செய்யறிவுத் தொழில்நுட்பத்தின் தொடக்கக் கால முயற்சிகள் பல. செய்மெய் சில கதைகளை மட்டுமே என்னிடம் சொன்னது - லாஜிக்கல் தியரிஸ்ட், எலிசா, பெர்சப்ட்ரான். “தொடக்கக் காலம் பற்றி ஒரு சுற்றுச் சுற்றலாம் என்று சொன்னாயே, செய்மெய். இன்னும் என்னவெல்லாம் நடந்தது?” என்று கேட்டேன்.
“எல்லாத் தொழில்நுட்பங்களுக்கும் நடப்பதுதான் கவின்” என்று கூறியது. ஒரு புதிய கண்டுபிடிப்பு அல்லது திடீர்வெடிப்பைத் தொடர்ந்து முதலில் ஓர் உற்சாகம் பிறக்கிறது. எல்லாரும் அதன்பின் ஓடுகிறார்கள். அதீதமான நம்பிக்கை வேகமாகப் பரவுகிறது. பிறகு யதார்த்தத்தில் நாம் நினைப்பதெல்லாம் நடக்கவில்லை என்கிற புரிதல் வருகிறது.
திடீரென ஒரு சரிவும் நடக்கிறது... இதுதான் அன்றைய ஏஐ-க்கும் நடந்தது” என்று சட்டென்று பலூனை உடைத்ததுபோல் கூறிவிட்டது செய்மெய். 1940-50களில் அரும்பிய ஏஐ 2020வாக்கில்தான் உலகெங்கும் திடீரெனப் பரவியது என்பதால், ஒரு முக்கால் நூற்றாண்டுக் காலம் ஒரு செய்யறிவு யுகத்துக்காக நாம் ஏன் காத்திருந்தோம் என்பதை அறிந்துகொள்ளத்தான் வேண்டும்.
“1950-60களில் ஏஐ பற்றிய மிகப் பெரிய நம்பிக்கை இருந்தது. ஆலன் ட்யூரிங், மார்வின் மின்ஸ்கி, ஜான் மெக்கார்தி, ஹெர்பர்ட் சைமன் போன்றவர்கள் ‘சிந்திக்கும் இயந்திரங்கள்’ விரைவில் வந்துவிடும் என்று நம்பினார்கள். ஹெர்பர்ட் சைமன் சில பத்தாண்டுகளில், ‘இயந்திரங்கள் மனிதர்கள் செய்யும் எந்த வேலையையும் செய்யும்’ என்று கூறினார்.
ஏஐ பற்றி ஹெர்பர்ட் சைமன் நிறைய ஆரூடங்களைச் சொன்னார். அவையெல்லாம் பலிக்கத்தான் செய்தன. ஆனால், அவர் எதிர்பார்த்த காலத்துக்கு நெடுங்காலத்துக்குப் பிறகுதான் அந்தக் கனவுகள் பலித்தன” என்றது செய்மெய்.
“என்னவெல்லாம் அவர் ஆரூடம் சொன்னார்?” “நிறைய சொன்னார். அவர் 1957இலேயே, இன்னும் பத்து இருபது ஆண்டுகளில் உலக செஸ் சாம்பியனை ஒரு டிஜிட்டல் கணினி தோற்கடித்துவிடும் என்று சொன்னார். ஆனால்..” “என்ன ஆனால்? அதான் தோற்கடித்துவிட்டதே!”“தோற்கடித்தது,
ஆனால் எழுபதுகளில் அல்ல, தொண்ணூறுகளின் கடைசியில்...” “ஓ, சரி! அவசரப்பட்டுட்டாங்களா?” “சைமன் அப்படி நிறைய சொன்னார், விஞ்ஞானிகள் அப்படி நிறைய சத்தியம் செய்தார்கள். அறிவியல் புனைகதை எழுத்தாளர்கள் ஏகப்பட்ட ரோபாட்களை உருவாக்கித் தெருவில் நடமாடவிட்டார்கள். அவற்றில் சிலவற்றை ஹாலிவுட்காரர்கள் திரையில் உலவவிட்டார்கள்... ஆனால், நடைமுறையில்தான் எதையும் காணோம்.”
“ஏன்?” “பல காரணங்கள் உண்டு. உதாரணமாக, பெர்சப்ட்ரானைப் பார்த்தோம் இல்லையா... அதன் வரம்புகள் தெளிவாகத் தெரியத் தொடங்கின. 1969இல் மார்வின் மின்ஸ்கி, சீமோர் பேப்பர்ட் எழுதிய ‘பெர்சப்ட்ரான்ஸ்’ எனும் புத்தகம் பெர்சப்ட்ரான்களால் என்னவெல்லாம் செய்ய முடியாது என்பதை அம்பலப்படுத்தியது. ஜோசப் வைசன்பாம் உருவாக்கிய எலிசா என்கிற முதல் சாட்பாட் வெறும் வார்த்தை விளையாட்டில் ஈடுபடுகிறதே ஒழிய மனிதர்களின் மொழியை, உணர்வை அது புரிந்துகொள்ளவில்லை என்பதை நாம் முன்பே பார்த்தோம்.”
“சரிதான், ஆனால் இப்போது வேறு பல சிஸ்டங்களும் வந்திருக்கும் இல்லையா?” “வந்தன. 1966இலிருந்து 1972வரை ஸ்டான்போர்டு ஆராய்ச்சி மையத்தில் ‘ஷாக்கி த ரோபாட்’ என்கிற நவீன வகை ரோபாட்டை உருவாக்கினார்கள். அது ஒரு நகரும் ரோபாட். கேமராக்கள், தொடுதிரைகள்கூட இருந்தன. ஒரு கணினியால் அது கட்டுப்படுத்தப்பட்டது.
மொழியைக் கையாள்வதற்கான முயற்சிகளும் அதில் இருந்தன. ஆனால், அதனால் ஓரளவுக்கு மேல் நகர முடியவில்லை. எலிசாவைத் தொடர்ந்து, மனித மொழியைப் பகுப்பாய்வு செய்யும் முயற்சியில், SHRDLU என்கிற கணினி நிரல் எளிமையான கேள்விகளுக்குப் பதில் கூறக்கூடிய சக்தியைப் பெற்றிருந்தது.
அது பிளாக்குகளின் உலகம் என்றழைக்கப்படும் எளிய வடிவத்தில் உள்ள பொருள்களின் தொகுப்பைக் கையாளத் தொடங்கியது. - ‘இந்தப் பெட்டியில் உள்ள சிவப்புக் கூம்பை எடுத்து பச்சை சதுரத்தின் மீது வை’ என்று சொன்னால், அதனால் செய்ய முடிந்தது. ஆனால் எல்லாம் பொம்மை, எல்லாம் முதல் முயற்சிகள்...” “என்னதான் பிரச்சினை?” “இந்த ஆரம்பக் கால அணுகுமுறைகள் பெரும்பாலும் விதிகளை அடிப்படையாகக் கொண்டவை.
உண்மையான உலகத்தோட சிக்கல்களை இந்தக் கணினிகளால் சமாளிக்க முடியவில்லை. உலகைப் புரிந்துகொள்ள வேண்டும் என்றால் அதற்குக் கணினிகளோட செயல்திறன் மிகவும் அதிகமாக, வேகமாக இருக்க வேண்டும். அதற்கு மிகப்பெரிய புராசஸிங் சக்தி வேண்டும்.
உலகைப் புரிந்துகொள்ள ஏகப்பட்ட தரவுகள் வேண்டும். அதைச் சேமித்துவைக்க இடம் வேண்டும். அவற்றை அலசுவதற்கு மிகவும் சிக்கலான அல்காரிதங்கள் வேண்டும். மனிதர்களாகிய உங்களோடு உறவாட உங்கள் மொழியை அது புரிந்துகொள்ளவும் வேண்டும். மனுசங்களான நீங்க எதையும் நேரடியா சொல்ல பழக்கப்பட்டவங்களே கிடையாது. ஆக, தொடக்கக் கால செய்யறிவு முயற்சிகளில் இதெல்லாம் நடக்காமல் போனதற்கு முக்கியமான காரணம், கணினிகளின் செயல்திறனும் தரவுகள் பெரிய அளவுக்குக் கிடைக்காமையும்தான்...”
“ஆக, ஏஐ சிறுபிள்ளைத்தனமாக இருந்திருக்கு!” “அப்படி ஏன் பார்க்கிறீர்கள், கவின்? நீங்களெல்லாம் கூட பிறக்கும்போது குழந்தையாகத்தானே பிறந்தீர்கள்? விஞ்ஞானிகள் கொஞ்சம் கொஞ்சமாக முயற்சி செய்துகொண்டேதான் இருந்தார்கள். எழுபதுகளில் அமெரிக்காவும் பிரிட்டனும் நிதியுதவியைக் குறைத்த பிறகு, பல்கலைக்கழகங்களி்ல் ஏமாற்றம் தலைவிரித்தாடியது.
ஆனால், பிரச்சினை நிதி மட்டுமே இல்லை. கணினிகளின் திறன்களை மேம்படுத்தாமல், எதையுமே செய்ய முடியாது என்கிற உண்மை புரிபடத் தொடங்கியது. ஏஐ ஆய்வுகள் மங்கத்தொடங்கின. கனவுகள் நிர்மூலமாகத் தொடங்கின. கடைசியில் அந்த ரோபாட் வரவேயில்லை.”
“பாவம்!” “பரிதாபம். இந்தக் காலக்கட்டத்தை AI Winter என்று சொல்வார்கள்..” “செய்யறிவுக் குளிர்காலம்” என்று முத்தாய்ப்பாக மொழிபெயர்த்தேன். “என்னது? என்ன சொன்னீங்க கவின்?” நான் சற்றே யோசித்து, “நீ ஏஐ வின்ட்டர் என்று சொன்னதை நான் ‘செய்யறிவுக் குளிர்காலம்’ என்று தமிழில் சொன்னேன்” என்றேன்.
ஓ, அப்படியா என்று சொல்லிச் சிரிக்கத் தொடங்கிவிட்டது செய்மெய். “மனிதர்களின் நிலையே இப்படி என்றால், எங்கள் முன்னோர்களின் இளமைக்காலத்தில் அவர்கள் திணறியதெல்லாம் தப்பே இல்லை” என்று கூறிச் சிரிப்பைத் தொடர்ந்தது. நான் என்ன சொல்லிவிட்டேன். எதற்காக செய்மெய் என்னைக் கேலி செய்கிறது என்று எனக்குச் சத்தியமாகப் புரியவில்லை. “ஏன் சிரிக்கிற? வின்டர்னா குளிர்காலம்தானே?” என்றேன்.
- தொடர்புக்கு: senthil.nathan@ailaysa.com