சிறப்புக் கட்டுரைகள்

உள்ளாட்சிகளில் மாற்றுத்திறனாளி ஒதுக்கீடு: அடுத்தது என்ன?

செய்திப்பிரிவு

உலகம் இயலும் மனிதர்களுக்காகவே (abled persons) இயங்கிக்கொண்டிருக்கிறது என்று சொன்னால், அதில் தர்க்கம் இல்லாமல் இல்லை. மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக மாற்றுத்திறனாளி அல்லாதோரும் குரல் கொடுக்க வேண்டும் என்பது முக்கியமான வாதம்.

அதேவேளையில், தங்களின் பிரச்சினைகளுக்கான குரல்களைத் தாங்களே எழுப்புவதற்கும் அவர்களுக்கு உரிமை உண்டுதானே! அப்படியென்றால், அவர்களுக்கான பிரதிநிதித்துவம் எல்லா மட்டங்களிலும், எல்லா தளங்களிலும் இருக்க வேண்டும். அந்த இலக்கை நோக்கிய பயணத்தில் பல மைல்கற்களைக் கடந்திருக்கிறோம். பயணம் இன்னும் நீள்கிறது!

​முக்கிய மாற்றங்கள்: உள்ளாட்சி அமைப்பு​களில் மாற்றுத்​திற​னாளி​களுக்கான பிரதி​நி​தித்துவம் போதுமானதாக இல்லை என்பதை ‘டிசம்பர் 3’ இயக்கம் உணர்ந்தது. எனவே, கடந்த 2014இலிருந்தே விழிப்பு​ணர்வு நிகழ்ச்சிகள் மூலமாகவும் போராட்​டங்கள் வாயிலாகவும் இதுதொடர்​பாகக் குரல் எழுப்​பிவரு​கிறோம். மாற்றுத்​திற​னாளிகள் தேர்தல் அரசியலில் (உள்ளாட்சித் தேர்தல்கள் உள்பட) பங்கேற்க முடியும் என்பதை மெய்ப்​பிக்கும் பணியிலும் தொடர்ச்சியாக ஈடுபட்டு​வரு​கிறோம்.

கடந்த 2010இல், விழுப்புரம் - புதுச்​சேரிக்கு இடையே உள்ள நவமால் காப்பேர் கிராமத்தைச் சேர்ந்த கவிதா உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வேட்பு மனுத் தாக்கல் செய்திருந்​தார். அவர், காது கேளாத-வாய் பேச இயலாதவர். கவிதாவின் மனுவைத் தேர்தல் ஆணையம் நிராகரித்து​விட்டது. செவித்​திறன் சவால் உள்ள மாற்றுத்​திற​னாளிகள் உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட இயலாது என்கிற விதிதான் இதற்குக் காரணம். இந்த நிராகரிப்பே பலருக்கும் புதிய செய்தி.

களத்தில் இறங்கிய எமது அமைப்பு, நீதிமன்றத் தீர்ப்பு மூலம் அவ்வி​தியைத் தகர்த்தது. இன்று, செவித்​திறன் மாற்றுத்​திற​னாளி​களும் உள்ளாட்சித் தேர்தல்​களில் போட்டியிட முடியும். 2019இல் எதிர்க்​கட்​சியாக இருந்த திமுகவின் சட்டமன்ற உறுப்​பினரும் இன்றைய அமைச்​சருமான சேகர் பாபு, காது கேட்காத - தொழுநோயால் பாதிக்​கப்பட்ட மாற்றுத்​திற​னாளிகள் தேர்தலில் போட்டியிட முடியாது என்கிற விதியை மாற்றியமைக்க சட்ட மன்​றத்தில் கவன ஈர்ப்பைப் பெற்று மாற்றுத்​திற​னாளி​களின் குரலாக ஒலித்​தார்.

அதேவேளை​யில், ஒரு குறிப்​பிட்ட அமைப்போ, அரசியல் கட்சியோ மட்டும் குரல் எழுப்​பினால் அது சமூக மாற்றத்தை ஏற்படுத்தப் போதுமானதாக இருக்​காது. அதை உணர்ந்த ‘டிசம்பர் 3’ இயக்கம், 2018 நவம்பர் 30இல், ‘மாற்றுத்​திற​னாளி​களின் குரலும் அரசியல் பிரதி​நி​தித்துவ உரிமையும் சமூக நீதியே’ என்கிற தலைப்​பிலான மாநாட்டை நடத்தியது. மாற்றுத்​திற​னாளிகள் உலகம் அண்மையில் முன்னெடுத்த அரசியல், சித்தாந்த மாநாடு அது மட்டுமே.

ஒவ்வொரு அரசியல் கட்சி​யிலும், சமூகநீதி இயக்கத்​தி​லும், தன்னார்வத் தொண்டு நிறுவனத்​திலும் மாற்றுத்​திற​னாளி​களின் அரசியல் பிரதி​நி​தித்துவம் பற்றிய ஆழமான கருத்து​களை​யும், பல திருத்​தங்​களையும் மேற்கொள்​ளுமாறு ‘டிசம்பர் 3’ இயக்கம் கேட்டுக்​கொண்டது. அவரவர் அமைப்பு​களில் மாற்றுத்​திற​னாளி​களின் பங்கேற்பைக் கணிசமான விழுக்காடு பாகுபாடு இன்றி உறுதி​செய்​யுமாறு கேட்டுக்​கொண்டது.

மேலும், இம்மா​நாட்டில் 1,800 மாற்றுத்​திற​னாளிகள் முன்னிலையில் ‘சென்னை பிரகடனம்’ வெளியிடப்​பட்டது. திராவிடர் கழகத்தின் தலைவர் கி.வீரமணியின் தலைமை​யில், திமுக மாநிலங்களவை உறுப்​பினர் கனிமொழி, மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜி.ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பல அரசியல் கட்சித் தலைவர்கள் இப்பிரகடனத்தை ஏற்றுக்​கொண்​டனர். இதற்கான தீர்மானங்​களும் நிறைவேற்​றப்​பட்டன.

கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை, இந்திய அரசமைப்பின் முகப்புரை ஆகியவற்றின் வழிநின்று, மாற்றுத்​திற​னாளி​களின் நலனுக்​காகவும் உரிமைக்​காகவும் குரல் கொடுக்க, தோள் கொடுக்குமாறு உலகக் குடிமக்கள் அனைவரிடமும் அப்பிரகடனம் கேட்டுக்​கொண்டது. உள்ளாட்சி அமைப்பு​களில் மாற்றுத்​திற​னாளி​களுக்கு 5% இடஒதுக்கீடு வழங்கத் தீர்மானமும் நிறைவேற்​றப்​பட்டது.

கூட்டுறவு சங்கத் தேர்தலில்... 2019இல் கூட்டுறவுச் சங்கங்​களின் தேர்தல் நடைபெற்றது. அதில் தர்மபுரியைச் சேர்ந்த பார்வையற்ற மாற்றுத்​திறனாளி சரவணன் போட்டி​யிட்​டார். மாற்றுத்​திறனாளி என்பதாலேயே அவருடைய மனு நிராகரிக்​கப்​பட்டது. ‘டிசம்பர் 3’ இயக்கம் உள்ளிட்ட பல அமைப்புகள் இதற்கு எதிராகப் போராட்​டத்தில் இறங்கின.

போராடிய மாற்றுத் ​திற​னாளிகள் கைது செய்யப்​பட்​டனர். திமுகவின் மா.சுப்​பிரமணியன், கனிமொழி ஆகியோர் மாற்றுத்​திற​னாளி​களின் பிரதி​நி​தித்துவம் அவசியம் என்பதை உணர்ந்து உடனிருந்​தனர். போராட்டம் நீண்டது. ‘கூட்டுறவு சங்கத் தேர்தல் மாற்றுத்​திற​னாளிகளை நிராகரித்​ததால் தேர்தல் ரத்து செய்யப்​பட்டது’ என்கிற அறிக்கை ஐந்தாம் நாளில் வந்தது.

அரசியல் பங்கேற்பு: ‘டிசம்பர் 3’ இயக்கத்தைச் சேர்ந்த 40 மாற்றுத்​திற​னாளி​களுக்கு அரசியல் பற்றிய பயிற்சிகள் தரப்பட்டு, அவர்களை உள்ளாட்சித் தேர்தலில் போட்டியிட வைத்தோம். அதன் விளைவாக, எந்தப் பின்புலமும் இல்லாமல் கிட்டத்தட்ட 9 மாற்றுத்​திற​னாளிகள் 2021இல் உள்ளாட்சித் தேர்தலில் போட்டி​யிட்டு வெற்றி வாகை சூடினர்.

‘மனிதன் பிறக்​கும்போதே உருவாகும் மாண்பு பகுக்கவோ விலக்கவோ முடியாதது; மாற்றுத்​திற​னாளி​களுக்கும் மனித உரிமை உண்டு’ என்பதை மனித உரிமை சாசனம் எடுத்​துரைக்​கின்றது. 2021இல் ஐநா அவையின் மாற்றுத்​திற​னாளி​களின் உரிமை உடன்படிக்கை, ‘இருக்​கின்ற மாண்பு மதிக்​கப்பட வேண்டும்’ என்கிறது. 2024இல் உலக மாற்றுத்​திற​னாளி​களின் நாள் கருப்​பொருளாக (theme) ‘மாற்றுத்​திறனாளி தலைமைத்து​வத்தை உயர்த்திப் பிடிப்​போம்’ என்று ஐநா முழங்​கியது.

2012இல் தென் கொரியாவில் இன்சியான் நகரத்தில் உலக அளவில் நடைபெற்ற மாற்றுத்​திற​னாளிகள் மாநாட்டில் கலந்து​கொண்​ட மாற்றுத்​திற​னாளிகள், இன்சியான் பிரகடனத்தை முன்வைத்​தனர். ‘உரிமையை உண்மை​யாக்கு’ என்னும் அறைகூவலை முன்னிறுத்தி, வியூகங்கள் வகுக்​கப்​பட்டன.

அவற்றுள் இரண்டாவது வியூகமாக ‘முடி​வெடுக்​கின்ற முக்கியமான இடங்களுக்கு மாற்றுத்​திற​னாளி​களைக் கொண்டுவர வேண்டும்’ என்பது பெருவாரியான ஆதரவுடன் நிறைவேற்​றப்​பட்டது. இன்சியான் பிரகடனம் வலியுறுத்தும் முக்கியமான விஷயம், மாற்றுத்​திற​னாளி​களுக்கான சுயமரி​யாதை. அதனால்தான் மாற்றுத்​திற​னாளி​களின் உரிமைகளை உண்மை​யாக்க, அவர்கள் ‘பெறும் இடத்தில் இருந்து கொடுக்கும் இடத்துக்கு நகர்த்​தப்பட வேண்டும்’ என்று 2007இல் ஐநாவின் உரிமைப் பிரகடனம் (உள் பிரிவு 29) கேட்டுக்​கொண்டது.

வெற்றிக்கான முதல்படி: உரிமைகள் உண்மையாக வேண்டும் என்றால் சட்டம் இயற்றும், செயல்​படுத்தும் அவைகளில் மாற்றுத்​திற​னாளி​களுக்குப் பிரதி​நி​தித்துவம் வேண்டும். தொடர்ந்து இதை வலியுறுத்​திவந்த நிலையில், தமிழக அரசியல் களம் எங்களைச் செவிமடுத்தது. சட்டமன்ற உறுப்​பினர் ஆனவுடன் உதயநிதி ஸ்டாலின் தனது ​முதல் பேச்சில், உள்ளாட்​சிகளில் மாற்றுத்​திற​னாளி​களுக்கு இடஒதுக்கீடு வேண்டும் என்பதை ஆணித்​தரமாக எடுத்​துரைத்​தார்.

முத்தாய்ப்பு வைத்ததுபோல, தமிழக முதல்வர் மு.க.ஸ்​டா​லின், ‘உள்ளாட்சி அமைப்பு​களில் மாற்றுத்​திற​னாளி​களுக்கு நியமனப் பதவி வழங்கப்​படும்’ என்று அறிவித்​தார். இது மாற்றுத்​திற​னாளி​களின் உரிமைக்கான போராட்​டத்தில் ஒரு குறிப்​பிடத்தக்க வெற்றி. உள்ளாட்சி அமைப்புகளில் நியமன ஒதுக்கீடு என்பது மிகப்பெரிய மைல்கல். அதற்காக டிச. 3, தோழமை அமைப்புகள் முன்னெடுத்த அனைத்து முயற்சிகளும் வரலாற்றில் தடத்தை ஏற்படுத்தியிருக்கின்றன.

அதேவேளையில், அரசியல் சூழ்நிலைகள் நியமனப் பதவிகளில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டியிருக்கிறது. 11 ஆயிரத்துக்கு மேற்பட்ட கிராம ஊராட்சிகள், நகராட்சிகள், மாநகராட்சிகள் என்று சகல உள்ளாட்சி அமைப்புகளிலும் மாற்றுத்திறனாளிகளின் பிரதிநிதித்துவம் கிடைக்க இருக்கிறது.

இந்த வெற்றியை, ஒரு மாபெரும் தொடக்கத்துக்கான முதல்படியாக மாற்றுத்திறனாளிகள் சமூகம் பார்க்கிறது. குறிப்பிட்ட விழுக்காடு இடஒதுக்கீடு என்ற பெரும் இலக்கு, மாற்றுத்திறனாளிகளின் ஜனநாயக அரசியல் பங்கேற்பை உறுதிசெய்யும் என்பதால், அனைத்து மக்கள் பிரதிநிதித்துவ அவைகளைக் கருத்தில் கொண்டு அக்கோரிக்கையை மாற்றுத் திறனாளிகள் தொடர்ந்து எழுப்புவோம்.

- டி.எம்.என்.தீபக், தமிழ்நாடு மாற்றுத்திறனாளிகள் வாரிய உறுப்பினர், ‘டிசம்பர் 3’ அமைப்பின் நிறுவனர் - தலைவர்.

- கா.சு.துரையரசு இதழாளர் - ‘டிசம்பர் 3’ அமைப்பின் இணை நிறுவனர்.

SCROLL FOR NEXT