சிறப்புக் கட்டுரைகள்

ஊடக விசாரணைகளும் உண்மைகளும்

வெ.சந்திரமோகன்

ஒரு நபரின் தற்கொலை வழக்கு, ஆதாரமின்றி அவருக்கு நெருக்கமாக இருந்தவர்களைக் குற்றவாளிகளாகச் சித்தரித்து அவர்களது வாழ்க்கையையே நிலைகுலையச் செய்வது உண்டு. பாலிவுட் நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத்தின் தற்கொலை வழக்கு அவரது காதலி ரியா சக்கரவர்த்தியையும் அவரது குடும்பத்தினரையும் குற்றவாளிக் கூண்டில் ஏற்றி அவர்களை அலைக்கழித்ததுடன், சந்தேகம் என்கிற பெயரில் சம்பந்தமில்லாத பலரையும் வாட்டி எடுத்துவிட்டது.

இவ்வழக்கின் சிபிஐ விசாரணை அறிக்கை, ‘சுஷாந்த் மரணத்தில் சந்தேகம் இல்லை’ என்னும் தகவலுடன் வெளியாகியிருப்பது இந்தச் சர்ச்சைகளுக்குத் தற்காலிகமாக முற்றுப்புள்ளி வைத்திருக்கிறது. ஆனால், இந்த வழக்கு நடந்த காலம் முழுவதும் ஊடகங்கள் - அதுவும் இந்தியாவின் முன்னணி ஊடகங்கள் நடந்துகொண்ட விதம் ஊடக தர்மம் குறித்து வலுவான கேள்விகளை எழுப்பியிருக்கிறது.

குறிவைக்​கப்பட்ட ரியா: ‘காய் போ சே’, ‘எம்.எஸ்​.தோனி: தி அன்டோல்டு ஸ்டோரி’, ‘கேதார்​நாத்’ போன்ற படங்களில் நடித்துப் புகழ்​பெற்ற நடிகர் சுஷாந்த் சிங் ராஜ்புத், 2020 ஜூன் 14இல் மும்பையின் பாந்த்ரா பகுதியில் உள்ள தனது வீட்டில் தற்கொலை செய்து​கொண்ட சம்பவம் பாலிவுட் திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்​தியது. அப்போதே, பல்வேறு ஊகங்களை முன்வைத்து பல்வேறு தலைப்பு​களில், இந்தி, ஆங்கில ஊடகங்​களில் செய்தித் தொகுப்பு​களும் விவாதங்​களும் ஒளிபரப்​பாகின.

தற்கொலை தொடர்பான செய்திகளை வெளியிடு​வதில் கடைப்​பிடிக்க வேண்டிய விதிமுறை​களைப் பெரும்​பாலான ஊடகங்கள் பொருட்​படுத்​தவில்லை. இதற்கிடையே, சுஷாந்த் சிங்கின் தற்கொலைக்கு அவரது காதலி ரியா சக்கர​வர்த்தியும் அவரது குடும்பத்​தினரும்தான் காரணம் என சுஷாந்தின் தந்தை கிருஷ்ணகுமார் சிங், பாட்னா காவல் நிலையத்தில் புகார் அளித்​தார். இதையடுத்து, ஊடகங்​களின் மொத்த கவனமும் ரியாவின் பக்கம் திரும்​பியது.

பண மோசடி, நம்பிக்கை துரோகம் உள்ளிட்ட பல்வேறு குற்றச்​சாட்டுகள் ரியாவின் மீதும் அவரது குடும்பத்​தினர் மீதும் சுமத்​தப்​பட்டன. சுஷாந்தின் வங்கிக் கணக்கி​லிருந்து ரூ.15 கோடியைத் திருடியதாகவும் சுஷாந்துக்குப் போதைப் பொருள் பழக்கத்தை ஏற்படுத்​தியதாகவும் பல்வேறு குற்றச்​சாட்டுகள் ரியாவைக் குறிவைத்தன.

சுஷாந்த் சிங்குக்குத் தெரியாமலேயே அவருக்குப் போதைப்​பொருளை ரியா கொடுத்ததாக முன்னணிச் செய்தி ஊடகங்​களின் தொகுப்​பாளர்களே எந்தத் தயக்கமும் இல்லாமல் சொன்னார்கள். சுஷாந்துக்குப் பில்லி சூனியம் வைத்தார் என்கிற அளவுக்கு, அவர் மீது ஆதாரமற்ற குற்றச்​சாட்டுகள் சுமத்தப்பட்டன.

ரியா மீதான குற்றச்​சாட்டுகள் அனைத்தும் உண்மைதான் என சுஷாந்தின் பாதுகாவலர் முன்னணித் தொலைக்​காட்சி அலைவரிசையில் பேட்டியளித்​தார். சுஷாந்த் தற்கொலை கடிதம் எதையும் எழுதிவைக்க​வில்லை என்பது இந்த வழக்கில் ஒவ்வொரு​வரும் ஒவ்வொரு கதையை முன்வைக்கக் காரணமானது. சிபிஐ, அமலாக்கத் துறை, தேசிய போதைப் பொருள் தடுப்புப் பிரிவு போன்ற அமைப்புகள் உள்ளே நுழைந்தன. போதைப் பொருள் வழக்கில் 2020 செப்டம்​பரில் ரியா கைது செய்யப்பட்டார்.

அவரது தம்பி ஷெளவிக் உள்ளிட்​டோரும் கைதுசெய்​யப்​பட்​டனர். முன்னதாக, சுஷாந்தின் மேலாளராக இருந்த திஷா சாலியான் 2020 ஜூன் 7இல், 14ஆவது மாடியி​லிருந்து விழுந்து தற்கொலை செய்து​கொண்ட சம்பவம் தொடர்​பாகவும் பரபரப்பான செய்திகள் பரவின. அந்தச் சம்பவத்தில் சுஷாந்துக்குத் தொடர்பு இருக்​கிறதா, அதனால்தான் அவர் தற்கொலை செய்து​கொண்டாரா என்கிற கோணத்​திலும் ஊடக விசாரணைகள் முடுக்​கி​விடப்​பட்​டிருந்தன.

பல்வேறு சர்ச்சைகள்: பிஹார் சட்டமன்றத் தேர்தல் நேரம் என்பதால், அரசியல் ஆதாயத்​துக்காக சுஷாந்த் வழக்கு பயன்படுத்​தப்​பட்டது. பாட்னாவில் உள்ள அவரது தந்தையின் வீட்டுக்குச் சென்ற அரசியல் கட்சி​யினர் சுஷாந்தின் மரணத்​துக்கு நீதி பெற்றுத் தருவதாக உறுதி அளித்தது கவனிக்​கத்​தக்கது. பாலிவுட்டில் நிலவும் வாரிசுக் கலைஞர்கள் கலாச்​சாரம் காரணமாக சுஷாந்துக்கு வாய்ப்புகள் மறுக்​கப்​பட்டதாக எழுப்​பப்பட்ட இன்னொரு சர்ச்​சை​யும், பல முன்னணி நட்சத்​திரங்​களுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்​தியது.

முன்பு தொலைக்​காட்சி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து​கொண்ட நடிகை ஆலியா பட், சுஷாந்த் சிங் தொடர்பான கேள்வி ஒன்றுக்குப் பதிலளிக்​கும்போது பயன்படுத்திய வார்த்தைகளை வைத்து சுஷாந்தின் மரணத்​துக்குப் பின்னர் கடுமையாக விமர்​சிக்​கப்​பட்​டார். பாலிவுட்டில் போதைப் பொருள் பழக்கத்தில் முன்னணி திரைக் கலைஞர்கள் திளைப்​ப​தாகவும் விவாதங்கள் நடந்தன.

சுஷாந்தின் மரணம், காட்சி ஊடகங்​களிலும் செய்தி ஊடகங்​களிலும் - ஆதாரங்கள் குறித்த எந்தக் கவலையும் இல்லாமலேயே பலராலும் பேசப்​பட்டது; விவாதிக்​கப்​பட்டது. உலகமே கோவிட் பெருந்​தொற்றுப் பரவலால் நிலைகுலைந்​திருந்த நேரத்​தில், ஊடகத்தின் பெரும்​பகுதி நேரத்தை சுஷாந்தின் மர்ம மரணச் செய்தி எடுத்​துக்​கொண்டது.

இதற்கிடையே, 27 நாள்கள் சிறையில் இருந்த ரியா, பிணையில் வெளியான பின்னர் தனது தரப்பு விளக்​கங்களை முன்வைத்துப் பேசிவந்​தார். சிறையில் இருந்தபோது அங்கிருந்த பெண் கைதிகளிடம் (பெரும்​பாலானோர் விசாரணைக் கைதிகள்) அன்பாகப் பழகினார் என்றும், அவர்களுக்கு நடனம் கற்றுக்​கொடுத்தார் என்றும் அவருடன் சிறையில் இருந்த சமூகச் செயற்​பாட்​டாளர் சுதா பரத்வாஜ் பதிவுசெய்திருக்​கிறார்.

இளம் வயதிலேயே தந்தையால் கைவிடப்​பட்டவர் சுஷாந்த் என்று பேட்டிகளில் குறிப்​பிட்ட ரியா, தாயின் மரணம் உள்ளிட்ட காரணங்​களால் கடும் மன அழுத்​தத்தில் சுஷாந்த் இருந்​த​தாக​வும், பல்வேறு வகை சிகிச்சைகளை எடுத்​துக்​கொண்​ட​தாகவும் கூறினார். பெண் கைதிகளில் 80 சதவீதத்​துக்கும் அதிகமானோர் நிரபரா​திகள் என்று சொன்னார்.

ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் நடுவராகப் பங்கேற்ற ரியா, ஒடுக்​கு​முறை​களுக்​கும், பழிச்​சொல்​லுக்​கும், இகழ்ச்சிக்கும் ஆளான பெண்களுக்கு ஆதரவாகப் பேசினார். ஆனாலும், எந்தக் குற்றவுணர்வும் இன்றிப் பேசுவ​தாகவே அவரைப் பலரும் விமர்​சித்தனர். வெளிநாட்டில் எம்பிஏ படிக்கும் கனவுடன் இருந்த அவரது தம்பி ஷெளவிக் தனது எதிர்​காலத்தைத் தொலைத்து​விட்​டதைப் பற்றி யாரும் பெரிதாகக் கவலைப்​பட​வில்லை.

இனி என்ன? - சிபிஐ வெளியிட்​டிருக்கும் இந்த அறிக்கை​யுடன் இந்த விவகாரம் முடிவடைந்து​வி​டாது. இறுதியாக நீதிமன்றம் என்ன முடிவெடுக்கும் என்பதுதான் முக்கியம். எனினும், பெரும்​பாலும் நம்பகத்​தன்மை கொண்ட​வை​யாகவே கருதப்​படும் சிபிஐ விசாரணை அறிக்கைகள் நீதிமன்​றத்தில் ஏற்றுக்​கொள்​ளப்​படும் என்பதால், ரியாவுக்கு இந்த வழக்கில் நிரந்தர நிவாரணம் கிடைக்​கலாம். எனினும், சிபிஐ அறிக்கையால் சுஷாந்த் சிங்கின் தந்தை திருப்​தி​யடைந்து​விட​வில்லை. நீதிமன்றத் தீர்ப்​புக்​காகக் காத்திருக்​கிறார்.

மகாராஷ்டிர அரசியலில் இன்னமும் சுஷாந்த் மரணம் முக்கிய விவாதப் பொருளாகவே தொடர்​கிறது. திஷா சாலியான் மரணம் தொடர்பாக முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரேவின் மகன் ஆதித்யா தாக்கரேவை முன்வைத்து சர்ச்சைகள் வெடித்​திருக்​கின்றன. எல்லா​வற்றுக்​கும், விசாரணை அமைப்பு​களின் பாரபட்​சமற்ற விசாரணையும் நீதிமன்​றத்தின் தீர்ப்பும்தான் முற்றுப்புள்ளி வைக்கும்.

எல்லா​வற்​றையும் தாண்டி, தனிப்பட்ட வாழ்க்கையை ஊடுரு​வுவது தங்கள் உரிமை என்கிற அளவுக்கு ஊடகங்கள் அத்து​மீறல் நிகழ்த்துவதை இனியும் அனுமதிப்பதா என்பது முக்கியமான கேள்வியாக எஞ்சி நிற்கிறது. திரைக் கலைஞர்கள், பிரபலங்கள் மறைவின்போது அஞ்சலி செலுத்​தவரும் திரை நட்சத்​திரங்​களைப் படமெடுத்து நேரலையில் செய்தியாக வெளியிடுவது, போட்டி போட்டுக்​கொண்டு பேட்டி எடுப்பது என எல்லை மீறுவது திரைத் துறையினர் மத்தியில் கோபத்தை ஏற்படுத்​தி​யிருக்​கிறது.

சமீபத்தில் மறைந்த நடிகர் மனோஜ் பாரதியின் இல்லத்​துக்குச் சென்று ஊடகர்கள் நடந்து​கொண்ட விதத்​துக்குத் தமிழ்த் திரையுல​கத்​திலிருந்து எழுந்​திருக்கும் கண்டனக் குரல்கள் இதற்கு சமீபத்திய சாட்சி. ஊடக விசா​ரணைகள் பல வழக்கு​களில் உண்மையை வெளிக்​கொண்டுவர உதவியிருக்​கின்றன. ஆனால், உறுதியான ஆதாரங்கள் இல்லாமல் தார்மிகப் பொறுப்​பின்றி முன்னெடுக்​கப்​படும் ஊடக ​வி​சா​ரணைகள் பலரின் ​வாழ்வை நிர்​மூல​மாக்​குகின்றன என்​பதைச் சம்​பந்​தப்​பட்​டவர்கள்​ உணர வேண்​டும்​!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

SCROLL FOR NEXT