எழுத்தாளர் சா.கந்தசாமி ராமாயணக் கதாபாத்திரமான இரணியன் கதையை அடிக்கருத்தாகக் கொண்டு ‘இரணிய வதம்’ சிறுகதையை எழுதியிருக்கிறார். ‘இரணிய வதம்’ சிறுகதைக்குத் தொன்மத்தை நேரடியாக எடுத்துக்கொள்ளவில்லை அவர். ‘தான்’ எனும் ஆணவம் ஒரு மனிதனின் அழிவுக்குக் காரணமாக இருப்பதை அடிக்கருத்தாக இக்கதை உள்வாங்கிக் கொண்டுள்ளது.
தொன்மக் கதையின்படி இரணியன் அசுரர்களின் தலைவன். இரணியன் ஆணவம் மிகுந்தவன்; இறைவனை மதிக்காதவன். தனக்கும் மேலே ஆற்றல் நிரம்பிய தெய்வம் ஒன்று உண்டு என்ற கருத்தை ஏற்றுக் கொள்ளாதவன். சிவபெருமானிடம் இவன் பெற்ற வரங்களே இவனது ஆணவத்திற்குக் காரணமாக அமைகிறது.
ஐம்பூதங்களும் பெற்றுள்ள வலிமை எல்லாம் தனியொருவனாகப் பெற்றவன். ‘பூதங் கண்ணிய வலியெலா மொருதனி பொறுத்தான்’ என்று கம்பர் இரணியனைப் பற்றி எழுதியிருக்கிறார். வால்மீகி ராமாயணத்தில் இரணியன் வதை சொல்லப்படவில்லை. கம்பர்தான் இக்கதையைச் சேர்த்திருக்கிறார்.
இரணியனைப் போலவே ஆணவத்தால் தன்னிலை இழந்து நிற்கிறான் ராவணன். இந்தச் சூழலில் இதேபோன்று ஆணவத்தால் அழிந்த இரணியனின் வரலாற்றைத் தன் அண்ணனுக்குக் கூறுவதினூடாகச் சீதையைக் காப்பாற்றலாம் என்பது வீடணனின் எண்ணம். ராவணனும் இரணியனும் பெண்ணாசை என்ற இடத்தில் வேறுபடுகின்றனர். ஆனால், இருவருமே தம்மை வியந்து ஆணவம் கொள்வதில் ஒன்றுபடுகின்றனர். இந்தக் கண்ணியைத்தான் சா.கந்தசாமி தன் கதைக்குக் கருவாக எடுத்துக்கொண்டிருக்கிறார்.
‘இரணிய வதம்’ சிறுகதை சின்ன கருப்பு, ராஜாராமன், பாப்பா ஆகிய மூன்று கதாபாத்திரங்களின் இயக்கமாக எழுதப்பட்டுள்ளது. இதில் சின்ன கருப்பு மிகச்சிறந்த நாடகக்கலைஞன். இரணியன் வேடம் புனைந்து ஆடுவதில் வல்லவன். ‘ராட்சஷன் வேஷம் அச்சா பொருந்திப் போவுது. இன்னக்கி நேத்தியா வேஷம். மூணு தலைமுறையா இல்ல’ என்று அப்பகுதி மக்களால் புகழப்படுகிறான் சின்ன கருப்பு. இந்தப் பாராட்டும் அவன் போடும் இரணியன் வேடமும் அவனுக்குள் ஆணவத்தை உருவாக்குகின்றன.
அவனது நடையும் நடத்தையும் இரணியனுக்கு உரியதாகவே மாறிவிடுகிறது. இரணியன் வேடம் என்றால் சின்ன கருப்புதான். ‘சின்ன கருப்பு இரணியன் ஸ்பெஷல்’ என்று மதுரைக்கு ரயில் விடும் அளவுக்கு அவனது புகழ் பரவியிருக்கிறது. ‘நளினமும் அகங்காரமும் கொண்ட நடை - பூமியில் நடப்பது மாதிரியே இல்லை’ என்று சா.கந்தசாமி இக்கதாபாத்திரம் பற்றி எழுதியிருக்கிறார்.
சின்ன கருப்புவின் ஆட்டத்தால் ஈர்க்கப்பட்டு நாடகக் கலைஞனானவன் ராஜாராமன். நரசிம்மராக வேடம் புனைபவன். சின்ன கருப்புவும் ராஜாராமனும் போடும் இரணிய கசிபு நாடகம் அந்தப் பகுதியில் புகழ்பெற்று விளங்குகிறது. இருவரையும் பற்றி பத்திரிகைகளில் செய்திகள் வருகின்றன. ராஜாராமன் புதியதாகத் திருமணமானவன். அவன் மனைவி பாப்பா. ஒருநாள் பக்கத்து ஊருக்குப் புலி நகம் வாங்கச் செல்கிறான் ராஜாராமன்.
அந்த நேரத்தைச் சின்ன கருப்பு பயன்படுத்திக் கொள்கிறான். ராஜாராமன் வீடு திரும்புகிறான். பாப்பா அழுகிறாள். ‘சொல்லு பாப்பா… இன்னிக்கியும் வந்தானா?’ என்கிறான். இவ்வளவுதான் எழுதியிருக்கிறார் சா.கந்தசாமி. என்ன நடக்கிறது என்பதைப் பிரதியை வாசிப்பவர்களால் புரிந்துகொள்ள முடிகிறது. சின்ன கருப்புவின் எண்ணம் ராஜாராமனுக்குத் தெரியாமல் இல்லை. அன்றிரவு நடைபெறும் நாடகத்தில் உண்மையிலேயே நரசிம்மராக மாறுகிறான் ராஜாராமன். சின்ன கருப்புவின் பார்வை இப்படியும் அப்படியும் அலைபாய்கிறது. முகத்தில் ஆணவம். கண்களில் கர்வம். இகழ்ச்சியாக ஒரு சிரிப்பு.
“உன் ஹரியானவர் இந்தத் தூணில் இருக்கின்றாரா?” என்று ராகம் போட்டு இழுக்கிறான் சின்ன கருப்பு. பாப்பா அவன் மனதில் முழுமையாக நிறைந்திருக்கிறாள். அவள் தனக்காக நாடகம் பார்க்க வந்திருப்பதாகப் பெருமிதம் கொள்கிறான். வெண் மயிரும் சிங்க முகமும் புலி நகமுமாக நரசிம்மம் வெளிப்படுகிறது. இரணியனின் நெஞ்சில் ஓர் அடி. பழக்கமில்லாத அடி. இரணியனால் தாங்க முடியவில்லை. இரணியன் அலறுகிறான்.
‘அற்பப் பதரே… அக்ரமமா புரியறே?’ நரசிம்மம் அவன் நெஞ்சில் அடித்து மார்பில் இருந்த துணிகளைக் கிழித்து வீசியது. இரத்தமும் சதையும் புலி நகத்தில் சிக்கியது. இரணியன் காலைப் படபடவென்று உதறுகிறான். துடியாய்த் துடித்த இரணியனின் கையும் காலும் நின்றது. பாப்பா இரணியன் வதத்தைப் பார்க்க முன்னே வருகிறாள். ‘அவனை அதம் பண்ணிட்டேன்’ என்கிறது நரசிம்மம்.
இந்தக் தொன்மக் கதைகளிலும் ஆணவம் அழிக்கப்பட வேண்டும் என்ற ஓர் ஓர்மை செயல்படுகிறது. ராஜாராமன் என்கிற பெயரே திருமாலைச் சுட்டி நிற்கிறது. திட்டமிட்டுத்தான் சா.கந்தசாமி இப்பெயரை வைத்திருக்கிறார். அதர்மம் அழிக்கப்பட வேண்டும் என்ற அறம் புனைவில் நிலைநிறுத்தப்பட்டாலும் அது பிரச்சாரமாக முன்னெடுக்கப்பட வில்லை.
சின்ன கருப்பு என்கிற கதாபாத்திரம் இரணியனுடன் ராவணனையும் நினைவூட்டுகிறது. இந்தத் தொன்மக் கருவைத்தான் சா.கந்தசாமி நிகழ்கால வாசிப்புக்கு ஏற்றபடி புனைந்திருக்கிறார். சின்ன கருப்புவிடம் இருக்கும் திறமையும் அதனூடாக அவன் அடைந்த புகழும்தான் அவனுக்குள் அகங்காரத்தைக் கூட்டுகிறது. அது இயல்பாகவே தன்னைவிடப் பிறரைத் தாழ்ந்தவர்களாகக் கருதச்செய்துவிடுகிறது.
ராஜாராமன் தனக்குக் கட்டுப்பட்டவன் என்ற எண்ணம் சின்ன கருப்புவின் ஒவ்வொரு செய்கையிலும் வெளிப்படுகிறது. இதனைப் புனைவின் தொடக்கத்திலேயே சா.கந்தசாமி வெளிப்படுத்தியிருக்கிறார். ராஜாராமன் வருவதைக் கண்டவுடன், சின்ன கருப்பு மதகின்மேல் ஏறி உட்காருகிறான். ராஜாராமன் மடித்துக் கட்டியிருந்த வேட்டியை அவிழ்த்து விடுகிறான்.
சின்ன கருப்பு காட்டிய இடத்தில் ராஜாராமன் உட்காருகிறான். இந்தச் செய்கைகள் சின்ன கருப்புக்கு ஓர் அதிகாரத்தை வழங்குகிறது. அதனால் அவனுடன் சேர்ந்து அவன் மனைவியும் தனக்குக் கட்டுப்பட்டவள் என்று நினைக்கிறான். தொழிலுக்காக நாம் அணியும் புறவேடம் அகத்தையும் மாற்றிவிடும் தன்மை கொண்டது என்ற நுட்பமான வாசிப்பையும் இக்கதை தருகிறது. இரணியன் இக்கதைக்கு ஒரு தொன்மமாகப் பயன்பட்டிருக்கிறான். அவ்வளவுதான். ஆணவம் நம் மனதிலிருந்து கழற்றி எறியப்பட வேண்டிய ஒன்று. இரணியனின் கதை அதைத்தான் நமக்கு நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது.
(நிறைவு பெற்றது)
இந்தத் தொடர் விரைவில் இந்து தமிழ் திசை வெளியீட்டில் புத்தகமாக வெளிவரவுள்ளது.
- தொடர்புக்கு: ramesh5480@gmail.com
***
மா.அரங்கநாதன் விருது: எழுத்தாளர் மா.அரங்கநாதன் பெயரில் ஆண்டுதோறும் இலக்கிய விருதுகள் வழங்கப்பட்டுவருகின்றன. இந்தாண்டுக்கான விருதுகள், பேராசிரியர் தமிழவன், ‘நிழல்’ இதழ் ஆசிரியர் ப.திருநாவுக்கரசு ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளன. தமிழவன், கல்விப் புலத்திலும் இலக்கியத்திலும் தீவிரமாக இயங்கிவருபவர். அவரது கதைகள் தமிழ் இலக்கியத்துக்குப் புதுமை சேர்த்தவை. திருநாவுக்கரசு, பதிப்பாளர், திரை வரலாற்று எழுத்தாளர், திரை தொடர்பான பட்டறைகளை ஒருங்கிணைத்தவர் எனப் பன்முகம் கொண்டவர். இந்த விருதுகள் தலா ரூ.1 லட்சமும் பாராட்டுக் கேடயமும் உள்ளடக்கியவை. விருதுகளை உச்ச நீதிமன்ற நீதிபதி மகாதேவன் தனி விழாவில் வழங்கிச் சிறப்பிப்பார்.
பாரதி இயலில் அரிய நூல்! - இங்கிலாந்தைச் சேர்ந்த பத்திரிகையாளர் எச்.டபுள்யூ.நெவின்சன் 1908இல் ‘தி நியூ ஸ்பிரிட் ஆஃப் இண்டியா’ என்கிற நூலில் பாரதியாரைப் பற்றிப் பதிவுசெய்துள்ளார். இந்தியாவுக்கு வெளியே பாரதியைப் பற்றிய முதல் பதிவு இதுதான் எனச் சொல்லப்படுகிறது. இந்த நூலின் தமிழ் மொழிபெயர்ப்பைப் பதிகம் பதிப்பகம் ‘இந்தியாவில் புதிய எழுச்சி’ என்கிற தலைப்பில் வெளியிட்டுள்ளது. அக்களூர் இரவி மொழிபெயர்த்துள்ளார். சலுகை விலை: ரூ.275 (தபால் செலவு இலவசம்). தொடர்புக்கு: 8778502585