‘ஜுனூன் தமிழ்’ - பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறீர்களா? 1990களில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘ஜுனூன்’ என்னும் மொழி மாற்ற நீள் தொடரில் வசனங்கள் பேசப்பட்ட முறைதான் இப்படி நகைச்சுவையாகக் குறிப்பிடப்படுகிறது. இந்தி மொழியின் முன்னுக்குப் பின்னான மொழியமைப்புக்கு ஏற்றவாறு, நடிகர்களின் உடலசைவு, உதட்டசைவுக்குத் தமிழ் வசனங்கள் பொருந்த வேண்டும் என்பதற்காகவே உருவாக்கப்பட்ட மொழிமாற்ற (டப்பிங்) பாணி அது.
இன்ஸ்டா ரீல்களைப் பார்க்கும்போதும், அதன் யூடியூப் வடிவமான ஷார்ட்ஸ்களைப் பார்க்கும்போதும், ‘ஜுனூன்’ தமிழ்தான் நினைவுக்கு வருகிறது. பதின் பருவத்தினரிலிருந்து பெரியவர்கள்வரைக்கும் ஸ்மார்ட்போனில் ரீல்களை விரும்பிப் பார்க்கின்றனர்.
சமையல் குறிப்பா, உடல் தகுதி ஆலோசனையா, வாழ்க்கைக்கான வழிகாட்டலா, நிதி ஆலோசனையா... எதுவாக இருந்தாலும் ரீல்ஸ் வடிவம்தான் அவர்களது தேர்வாக உள்ளது. வர்த்தக நிறுவனங்களும், பிராண்ட்களும்கூட ரீல்களில் இறங்கிவிட்டன. ரீல்கள் இந்த அளவு தாக்கம் செலுத்துவது எப்படி?
ஆச்சரியப்படுத்தும் காணொளி வடிவம்: சமூக ஊடக வகை ஒவ்வொன்றும் அதற்கே உரிய அம்சங்களைக் கொண்டது. யூடியூப் காணொளிக் காட்சிகளுக்கு என்றால், ட்விட்டர் குறும்பதிவுகளுக்கானது. இவற்றுக்கெனத் தனித்தனிப் பயனாளிகள் பிரிவும் உண்டு. ஆனால் திடீரென, ‘ரீல்ஸ்’ எனக் குறிப்பிடப்படும் 15 நொடிக் காணொளிகள்தான் ஆதிக்கம் செலுத்துகின்றன (இப்போது 90 நொடிகள்).
ஒளிப்படப் பகிர்வுச் சேவையாக அறியப்படும் இன்ஸ்டகிராம், இப்போது ரீல்களின் சங்கமமாக மாறியிருப்பதுதான் வியப்பு. குறுவடிவக் காணொளிக்கு என ஒரு வரலாறு இருக்கிறது என்றாலும், சீனாவின் ‘டிக்டாக்’ தான் இந்த வடிவத்தைப் பிரபலமாக்கிய சேவையாகக் கருதப்படுகிறது. டிக்டாக் கையகப்படுத்திய ‘மியூசிகலி’ சேவைதான், இசையுடன் கூடிய 15 நொடிக் காட்சி உள்ளடக்கத்துக்கான ஈர்ப்பை உருவாக்கியதில் முக்கியப் பங்கு வகித்திருக்கிறது. உலக அளவில் டிக்டாக் பெற்ற வெற்றியின் விளைவு, இன்ஸ்டகிராம், யூடியூப் உள்ளிட்ட சமூக ஊடகச் சேவைகளும் குறு வடிவக் காணொளி வசதியை வழங்கத் தொடங்கின.
இவ்வளவு ஏன்... தொழில் முறை வலைப்பின்னலான ‘லிங்க்டுஇன்’ சேவையிலும் குறும் காணொளி அம்சம் உண்டு. டிக்டாக் போட்டியைச் சமாளிக்க அறிமுகமான ‘ரீல்ஸ்’ வடிவம் இன்ஸ்டகிராமில் பெரும் வரவேற்பைப் பெற்று, அதன் முக்கிய அம்சமாக மாறியிருக்கிறது. யூடியூபின் ஷார்ட்ஸ் இந்த வகையை இன்னும் வலுவாக்கியிருக்கிறது. பார்ப்பதற்கு எளிதாகவும், ஈர்ப்புடையதாகவும் இருப்பதால் ரீல்கள் விரும்பிப் பார்க்கப்படுகின்றன; அதிக அளவில் உருவாக்கப்படுகின்றன.
பல்வேறு பாதிப்புகள்: ரீல்ஸ் தொடர்பாக மேற்கொள்ளப்பட்டுள்ள ஆய்வுகள் இவை பயனாளிகளை அடிமையாக்கும் தன்மை கொண்டவையாக இருப்பதை உறுதிசெய்கின்றன. பிடித்திருக்கிறது, கவர்ந்திழுக்கிறது என்பதை எல்லாம் மீறி, பயனாளிகள் ரீல்களை அடுத்தடுத்து இடைவெளியில்லாமல் பார்த்துக்கொண்டிருக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்கின்றனர்.
பிடித்த திரைப்படத்தைப் பலமுறை பார்ப்பது, பிடித்த பாடலை மீண்டும் மீண்டும் கேட்பது போன்ற பழக்கங்களில் இருந்து இது மாறுபடுகிறது. ரீல்கள் குறுகிய கால அளவிலும் கவர்ந்திழுக்கும் வகையிலும் அமைவதால், பயனாளிகள் இடைவெளி இல்லாமல் அடுத்தடுத்துப் பார்த்துக்கொண்டே இருக்கின்றனர்.
ஒரு நல்ல ரீலைப் பார்க்கும்போது மூளைக்குச் செல்லும் நல்லுணர்வு சமிக்ஞையை (டோபமைன்) அவர்கள் மீண்டும் மீண்டும் எதிர்பார்ப்பதாக இதற்கு விளக்கம் அளிக்கப்படுகிறது. அடுத்த ரீலைப் பார்க்க ‘க்ளிக்’ செய்யக்கூட வேண்டாம், திரையை விரலால் நகர்த்திக்கொண்டிருந்தாலே போதுமானது. இந்தப் பழக்கத்தை, ‘டூம்ஸ்க்ரோலிங்’ (Doomscrolling) என்கின்றனர். இதற்கேற்பவே இன்ஸ்டா அல்காரிதமும், பயனாளிகள் பார்த்து ரசிக்கக்கூடியதைப் பரிந்துரைத்துக்கொண்டே இருக்கிறது.
இந்தப் பழக்கத்தால், ஏராளமானோர் பாதிப்புக்குள்ளாகின்றனர். இதனால் விஷயங்களை உள்வாங்கிக்கொள்ளும் திறன் பாதிக்கப்படுவதாகக் கருதப்படுகிறது. உளவியலில், குறுகிய கால நினைவு, நீண்ட கால நினைவு பற்றி எல்லாம் பேசப்படுகிறது. ரீல்கள் பெரும்பாலும் குறுகிய காலக் கவனம் சார்ந்தவை.
இத்தகைய வடிவத்துக்கு மூளை பெரும்பாலும் பழகிவிடுவதால், குறுகிய கால நினைவுத்திறன் பாதிக்கப்படுவதாகப் பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. தூங்கும் பழக்கம், வாசிப்பு முறை போன்றவற்றில் மாற்றம் ஏற்படுகிறது; கவனச் சிதறல் உண்டாகிறது.
இது சமூக உறவிலும் தாக்கம் செலுத்துவதாக கண்டறிப்பட்டுள்ளது. நிஜ உலக நண்பர்களுடனான பழகும் முறையை ரீல்ஸ் பார்ப்பது பாதிக்கிறது. விருப்பக்குறிகள் (லைக்ஸ்), பின்னூட்டங்கள் போன்ற எதிர்வினை அம்சங்களும் தாக்கம் செலுத்துகின்றன. சமூக ஊடகங்கள் சுய வெளிப்பாட்டுக்கு வழிசெய்வதாகச் சொல்லப்படுவதற்கு மாறாக, எந்த வகை உள்ளடக்கம் அதிக விருப்பக்குறிகளைப் பெற்றுத்தரும் என்றுதான் பயனாளிகள் யோசிக்கின்றனர். பின்னூட்டங்கள் வாயிலாகத் தெரிவிக்கப்படும் கருத்துகளும் அவர்களை வழிநடத்துகின்றன.
செல்வாக்குக்கான ஏக்கம்: கிரியேட்டர்களும் பயனாளிகளும் வாழ்க்கையை உள்ளபடி பகிராமல், எந்த அம்சம் கவனத்தை ஈர்க்குமோ அதை மட்டும் பகிர்கின்றனர், அதற்காகப் போலியாக நடிக்கின்றனர், திட்டமிட்டு அதற்காக உருவாக்குகின்றனர். இப்படிப் பலர் விரும்பும் அம்சங்களை மட்டுமே தேடிப்பிடித்துப் பகிர்வது வாழ்க்கை பற்றிய தட்டையான தோற்றத்தை அளிக்கிறது. அழகாகத் தோற்றமளிக்க வேண்டும் என்கிற தூண்டுதலே, உடல்வாகுக்காக, உணவைக் குறைக்கும் பழக்கத்தை இளம் பெண்களைப் பின்பற்றவைப்பதாகவும் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
திறந்த மனம் கொண்ட உரையாடலுக்குப் பதில், எல்லாமே திட்டமிட்ட ஒன்றாக, பலன் சார்ந்ததாக, எதிர்பார்ப்பு மிக்கதாக மாறிவிடுகின்றன. ‘லைக்’ பெறாத பதிவு பதற்றத்தை ஏற்படுத்துகிறது. எல்லாருமே, எல்லாருடைய கவனத்தை ஈர்க்கவும், அதன் மூலம் செல்வாக்கைப் பெறவும் முயன்றுகொண்டிருப்பது தெரிகிறது. இதற்கேற்ப, கட்டியிழுக்கும் வகையில் உள்ளடக்கத்தை வெகு நேர்த்தியாக எடிட் செய்து வெளியிடும் வசதியும் இருக்கிறது.
ஒளிப்படம், குறும் காணொளி இரண்டுமே காட்சி சார்ந்தவை என்றாலும், நவீன சமூக ஊடக உலகில் இரண்டுக்கும் வேறுபாடு இருக்கிறது. ஒளிப்படம் செயல்படும் விதம் வேறு. அதற்குப் பல நேரங்களில் படக்குறிப்பும் தேவை. பார்ப்பதற்கு ஆழ்ந்த கவனமும் அவசியம்.
ஆனால், குறும் காணொளி அழகாக வெட்டி ஒட்டப்பட்ட ஒளிப்படங்கள் அல்லது காட்சிகளின் தொகுப்பாகவும் பொருத்தமான பின்னணி இசை, வர்ணனையோடும் இருக்கிறது. பயனாளிகளைக் கவர, இவை எல்லாமே மிகக் கச்சிதமான அளவில் இருக்க வேண்டும். எடுத்த உடன் விஷயத்தைச் சொல்லாமல், விரும்பிய வகையிலும் வெளிப்படுத்திக்கொள்ளாமல், கவனத்தை மட்டுமே ஈர்க்கும் வகையில் செயல்படும் நிர்ப்பந்தம் இதனால் எழுகிறது.
கடைசியில் நெத்தியடியாகச் செய்தி சொல்ல வேண்டும், அதை நோக்கிக் காட்சிகள் நகர வேண்டும், இடையே எதிர்பார்ப்பும், தூண்டுதலும் இருக்க வேண்டும் என்றெல்லாம் உத்திகள் சொல்லப்படுகின்றன. இதற்கு விதிவிலக்குகள் இருக்கின்றன என்றாலும் பெரும்பாலும் இந்த முறைதான் ஆதிக்கம் செலுத்துகிறது. ஒளிப்படம் மூலம் செய்தி சொல்வதைவிட, இசை சார்ந்த குறும் காணொளியில் எதைப் பற்றியும் யோசிக்க விடாமல் பிராண்ட் மீது மட்டுமே கவனம் செலுத்த வைக்க முடிவதாக வர்த்தக நிறுவனங்கள் கருதுவதை இந்த இடத்தில் பொருத்திப் பார்க்கலாம்.
இவற்றை எல்லாம் பார்க்கும்போது, எல்லாரும் ஜுனூன் தமிழில் பேசிக்கொண்டிருந்தால் எப்படி இருக்குமோ, அப்படி உலகம் மாறிவருவதாகத் தோன்றுகிறது. ஜுனூன் தமிழ், தொலைக்காட்சித் தொடருக்கான மொழி மாற்ற நிர்பந்தத்தின் விளைவு. நல்லவேளையாக அந்த வரம்பு ஒரு போக்காக மாறவில்லை.
ஆனால், சமூக ஊடக உலகில் கவனம் ஈர்ப்பதற்காக முன்வைக்கப்படும் உத்திகளையும், முறைகளையும் பெரும்பாலானோர் பின்பற்றும் போக்கு ஆபத்தானது. எழுதப்படுவதும், வாசிக்க வேண்டியதும் மிக மிக அவசியம் என வலியுறுத்துவது அவசியமாகிறது. உள்வாங்கிக்கொள்வதும், சிந்திப்பதும்தானே மனிதர்களுக்கு அடிப்படை!
- தொடர்புக்கு: enarasimhan@gmail.com