சிறப்புக் கட்டுரைகள்

தமிழகக் கடற்கரைகளைக் கடல் விழுங்கி வருகிறது! - பேராசிரியர் எஸ்.ஜனகராஜன் நேர்காணல்

ஆனந்தன் செல்லையா

காலநிலை மாற்றத்துக்கும் இயற்கைப் பேரிடர்களுக்குமான தொடர்பை முன்வைத்துத் தீர்வுகளை வலியுறுத்தி வருபவர் நீர் ஆராய்ச்சி வல்லுநரான எஸ்.ஜனகராஜன். சென்னை வளர்ச்சி ஆராய்ச்சி நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வுபெற்ற பேராசிரியரான இவர், ஹைதராபாத்தில் உள்ள ‘தெற்கு ஆசிய நீர் ஆராய்ச்சி நிறுவன’த்தின் தலைவராகத் தற்போது செயல்பட்டுவருகிறார். அவருடைய நேர்காணல்:

பொருளாதாரத் துறையைச் சேர்ந்த நீங்கள் நீர் ஆராய்ச்சித் துறைக்கு வந்தது எப்படி?

எனது முனைவர் பட்ட ஆய்வுக்காக 1980களில் நாலைந்து கிராமங்​களில் ஒரு வருடத்துக்கு மேல் தங்கிஇருந்​தேன். விவசாயிகளுக்குச் சரியான தருணத்தில் கிடைக்கும் தண்ணீர் எவ்வளவு முக்கியமானது என்பதை நேரடி​யாகப் பார்த்தேன்.

அங்கே தண்ணீருக்கென ஒரு சந்தை அமைப்பு செயல்​பட்டது தெரியவந்தது. பாசனத்​துக்குத் தண்ணீர் கொடுப்​பவருக்கு விளைச்​சலில் மூன்றில் ஒரு பாகத்தை விவசாயி கொடுக்க வேண்டும். இன்றியமையாத இடுபொருளாக உள்ள தண்ணீர் மீது ஏற்பட்ட ஈடுபாடு காரணமாக இந்தத் துறைக்கு வந்தேன்​.

மழைவெள்ளம் தொடர்பான பிரச்சினைகளை 2015 சென்னைப் பெருவெள்ளத்துக்கு முன், பின் என நாம் வகைப்படுத்தலாம். நமது அணுகுமுறை மேம்பட்டுள்ளதா?

2015 பெருவெள்ளம் இயற்கையாக ஏற்பட்ட பேரிடர் அல்ல, மனிதப் பிழையால் ஏற்பட்டது. முன்னெச்​சரிக்கை குறித்து அது சில படிப்​பினை​களைக் கொடுத்​திருக்​கிறது. 2018, 2021, 2023ஆம் ஆண்டு​களில் பெருமழை​யின்போது அரசு நிர்வாகம் தகுந்த முன்னேற்​பாடுகள் செய்திருந்தது; செய்து​கொண்​டுமிருக்​கிறது.

இருந்​தா​லும், இவை போதாது. காலநிலை மாற்றத்தை நாம் சரியாகப் புரிந்து​கொள்ள​வில்லை. 2015ஆம் ஆண்டுபோல மனிதப் பிழையால் வெள்ளம் ஏற்பட்​டால், காலநிலை மாற்றம்தான் காரணம் எனக் கூறி அதன் பின்னால் ஒளிந்து​கொள்​கிறோம். இன்னொன்று, காலநிலை மாற்றத்தைக் குறைவாக மதிப்​பிட்டு, அதற்கேற்ற நடவடிக்கைகளை எடுக்​காமல் பின்னர் திணறுகிறோம்.

இயல்புக்கு மாறான மழைப்பொழிவுக்குக் காரணம் என்ன?

கடல்கள் மிக அதிகமான வெப்பநிலையை எட்டி விட்டன. உலகிலேயே மிக அதிக வெப்பமான கடல் இந்தியப் பெருங்​கடல்​தான். இதனுடன் ஒரு பக்கம் வங்காள விரிகு​டாவும் இன்னொரு பக்கம் அரபிக்​கடலும் சேர்வ​தால், இரண்டு கடல்களுக்கும் வெப்பம் பரவுகிறது. கடலின் மேற்பரப்பு வெப்பநிலையும் ஆழ்பகுதி வெப்பநிலையும் கூடுதலாகின்றன. இதனால் கடல் நீர் ஆவியாகி மேகமாய்த் திரண்டு மழை பெய்கிற ‘நீரியல் சுழற்சி’ தீவிரமடைகிறது.

மழை பெய்ய வேண்டிய காலத்தில் பெய்யாமல் போவதும் எதிர்​பா​ராதபோது பெய்வதும் இதன் விளைவுகளே. இவற்றைக் காலநிலை மாற்றத்​துடன் தொடர்​புபடுத்தி அணுக வேண்டும். தமிழகக் கடற்கரை இந்தியா​விலேயே இரண்டாவது நீளமான கடற்கரை. கடலில் ஏற்படும் மாற்றங்​களைப் பொறுத்து அசாதா​ரணமான மழைப்​பொழிவு இருக்​கும். அதற்கேற்ற கட்டமைப்பு வசதிகளை உருவாக்க​வில்லை எனில் பாதிப்புகள் கடுமையாக இருக்​கும்​.

கடல்மட்ட உயர்வின் விளைவுகள் என்ன?

ஆர்க்​டிக், அண்டார்க்டிக், கிரீன்லேண்ட் பகுதி​களில் பனிமலைகள் உருகு​வதால் கடல்மட்டம் உயர்கிறது. தமிழ்நாடு கடலோரத்தில் இருப்​பதால் நாம் பாதிக்​கப்பட அதிக சாத்தி​யங்கள் உள்ளன. சராசரி கடல் மட்டத்​திலிருந்து 10 மீ. கீழே இருக்கும் பகுதி​களைத் ‘தாழ் மட்ட கடலோர மண்டலம்’ என ஐ.நா. வரையறுக்​கிறது. சென்னையில் பள்ளிக்கரணை சதுப்பு நிலம், எண்ணூர் உள்பட ஏறக்குறைய 30% பகுதிகள் 3 மீட்டருக்குக் கீழே உள்ளன.

காவிரிப் படுகை மிக மோசமான நிலையில் உள்ளது. ‘ஷோர் லைன்’ எனப்படும் கடல்நீர் நிலத்தைத் தொடுகிற பகுதி பல இடங்களில் மாறிவிட்டது. 1971ஆம் ஆண்டு இட அமைப்​பியல் தரவுகளின்படி இருந்த ஷோர் லைன், சில ஆண்டு​களுக்கு முன் எடுக்​கப்பட்ட செயற்​கைக்கோள் ஒளிப்​படங்​களோடு ஒப்பிடு​கையில் மாறியிருப்பது தெரிகிறது.

ஏராளமான நிலப் பகுதிகள் கடலுக்குள் போய்விட்​டதையே இது உறுதிப்படுத்து​கிறது. பிச்சாவரம் அலையாத்திக் காடுகளைக் கடல் நீர் ஆக்கிரமித்து​விட்டது. கடல்நீர் நேரடியாக உள்ளே வருவது மட்டுமல்​லாமல், நிலத்​துக்கு அடியி​லிருந்து கடல்நீர் மேலே வருவதும் நிகழ்​கிறது. இன்னொரு ஆபத்தான விஷயம், காவிரிப் படுகையில் பல பகுதி​களில் நிலம் கீழே போய்க்​கொண்​டிருக்​கிறது. அளவுக்கு அதிகமான ஆழத்திலிருந்து நிலத்தடி நீர், ஹைட்ரோ​கார்பன் போன்ற​வற்றை எடுப்​பதால் பூமிக்கு அடியில் வெற்றிடம் ஏற்படும். அதன் விளைவுதான் இது.

வளர்ச்சிப் பணிகளும் தவிர்க்க முடியாதவையாகவே உள்ளன. அவற்றை எப்படிச் சமநிலையோடு அணுகுவது?

​விவ​சாயப் பொருளா​தாரம், தொழில் வளர்ச்சி, கட்டமைப்பு வளர்ச்சி போன்றவை வேண்டும். ஆனால், வளர்ச்சி நீடித்த ஒன்றாக இருக்க வேண்டும். எந்த ஒரு பொருளாதார நடவடிக்கையும் எதிர்​காலச் சந்ததி​யினருக்கும் பயன் தருவதாக இருக்க வேண்டும். தண்ணீர், மண், காற்று போன்ற இயற்கை மூலதனங்​களைப் பயன்படுத்​தித்தான் நம்மால் ஒரு பொருளை உருவாக்க முடியும். தன்னைத்தானே புதுப்​பித்​துக்​கொள்ளும் தன்மை இயற்கைக்கு உண்டு. அதை இழக்க​விடக் கூடாது. உயிர்ப்​பன்மையை அழிப்பது என்ன மாதிரியான வளர்ச்சி?

மழை சுமை அல்ல என நீங்கள் தொடர்ந்து வலியுறுத்திவருகிறீர்கள்...

மழை, வெயில் இரண்டுமே இயற்கையின் வெளிப்​பாடு​கள்​தான். இயற்கைக்குத் தகுந்த​படிதான் மனித வாழ்க்கையைத் தகவமைத்து வாழ வேண்டும். நான்கு மணி நேரத்தில் 100 மி.மீ. மழை பெய்து​விட்டதா? அவ்வளவு மழைநீரை எப்படிச் சேமிக்​கலாம் என யோசிக்க வேண்டும். ஆறு, ஏரி, குளம் அனைத்தையும் வறட்சிக் காலத்தில் தூர்வாருங்கள். வரத்துக் கால்வாய்களை ஆழப்படுத்​துங்கள். வறட்சி​யின்போது அவற்றைத் தயார்​நிலையில் வைத்து​விட்​டால், மழைக்​காலத்தில் கவலைப்படத் தேவையில்லை.

நமது ஊரில் மழைநீரில் 90% வெறுமனே வழிந்தோடி விடுகிறது. அரசுகூட வெள்ளத்தை வடித்துக் கடலில் விட வேண்டும் என்பதில்தான் கவனம் செலுத்து​கிறது. மக்கள் தங்கள் வீட்டிலிருந்து மழைநீரைச் சாலையில் விடுகிறார்கள். இந்தக் கண்ணோட்டம் மாற வேண்டும். எவ்வளவு மழை பெய்தாலும் அதைச் சேகரிக்கும் வழிமுறை இருக்க வேண்டும். யாரும் தண்ணீரை வெளியே வாங்கும் நிலை இருக்கக் கூடாது. இதை ‘water positive’ என்பார்​கள்​.

பல்வேறு நாடுகளுக்கும் மாநிலங்களுக்கும் சென்றிருக்கிறீர்கள். நாம் பின்பற்றத்தகுந்த நடைமுறைகள் ஏதேனும் கூற முடியுமா?

இந்தியாவில் குறிப்பாக, தமிழ்​நாட்டில் இருப்​பதைப் போன்ற நீர்க் கட்டமைப்பு வசதிகள் தெற்கு ஆசியாவில் வேறு எங்குமே இல்லை. ஏரி, குளம், குட்டைகள், கோயில் குளங்கள் நம்மிடம் ஏராளமாக உள்ளன. ஏரியை ஏரியாக மதிக்க வேண்டும், அதை ஆழப்படுத்​தாமலோ, அகலப்​படுத்​தாமலோ கரையை மட்டும் உயர்த்தி, நடைபாதை அமைப்பது மட்டுமே பயன் தந்து​விடுமா? வரத்துக் கால்வாயை முறையாகப் பராமரிப்பது, நீர்நிலைகளை ஆழப்படுத்துவது போன்ற​வற்றில் கண்ணும் கருத்​துமாக இருக்க வேண்டும்.

திருவள்​ளூர், காஞ்சிபுரம், செங்கல்​பட்டு, ராணிப்பேட்டை ஆகிய மாவட்​டங்​களில் மொத்தமாக 4,000க்கும் மேற்பட்ட ஏரிகள் உள்ளன. அத்தனை ஏரிகளையும் ஆழப்படுத்தித் தண்ணீர் சேமித்தால் சென்னையில் வெள்ளமோ, தண்ணீர்ப் பஞ்சமோ வராது. இயற்கை சதுப்பு​நிலங்களை அழித்து​விட்டு, சதுப்பு நிலங்​களை செயற்கையாக உருவாக்க முயல்​கிறோம்.

பள்ளிக்கரணை சதுப்பு நிலம் 55 ச. கிமீ பரப்பில் இருந்தது. இன்று இருப்பது 5 ச.கி.மீ​தான். எண்ணூர் பக்கம் கடற்கரையோர ஈரநிலம் 10,000 ஏக்கர் இருந்தது. போனது போகட்டும். மிச்சமிருக்கிற ஏரி குளங்​களை​யாவது காப்பாற்ற வேண்டும். அவற்றில் தண்ணீரைச் சேமித்தாலே போதும். வெள்ளம், வறட்சி, கார்பன் உமிழ்வு போன்ற பல பிரச்சினை​களின் தீவிரத்தைக் குறைக்க முடியும்​.

இதில் அரசின் துறைகளுக்கு இடையே ஒருங்கிணைவு உள்ளதா?

இல்லை என்பதுதான் உண்மை. வீடு கட்டுவது, சாலை போடுவது, பூங்கா அமைப்பது என நிலத்தின் பயன்பாட்டில் முழுக் கவனம் செலுத்தும் சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் நீர்வள ஆதாரத் துறையோடு ஒருங்​கிணைந்து பணிபுரிவது அவசியம். ஒரு நீர்வழித்​தடத்தை மறித்துச் சாலை போடும்​போது, அங்கு வர வேண்டிய தண்ணீரால் இன்னொரு பகுதி பிற்காலத்தில் வெள்ளத்​துக்கு உட்படு​கிறது. முகமைகள் ஒன்றிணைந்து செயல்​படுவதே நல்லது.

மக்களின் பொறுப்பு என்ன?

‘எனது தேவை நிறைவேறினால் போதும்; வேறு எதைப் பற்றியும் கவலைப்பட மாட்டேன்’ என மக்கள் இருக்கக் கூடாது. சமூகப் பங்கேற்பு (community participation) அவசியம். வெளிநாடு​களில் இது வலுவாக உள்ளது. சீனாவில் 50 வீடுகள் இருந்​தால்கூட, ஒரு சமூகமாக இணைந்து தங்கள் பகுதியின் பிரச்சினைகளை எதிர்​கொள்​கின்​றனர். மழைநீரை என் வீட்டிலிருந்து தெருவில் விடுவதோடு கடமை முடிந்தது என இருக்கக் கூடாது. எல்லாமே அரசாங்கம் செய்ய வேண்டும் என எதிர்​பார்ப்​பதும் தவறு.

- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in

நேர்காணலை காணொளி வடிவில் காண:

SCROLL FOR NEXT