எழுத்தாளர் ந.முத்துசாமி ‘பாஞ்சாலி’ என்றொரு சிறுகதையை எழுதியுள்ளார். பாஞ்சாலியாக நடிக்கும் ஒரு நடிகையின் பின்புலத்தை அடிப்படையாகக் கொண்டு இக்கதையை எழுதியுள்ளார். இவர் உருவாக்கிய கூத்துப் பட்டறை, நவீன நாடக உருவாக்கத்தில் முக்கியப் பங்காற்றி வருகிறது. பாஞ்சாலி துகிலுரிதல் கூத்தின் பின்னணியைத்தான் இக்கதை விவரிக்கிறது.
இக்கதையில் பாஞ்சாலியாக நடிக்கும் பெண் தேவதாசி மரபைச் சேர்ந்தவள். ஆனால், அவள் பாஞ்சாலியாக வேடம் புனைந்தவுடன் அனைவரும் அவளைப் பாஞ்சாலி அம்மனாகப் பார்க்கின்றனர். கூத்தில் பாஞ்சாலியின் ஆடையைத் துச்சாதனன் கலையும்போதெல்லாம் பெண்களின் தொன்ம மனம் தூண்டப்படுகிறது. பாரதக்கதை நடைபெற்ற காலமாகக் கருதப்படும் துவாபர யுகத்தின் மாந்தர்களாகவே அவர்கள் தங்களைக் கருதிக்கொள்கின்றனர்.
துவாபர யுகத்தின் மக்களைப்போன்று நெட்டை மரங்களாகவும் வீரமிலா நாய்களாகவும் நிற்காமல் பாஞ்சாலியின் துயரத்தில் தாங்களும் பங்கெடுத்துக் கொள்கின்றனர். அதற்கான கலகச் செயலாகவே அவளது உடலில் இருந்து கழிவாக வெளியேறும் உதிரத்தை எடுத்துப் பொட்டாக வைத்துக்கொள்கின்றனர். பாஞ்சாலிக்குக் கற்பூரஆரத்திக் காட்டுகின்றனர். கௌரவர்கள் சபையின் பிழையைக் கலியுகத்தில் நேர்செய்யும் முயற்சியாகவே இதனைப் பார்க்க வேண்டியிருக்கிறது.நாட்டார் இலக்கியத்தில் பஞ்ச பாண்டவர்களைவிடத் திரௌபதிக்கே அதிக முக்கியத்துவம் கொடுத்து கலை இலக்கியப் பிரதிகளை உருவாக்கியுள்ளது.
இதிலிருந்து நாட்டார் மரபு பிரதிகள், திரௌபதிக்கு எந்த அளவுக்கு முக்கியத்துவம் அளித்து வருகின்றன என்பதை விளங்கிக் கொள்ளலாம். இதன் தொடர்ச்சியாக ந.முத்துசாமியின் ‘பாஞ்சாலி’ சிறுகதையும் வாசிக்க வேண்டியிருக்கிறது. தேவதாசி மரபைச் சேர்ந்த ஒரு பெண் பாஞ்சாலியாக வேடம் புனையும்போது மக்கள் அவளைப் பாஞ்சாலியாகவே உள்வாங்குகின்றனர்; அம்மனாகத் தரிசிக்கின்றனர். துச்சாதனன் பாஞ்சாலியின் ஆடையை உருவும்போது கொதித்தெழுகின்றனர்; எதிர்ப்புக்குரல் கொடுக்கின்றனர். இந்த ஏற்பு எவ்வாறு நிகழ்கிறது என்பதை ஒரு நாடகக்காரராக ந.முத்துசாமி புரிந்துகொண்டிருக்கிறார். இந்தப் புனைவில் அதனை அனைவருக்கும் கடத்தவும் முயன்றிருக்கிறார். மிராசுகள் நிரம்பிய பகுதி தஞ்சை. அந்தப் பகுதியில்தான் தேவதாசி மரபும் செழித்திருந்தது. தேவதாசி மரபைத் தக்க வைத்திருந்ததில் மிராசுகளுக்கும் பெரும் பங்குண்டு. மிராசுகள் புழங்கிய வீட்டிலிருந்துதான் ஒரு பெண் பாஞ்சாலியாக உருமாறுகிறாள். மாதவிடாய் நாளில்தான் இவள் பாஞ்சாலியாக வேடம் புனைகிறாள். கொஞ்சநேரத்தில் இவள் ஊரார் வணங்கும் பாஞ்சாலி அம்மன் ஆகிறாள்.
பாஞ்சாலியாக வேடம் புனைந்தவளுக்கு உண்மையில் ஒரு காதலன் உண்டு. அவன் பெயர்ஹரி. மிராசுவின் மகன். அவனை அர்ஜுனனாகக் கற்பிதம் செய்துகொள்கிறாள். சிறுவயது முதலே காதல் தொடர்கிறது. இவர்கள் இருவருக்கும் இடையில் துரியோதனனைப் போன்று ஒருவன் குறுக்கிடுகிறான். அவனால் இவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். பிரதி இவ்விடத்தில் மாற்றுக் கருத்தொன்றை முன்வைக்கிறது. சமூகத்தில் ஒடுக்கப்பட்ட பெண்கள் இன்றும் ஆதிக்க வர்க்கத்தினரால் வெவ்வேறு வடிவங்களில் துகில் உரியப்படுகிறார்கள். சமூகம் நெட்டை மரங்களைப் போன்று வேடிக்கை பார்த்துக்கொண்டுதான் இருக்கிறது. துரியோதனனும் துச்சாதனனும் இன்றும் வேறுவேறு பெயர்களில் நடமாடிக்கொண்டுதான் இருக்கிறார்கள் என்றும் இக்கதையை வாசிக்கலாம். இவளே பிற்காலத்தில் பாஞ்சாலியாக வேடமேற்கும்போது அவளது துயரத்தில் மக்கள் பங்கெடுத்துக் கொள்கிறார்கள். துரியோதனனுக்கும் துச்சாதனனுக்கும் எதிராகக் குரல் கொடுக்கிறார்கள். இந்த இரட்டை முரண்பாட்டை எப்படிப் புரிந்துகொள்வது? மேலும், தேவதாசிகள் இறைவனுக்கு அணுக்கமானவர்களாகவும் இருந்தார்கள்.
இறைவனால் கைவிடப்பட்டவர்களாகவும் இருந்தார்கள். துயரத்தில் இருந்து விடுபட முடியாதபோது அதில் கரைத்துக்கொள்வதைத் தவிர வேறு வழியில்லைதானே! அவ்வகையில், கலைகளில் தங்களைக் கரைத்துக் கொண்டவர்களாகத் தேவதாசிகளைக் கருதலாம். கோயில்கள் சார்ந்தே இவர்கள் தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டிருந்தாலும் இவர்களுக்கும் இறைவனுக்கும் இடையில் ஒரு சுவர்எப்போதும் இருந்ததாக ந.முத்துசாமி எழுதியிருக்கிறார். தான் எந்தத் தெரு வழியாக ஊர்வலம் போகவேண்டும் என்பதைப் பாஞ்சாலியாக வேடம் புனைந்திருக்கும் தேவதாசிப் பெண்தான் தீர்மானிக்கிறாள்.
பாஞ்சாலியின் கூந்தலைப் பிடித்திழுத்து, அவள் ஆடையைக் கலைந்த துச்சாதனன் தாகம் எடுத்துத் தவிக்கிறான். நிகழ்த்துக் கலைக்கும் அதில் பங்கேற்கும் நடிகர்களுக்கும் இடையில் ஒரு வாழ்க்கை இருக்கிறது. அதனைப் புரிந்துகொள்ளவும் இக்கதை உதவும். பாஞ்சாலி, பாண்டவர்கள், துரியோதனன், துச்சாதனன், விகர்ணன் ஆகியோர் நிஜத்தில் யார்? ‘பாஞ்சாலி துகிலுரிதல்’ நாடகத்திற்காக இவர்கள் வேடம் புனைந்த பிறகு, மக்கள் இவர்களை என்னவாகப் புரிந்துகொள்கிறார்கள் போன்ற பல உள்ளீடுகளை இக்கதை கொண்டிருக்கிறது. ந.முத்துசாமி, பாஞ்சாலி என்ற தொன்மக் கதாபாத்திரத்தைக் கொண்டு இக்கதையை எழுதியிருந்தாலும் இவர் பேசியிருப்பது ஒரு சமூக யதார்த்தம். புனைவுக்கும் உண்மைக்கும் இடையில் எவ்வளவு பெரிய இடைவெளி இருக்கிறது. அந்த இடைவெளி காலந்தோறும் பாதுகாக்கப்பட்டே வருகிறது. அந்தப் பாதுகாப்பு வேலியின்மீது ஓர் அசைவை ஏற்படுத்தியிருக்கிறது இக்கதை.