சிறப்புக் கட்டுரைகள்

புத்தியல்பு வாழ்க்கையில் புதிய நோய்த்தொகுப்பு

கு.கணேசன்

உங்களுக்கு ‘சிகேடி’ (CKD – Chronic Kidney Disease) நோய் குறித்துத் தெரிந்திருக்கும். அதாவது, நாள்பட்ட சிறுநீரக நோய். ‘சிகேஎம்’ நோய்த்தொகுப்பு (CKM Syndrome) தெரியுமா? இன்றைய புத்தியல்பு வாழ்க்கை முறையில் நம் ஆரோக்கியத்துக்கு வெடிவைக்கும் புதிய ஆபத்து இது.

2024ஆம் ஆண்டின் இறுதியில் அமெரிக்க இதயநலக் கழகம் (American Heart Association) ‘சிகேஎம்’ நோய்த்தொகுப்பு (CKM Syndrome) என்னும் புதிய வகை பாதிப்பு இளம் வயதினரிடமும் நடுத்தர வயதினரிடமும் அதிகமாகக் காணப்படுகிறது என்று தெரிவித்ததில் இருந்து இந்த நோய்த்தொகுப்பு மருத்துவர்கள் மத்தியில் அதிகக் கவனம் பெற்றுள்ளது.

​நால்வர் கூட்டணி: உடல் பருமன், இரண்டாம் வகை சர்க்கரை நோய், சிறுநீரகப் பாதிப்பு, இதய பாதிப்பு இந்த நான்கும் இணைந்த ஒரு நோய்த்​தொகுப்​புக்குப் பெயர்தான் ‘சிகேஎம்’ நோய்த்​தொகுப்பு. கடந்த ஆண்டுவரை ஒரு பயனாளிக்கு ஏற்பட்​டிருக்கும் இந்த நான்கு வகை பாதிப்பு​களும் தனித் தனி பாதிப்பு​களாகவே கருதப்​பட்டுவந்தன. தனித் தனிச் சிறப்பு மருத்​துவர்​களால் இந்தப் பாதிப்புகள் கையாளப்​பட்டன.

இப்போது ‘இந்த நான்கும் தனித் தனி பாதிப்புகள் அல்ல’ என்று அமெரிக்க இதயநலக் கழகம் புதிதாக அறிவித்​துள்ளது. ‘நான்கும் ஒன்றிணைந்த ஒரு கூட்டணி நோய்தான் இது; இந்த நான்கு பிரச்சினை​களையும் தனித் தனியாக எதிர்​கொள்​வதைத் தவிர்த்து, ஒருங்​கிணைந்த சிகிச்​சையால் எதிர்​கொள்ள வேண்டும்’ என்றும் அக்கழகம் தெரிவித்​திருக்​கிறது.

ஆரம்பம் முதல் அகால மரணம் வரை: இந்தக் கூட்ட​ணியின் அடிப்படை பாதிப்பு நம் உடல் எடையில் தொடங்கு​கிறது. இடுப்புச் சுற்றளவு அதிகரிப்​பதும், வயிற்றில் கொழுப்பு சேர்வதும் இதன் ஆரம்பகால அறிகுறிகள். இவை விரைவிலேயே உடல் பருமனில் கொண்டுபோய் நிறுத்து​கின்றன. உடல் பருமன் சர்க்கரை நோயைக் கொண்டு​வரு​கிறது. இதைக் கட்டுப்​படுத்தத் தவறும்போது ரத்தக்​குழாய்கள் கடினமாகி​விடு​கின்றன.

இப்போது இதயமானது மிகவும் சிரமப்​பட்டு ரத்தத்தை உடலுக்குச் செலுத்த வேண்டி வருகிறது. இதனால் ரத்த அழுத்தம் அதிகரிக்​கிறது. இந்த இரண்டும் இணைந்து ரத்தக் குழாய்​களில் உள்கா​யங்களை (Inflammation) ஏற்படுத்து​கின்றன. இந்த உள்கா​யங்​களுக்கு கொலஸ்​டிரால் வரும்போது அங்கே ரத்த உறைவுக் கரல் (Plaque) உண்டாகிறது. இந்தச் செயல்முறை இதயத்தில் நிகழ்ந்தால் மாரடைப்பு வருகிறது; மூளையில் நிகழ்ந்தால் பக்கவாதம் வருகிறது; சிறுநீரகத்தில் நிகழ்ந்தால் சிறுநீரகம் செயலிழக்​கிறது.

அமெரிக்க இதயநலக் கழகத்தின் அறிவிப்பு வருவதற்கு முன்புவரை ஒரு நோயாளியின் சிறுநீரகப் பாதிப்பைத் தனியொரு பாதிப்​பாகவே மருத்​துவர்கள் கருதிவந்​தனர். அதனால் சிறுநீரகச் சிறப்பு நிபுணர்களே இந்தப் பாதிப்பைச் சரிப்​படுத்திவந்தனர். இப்போது இந்தப் பாதிப்பைச் சிறுநீரகச் சிறப்பு நிபுணர்​களின் வழிகாட்டு​தலில் இதயநலச் சிறப்பு மருத்​துவர்கள் கவனிக்க வேண்டிய கட்டாயம் உருவாகி​யிருக்​கிறது.

நோயாளி சிறுநீரகப் பாதிப்பைத் தனியாகப் பார்த்​துக்​கொள்​ளட்டும் என்று இதயநல மருத்​துவர்கள் ஒதுங்கிவிட முடியாது. காரணம், சிறுநீரகப் பாதிப்​பினால் சிறுநீரக ரத்தக் குழாய்​களில் உள்கா​யங்கள் ஏற்படும் சாத்தியம் அதிகரித்​திருக்​கிறது. இது சிறுநீரகச் செயல்​பாட்டைக் குறைத்து​விடு​கிறது. இதன் விளைவாக, சர்க்கரை நோய் கட்டுப்பட மறுக்​கிறது. இதனால் மறுபடியும் ரத்தக் குழாய்​களில் உள்கா​யங்கள் ஏற்படு​கின்றன.

மறுபடியும் சிறுநீரகம் பழுதாகிறது. இது இதயத்தைப் பாதிக்​கிறது. இப்படி ஒரு சங்கிலி வினைபோல் அடுத்​தடுத்துச் சிறுநீரகம், ரத்தக் குழாய்கள், இதயம் ஆகியவை பாதிக்​கப்​படு​வ​தால், மொத்த பாதிப்பும் கடைசியாக இதயத்தைத்தான் வந்தடைகிறது. இதன் விளைவால் பயனாளிக்குத் திடீர் உயிரிழப்பு ஏற்படு​கிறது. அகால மரணத்​துக்கு அது அடி கோலுகிறது. இந்த உலகளாவிய பிரச்சினை, இப்போது இந்தியா​விலும் பிரதிபலிக்​கிறது.

முக்கி​யத்துவம் என்ன? - உதாரணத்​துக்கு, தேசியக் குடும்பநல ஆய்வின்படி (National Family Health Survey - 2019-21) தமிழ்​நாட்டில் 19 வயதுக்கும் 49 வயதுக்கும் இடைப்​பட்​ட​வர்​களில் 40.3% பேருக்கு உடல் பருமன் இருக்​கிறது. 16.1% பேருக்குச் சர்க்கரை நோய் இருக்​கிறது. 24% பேருக்கு உயர் ரத்த அழுத்தம் இருக்​கிறது. இந்த மூன்றையும் சரியாகக் கவனிக்​கா​விட்டால் அடுத்​த​தாகச் சிறுநீரகம் பாதிக்​கப்​படப்​போவது உறுதி.

ஏற்கெனவே சிறுநீரகப் பாதிப்பு உள்ளவர்​களோடு இந்தப் புதிய பாதிப்பு உள்ளவர்​களும் சேர்ந்து​விடு​வார்கள். அப்போது ‘சிகேஎம்’ நோய்த்​தொகுப்பின் தாக்கம் மிகவும் வலுத்து​விடும். இளம் வயது – நடுத்தர வயது அகால மரணங்​களைத் தடுக்க முடியாமல் போய்விடும்.

2030க்குள் தொற்றா நோய்களினால் ஏற்படும் உயிரிழப்புகளை மூன்றில் ஒரு பங்காகக் குறைப்பதே ஐக்கிய நாடுகள் அவையின் நிலையான வளர்ச்சி இலக்காக இருக்​கும்​போது, உடல் பருமன், சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம் உள்ளிட்ட தொற்றா நோய்களின் ஆதிக்கம் அதிகரிப்பது நாட்டின் ஒட்டுமொத்தப் பொருளா​தா​ரத்​திலும் பாதிப்பை ஏற்படுத்​தும்; சுகாதாரக் கட்டமைப்​புக்கும் பெரும் சுமையை உண்டாக்​கும். ஆகவே, ‘சிகேஎம்’ நோய்த்​தொகுப்பை எதிர்​கொள்ள தேசிய அளவில் ஒரு புதிய அணுகுமுறை தேவைப்​படு​கிறது என்கிறது, சர்வதேச நோய்ச்சுமை ஆய்வு நிறுவனம் (Global Burden of Disease Organization).

என்ன செய்ய வேண்டும்? - அமெரிக்க இதயநலக் கழகம் ‘சிகேஎம்’ நோய்த்​தொகுப்​புக்கு என சர்வதேச அளவில் ஒருங்​கிணைந்த பராமரிப்புத் திட்டம் அவசியம் என்று அண்மையில் அறிவித்​திருக்​கிறது. சர்க்கரை நோய், உயர் ரத்த அழுத்தம், இதய நோய், சிறுநீரக நோய் என ஒவ்வொன்​றையும் தனிமைப்​படுத்திப் பார்ப்​ப​தற்குப் பதிலாக, அவற்றை ஒரு பரந்த வளர்சிதை மாற்ற நிலையின் அறிகுறிகளாகச் சுகாதார வல்லுநர்கள் கருத வேண்டும் என்று அந்தக் கழகம் வழிகாட்டு​கிறது. மேலும், இந்த நோய்க்​குரிய ஆபத்துக் காரணிகளை ஒருங்​கிணைந்து நிர்வகிப்​ப​தற்குத் திட்ட வரையறை வகுக்​கப்பட வேண்டியது காலத்தின் கட்டாயம் என்கிறது அக்கழகம்.

சிக்கல்கள் என்னென்ன? - இன்றைய மருத்துவ சிகிச்சை நடைமுறையில் ஒரு நோயாளியின் ‘சிகேஎம்’ நோய்த்​தொகுப்பை முழுமை​யாகப் புரிந்து​கொள்​வதில் சிக்கல்கள் இருக்​கின்றன. நோயாளிக்கு ஏற்பட்​டுள்ள பல உறுப்புச் சிக்கல்​களுக்கு சிகிச்சை பெறப் பல்வேறு சிறப்பு நிபுணர்​களைத் தனித் தனியாக வெவ்வேறு நேரங்​களில் வெவ்வேறு நகரங்​களில் பார்க்க நேரிடு​கிறது. இதனால் சிகிச்சைக்​குரிய ஒருங்​கிணைப்பில் பிரச்சினை ஏற்படு​கிறது.

சிகிச்​சையில் தனித் தனிப் பராமரிப்புதான் கிடைக்​கிறது. இதனால் நோயாளிக்கு வழங்கப்​படும் மருந்து இடைவினை​களில் பிரச்சினை ஏற்படு​கிறது. ரத்தப் பரிசோதனை​களுக்​காகவும் சிகிச்சைக்​காகவும் நோயாளிகள் பலமுறை மருத்​துவ​மனைக்கு வந்துசெல்ல வேண்டி​யிருக்​கிறது. இதனால் நோயாளிக்குச் செலவு இரட்டிப்​பாகிறது; நேர இழப்பும் ஊதிய இழப்பும் உற்பத்தி இழப்பும் ஏற்படு​கின்றன.

ஒருங்​கிணைந்த மருத்​துவமனை தேவை - ஒரே இடத்தில் சர்க்கரை நோய் நிபுணர், இதயநலச் சிறப்பு மருத்​துவர், சிறுநீரகநலச் சிறப்பு மருத்​துவர், உணவியல் நிபுணர், இயன்முறை மருத்​துவர் ஆகியோர் அடங்கிய ஒரு குழு இணைந்து பணியாற்றுவதன் மூலம் ‘சிகேஎம்’ நோய்த்​தொகுப்புப் பிரச்சினைக்குத் தீர்வு காணலாம்.

கடைநிலைப் பராமரிப்பு (Tertiary care) நிலையங்​களில், ஒருங்​கிணைந்த மருத்​துவமனை (Integrated clinic) அமைத்தும் இந்தப் பிரச்சினை​களைத் தீர்க்க முடியும். நாட்டில் போதிய நிதி ஒதுக்​கப்​பட்​டால், இந்த வசதிகளை முதல்நிலை (Primary care), இரண்டாம் நிலை (Secondary care) ஆகிய மருத்​துவப் பராமரிப்பு மையங்​களுக்கும் விரிவுபடுத்த முடியும்.

தமிழ்​நாட்டில் உள்ளதுபோல் ‘மக்களைத் தேடி மருத்​துவ’​முறையின் மூலம் மருத்துவ உதவிப் பணியாளர்களை நோயாளியின் வீட்டுக்கே அனுப்பி, உடல் எடை சரிபார்ப்பது, ரத்த அழுத்​தத்தை அளப்பது, ரத்தச் சர்க்கரை அளவைக் கணிப்பது, சிறுநீரைப் பரிசோ​திப்பது போன்ற​வற்றின் மூலம் ‘சிகேஎம்’ நோய்த்​தொகுப்​புக்கு அதிகச் சாத்தியம் உள்ளவர்களை ஆரம்பத்​திலேயே அடையாளம் காண முடியும்.

அப்படி அறிகுறிகள் ஆரம்பநிலையில் இருக்கிற நோயாளிகளை முதல் நிலை அல்லது இரண்டாம் நிலை மருத்​துவப் பராமரிப்பு நிலையங்​களுக்குப் பரிந்துரைத்து, இந்த நோய்த் தொகுப்பைக் கட்டுப்​படுத்த முடியும். இதன் மூலம் கடைநிலைப் பராமரிப்பு மையங்​களின் சுமையைக் குறைக்க முடியும். பயனாளியின் அகால மரணத்தைத் தடுக்க ​முடி​யும். மத்திய, ​மாநில அரசுகள் இ​தில் உடனே கவனம் செலுத்த வேண்​டும்.

- தொடர்புக்கு: gganesan95@gmail.com

SCROLL FOR NEXT