படைப்பாக்கம், நாடகம், திரைப்பட விமர்சனம், திறனாய்வு ஆகிய கலை இலக்கியப் பயிற்சிக்கூடமாக அது விளங்கியது. திருநெல்வேலியில் 1941இல் வல்லிக்கண்ணன் அறிமுகம் தி.க.சிக்குக் கிடைத்தது. தி.க.சி. தொடங்கிய ‘இளந்தமிழன்’ கையெழுத்து இதழுக்கு வல்லிக்கண்ணன் ஆசிரியர் ஆனார். இருவரும் இணைபிரியா ‘இலக்கிய இரட்டையர்களாக’ வலம் வந்தனர். தி.க.சி, வல்லிக்கண்ணனைத் தன் ‘இலக்கிய ஆசான்’ என்பார்.

தி.க.சி.யும் கவிதையில்தான் தொடங்கினார். ‘கிராம ஊழியன்’ இதழில் இவரின் கவிதைகள் வெளிவந்தன. வல்லிக்கண்ணனின் முயற்சியால் 1942இல் ‘பிரசண்ட விகட’னில் தி.க.சி. எழுதிய ‘வண்டிக்காரன்’ சிறுகதை வெளியானது. இது அவருக்கு ஊக்கம் தந்தது. தொடர்ந்து கவிதைகள், சிறுகதைகள், நாடகங்கள், திரைப்பட விமர்சனங்கள் எழுதினார். ‘கலாமோகினி’, ‘கிராம ஊழியன்’, ‘ஹனுமான்’, ‘இந்துஸ்தான்’, ‘அஜந்தா’, ‘சாந்தி’, ‘தாமரை’ எனப் பல இதழ்களில் படைப்புகள் வெளிவந்தன.

தி.க.சி. தமிழிலும் ஆங்கிலத்திலும் புலமையை வளர்த்துக் கொண்டார். தமிழ்ப் புத்தகாலயம் கண.முத்தையாவோடு ஏற்பட்ட தொடர்பு மொழிபெயர்ப்பு செய்ய வழிகோலியது. 1952 வாக்கில் சண்முகம் தொடங்கிய ‘நெல்லை பப்ளிஷிங் ஹவுஸ்’க்காகவும் மொழிபெயர்த்தார். ரஷ்ய, சீன அரசியல் நூல்கள் பலவற்றை மொழிபெயர்த்தார். விரைவாக மொழிபெயர்க்கும் தி.க.சி. யின் ஆற்றல் பின்னாளில் சோவியத் செய்திப் பிரிவில் பணியில் சேர வாய்ப்பாக அமைந்தது.

தி.க.சி.யின் குடும்பச் சூழலால் திருநெல்வேலி ‘தாம்கோஸ்’ வங்கியில் 1945இல் ஒரு எழுத்தராகப் பணியில் சேர்ந்தார். பொதுமை நாட்டமும், உழைப்பவர் பால் அக்கறையும் இயல்பிலேயே அமையப்பெற்ற தி.க.சி. வங்கிகள் தேச உடைமை ஆகாநிலையில், எவ்விதச் உரிமைகளும் அற்ற வங்கி ஊழியர்களுக்காக சங்கப் பணிகளில் ஈடுபட்டார்.

இதனால் பல இடங்களுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டார். இந்நிலையில் தாம்கோஸ் வங்கி, பேங்க் ஆப் மதுரையுடன் இணைக்கப்பட்டது. கேரள மாநிலம் – கொச்சிக்கு மாற்றம் செய்யப்பட்ட நிலையில் அங்கு இரண்டாண்டுகள் பணியாற்றி 1964இல் பணியிலிருந்து விலகிவிட்டார்.

தி.க.சியின் அரசியல், இலக்கிய ஈடுபாடு காரணமாக அவருக்கு ‘சோவியத்நாடு’ ஊடகப் பிரிவில் பணி கிடைத்தது. அவர் சென்னையில் தன் இலக்கியப் பயணத்தைத் தொடர வழியமைத்தது. 1964 முதல் 1990 வரை சோவியத் செய்திப் பிரிவில் பணியாற்றினார்.

மிகுந்த நெருக்கடியான பணி என்றாலும் இலக்கியம் தொடர்பான தன் விருப்பங்களுக்கு இசைவாக அமைந்ததால் இதனை முழு ஈடுபாட்டுடன் செய்தார். தொ.மு.சி., வ.விஜயபாஸ்கரன், மாஜினி, கே.சி.எஸ்.அருணாசலம் போன்றோருடன் பழகிப் பணி செய்யும் வாய்ப்பாக இது அமைந்தது.

இத்தருணத்தில்தான் தி.கசி.யின் இலக்கியப் பங்களிப்பில் முக்கியப் பகுதியான ‘தாமரை’ இதழ் ஆசிரியப் பொறுப்பினை அவர் ஏற்று நடத்தியது. 1965 முதல் 1972 வரை சுமார் நூறு இதழ்கள் இவர் பொறுப்பில் வெளிவந்தன. தமிழ் எழுத்துலகில் தடம் பதித்த பலரும் ‘தாமரை’ வழி அறிமுகமாயினர். பல மலர்கள், சிறப்பிதழ்கள் கொண்டுவரப்பட்டன. ஜீவா தொடங்கிய ‘தாமரை’யின் பொற்காலம் எனச் சொல்லத்தக்க வகையில் தி.கசி. செய்து காட்டினார்.

‘தாமரை’யில் பல புதிய முயற்சிகளைச் செய்தார். இப்பணியில் அவருக்கு எவ்விதப் பொருளாதரப் பயனும் இல்லை. அவர் தங்கியிருந்த அறையைத்தான் அலுவலகமாகப் பயன்படுத்தினார். ‘சோவியத்நாடு’ வேலை நேரம் போகத் தன் ஓய்வு நேரத்தையே இதற்குப் பயன்படுத்தினார். இன்னும் சொல்லப் போனால் இதழில் பொறுப்பு என்ற வகையில் எவ்விடத்திலும் இவரின் பெயர் கூடப் பதிவாகவில்லை.

‘தாமரை’ மூலம் கொப்பும் கிளையும் பூவும் காயுமாகப் விருட்சமான எழுத்தாளர்கள் வரிசை நீளமானது. ‘என்னைச் செதுக்கியச் சிற்பிகள்’ என்று பாரதி, பாரதிதாசன், வ.ரா., ஜீவா ஆகியோரை தி.கசி. குறிப்பிடுவார். மார்க்சியத்தை ஏற்று இந்தியப் பொதுவுடைமை இயக்கத்தில் இணைத்துக் கொண்டார்.

இறுதிவரை அதில் உறுதியாக இருந்தார். தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் ஆகியவை பண்பாட்டுத் தளத்தில் இணைந்து இயங்க வேண்டும் என வலியுறுத்தினார். தி.க.சி. முற்போக்கு இலக்கிய இயக்கத்தை மக்கள் திரள் பண்புடையதாக்க முயன்றார். எனவே ஜன நாயக, மனித நேய, முற்போக்கு இளம் படைப்பாளிகள் பலரை இனம் கண்டு ஊக்குவித்தார்.

கழிந்த ஐம்பதாண்டுகளில் எழுத வந்த எவரையும் தி.க.சி.யின் ‘கால் கடுதாசி’ கண்டு கொள்ளாமல் விட்டதில்லை. “...முழுமையாக இலக்கிய வாழ்வு வாழ்ந்ததைக் கால்காசு கடுதாசி சொல்லியபடி நிற்கும்” என்று எழுத்தாளர் பா. செயப்பிரகாசம் சொல்லியிருக்கிறார். தி.க.சி.யின் திறனாய்வுகளை ‘விமர்சனத் தமிழ்’ என்று கவிஞர் மீரா வெளியிட்டார். மதிப்புரைகள், முன்னுரைகள், நேர்காணல்கள், நாட்குறிப்புகள், கவிதை, நாடகம் என தி.க.சி. பல வகைமைகளிலும் எழுதினார்.

இவை யாவுமே தனக்கானப் படைப்பு வெளி எனக் கருதாமல் தமிழ்ப் படைப்பாளிகளுக்கான அறிமுக வெளியாகக் கருதினார். கடைசி இருபத்தைந்தாண்டுகள் அவர் வசித்த 21இ, சுடலைமாடன் தெரு தமிழகமெங்கிலும் இருந்து மூத்த, இளைய இலக்கியவாணர்களின் கூடும் ‘இலக்கியத் திண்ணையாக’வே திகழ்ந்தது. தி.க.சி.யும் அவருடைய மகன் வண்ணதாசனும் சாகித்திய அகாதெமி விருது பெற்றது தமிழ் இலக்கிய வரலாற்றில் புதுமை.

“தலித்தியம், பெண்ணியம், சுற்றுச் சூழல் இயல், தமிழியம், மார்க்ஸியம் ஆகிய பஞ்சசீலத் தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட இலக்கியப் படைப்புகள் வேரும் விழுதும் விட்டு நாலா திசையிலும் கிளை பரப்பும்... அத்தகைய இலக்கியத்தின் வேர்களுக்கு நீர் வார்ப்போம்!” என்பது தான் அவரின் நிறைவு முழக்கம். எனவேதான் எழுத்தாளர் கி.ராஜநாராயணன், “தி.க.சி.யைப் பத்தி ஒரு வார்த்தையில சொல்லணும்னா அவர் ஒரு நீர்ப்பாய்ச்சி. அதனால்தான் வேர்கள் எல்லாம் அவரை நோக்கி நீண்டுக்கிட்டே இருந்துச்சு” என்பார்.

- தொடர்புக்கு: kamarasuera70@gmail.com

SCROLL FOR NEXT