சிறப்புக் கட்டுரைகள்

உங்கள் வைப்புத்தொகை பாதுகாப்பானதா?

சி.பி.கிருஷ்ணன்

வங்கிகள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள் போன்றவற்றில் சாமானிய, நடுத்தர மக்கள் தாங்கள் உழைத்துச் சம்பாதித்த பணத்தை வைப்பு நிதியாக இட்டு வைத்துள்ளார்கள். அது பாதுகாப்பாக உள்ளதா?

தற்​போதைய நிலவரம்: 2024 மார்ச் மாதக் கணக்குப்படி, பொதுத் துறை வங்கிகள், உள்நாட்டுத் தனியார் வங்கிகள், வெளிநாட்டுத் தனியார் வங்கிகள் உள்பட மொத்தம் 1,997 வங்கிகள் உள்ளன. இவற்றில், 12 அரசு வங்கி​களில் ஏறத்தாழ ரூ.124 லட்சம் கோடி, 43 கிராம வங்கி​களில் ரூ.6 லட்சம் கோடி, 85 தனியார் வங்கி​களில் ரூ.76 லட்சம் கோடி, 1,857 கூட்டுறவு வங்கி​களில் ரூ.12 லட்சம் கோடி என ஆக மொத்தம் ரூ.218 லட்சம் கோடி வைப்புத்தொகை உள்ளது.

இந்தத் தொகை இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்​தியில் 74%. இவ்வங்​கிகள் அனைத்தையும் ரிசர்வ் வங்கி ஒழுங்குபடுத்து​கிறது. ஆனால், இதில் உள்ள மக்களின் சேமிப்பில் ஒரு பகுதிக்கு மட்டுமே வைப்புத்​தொகைக் காப்பீடு மற்றும் கடன் உத்தர​வாதக் கழகம் (Deposit Insurance and Credit Guarantee Corporation –DICGC) மூலமாக ரிசர்வ் வங்கி காப்பீடு வழங்கு​கிறது.

இவை தவிர, வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், நிதிக் கம்பெனிகள் ஆகியவற்றில் உள்ள மக்களின் வைப்புத்​தொகைக்கு ரிசர்வ் வங்கி எந்தவிதமான பாதுகாப்பும் வழங்காது. 1961இல் ரிசர்வ் வங்கியால் முதல் இடப்பட்டு உருவாக்​கப்பட்ட டிஐசிஜிசி, வங்கி​களின் வைப்புத்​தொகைக்குப் பாதுகாப்புக் காப்பீடு வழங்கும் நிறுவனம்.

அன்றைய காலக்​கட்​டத்தில் ஸ்டேட் வங்கி - அதன் துணைவங்​கிகள் தவிர மற்ற அனைத்து வங்கி​களும் தனியார் வங்கி​களாகவே இருந்தன. தனியார் வங்கிகள் திவால் ஆவது என்பது தொடர் நிகழ்வாக இருந்த காலம் அது. 1947க்கும் 1969க்கும் (வங்கிகள் தேசியமய​மாக்​கப்பட்ட வருடம்) இடைப்பட்ட காலத்தில் 500க்கும் மேற்பட்ட தனியார் வங்கிகள் திவாலாகி, மக்கள் தங்கள் சேமிப்பை இழந்தனர். அந்தப் பின்னணி​யில்தான் டிஐசிஜிசி உருவாக்​கப்​பட்டது.

பாரபட்சமான அணுகுமுறை: வங்கிகள் திவாலாகும்​பட்​சத்​தில்,1961இல் தனிநபர் கணக்குக்கு ரூ.1,500 வரை ஒரு கணக்கில் உள்ள வைப்புத்​தொகைக்கு மட்டுமே பாதுகாப்பு வழங்கப்​பட்டது. இது படிப்​படியாக உயர்ந்து, 2020இல் ரூ.5,00,000 என்று நிர்ண​யிக்​கப்​பட்​டுள்ளது. இன்றைய தேதியில் ஒரு நபரின் வைப்புத்​தொகைக்கு அதிகபட்சக் காப்பீட்டுப் பாதுகாப்பு ரூ.5 லட்சம் மட்டுமே.

அதாவது, ஒருவர் பெயரில் ஒரு வங்கியில் எத்தனை கிளைகளில், எத்தனை கணக்குகள் இருந்​தா​லும், அத்தனை கிளைகளிலும் உள்ள அவரின் சேமிப்பு வைப்புக் கணக்கு, நடப்புக் கணக்கு, தொடர் வைப்பு, நிலையான வைப்பு ஆகியவற்றின் அசல், அதன் வட்டித்தொகை – இவை முழுவதற்​குமான பாதுகாப்பு அவ்வளவு​தான்! அதேவேளை, டிஐசிஜிசியின் இந்தக் காப்பீடு மத்திய அரசு, மாநில அரசு, பொதுத் துறை, தனியார் துறை நிதி நிறுவனங்கள், வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், மற்ற வங்கிகள், அந்நிய அரசுகள் – ஆகியவை வங்கி​களில் போட்டு​வைத்​துள்ள வைப்புத்​தொகைக்குக் கிடையாது.

இது 2024 மார்ச் மாதக் கணக்குப்படி மொத்த வைப்புத்​தொகையில் 39%, அதாவது, ரூ.85 லட்சம் கோடி. ஆக, ஒரு வங்கி திவாலா​னால், அரசுகள், இந்த நிறுவனங்கள் அந்த வங்கியில் சேமித்​துள்ள வைப்புத்​தொகைக்கு டிஐசிஜிசி மூலம் எந்த இழப்பீடும் கிடைக்​காது.

டிஐசிஜிசிக்கு அதன் உறுப்பு வங்கிகளான 140 வணிக வங்கிகள், 1,857 கூட்டுறவு வங்கிகள் அனைத்தும் ஆண்டு​தோறும் பிரீமியம் தொகை செலுத்த வேண்டும். இது 1961இல் 100 ரூபாய்க்கு 5 பைசா என்று தொடங்​கியது. பின்னர், படிப்​படியாக உயர்த்​தப்​பட்டு 2020இல் 12 பைசா என்று நிர்ண​யிக்​கப்​பட்​டுள்ளது. இந்தத் தொகையை வங்கிகள் தங்கள் சொந்த நிதியி​லிருந்து செலுத்த வேண்டும்.

வைப்பு​தா​ரர்​களிட​மிருந்து வசூலிக்கக் கூடாது. டிஐசிஜிசியில் உள்ள வைப்புக் காப்பீட்டு நிதி வருடா வருடம் உயர்ந்து​கொண்டே வந்து, 2024 மார்ச் மாத நிலவரப்படி 1.99 லட்சம் கோடி ரூபாயை எட்டி​யுள்ளது. பொதுத்துறை வங்கிகள், கிராம வங்கி​களில் அரசின் பங்கு 51%க்குக் கூடுதலாக உள்ளது. எனவே, அவை திவால் ஆவதற்கான சாத்தியமே கிடையாது.

அதன் காரணமாக இது நாள் வரை இந்த நிதியில் இருந்து பொதுத்​துறை, கிராம வங்கி​களின் வைப்பு​தா​ரர்​களுக்கு ஒரு பைசாகூடக் காப்பீட்டுத் தொகை வழங்கப்​பட​வில்லை. ஆனாலும் டிஐசிஜிசி இவ்வங்​கி​களிட​மிருந்தும் பிரீமியம் தொகை வசூலிக்​கிறது என்பது முரணான விஷயம்.

மாறாக, இதுவரை திவாலான 27 தனியார் வங்கி​களின் வாடிக்கை​யாளர்​களுக்கு ஏறக்குறைய 300 கோடி ரூபாயும், திவாலான 431 கூட்டுறவு வங்கி​களின் வாடிக்கை​யாளர்​களுக்கு 15,700 கோடி ரூபாயும் காப்பீட்டு இழப்புத் தொகையாக வழங்கப்​பட்​டுள்ளது. 2014 முதல் 2023 வரையிலான பத்தாண்​டு​களில் 60 கூட்டுறவு வங்கிகள் திவாலாகி உள்ளன. 2023இல் மட்டும் 17 கூட்டுறவு வங்கிகள் திவாலாகி உள்ளன. திவாலாகும் பெரும்​பாலான கூட்டுறவு வங்கிகள் மகாராஷ்டிரம், குஜராத் மாநிலங்​களில் உள்ளன என்பது குறிப்​பிடத்​தக்கது.

2025 பிப்ரவரி மாதம் நியூ இந்தியா கூட்டுறவு வங்கி என்ற ஒரு வங்கி திவாலாகி​விட்டது. இந்த வங்கியில் 1,30,000 வைப்பு​தா​ரர்கள் உள்ளனர். மொத்த வைப்புத்தொகை ரூ.2,436 கோடி. உயர் மட்டத்தில் நடந்த ஊழல்தான் இந்த வங்கியின் திவாலுக்குக் காரணம். பொதுவாக, கூட்டுறவு வங்கி​களில் உள்ள வைப்புத்​தொகையில் 60% மட்டுமே காப்பீட்டுப் பாதுகாப்பு கொண்டவை. அப்படிப் பார்க்​கும்​போது, இந்த வங்கியில் ரூ.1,460 கோடி வரைதான் இழப்பீடு கிடைக்​கும்.

டிஐசிஜிசியின் உறுப்பு வங்கி​களில் சுமார் 290 கோடி கணக்குகள் உள்ளன. அதில் சுமார் 283 கோடி கணக்கு​களில் உள்ள வைப்புத்தொகை ரூ.5 லட்சத்​துக்கு உள்பட்டவை என்பதால், அவை முழுமை​யாகக் காப்பீட்டுப் பாதுகாப்பின் கீழ் உள்ளன. அதாவது, 97.8% வைப்பு​தா​ரர்கள் முழுமை​யாகப் பாதுகாக்​கப்​பட்​டுள்​ளனர். ஆனால், மொத்த வைப்புத்​தொகையான 218 லட்சம் கோடி ரூபாயில் 43.1% தொகை மட்டுமே, அதாவது 94 லட்சம் கோடி ரூபாய் மட்டுமே பாதுகாக்​கப்​பட்​டுள்ளது.

என்ன செய்ய வேண்டும்? - 1969இலிருந்து இன்று வரை 38 தனியார் வங்கிகள் திவாலாகி உள்ளன. அவற்றில் 25 வங்கிகள் பொதுத்துறை வங்கி​களு​ட​னும், 13 வங்கிகள் பிற தனியார் வங்கி​களு​டனும் இணைக்​கப்​பட்டுக் காப்பாற்​றப்​பட்​டுள்ளன. ஆனால், சமீபத்தில் தனியார் வங்கி​களில் நடந்த உயர்மட்ட ஊழல்கள் பற்றிப் பல செய்திகள் வெளியாகின்றன.

21 உள்நாட்டுத் தனியார் வங்கி​களில் உள்ள ரூ.72 லட்சம் கோடி வைப்புத்​தொகை​யில், 32% தொகைக்கு மட்டுமே காப்பீட்டுப் பாதுகாப்பு உள்ளது. 44 வெளிநாட்டு வங்கி​களில் உள்ள 10 லட்சம் கோடி ரூபாய் வைப்புத்​தொகையில் 5% மட்டுமே காப்பீட்டுப் பாதுகாப்பில் உள்ளது.

இந்தியாவில் தனிநபர் கணக்குக்கு ரூ.5 லட்சம் வரை மட்டுமே காப்பீட்டுப் பாதுகாப்பு உள்ள நிலையில், இங்கிலாந்​தில், ஐரோப்பிய நாடுகளில் ஒவ்வொரு கணக்குக்கும் ரூ.90 லட்சம் வரை உள்ள வைப்புத்​தொகைக்குப் பாதுகாப்பு வழங்கப்​படு​கிறது. அமெரிக்​காவில் இதுவே ரூ.2.15 கோடி.

நம் நாட்டிலும் இந்தக் காப்பீட்டுத் தொகை உச்ச வரம்பு 5 லட்சம் ரூபாயி​லிருந்து கணிசமாக உயர்த்​தப்பட வேண்டும். பொதுத்​துறை, கிராம வங்கி​களிடம் இருந்து டிஐசிஜிசி காப்பீட்டுப் பிரீமியத் தொகை வசூலிக்கக் கூடாது. மத்திய அரசு, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் தங்களின் வைப்புத்​தொகையைப் பொதுத்துறை வங்கிகள், கிராம வங்கி​களில் மட்டுமே வைத்துக்​கொள்ள வேண்டும் என்று நிர்வாக உத்தரவு போடப்பட வேண்டும்.

கூட்டுறவு வங்கி​களின் மீது ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாடு தீவிரப்​படுத்​தப்பட வேண்டும். அவற்றில் உள்ள வைப்புத்​தொகைக்கு மாநில அரசுகள் முழுமை​யாகப் பொறுப்​பேற்க வேண்டும். வங்கிகள் அல்லாத நிதி நிறுவனங்கள், நிதி கம்பெனிகளின் வைப்புத்​தொகைக்கும் டிஐசிஜிசி மூலம் பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும்​.

- தொடர்புக்கு: cpkrishnan1959@gmail.com

SCROLL FOR NEXT