சிறப்புக் கட்டுரைகள்

மக்களவைத் தொகுதி மறுவரையறை: ஒரு மாற்றுத் தீர்வு

நா.மணி

மக்களவைத் தொகுதிகள் மறுவரையறை தொடர்பான விவாதம் தேசிய அளவில் முக்கிய இடத்தைப் பிடித்திருக்கிறது. 888 இருக்கைகளுடன் நாடாளுமன்றத்தின் புதிய கட்டிடம் உருவானபோது இப்பிரச்சினை சற்று வலுவடைந்தது. தொகுதி மறுவரையறைக்கான கால அவகாசம் நெருங்கிவரும் தருணத்தில், இப்பிரச்சினை உச்சம் தொட்டுவிட்டது.

பின்னணி

‘ஒரு குடிமக​னுக்கு ஒரு வாக்கு. குடிமக்​களின் எண்ணிக்கை உயர உயர அதற்கு ஏற்ப வாக்காளர் எண்ணிக்கை உயரும். இதனைப் பிரதிபலிக்கும் வகையில் தொகுதி மறுவரையறை செய்யப்பட வேண்டும்’ என்ற அரசமைப்புச் சட்ட வழிகாட்டுதல் 1971ஆம் ஆண்டு வரை பின்பற்​றப்​பட்டது.‌ கூடவே, சுதந்​திரம் அடைந்த வீரியத்​தோடும், பெரும் கனவுகளுக்கான தீனியாக​வும், இந்தியப் பொருளாதார வளர்ச்சிக்கான திட்டங்கள் வகுக்​கப்​பட்டன. மக்கள்​தொகையின் வளர்ச்சியால் அவை தடைபடுவது உணரப்​பட்டது. மக்கள்​தொகைக் கொள்கை இதற்கெனத் தனியாக வகுக்​கப்​பட்டது.

அப்போதைய மக்கள்​தொகைப் பெருக்கம், ‘மக்கள்தொகை வெடிப்பு’ (Population Explosion) என்றே அழைக்​கப்​பட்டது. மக்கள்​தொகையைக் கட்டுப்​படுத்​தாமல் எதிர்​பார்க்கும் வளர்ச்சி சாத்தி​யமில்லை என்ற தீர்க்கமான முடிவுக்கு அரசு வந்தது. ‘சிறு குடும்பம் சீரான வாழ்வு’, ‘நாம் இருவர் நமக்கு இருவர்’, ‘வளமான எதிர்​காலத்​துக்குக் குடும்பக் கட்டுப்​பாடு’ எனப் பிரச்சார முழக்​கங்கள் தொடங்கி, எண்ணற்ற வடிவங்​களில் மக்கள்​தொகைக் கட்டுப்​பாட்டு நடவடிக்கைகள், பிரச்சார வடிவங்கள் என முடுக்​கி​விடப்​பட்டன.

துரதிர்​ஷ்ட​வசமாக இக்கொள்கை நாடு முழுவதும் ஏகமனதாக ஏற்றுக்​கொள்​ளப்​பட​வில்லை. நீண்ட காலமாகச் சமூகச் சீர்திருத்த இயக்கங்கள் நடந்துவந்த மாநிலங்கள், கல்வி, குறிப்​பாகப் பெண் கல்வியில் சிறந்து விளங்கிய மாநிலங்கள், சுகாதாரக் கொள்கை​களில் அக்கறை செலுத்திய மாநிலங்கள் மக்கள்தொகை கட்டுப்​பாட்டுக் கொள்கையைச் சரியாக உள்வாங்​கிக்​கொண்டன. ஆனால், ஏற்கெனவே நிலவிவந்த வடக்கு - தெற்கு என்கிற அரசியலோடு அழுத்தமாக ஒத்துப்​போவதாக இருந்தது.

தென்னிந்தியா​வுக்கும் வட இந்தியா​வுக்கும் மக்கள்தொகை வளர்ச்சி விகித வேறுபாடு மக்களவைத் தொகுதிகள் மறுவரைவுக்கு ஓர் அழுத்தமான முரண்பாட்டை உருவாக்​கியது. ‘மக்கள்தொகை அடிப்​படையில் மறுவரையறை செய்தல்’ என்பது வளர்ச்சிப் பாதையை ஏற்றுக்​கொண்ட தண்டனை​யாக​வும், மக்கள்​தொகைக் கட்டுப்​பாட்டைத் தீவிர​மாகக் கருத்தில் கொள்ளாத மாநிலங்​களுக்குப் பரிசாகவும் அமைந்து​விடும். மக்கள்​தொகையைக் கட்டுப்​படுத்திய மாநிலங்​களுக்கு மக்களவை இடங்கள் குறையும். கட்டுப்​படுத்தாத மாநிலங்​களுக்குக் கூடுதல் மக்களவை இடங்கள் கிடைக்​கும்.

மாற்றுச் சிந்தனைக்கான தருணம்: எழுபதுகளிலேயே எழுந்து​விட்ட பிரச்சினை இது. அப்போதே இதற்கு நிரந்தரத் தீர்வு காணத் திட்ட​மிட்​டிருக்க வேண்டும். ஆனால், தற்காலிகத் தீர்வு​களையே அப்போதைய ஆட்சி​யாளர்கள் முன்வைத்​தனர். இதனால், இன்றைக்கு இப்பிரச்சினை தமிழ்நாடு உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்​களில் முக்கியமான பேசுபொருளாகி​யிருக்​கிறது.

இந்நிலை​யில், மக்கள்​தொகைக்கு ஏற்பத் தொகுதிகள் மறுவரையறை என்ற சிந்தனையில்​ இருந்து வெளிவந்து தீர்வைத் தேடுவது அவசியம். அரசமைப்புச் சட்டத்தைத் திருத்தி அடுத்த கட்ட ஆரோக்​கியமான நகர்வுக்கு வழி வகுத்தால் என்ன? ‘மக்கள்தொகை அடிப்​படையில், பொத்தாம் பொதுவாக வெறும் ஆட்களின் எண்ணிக்கை அடிப்​படையிலான ஜனநாயகப் பிரதி​நி​தித்துவம் தேவை’ என்பதை மறுசிந்​தனைக்கு உள்ளாக்க வேண்டிய தருணம் இது.

மக்களவை உறுப்​பினர்​களின் பணிகள் மக்கள்தொகை அளவு சார்ந்தவை அல்ல; திட்டங்கள் / கொள்கைகள் உருவாக்கம் / செயலாக்கம் சார்ந்தவை. மக்களவை அல்லது அதன் உறுப்​பினர்​களின் பணிகள் மக்கள்தொகை வகைமையைப் பொறுத்தே அமைகின்றன. சாதி, மத அடிப்​படையில் எவ்வளவு பேர் இருக்​கிறார்கள், பொருளா​தா​ரரீ​தியில் எத்தனை வர்க்​கங்​களின் கலவையாக மக்கள் திரட்சி உள்ளது என்பதெல்லாம் முக்கிய​மானவை​தான்.

ஆனால், அதையும் தாண்டி நிறைய விஷயங்கள் உள்ளன. உதாரணமாக, விவசா​யத்தை எடுத்​துக்​கொள்​வோம். சிறு குறு விவசா​யிகள், குத்தகை விவசா​யிகள், விவசாயத் தொழிலா​ளர்கள் என்கிற வகையில்தான் மக்களவை உறுப்​பினர்​களின் பணிகள் அமைந்துள்ளது. எண்ணிக்கை அடிப்​படையில் அல்ல. எண்ணிக்கைக்கு ஏற்ப நிதி ஒதுக்​கீடுதான் மாறுபடும்.

பயிர் சாகுபடிச் சிக்கல்​களுக்கான தீர்வுகள் என நகர்ந்​தால், நன்செய் புன்செய் நிலம்; அதில் விளையும் பயிர்கள்; அதனை ஒட்டிய செயல்​பாடுகள், செயல்​திட்​டங்கள் ஆகியவை முக்கிய​மானவை. ஒருவேளை நகராட்சி, உள்ளாட்சி நிர்வாகம் எனில் மக்கள்தொகை மறுவரையறைக்குத் தேவை எழுகிறது. குடிநீர் விநியோகம், குப்பை மேலாண்மை, தெருவிளக்கு இப்படித் தொடங்கிப் பல பிரச்சினை​களுக்கு மக்கள்தொகை அளவு முக்கியம்.

மக்கள் பிரதி​நி​திகள், நேருக்கு நேர் தங்கள் ஆளுகைக்கு உட்பட்ட பகுதி​களில் குடிமக்​களைப் பார்த்தே தீர வேண்டிய சூழ்நிலையில் உள்ளவர்கள். சட்டமன்ற, நாடாளுமன்ற உறுப்​பினர்​களின் பணிகள் மக்களின் தன்மை, தரத்தின் அடிப்​படையில் அமைபவை. எனவே, மக்களவை எண்ணிக்கையில் மாற்றங்கள், மறுவரையறை தேவையில்லை. வளர்ச்சிக் குறியீடுகள் அடிப்​படையில் மாநிலங்​களவையில் சில மாற்றங்​களைச் செய்ய​லாம்.

மக்கள்​தொகையின் தன்மை, தரத்தின் அடிப்​படையில் மாநிலங்களவை மறுவரையறையை அணுக வேண்டும். பொருளாதார வளர்ச்சி மக்கள் நலன் சார்ந்து பல வளர்ச்சிக் குறியீடுகள் உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ளன. இவற்றின் அடிப்​படையில் மறுவரையறை அமையலாம்.

பொருளாதார வளர்ச்சி எனில், மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பு, தனிநபர் வருமானம், எழுத்​தறிவு விகிதம், பள்ளி - கல்லூரி சேர்க்கை விகிதம், பாலின எழுத்​தறிவு விகிதம், மக்களின் சராசரி வாழ்நாள், பள்ளி​களில் குழந்தைகள் செலவிடும் காலம், பச்சிளம் குழந்தை மரண விகிதம், பேறுகால மரணம், நோய்த் தடுப்பு விகிதாச்​சாரம், மருத்​துவ​மனைகள் - மருத்துவ ஊழியர்கள் எண்ணிக்கை, சமூக வளர்ச்சித் திட்டங்கள் - அவற்றின் அமலாக்க விகிதம் போன்ற பல வளர்ச்சிக் குறியீடுகள் உள்ளன.

இத்தகைய வளர்ச்சிக் குறியீடு​களில் குறைந்த​பட்சம் எவற்றையெல்லாம் எடுத்​துக்​கொள்​ளலாம் என மத்திய - மாநில அரசுகள் இணைந்து ஒரு முடிவுக்கு வரலாம். மக்கள்​தொகைக் கணக்கெடுப்பைப் போல் பத்தாண்​டு​களுக்குக் காத்திருக்கத் தேவையில்லை. இந்த வளர்ச்சிக் குறியீட்டுப் புள்ளி​விவரங்கள் மத்திய - மாநில அரசுகளால் சம்பந்தப்பட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து சேகரிக்​கப்​படு​பவை​தான்.

இவையே போதுமானவை. சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்பு, சமூகநலத் திட்டங்கள் என எந்தத் துறையில் ஒரு மாநிலம் சிறப்​பாகச் செயல்​படு​கிறதோ அந்த மாநிலம், ஒரு மாநிலங்களவை உறுப்​பினரை நியமிக்​கலாம். அடுத்து வரும் காலங்​களில் சிறப்​பாகச் செயல்பட்ட மாநிலத்தின் அனுபவங்கள், பணிகள், உத்திகள் ஆகியவற்றை மத்திய அரசோடும் இதர மாநிலங்​களோடும் பகிர்ந்து​கொள்​ளலாம்.

மாநிலங்கள், தங்கள் வளர்ச்சியின் வழியாகப் பெற்ற மாநிலங்களவை உறுப்​பினர் பதவியை ஓர் அங்கீ​காரமாக, கௌரவமாகக் கருதும். அதேவேளை, இதர மாநிலங்கள் அந்த மாநிலங்களவை உறுப்​பினரைப் பயன்படுத்​திக்​கொள்ள முடியும். இதுபோன்ற மாநிலங்களவை‌ இடங்களைப் பிடிக்க ஒவ்வொரு மாநிலமும் வளர்ச்சிப் போட்டியில் ஈடுபடும். அதேவேளை இது நாட்டின் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கும் பயன்படும்.

இதில் மிகச் சிறப்​பாகச் செயல்​படும் மாநிலங்​களுக்குக் கூடுதல் நிதி வழங்கலாம். வளர்ச்சித் திட்டங்கள் தயாரிப்பில் கூடுதல் பங்களிப்பு செய்யுமாறு கோரிக்கை​விடுக்​கலாம். இதைச் செய்து முடிக்க இன்னும் முப்பது ஆண்டுகள் தேவையில்லை. அதிகபட்சம் ஐந்து ஆண்டுகள் எனத் திட்ட​மிட்டு ஒரு புதிய மறுவரையறையை நோக்கி நகர்ந்தால் அது ஒட்டுமொத்த நாட்டுக்கும் பலனளிக்​கும்​!

- தொடர்புக்கு: tnsfnmani@gmail.com

SCROLL FOR NEXT