நாம் வாழ்ந்துகொண்டிருக்கும் காலத்தைத் தகவல் யுகம் என்கிறோம். ஒவ்வொரு நொடியும் நம் தேவைக்கும் அதிகமான தகவல்கள் நம்மைச் சுற்றிக் கொண்டிருக்கின்றன. தகவல்களால் சூழப்பட்டு, தகவல்களால் ஆளப்பட்டு, தகவல்களாகவே மாறிக்கொண்டிருக்கிறோம்.
ஏதேனும் ஒரு சமூக வலைத்தளத்தில் நாம் பார்வையிடும் ஒரு விஷயம், அடுத்த நொடியிலேயே, நாம் பயன்படுத்தும் அனைத்துச் செயலிகளிலும் நம் முன்னால் ஒளிர்கிறது. நம்முடைய விருப்பங்களும் சிந்தனைகளும் ஒரு சொடுக்கில் (click) தகவல்களாக மாறி நிறுவனங்களின் பயன்பாட்டுக்குச் சென்று, நம்மிடம் திரும்பிவருகின்றன. அதாவது யாரோ ஒருவரின் தேவைக்கான தகவல்களாக நாம் மாறுகிறோம்.
தேவைக்கு அதிகமான தகவல்கள்: தகவலைப் பெறுவதற்கு நூல்கள், ஆசிரியர்கள், அறிஞர்களைச் சார்ந்திருந்த காலத்திலிருந்து நகர்ந்து இதழ்கள், வானொலி, தொலைக்காட்சி போன்றவற்றின் காலம் வந்தது. அதிலிருந்து பாய்ந்து கணினி, இணையம், திறன்பேசி (Smartphone), செயற்கை நுண்ணறிவு போன்றவற்றின் காலத்துக்குள் நுழைந்திருக்கிறோம்.
தகவல் தொழில்நுட்பமும் அது சார்ந்த ஊடகங்களும் நமக்குத் தேவையான, தேவையற்ற, தேவைக்கும் அதிகமான தகவல்களை அள்ளிக்கொண்டுவந்து நம் மூளைக்குள் திணித்து நம் சிந்தனைகளை மாசடைய வைக்கின்றன. இந்தத் தகவல் மாசுபாடு மனித இனத்தையும் வரலாற்றையும் எந்தளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாக்கும் என்பதை நினைத்தால் பேரதிர்ச்சி உண்டாகிறது.
உண்மையும் பொய்யுமான தகவல்களால் நிரம்பிய ஒரு புனைவுலகில் நாம் வாழத் தலைப்பட்டிருக்கிறோம். அதிலும் உண்மை ஊர்ந்து செல்லும்போது பொய் பறந்துசெல்கிறது. தகவல்களைத் தேர்வுசெய்வதில் பெரும் குழப்பமும் சோர்வும் ஏற்படுகின்றன. நாளைய தலைமுறை படிக்கப்போகும் வரலாறு விபரீதமானதாக இருக்கும் என்பதையே இன்றைய நிலவரம் உணர்த்துகிறது.
கண்காணிக்கும் கண்கள்: இன்று தகவல் வெளியில் (data space), தனியுரிமை (privacy) என்கிற ஒன்றே கிடையாது. மனிதர்கள் தங்கள் அந்தரங்கத்தை இழந்துவிட்டார்கள். நம்முடைய ஒவ்வொரு நகர்வையும் சிசிடிவி கேமராக்கள் தங்கள் நினைவகத்தில் சேமிக்கின்றன. ஒரு நாளைக்கு 75 முதல் 300 முறை வரைக்கும் கேமராக்களால் நாம் கண்காணிக்கப்படுகிறோம்.
நம்முடைய இடப்பெயர்வுகள் ‘லொகேஷன்’ (location) எனப்படும் இருப்பிடத் தகவல்களாக எங்கோ பெறப்படுகின்றன. நம் குரல்கள் எங்கெங்கோ கேட்கப்படுகின்றன. எப்போதும் நம்மை யாரோ பின்தொடர்ந்துகொண்டே இருக்கிறார்கள்.
நம் கையில் இருக்கும் திறன்பேசி நம்மைப் பேருலகுடன் இணைக்கிறது. அதில் நாம் அழிக்கும் படங்கள், காணொளிக் காட்சிகள், ஒலிகள் எதுவுமே முழுதாக அழிந்துவிடுவதில்லை.
அவை தகவல் வடிவில் கட்புலனாகாத பெருவெளியில் சேமிக்கப்படுகின்றன. அதாவது தகவல்கள் அழிவதேயில்லை. அவை தகவல் குப்பைகளாக (data dust) உலகை மாசடைய வைக்கின்றன. உலகம் முழுவதும் கோடிக்கணக்கான மக்கள் நாள்தோறும் பயன்படுத்தும் தகவல்களும் அழிக்கும் தகவல்களும் பயன்படுத்தப்பட்ட கழிவுகளாக (used dust) மாறினால் என்னவாகும்?
கேள்விக்குரியதாகும் மனித இருப்பு: தொழில்நுட்ப வளர்ச்சி உடலுழைப்பைக் குறைத்த காலக்கட்டத்தைத் தாண்டி, மனித இனத்தின் சிந்திக்கும் ஆற்றலையும் அதற்கான தேவையையும் குறைத்துக்கொண்டிருக்கிறது. இனிவரும் காலத்தில் மனிதர்கள் சிந்திக்க வேண்டிய அவசியம் இருக்காது. ‘நான் சிந்திப்பதால் இருக்கிறேன்’ என்றார் பிரெஞ்சு மெய்யியல் அறிஞர் தெகார்த். மனித இனத்தின் வளர்ச்சி சிந்தனையால் நிகழ்ந்தது. தற்போது மனிதர்கள் சிந்திக்க எத்தனிக்கும்போதே, அந்தச் சிந்தனை தகவல்களாக மாறிப் பேருரு கொண்டு நிற்கிறது.
தற்போது நம் கையில் இருக்கும் திறன்பேசி என்பது மனித இனத்தின் இரண்டாம் மூளையாகச் (second brain) செயல்படுகிறது. இந்த இரண்டாம் மூளை தகவல் அறிவியலால் செயல்படுகிறது. மனிதர்களுடைய சிந்தனைகள் தகவல்களாக மாறும்போது முதன்மை மூளையின் (primary brain) இருப்பு தேவையற்றதாக்கப்படுகிறது. தொழில்நுட்பத்தின் இயல்பு தொடர்ந்து பாய்ந்து செல்வதே. இன்னும் சில ஆண்டுகளில் திறன்பேசிகள் மறைந்துவிடலாம். அடுத்த தொழில்நுட்பம் வந்திருக்கலாம். அப்போதும் மனித இருப்பு கேள்விக்குரியதாகவே இருக்கும்.
பரிணாம வளர்ச்சியில் உயிரினங்கள் தங்கள் உடலின் தேவையற்ற பகுதிகளை இழக்கின்றன. குரங்கிலிருந்து பிறந்த மனித இனம் வாலை இழந்ததும், உடல் முழுவதும் இருந்த ரோமங்கள் குறைந்ததும் இப்படித்தான். ஒருவேளை மனித மூளையின் தேவை குறைந்து, அது முக்கியமற்ற ஓர் அங்கமாக மாறினால் என்ன ஆகும்? அதன் பணிகளைச் செயற்கைத் தொழில்நுட்பம் எனும் ‘அதி மூளை’ (super brain) செவ்வனே செய்யலாம்.
சிந்திப்பதும் மனிதர்களுக்குச் சுமையாக மாறும். மனிதர்களால் ஆளப்பட்ட பூமியில் மனிதர்களே தேவையற்றவர்கள் ஆக்கப்படலாம். மனிதர்களை அகற்றிவிட்டு அந்த இடத்தில் ‘ஏஐ’ (AI - artificial intelligence) அமர்ந்துகொள்ளலாம். மனிதர்களைவிடத் துல்லியமாகச் சிந்திக்க அதனால் முடியலாம். தேவைப்பட்டால் மனிதர்களைப் போலவே (இயல்பான தவறுகள், தடுமாற்றங்களுடன்) சிந்திக்கும் ஆற்றலையும் அதற்கு ஊட்ட முடியலாம். மனித மூளை சிந்திக்கும் திறனை எண்மக் குறிகளாக்கித் தகவல் வடிவில் மாற்றினால் எதுவும் சாத்தியம்தான்.
நாளை என்னவாகும்? - சமீபத்தில் ஆஸ்திரேலியாவில் ஒருவருக்குச் செயற்கை இதயம் (titanium heart) வெற்றிகரமாகப் பொருத்தப்பட்டுள்ளது. அதேபோல் மனித மூளையைவிட, கோடி மடங்கு அதிகத் திறனைக் கொண்ட செயற்கை மூளை ஒரு சிறிய சிப் வடிவில் மனித உடலில் பொருத்தப்படலாம். அது மனிதர்களின் கூடுதல் மூளையாகவோ (additional brain) அல்லது முதன்மை மூளையாகவோ (primary brain) செயல்பட வைக்கப்படலாம்.
அதாவது என் மூளை சிந்திக்கும் நடைமுறையைத் (process of thinking) தகவல்களாக மாற்றிவிட்டால் போதும். எனக்குப் பதிலாக அது சிந்திக்கும். தகவல்களை நினைவுக்குக் கொண்டுவர மூளையைக் கசக்கிக்கொண்டிருக்கத் தேவையில்லாமல், ஒரு நொடியில் லட்சக்கணக்கான தகவல்களை அது கொண்டுவந்து தரும். இன்று ‘ஏஐ’ பற்றிப் பெரிதாகப் பேசிக்கொண்டிருக்கிறோம். நாளை அதுவும் மாறலாம். எதுவும் மாறலாம் என்பதே தத்துவம்.
- தொடர்புக்கு: ganeshebi@gmail.com