சிறப்புக் கட்டுரைகள்

எப்படி இருக்கிறது நிதிநிலை அறிக்கை?

ஸ்ரீனிவாஸ் ராகவேந்திரா

சட்டமன்றத்தில் சமீபத்தில் தாக்கல் செய்யப்பட்ட தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை, இரண்டு முக்கிய அம்சங்களைக் கொண்டிருக்கிறது. முதலாவதாக, மும்மொழிக் கொள்கை தொடர்பாக உருவான சர்ச்சை, நிதிநிலை அறிக்கையின் தொனியையும் உள்ளடக்கத்தையும் வடிவமைத்திருக்கிறது.

இரண்டாவதாக, அடுத்த ஆண்டு மாநில சட்டமன்றத் தேர்தல்களை எதிர்கொள்ளும் அரசியல்ரீதியிலான பரிசீலனைகள் நிதிநிலை அறிக்கைக்கு மற்றொரு எல்லையை நிர்ணயித்துள்ளன. மத்திய அரசுடனான பிணக்கு - நிதி இழப்பு ஆகியவற்றை உள்வாங்​கிக்​கொண்டு, கல்வி, வீட்டுவசதி போன்ற திட்டங்​களுக்கு மாநில வருவாயைச் செலவிடுவதன் மூலம், இந்த நிதிநிலை அறிக்கையில் அரசியல்​ ரீ​தி​யாகச் சில வியூக செலவினங்கள் சேர்க்​கப்​பட்​டுள்ளன.

சில ஒப்பீடுகள்: மாநிலத் திட்டக் குழு வெளியிட்ட முதல் பொருளாதார ஆய்வறிக்கை​யில், நிதிநிலை அறிக்கையின் பின்னணி விளக்​கப்​பட்​டுள்ளது. 2024-25ஆம் ஆண்டுக்கான தமிழ்​நாட்டின் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி (GSDP) (நடப்பு விலைகளில்) ரூ.31,55,096 கோடியாக இருக்கும் என்று கணிக்​கப்​பட்​டுள்ளது. இது 2023-24ஐவிட 16% வளர்ச்சி​யாகும். இதன் அடிப்​படை​யில், 2024-25இல் உண்மையான வளர்ச்சி விகிதம் (real growth) சுமார் 8% ஆக இருக்கும் என்று கணிக்​கப்​பட்​டுள்ளது.

திட்ட​மிடப்பட்ட வளர்ச்சியின் அடிப்​படை​யில், 2024-25ஆம் ஆண்டுக்கான மொத்த வருவாய் ரூ.2,99,010 கோடியாக இருக்கும் என மதிப்​பிடப்​பட்​டுள்ளது. இது 2023-24ஆம் ஆண்டின் திருத்​தப்பட்ட மதிப்​பீட்​டைவிட (revised estimate) 10% அதிகம். இதில், ரூ.2,25,901 கோடி (76%) மாநில அரசு வரிகள் மூலம் திரட்​டப்​படும். மேலும் ரூ.73,109 கோடி (24%) மத்திய அரசிட​மிருந்து கிடைக்​கும். மத்திய அரசிட​மிருந்து மாநிலம் பெறும் நிதி வளங்கள், மத்திய வரிகளில் மாநிலத்தின் பங்கு (வருவாய் வரவுகளில் 17%), மானியங்கள் (வருவாய் வரவுகளில் 8%) வடிவில் இருக்​கும்.

தமிழ்​நாட்டின் ஒட்டுமொத்த சொந்த வரி வருவாய் (total own tax revenue) 2024-25ஆம் ஆண்டில் ரூ.1,95,173 கோடியாக இருக்கும் என மதிப்​பிடப்​பட்​டுள்ளது. இது 2023-24ஆம் ஆண்டின் திருத்​தப்பட்ட மதிப்​பீட்​டைவிட 15% அதிகம். இதில் மாநில ஜிஎஸ்டி சொந்த வரி வருவாயின் மிகப்​பெரிய ஆதாரமாக (38% பங்கு) மதிப்​பிடப்​பட்​டுள்ளது. 2023-24ஆம் ஆண்டின் திருத்​தப்பட்ட மதிப்​பீடு​களைவிட மாநில ஜிஎஸ்டி வருவாய் 17% அதிகரிக்கும் என மதிப்​பிடப்​பட்​டுள்ளது. விற்பனை வரி/வாட்​(sales tax/VAT) வருவாய் ரூ.69,588 கோடியாக இருக்கும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இது 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்​தப்பட்ட மதிப்​பீடு​களுடன் ஒப்பிடும்போது 12% அதிகம். முத்திரைத் தீர்வை, பத்திரப் பதிவு (12%), கலால் வரி (6%), மோட்டார் வாகன வரி (5.9%) ஆகியவற்றி​லிருந்து மற்ற வருவாய் திரட்​டப்​படு​கிறது. 2023-24ஆம் ஆண்டுக்கான திருத்​தப்பட்ட மதிப்​பீடு​களைப் போலவே, 2024-25ஆம் ஆண்டில் மொத்த உள்நாட்டு உற்பத்​தியில் சொந்த வரி வருவாய் 6.2%ஆக மதிப்​பிடப்​பட்​டுள்ளது.

நிதிநிலை அறிக்கையின் செலவினப் பக்கத்​தில், 2024-25ஆம் ஆண்டுக்கான வருவாய் செலவினம் (Revenue expenditure) ரூ.3,48,289 கோடியாக இருக்கும் என்று முன்மொழியப்​பட்​டுள்ளது. இது 2023-24ஆம் ஆண்டின் திருத்​தப்பட்ட மதிப்​பீட்​டைவிட 10% அதிகம். இதில் சம்பளம், ஓய்வூ​தியம், வட்டி, மானியங்கள், நிதியுதவி​களுக்கான செலவும் அடங்கும். இவற்றில் சம்பளம், ஓய்வூ​தியம், வட்டி ஆகியவை மொத்த வருவாய் செலவினத்தில் 64%ஆக இருக்கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இரண்டாவதாக, 2024-25ஆம் ஆண்டுக்கான மூலதனச் செலவு ரூ.47,681 கோடியாக இருக்கும் என்று முன்மொழியப்​பட்​டுள்ளது. இது 2023-24ஆம் ஆண்டின் திருத்​தப்பட்ட மதிப்​பீட்​டைவிட 12% அதிகம். மூலதனச் செலவு என்பது சொத்துகளை உருவாக்கு​வதற்கான செலவினத்தைக் குறிக்​கிறது. மூன்றாவதாக, மாநிலத்தால் வழங்கப்​படும் முன்பணம், கடன்கள் (advances and loans) ரூ.16,534 கோடியாக இருக்கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

துறைசார் ஒதுக்​கீட்டைப் பொறுத்​தவரை, மொத்தச் செலவினத்தில் கல்வித் துறைக்கு 13.7% ஒதுக்​கப்​பட்​டிருக்​கிறது. சுகாதாரம் (5%), சாலைகள்​-​பாலங்கள் (5%), விவசாயம் (6.1%), கிராமப்புற மேம்பாடு (3%), எரிசக்தி (4.7%). இந்த ஒதுக்​கீடுகள் அனைத்தும் 2023-24ஆம் ஆண்டின் திருத்​தப்பட்ட மதிப்​பீடு​களைவிட அதிகமாக உள்ளன, எரிசக்தித் துறையைத் தவிர.

பரிசீலிக்​கப்பட வேண்டிய அம்சங்கள்: இந்த நிதிநிலை அறிக்கை​யிலும் முந்தைய நிதிநிலை அறிக்கை​யிலும் உள்ள பொதுவான அம்சம், ஒடுக்​கப்பட்ட மக்கள், பெண்களுக்கான சமூக நலனில் கவனம் செலுத்து​வது​தான். மானியங்கள், நேரடிப் பணப் பரிமாற்​றங்கள் போன்ற​வற்றின் மூலம் இது செய்யப்​படு​கிறது. இந்த நிதிநிலை அறிக்கையில் ‘கலைஞர் கனவு இல்லம்’, பெண் தொழில்​முனை​வோருக்கான ஊக்கத் திட்டம் போன்ற திட்டங்கள் அந்த உறுதிப்​பாட்டை எடுத்​துக்​காட்டு​கின்றன.

நேரடிப் பணப் பரிமாற்ற அடிப்​படையிலான நலத்திட்​டங்​களின் தற்போதைய அணுகு​முறையில் உள்ள சிக்கல் என்னவென்​றால், நீடித்​துவரும் சமத்து​வ​மின்மையை இதனால் தீர்க்க முடியாது. நேரடிப் பணப் பரிமாற்றம் சார்ந்த நன்மைகள், பொருளா​தா​ரத்தை விரிவாக்​கக்​கூடிய நுகர்வுப் பெருக்​கத்தையே உருவாக்கு​கின்றன. ஆனால், முதலீட்டு உருவாக்​கத்தில் விரிவாக்​கமும் / அதன் விளைவாக ஊதிய வளர்ச்சியும் இல்லா​விட்​டால், அத்தகைய நுகர்வு அடிப்​படையிலான விரிவாக்​கத்தின் நிலைத்​தன்மை சாத்தி​ய மற்​ற​தாகி​விடும்.

இந்த நிதிநிலை அறிக்கை​யிலும் மூலதனச் செலவு முந்தைய நிதிநிலை அறிக்கைகளைப் போலவே உள்ளது. இந்த நிதிநிலை அறிக்கை​யிலும் கல்வி (வகுப்​பறைகளை நவீனமய​ம் ஆக்​குதல்), வீட்டு​வசதி, ஐடி பூங்காக்கள், ஜவுளிப் பூங்காக்கள், சாலைகள், கிராமப்புற மேம்பாடு போன்ற திட்டங்கள் இருந்​தா​லும், மாநில மொத்த உள்நாட்டு உற்பத்​தியில் மூலதனச் செலவு சுமார் 1.5% மட்டுமே.

மூலதனச் செலவுகள் புதிய சொத்துக்களை உருவாக்கி மக்களுக்குப் புதிய வருமானத்தை உருவாக்கு​கின்றன. நுகர்வு அடிப்​படையிலான வளர்ச்சி அணுகுமுறை என்பது வருமான உருவாக்​கத்தைப் பொறுத்ததே. புதிய மூலதன உருவாக்கம் இல்லை​யென்​றால், நுகர்வு அடிப்​படையிலான அணுகுமுறை என்பது பணப் பரிமாற்றம் அல்லது வரிக் குறைப்பு அல்லது கடன் விரிவாக்​கங்கள் மூலம் மட்டுமே நிலைநிறுத்​தப்​படும். முதல் இரண்டு வழிமுறைகள் அரசாங்​கத்தின் கடன் சுமையை அதிகரிக்​கும். மூன்றாவது வழிமுறை பொருளா​தா​ரத்தை நிலையற்றதாக மாற்றும்.

இந்த நிதிநிலை அறிக்கையின் மூலம், பொருளா​தா​ரரீ​தியாக நன்மை பயக்கும் மூலதன உருவாக்​கத்தையும் அரசியல் ​ரீ​தியாக நன்மை பயக்கும் சமூகநலத் திட்டங்​களையும் அரசாங்கம் இணைத்​திருக்​கலாம். கலைஞர் கனவு இல்லம் திட்டம் இந்த வகையைச் சேர்ந்தது. அதேபோல், பல நலத்திட்​டங்​களிலும் இந்த அணுகு​முறையை அரசாங்கம் முன்னெடுத்​திருக்​கலாம். உதாரணமாக, பெண்களுக்கு அதிகாரமளித்தல் பிரச்சினையை எடுத்​துக்​கொள்​வோம்.

தொழிலாளர் பங்களிப்பில் பெண்களுக்கான இடம் கிடைக்​காமல் போவதற்கான தடைகளில் ஒன்று, அவர்களை அழுத்தும் வீட்டுப் பராமரிப்புப் பணிகளின் சுமை. குழந்தைப் பராமரிப்பு என்பது பெண்களுக்காக வரையறுக்​கப்பட்ட பொறுப்பு​களில் மிகப்​பெரிய ஒன்று.

நகர்ப்பு​றங்​களில் இந்தப் பிரச்சினை மிகவும் தீவிர​மானது. தொழிலாளர் படையில் அதிகப் பெண்கள் பங்கேற்க உதவும் அரசுப் பராமரிப்பு உள்கட்​டமைப்பு வசதிகளை (care infrastructure) உருவாக்குவது, இந்தப் பிரச்சினையை மாற்று​வதற்கான மாறுபட்ட அணுகு​முறையாக இருக்​கும்.

பெரிய அளவிலான பராமரிப்பு உள்கட்​டமைப்பு வசதிகளில் முதலீடு செய்வது, பொருளா​தாரம் -சமூகம் இரண்டிலும் தேவையான மாற்றங்​களையும் ஏற்படுத்​தும். லத்தீன்​-அமெரிக்க நாடான கொலம்​பி​யாவின் அனுபவம், அத்தகைய உள்கட்​டமைப்பு வசதியை உருவாக்குவது பற்றிச் சிந்திக்க நமக்கு உதவலாம்.

பொருளியல் அறிஞர் தாமஸ் பிக்கெட்​டியின் ‘சமத்து​வ​மின்மை என்பது ஒரு தேர்வு, ஆனால் நாம் வேறு பாதையைத் தேர்வு செய்ய முடியும்’ என்கிற கருத்தை மேற்கோள் காட்டி, நிதி அமைச்சர் தங்கம் தென்னரசு நிதிநிலை அறிக்கையைத் தாக்கல் செய்தார்.

ஆனால், சமத்து​வ​மின்மை என்பது பொருளா​தாரக் கட்டமைப்பு நிலைமை​களால் ஏற்படும் விளைவே. சமத்து​வ​மின்​மையைக் குறைப்​ப​தற்​கும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை அடைவதற்​கும், பொது சுகாதாரம், கல்வி, பொருளா​தா​ரத்​துக்கான பிற அடிப்​படைத் தேவைகளுக்கு அரசுப் பராமரிப்பு ​சார்ந்த உள்​கட்​டமைப்பு வச​திகளை ஒருங்​கிணைப்பது குறித்துப் பரிசீலிப்பது நீண்ட கால நோக்​கில் பலன் தரும்​.

- தொடர்புக்கு: raghav.srinivasan@apu.edu.in

SCROLL FOR NEXT