சிறப்புக் கட்டுரைகள்

மொழிக்கொள்கையும் கற்றல் திறனும்

டாக்டர். ஆ. காட்சன்

பிற மொழிகளைக் கற்றுக்கொள்வதற்கான வார்ப்புருவாக (Template) செயல்படுவது தாய்மொழிதான். தாய்மொழியில் ஒரு கருத்தைப் புரிந்துகொள்வதுதான் இன்னொரு மொழியில் அதே கருத்து சொல்லப்படும்போது அதைப் புரிந்துகொள்ள உதவும். எளிதாகச் சொல்வதென்றால், தாய்மொழியில் ஒரு கருத்தைப் புரிந்துகொள்வது என்பது அசல் ஆவணம் போன்றது.

அசல் ஆவணத்தைக் கொண்டு பல நகல்கள் எடுப்பதைப் போலத் தாய்மொழியில் புரிந்துகொள்வதே வேறு பல மொழிகளில் அதைப் புரிந்துகொள்ள அடிப்படையாக அமையும். பிறரைத் தொடர்புகொள்ள மட்டுமன்றி, உணர்வுகளை வெளிப்படுத்துவதற்கும், ஒருங்கிணைந்த சமூக வாழ்வுக்கும், கலாச்சாரத்தை வெளிப்படுத்துவதற்கும் எளிதான வழியாக இருப்பது தாய்மொழிதான்.

ஆங்​கிலம் உள்பட அந்நிய மொழிகளைக் கற்றுக்​கொள்வது தொடர்​புகளை விரிவாக்​க​வும், கல்வியில் மேம்பாடு அடையவும் மட்டுமே உதவும். பிறமொழிகளில் தொடர்​பு​கொள்​வதுதான் நாகரி​கத்தின் அடையாளம் எனக் கருதப்​படுவது அந்தந்தத் தாய்மொழிக்கான வாய்ப்புகளை குறைக்கும். அசலை அழித்து​விட்டால் நகல்கள் எடுப்பது சிரமம்.

மொழிக் கோட்பாடுகள்: குழந்தைகள் சராசரியாக 6 மாதங்​களில் ஓர் உயிரெழுத்து மற்றும் மெய்யெழுத்தால் உருவாக்​கப்​படும் வார்த்தையைக் கொண்டு ஒலியெழுப்பு​வதில் ஆரம்பித்து, 10ஆவது மாதத்தில் இரண்டு உயிர் மற்றும் மெய்யெழுத்​துக்​களினால் பேசி, 3 வயதில் சிறிய கதையை வாக்கிய​மாகச் சொல்லும் அளவுக்குக் கற்றுக்​கொள்​கிறார்கள்.

இதை அவர்கள் எழுதப்பட்ட மொழி வடிவத்​திலிருந்து கற்றுக்​கொள்​ளாமல், வீட்டில் இருக்கும் நபர்கள் பேசும் பேச்சுமொழியி​லிருந்துதான் கற்றுக்​கொள்​கிறார்கள். இந்தக் கற்றலில் நடத்தைக் கோட்பாடும் (Behaviourist theory), அறிவாற்றல் கோட்பாடும் (Cognitive theory) சேர்ந்துதான் மொழித்​திறனை உருவாக்கு​கின்றன.

நாம் வாசிக்​கவும் எழுதவும் கற்றுக்​கொள்​வதற்கு முன்பே பேசக் கற்றுக்​கொள்​கிறோம். இது மனித மூளையின் அடிப்படை, தனித்​திறன் என்பதுதான் உள்ளார்ந்த திறன் கோட்பாடு (Innatism). பல மொழிகளுக்கு எழுத்து வடிவம் இல்லாமல் இருந்தும் அவர்களால் அந்த மொழிகளைப் பேசியே வளர்க்க முடிவது இதற்குச் சிறந்த உதாரணம்.

இதன் அடிப்​படையில் பார்த்​தால், எதில் பேசுகிறோமோ அதில் கற்றுக்​கொள்​வதுதான் எளிதான கற்றலாக அமையும். ஆரம்பப் பள்ளிப் படிப்பை முடிக்​காதவர்​கள்கூட வேலையின் நிமித்தம் வேறு மாநிலங்​களுக்கு, நாடுகளுக்குச் செல்லும்போது பிறரைத் தொடர்​பு​கொள்ள வேண்டிய கட்டா​யத்தின் அடிப்​படையில் அப்பகு​தி​களின் பேச்சு மொழியைச் சில மாதங்​களுக்குள் கற்றுக்​கொள்​கின்றனர் (Interactionism).

அனைவருக்கும் பொருந்துமா? - இதற்கு மேல் தாய்மொழி​யிலோ, பிற மொழிகளிலோ புலமை பெறும் அளவுக்கு மனித மூளைக்கு ஆற்றல் உள்ளது என்பதால் சிறுவய​திலேயே பல மொழிகளைக் கற்றுக்​கொள்வதை ஒரு சாரார் ஊக்கு​விக்​கின்​றனர். இது தவறல்ல; ஆனால் தனிப்​பட்ட, சமூகக் காரணங்​களால் எல்லாக் குழந்தை​களுக்கும் இது பொருந்து​வ​தில்லை.

கற்றல் நடைபெறும் சூழ்நிலை ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரே மாதிரியாக இருந்தால் மட்டுமே, ஒவ்வொரு குழந்​தையும் சமமாகக் கற்றுக்​கொள்ள முடியும் என்பது ஆல்பர்ட் பண்டூ​ராவைப் பின்பற்றும் சமூகக் கற்றல் கோட்பாட்​டாளர்​களின் (Social learning theory) வாதம். இந்தியாவைப் போன்ற பன்முகத்​தன்மை கொண்ட நாடுகளில் இந்தச் சமநிலை சாத்தி​யமில்லை.

ஏழைக்கு ஒரு கல்வி, வசதி பெற்ற வீட்டுக் குழந்தை​களுக்கு இன்னொரு வகையான கல்வி என்கிற நிலையை மாற்றும்​போதுதான் இந்தச் சிக்கலையும் தீர்க்க முடியும். இயற்கையின் கொடையாகச் சில குழந்தைகள் கல்வி கற்காமலேயே உள்ளுணர்வை அடிப்​படை​யாகக் கொண்ட மொழியாற்றல் கொண்ட​வர்களாக இருப்​பார்கள்.

இவர்கள் மீது பிறமொழிகள் - ஆங்கிலம் உள்பட - கட்டாய​மாகத் திணிக்​கப்​படும்போது சந்தேகத்​துக்கு இடமின்றி, அவர்களது மொழியாற்​றலோடு தாய்மொழியை வார்ப்பு​ரு​வாகக் கொண்டு வளர்க்​கப்​படும் படைப்​பாற்​றலும் பாதிக்​கப்​படும்.

இன்றைக்குத் தொடுதிரைகள் மூலம் கற்பது, கணினித் தட்டச்சு மூலம் எழுதுவது என்று பள்ளி​களில் கற்றல் எளிதாக்​கப்​பட்டு வருவது, ஒருவகையில் மொழிகளின் எழுத்து​வடிவம் கற்றுக்​கொள்​ளப்​படுவதை அழித்து​வரு​கிறது. இன்னொரு பக்கம் திறன்​பேசிகளின் அதிகப் பயன்பாட்​டினால் செயற்​கையான கற்றல்​திறன் குறைபாடு அதிகரித்து​வரும் சூழ்நிலை​யில், அதைச் சரிசெய்யும் முயற்சிக்கு முன்னுரிமை கொடுப்பதே உடனடித் தேவை.

குறைந்த​பட்சம் தாய்மொழியில் கற்றலை உறுதி​செய்​வதும், உயர் கல்விக்குத் தேவையான இன்னொரு மொழியைக் கற்றுக்​ கொள்​வதுமே சாலச்சிறந்தது. கற்றல் திறன்​களும், கற்கும் வாய்ப்பு​களும் உள்ள மாணவர்கள் வேண்டு​மானால் மூன்றாவது மொழியை விருப்பப் பாடமாகத் தேர்ந்​தெடுத்​துக்​கொள்​ளலாம். அரசுப் பள்ளி​களிலும் அப்படித் தேர்ந்​தெடுக்கும் வாய்ப்பை அளிக்க வேண்டும்!

சமூக மாற்றமும் மொழித்​திறனும்: 25 வருடங்​களுக்கு முன்புவரை தமிழ்​வழிப் பள்ளிக் கல்விதான் முதன்​மையாக இருந்தது. மருத்​துவக் கல்லூரி​களில் நுழைந்த பெரும்​பாலான மாணவர்கள் அறிவியல் பாடங்​களைத் தமிழில் கற்றுத்​தேர்ந்து, கல்லூரியில் அதே பாடங்​களின் தொடர்ச்சியை ஆங்கிலத்தில் கற்றறிந்​தனர். முதல் ஓரிரு மாதங்கள் இந்த மொழிமாற்றம் கடினமாக இருந்​தா​லும், பின்பு பாடங்களை ஆங்கிலத்தில் எளிதில் படித்துத் தேர்ச்சிபெற்று இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் மருத்​துவர்கள் ஏராளம்.

தாய்மொழியில் கற்றுக்​கொள்வது வார்ப்பு​ருவாக அமைந்​தத​னால், பிறமொழிகளில் பாடங்​களின் தொடர்ச்சியைக் கற்றுக்​கொள்​வதில் எந்தச் சிக்கலும் இருந்​த​தில்லை. இன்றைக்குத் தமிழ்​வழியில் பயிலும் மாணவர்கள் ஆங்கிலத்​தி​லும், ஆங்கில வழியில் பயிலும் மாணவர்கள் தாய்மொழி​யாகிய தமிழிலும் எழுதும்​போது, ஏராளமான எழுத்து / இலக்கணப் பிழைகள் ஏற்படுவதை மறுக்க முடியாது. இந்த வகை மாணவர்​கள்தான் பெரும்​பான்மை என்பதையும் மறந்து​விடக் கூடாது. ஆங்கில​வழிக் கல்வி பெருகி​விட்​டதால் மாணவர்கள் தமிழையே அந்நிய மொழியாகப் பார்க்கும் நிலையும் அதிகரித்து வருகிறது.

கற்றல்​திறன் குறைபாடு: மூன்றாவது மொழியை இளம் வயதிலேயே கற்றுக்​கொண்டால் வேலைவாய்ப்பு, தொடர்​புகளை எளிதாக்க உதவும் என்கிற வாதம் புறந்​தள்​ளத்​தக்​கதல்ல என்றாலும், இது சாதகமற்ற சூழலில் வாழும் குழந்தை​களுக்கு இன்னும் அதிகச் சுமையையே கொடுக்க சாத்தி​ய​முள்ளது; ஏற்கெனவே கற்றல்​திறன் குறைபா​டு உள்ள மாணவர்​களோடு போராடிக்​கொண்​டிருக்கும் ஆசிரியர்​களுக்கும் அதிகப் பணிச்​சுமை​யையும் மன அழுத்​தத்தையும் இது கொடுக்​கும்.

இந்தியாவில் சுமார் 6 முதல் 10 சதவீதம் வரை கற்றல்​திறன் குறைபா​டு உள்ள மாணவர்கள் இருப்பதாக ஆய்வுகள் தெரிவிக்​கின்றன. மனவளர்ச்சிக் குறைபாடு, ஆட்டிசம் பாதிப்​புக்கு உள்ளான மாணவர்​களைச் சேர்த்தால் இந்த எண்ணிக்கை இன்னும் அதிகரிக்​கும்.

மாற்றுத்​திற​னாளி​களுக்கான உரிமைகள் சட்டம்​-2016இன்படி, கற்றல் திறன் குறைபாடு உள்ள மாணவர்களுக்கு இரண்டாவது மொழிப் பாடத்திலிருந்து விருப்​பத்​துக்​கேற்ப விலக்கு பெற்றுக்​கொள்ள வாய்ப்பு கொடுக்​கப்​பட்​டுள்ளது. மீதமுள்ள மாணவர்​களில் குறைந்த​பட்சம் மூன்றில் ஒரு பகுதி​யினர் இரண்டாவது மொழியைக் கற்பதிலேயே நடைமுறைச் சிக்கல் உள்ள சூழலில் இருக்​கிறார்கள். இவர்களுக்கு மூன்றாவது மொழிப்​பாடம் என்பது நடைமுறையில் பெரும் சிரமம்​தான்.

மொழிப் பாடங்​களுக்கே போராட வேண்டிய சூழல் உண்டானால் அறிவியல், கணிதம் உள்பட மற்ற பாடங்​களைக் கற்பது இன்னும் சிரமத்தை ஏற்படுத்​தும். கல்வியில் மொழி சம்பந்தப்​பட்​டிருந்​தா​லும், கல்விக்​கொள்கை வேறு, மொழிக்​கொள்கை வேறாக இருப்பதே மாணவர்​களுக்கு நல்லது. ​கொள்கை எது​வா​னாலும் தனியார் பள்ளி - அரசுப் பள்ளி என்கிற பேதமும் அதில் கூடாது.

- தொடர்புக்கு: godsonpsychiatrist@gmail.com

SCROLL FOR NEXT