சிறப்புக் கட்டுரைகள்

அணைகள் பராமரிப்பு சவால்களும் தீர்வுகளும்

செய்திப்பிரிவு

‘நவீன இந்தியாவின் கோயில்கள்’ என்று நாட்டின் பெரிய அணைகளை, ஜவாஹர்லால் நேரு குறிப்பிட்டார். இந்தியாவின் தொழில் வளர்ச்சி, உணவு உற்பத்தி தொடர்பான சவால்கள் அணைகள் கட்டுவதன் மூலம் தீர்க்கப்படும் என்று அந்தக் காலக்கட்டத்தில் கருதப்பட்டது.

வேறு எந்தப் பெரிய உள்கட்டமைப்புத் திட்டங்களையும் போலவே, அணையின் ஆயுள்காலமும் வரையறுக்கப்படுகிறது. பல்வேறு காரணிகளையும் மாற்றங்களையும் தாண்டி, ஒரு சிறந்த அணைக் கட்டுமானம் சுமார் 1,000 ஆண்டுகள் வரை பயன்பாட்டில் இருக்கும் எனக் கொள்ளலாம்.

வண்டல் படிதலும் சிக்கல்​களும்: அணையின் செயல்​பாட்டு நிலை, சுற்றுச்​சூழலைப் பாதிக்கும் பல்வேறு காரணிகள் ஆகியவற்றின் காரணமாக, தற்போதுள்ள அணைகளின் எஞ்சி​யுள்ள கால சேவைக்கு ஒரு கால அளவை நிர்ண​யிக்க முடியாது. ஒவ்வொரு தனிப்பட்ட அணையின் கட்டு​மானம், பராமரிப்புத் தர அடிப்​படையில் இது மதிப்​பிடப்பட வேண்டும்.

இருப்​பினும், சில கான்கிரீட் அணைகளுக்கு - அசாதாரண நிலையின் காரணமாக - பெரிய அளவிலான மறுசீரமைப்பு தேவைப்​படலாம். கட்டுப்​பாடற்ற வண்டல் படிதல் நீர்த்​தேக்​கத்தின் பயன்பாட்டைக் குறைக்​கும்.

உலக அளவில், அணைகளின் தற்போதைய சேமிப்புத் திறனில் தோராயமாக 1%, ஆண்டு​தோறும் வண்டல் படிவு காரணமாக இழக்கப்​படுவதாக மதிப்​பிடப்​பட்​டுள்ளது. மத்திய நீர்வள ஆணையத்தின் அறிக்கை​யின்படி, இந்திய நீர்த்​தேக்​கங்​களில் ஓர் ஆண்டில் வண்டல் படிவு அவற்றின் அசல் கொள்ளளவில் சராசரியாக 1 முதல் 2 சதவீதம்.

பல்வேறு ஆய்வு​களின்படி, இந்திய நீர்த்​தேக்​கங்​களில் இதுவரை சுமார் 50 பில்லியன் கன மீட்டர் (பிசிஎம்) அளவு வண்டல் மண் குவிந்துள்ளது. இதன் காரணமாகப் பெரிய அளவிலான நீர்த்​தேக்​கங்​களின் நேரடி சேமிப்புத் திறன் சுமார் 20-30% குறைந்துள்ளது.

அதிகரித்துவரும் நீர் நுகர்வு விகிதங்கள், குறைந்துவரும் சேமிப்புத் திறன், காலநிலை மாற்றத்தின் தாக்கங்கள், மாசுபாடு உள்ளிட்ட காரணி​களால், உலகம் பெருமளவில் நீர்ப் பற்றாக்​குறையை எதிர்​கொள்​கிறது. நீர்த்​தேக்​கங்​களின் ஆயுள்​காலமும் குறைந்துள்ளது. வண்டல் படிவு காரணமாக அவற்றின் சேமிப்புத் திறன் கணிசமாகக் குறைந்துள்ளது. இது வெள்ளப்​பெருக்கை அதிகரிக்​கலாம்.

இந்த நிலைமை தொடர்ந்தால் அணையின் கீழ்நிலைப் பகுதிகள் பாதுகாப்​பற்​ற​தாகவும் மாறக்​கூடும். கடந்த சில தசாப்​தங்களாக உலகின் விளைநிலங்​களில் மூன்றில் ஒரு பங்கை மண் இழப்பு பாதித்​துள்ளது. அதேநேரம் அணையின் நீர்த்​தேக்​கத்தின் அடிப்​பகு​தியில் இருந்து திரட்​டப்பட்ட வண்டலை அகற்றும் செயல்முறை மிகவும் முக்கி​யத்துவம் வாய்ந்தது.

என்னென்ன நன்மைகள்? - வண்டல் நீக்கம் செய்வது அணையின் தண்ணீரைச் சேமிக்கும் திறனை மீட்டெடுக்​கிறது. நீர்ப் பற்றாக்குறை உள்ள பகுதி​களுக்கு இது மிகவும் முக்கிய​மானது. அங்கு நீர்ப்​பாசனம், குடிநீர், பிற தேவைகளுக்கு நம்பகமான சேமிப்பு மிக அவசியம்.

சேமிப்புத் திறனைப் பராமரிப்பதன் மூலம் அல்லது மேம்படுத்துவதன் மூலம், இந்தியாவின் சில பகுதி​களில் பொதுவாகக் காணப்​படும் வறண்ட காலங்கள் அல்லது வறட்சி​யின்போது அணைகள் தொடர்ந்து தண்ணீரைத் தேக்கி​வைத்து வெளியேற்ற முடியும். காலநிலை மீள்தன்மையை உறுதி​செய்​வதில் நீர் சேமிப்புக் கட்டமைப்பு​களைப் பலப்படுத்துவது மிக முக்கியம்.

வண்டல் நீக்கம் செய்வது, உகந்த நீரோட்​டத்தைப் பராமரிக்க உதவுகிறது. மழைக்​காலங்​களில் வெள்ள மேலாண்​மைக்கு இது மிகவும் முக்கிய​மானது. முறையாகப் பராமரிக்​கப்​படும் அணையைக் கொண்டு, கனமழை​யின்போது கீழ்நோக்கிச் செல்லும் வெள்ளத்தைச் சிறப்​பாகக் கட்டுப்​படுத்​தலாம். அதிகப்​படியான நீரை வெளியேற்ற வடிவமைக்​கப்பட்ட கசிவுப் பாதைகளையும் வண்டல் அடைக்​கலாம்.

வண்டல் நீக்கம், இந்தக் கட்டமைப்புகள் பயனுள்ளதாக இருப்பதை உறுதிப்​படுத்து​கிறது. அணை உடைவது அல்லது நீர் நிரம்பி வழிவது போன்ற அபாயங்​களையும் இது தடுக்​கிறது. அணையின் மின்சார உற்பத்தித் திறனை மீட்டெடுக்​க​வும், நிலையான நீர்மின்​சக்தி உற்பத்​திக்குப் பங்களிக்​க​வும், புதைபடிவ எரிபொருள்​களைச் சார்ந்​திருப்​பதைக் குறைக்​கவும் இது உதவுகிறது.

வறண்ட காலத்​தில், வண்டல் நீக்கம் விவசாய நிலத்​துக்குத் தொடர்ச்சியான, நம்பகமான நீர் விநியோகத்தை உறுதிப்​படுத்து​கிறது. இது பயிர் உற்பத்​தியைப் பராமரிப்​ப​தற்கும் போதுமான விளைச்சலை எட்டு​வதற்கும் மிகவும் முக்கிய​மானது. அணையி​லிருந்து அகற்றப்​படும் வண்டல் மண், விவசாய நிலங்​களுக்கு இயற்கை உரமாகப் பயன்படுத்​தப்​படலாம். வண்டல் மண் அகற்றுதல் பொதுவாகப் புதிய உள்கட்​டமைப்பை உருவாக்கு​வதை​விடச் செலவு குறைந்தது.

வண்டல் மண்ணை அகற்றுவது - நீர்ப் பற்றாக்​குறை, வெள்ளச் சேதம் அல்லது எரிசக்தி உற்பத்திச் செயலிழப்பு போன்ற நீண்ட கால நெருக்​கடிகளின் சாத்தி​யக்​கூறுகளைக் குறைக்க உதவும். சாலைக் கட்டு​மானம், ரியல் எஸ்டேட், ரயில்வே / மெட்ரோ திட்டங்கள், பிரத்யேக சரக்கு வழித்​தடம், அணைகள், நீர்ப்​பாசனத் திட்டங்கள் போன்ற பல்வேறு கட்டுமான நோக்கங்​களுக்காக இந்தியா​வுக்கு ஆண்டு​தோறும் 4 முதல் 5 பிசிஎம் மண் தேவைப்​படு​கிறது. இது மொத்த வண்டல் மண் இருப்பான 50 பிசிஎம்-இல் வெறும் 10 சதவீதம் மட்டுமே.

எனவே, நீர்த்​தேக்​கங்​களைத் தூர்வாருவதன் மூலம், நாட்டின் மொத்த மண் தேவையை - குறைந்தது 10 ஆண்டு​களுக்குப் பூர்த்தி​செய்ய முடியும். இதன் மூலம் கிடைக்கும் வருவாயைக் கொண்டு தூர் வாருவதற்கான செலவினங்​களுக்கு நிதி அளிக்க முடியும். மாநில அளவிலான பொதுத்துறை நிறுவனங்களை உருவாக்கி, அதனிடம் இந்தப் பொறுப்பை ஒப்படைப்பதன் மூலம் மாநிலங்​களுக்கான வருவாயை நீண்டகால அளவில் அதிகரிக்​கலாம்.

கவனம் அவசியம்: நீர்த்​தேக்​கத்தில் உள்ள வண்டலின் ஆழம், இருப்​பிடம், அளவு ஆகியவற்றைப் பொறுத்து மேம்பட்ட கருவிகள், நிபுணத்துவம் வண்டலை அகற்று​வதற்குத் தேவைப்​படலாம். அவை எப்போதும் உள்ளூரில் கிடைக்​காது. அணையின் வடிவமைப்பும் கட்டு​மானமும் சில சவால்களை ஏற்படுத்​தலாம்.

சில சந்தர்ப்​பங்​களில், அணையின் அமைப்பு அல்லது நீர்த்​தேக்​கத்தின் அமைப்பு வண்டலை அகற்று​வதையும் கடினமாக்​கலாம். இது வண்டல் படிவு நீக்கச் செயல்​முறையை மிகவும் செலவு பிடிப்​ப​தாக​வும், சிக்கலான​தாகவும் மாற்றலாம்.

வண்டல் மண் அகற்றுதலை நிர்வகிப்பது தளவாடங்​களைக் கொண்டு​செல்​வதில் உள்ள சவால்களை அதிகரிக்​கிறது. வண்டல் மண் அள்ளுதல் என்பது அதிக அளவிலான மூலதனம் தேவைப்​படும் ஒரு செயல்​முறை​யாகும். அரசியல் / மக்கள் அழுத்தம் இல்லாத​போது, அத்தகைய திட்டங்​களுக்கு நிதி ஒதுக்குவது ஒரு சவாலாக இருக்​கலாம்.

சில சந்தர்ப்​பங்​களில், வண்டல் மண் அள்ளும் செயல்​முறை​யானது அணைக்கு அருகில் வசிக்கும் சமூகங்​களின் இடம்பெயர்வு, அணையைச் சார்ந்த பகுதி​களைத் தற்காலிகமாக மூடுவது போன்ற​வற்றுக்கு வழிவகுக்​கலாம் - குறிப்பாக, மீன்பிடித்தல் அல்லது விவசா​யத்தை நம்பி​யிருக்கும் பகுதி​களில் இது எதிர்ப்பு​களுக்கு வழிவகுக்​கக்​கூடும்.

இந்தியாவின் அணைகளில் வண்டல் மண் அள்ளுதல் என்பது நீர் சேமிப்பு, நீர் மின்உற்​பத்தி, வெள்ளக் கட்டுப்​பாடு, ஒட்டுமொத்த அணை செயல்​திறனைப் பராமரிப்​ப​தற்கு மிக முக்கிய​மானது. இருப்​பினும், சுற்றுச்​சூழல் சார்ந்த சவால்கள், தொழில்​நுட்பச் சிக்கல்கள், தளவாடங்​களைக் கொண்டு​செல்​வதில் உள்ள தடைகள், சமூகரீ​தியான சிக்கல்கள் எனப் பல்வேறு சவால்கள் இதில் உள்ளன. வண்டல் மண் அள்ளும் திட்டங்​களுக்கு நீர்வளம், சுற்றுச்​சூழல் பாதுகாப்பு, உள்ளூர் நிர்வாகம், உள்​கட்​டமைப்பு மேம்பாடு உள்​ளிட்ட பல அரசுத் துறை​களுக்கு இடையே ஒருங்​கிணைப்பு அவசியம்.

- ஜ.முரளி, கு.இளங்கோவன்; தொடர்புக்கு: muralijana@gmail.com

SCROLL FOR NEXT