சிறப்புக் கட்டுரைகள்

பின்னூட்டத்துக்குப் பின் இருக்கும் உளவியல் பிரச்சினைகள்

சூ.ம.ஜெயசீலன்

சிம்பொனி இசைக்க லண்டன் சென்ற இசைஞானி இளையராஜா, அதற்கு முன்னதாகச் செய்தியாளர்களைச் சந்தித்தபோது எழுப்பப்பட்ட குறிப்பிட்ட ஒரு கேள்வியும் அது தொடர்பான ஊடகப் பதிவுகளில் காணக் கிடைத்த பின்னூட்டங்களும் மிகுந்த அதிர்ச்சியளிக்கின்றன; ஒரு சமூகமாக நாம் எதை நோக்கிப் பயணிக்கிறோம் என அச்சம்கொள்ள வைக்கின்றன. மனமும் முகமும் உற்சாகம் ஊற்றெடுக்க நின்ற இளையராஜா​விடம் இடம் பொருள் ஏவல் அறியாத ஓர் ஊடகவிய​லா​ளரின் கேள்வி கண்டனத்​துக்கு உரியதாகவே இருந்தது.

கண்டனத்தைப் பலரும் பதிவுசெய்திருக்​கிறார்கள். ஆனால், அந்தக் கேள்வியையும் அதற்கான பதிலை​யும், இளையராஜாவின் சங்கடத்தையும் தலைப்புச் செய்தியாக வைத்து எண்ணற்ற காணொளி​களைச் சமூக ஊடகங்கள் வெளியிட்டன. பெரும்​பாலான தலைப்புகள் எதிர்க்​கருத்துகளை விதைப்​ப​தாகவே இருக்​கின்றன. அந்தக் காணொளி​களுக்கான பின்னூட்​டங்கள் இன்னும் துயரமானவை. சில, நேரடியாக அவதூறு பரப்புகின்றன, வேறு சில “இசைமேதைதான் ஆனால்...” என ‘இக்கு’ வைத்துத் தூற்றுகின்றன.

இது தொடர்பாக ஓர் இளைஞனிடம் பேசிக்​கொண்​டிருந்த​போது, “பின்னூட்​டங்கள் அனைத்தும் உண்மை​தான், அவர் அப்படி​யானவர்​தான்” என்றான். இவ்வளவுக்கும் இளையராஜாவைவிட 60 வயது சிறியவன் அவன். “அவர் அப்படித்தான் என உனக்கு எப்படித் தெரியும்? எந்தெந்தச் சூழலில் அவ்வாறு அவர் நடந்து​கொண்​டார்? அவருடைய இடத்தில், உணர்வில் நீ நின்று, அத்தகைய கேள்விகளை எதிர்​கொள்​ளும்போது நீ வேறு எவ்வாறெல்லாம் நடந்து​கொண்​டிருப்​பாய்?” எனக் கேட்ட​போது, “அதெல்லாம் தெரியாது.

பல ஆண்டு​களாகப் பார்க்​கிறேன், இளையராஜா பற்றிய காணொளி எது வந்தாலும் கீழே உள்ள பின்னூட்​டங்கள் அப்படித்தான் இருக்​கின்றன. அப்படி​யென்​றால், உண்மை​யாகத்தானே இருக்க வேண்டும். அதனால்தான் நானும் சொல்கிறேன்” என்றான்.

ஆளுமையில் தாக்கம்: இளையராஜாவை மட்டுமல்ல, எழுத்​தாளர்கள், தலைவர்கள், அலுவல​கத்தில் உடன் பணியாற்றுகிறவர்கள், குடும்ப உறுப்​பினர்கள், உடன் படித்​தவர்கள் குறித்து எதிர்க்​கருத்துகளை நம்புவதும், பதிவிடு​வதும், பகிர்​வதும் அதிகரித்​துக்​கொண்டே வருகிறது.

பிறர் மீது எதிர்​மறைக் கருத்​து உள்ளவர்கள், அதீத சந்தேக எண்ணம் கொண்ட​வர்கள், பாதுகாப்பற்ற உணர்வில் உழல்பவர்கள், தேவையற்ற பதற்றத்தில் உள்ளவர்கள், முன்னுணர்வு ஏதுமின்றி உணர்ச்சித் தூண்டலுக்கு ஏற்பச் செயல்​படு​கிறவர்கள், எதிலும் பங்கெடுக்​காமல் விலகி இருக்​கிறவர்கள், தன்னை முன்னிலைப்​படுத்​திக்​கொள்​கிறவர்கள், எதிலும் ஒத்துப்​போ​காதவர்கள் போன்றோர்தான் தவறான தகவல்களை நம்ப வாய்ப்புள்​ளவர்கள் என ஆய்வுகள் குறிப்​பிடு​கின்றன.

சிவகங்​கையி​லிருந்து ஓர் அதிகாரி காரைக்​குடிக்குப் பணி மாறுதலா​னார். அவர் வருவதற்கு முன்பே, காரைக்குடி அலுவல​கத்தில் உள்ள சிலர், அவர் ‘என்ன ஆள்?’ என்பதில் தொடங்கி, அவரது குணம், பலம், பலவீனம் உள்ளிட்ட பலவற்றைத் தேடிச் சேகரித்​தார்கள். அனைத்துத் தகவல்​களுமே அதிகாரியின் நடத்தையை, ஆளுமையைக் குலைப்​ப​தாகவே இருந்தன.

என் நண்பர் இதை என்னிடம் சொன்ன​போது, “அதிகாரி குறித்த நல்ல செய்திகளை யாருமே உங்களிடம் சொல்ல​வில்​லையா? உங்களிடம் சொன்னவர்​களிடம், எந்தெந்தச் சூழலில் அதிகாரி கடுமையாக நடந்து​கொண்​டார்? யாரிடம், ஏன் கடுமை காட்டினார் எனக் கேட்டீர்களா? அடுத்​தவரிடம் நடந்து​கொண்​டது​போலவே உங்களிடமும் நடந்து​கொள்வார் என எதை வைத்து நம்பு​கிறீர்​கள்?” என்று கேட்டேன். பதில் இல்லை.

எல்லாரும் எல்லாரிடமும் ஒன்றுபோல் நடந்துகொள்வதில்லை. எந்தவொரு சிக்கலான உரையாடலிலும் இருவருக்குமே பொறுப்பு உண்டு. உங்களுக்கு எதிரில் உள்ளவர் சிக்கலுக்கு 80% காரணம் என்றால், 20 சதவீதத்​துக்கு நீங்கள் பொறுப்​பேற்றாக வேண்டும். மற்றொன்று, எல்லாரும் எப்போதும் ஒரே மாதிரி இருப்​ப​தில்லை. ஒருவர் 10 ஆண்டு​களுக்கு முன்பு ஒரு பிரச்சினையை அணுகியதுபோல, இப்போது அணுகு​வது ​இல்லை.

அவரவரின் கல்வியறிவு, வாசிப்பு, பயணம், அனுபவங்கள் அனைவரையும் பக்கு​வப்​படுத்து​கிறது. எனவே, இன்னொரு​வரின் தனிப்பட்ட கசப்பான அனுபவத்தைத் தனக்கான அனுபவம்போல ஏற்றுக்​கொள்​வதும், எதிர்மறை எண்ணங்களுடன் மற்றவரை அணுகு​வதும், தன் பங்குக்குத் தானும் அக்கருத்தைப் பரப்பு​வதும் மன அமைதியைக் குலைப்​பதுடன் ஆளுமை வளர்ச்சியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்து​கின்றன.

உளவியல் கூறுகள்: தவறான தகவல்களை நம்பவும், அதன்படி செயலாற்​றவும் நான்கு உளவியல் காரணிகள் காரணமாக இருப்பதாக அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு குறிப்​பிட்​டிருக்​கிறது.

பகிர்வது யார்?: தனக்கு அறிமுகம் இல்லாதவர்கள் சொல்வதைவிட, தான் நம்புகிற ஒருவர் சொல்வதை அல்லது குழுவில் பகிர்வதை உண்மை எனப் பலரும் நம்பு​கிறோம். பெற்றோர், பிள்ளைகள், ஆசிரியர்கள், நண்பர்கள், கல்வி கற்றவர்கள் அனைவருமே யாரோ சிலருக்கு நம்பிக்கைக்கு உரியவர்​களாகத்தான் இருக்​கிறார்கள். கரோனா காலத்தில் எவ்வளவு தவறான தகவல்களை ஆய்வுத் தேடல் ஏதுமின்றி படித்​தவர்களே நம்பி​னார்கள், பதிவிட்​டார்கள், பகிர்ந்​தார்கள்.

அவர்கள் சொன்னதை அப்படியே நம்பிய​வர்​களும் கூடுதலாகத் தேடி வாசிக்​காமல் அப்படியே நம்பி, பேசி, பதிவிட்டு, பகிர்ந்​தார்​கள்​தானே! நாம் சொன்னால் உண்மை​யாகத்தான் இருக்கும் எனக் கண்ணை மூடி நம்பும் 10 பேரையாவது நாம் ஒவ்வொரு​வரும் கொண்டிருப்​போம். நாம் தவறான தகவலைப் பரப்பு​கிறோம் என்பதை அவர்கள் அறிய வரும் அந்நேரம், நம் மீதான நம்பகத்​தன்மை கேள்விக்​குள்​ளாகிறது. எனவே, ஒரு செய்தி, காணொளியைப் பகிர்ந்து​கொள்​வதற்கு முன் கூடுதல் நிதானமும் வாசிப்பும் அனைவருக்கும் தேவைப்​படு​கிறது.

உள்ளடக்கம்: ஒரு செய்தியின் உள்ளடக்கம் நம் உணர்வு​களைப் பிரதிபலிக்​கும்போது யோசிக்​காமல் நம்பு​கிறோம், பின்னூட்டம் இடுகிறோம், பகிர்ந்து​கொள்​கிறோம். உதாரணமாக, சிறு குழந்தை தடுமாறிக் கீழே விழுகிறது. அருகில் நின்ற நபர் ஏதோ சிந்தனையிலோ அல்லது அவசரத்திலோ அதைக் கவனிக்​காமல் போகிறார். அந்தக் காணொளி நம் கவலையுடன், கோபத்​துடன் ஒத்துப்​போகிறது. அல்லது, நமக்குத் தெரிந்த ஒருவர் நம்மைவிட வாழ்வில் முன்னேறி​யிருக்​கிறார்.

அவரைப் போல நம்மால் முடிய​வில்லையே என்கிற ஆற்றாமை நமக்குள் இருக்​கிறது, அவரைப் பற்றி யாராவது குறை சொல்லும்போது அவர்களோடு அறிந்தோ அறியாமலோ சேர்ந்து​கொள்​கிறோம். பிறர் மீதான கோபம், நான்தான் பெரியவன் என்கிற எண்ணம், நாங்கள் பாதுகாப்பாக இருக்​கிறோம், எங்கள் சமூகமே மற்ற சமூகங்​களைவிட உயர்வானது என்னும் உணர்வு இத்தகு செயலை அதிகரிக்​கவைக்​கிறது. 1,58,473 பங்கேற்​பாளர்​களிடம் நடத்தப்பட்ட 170 ஆய்வுகளை ஆய்வுசெய்த அமெரிக்க உளவியல் கூட்டமைப்பு இதை உறுதி செய்திருக்​கிறது.

மீண்டும் மீண்டும் சொல்வ​தால்: ஒரு செய்தியை மீண்டும் மீண்டும் கேட்கும்போது அது உண்மை என்று நம்ப ஆரம்பிக்​கிறோம். குறிப்​பிட்ட நபரை அல்லது நிகழ்வைக் குறித்து ஏற்கெனவே நல்ல கருத்து இருந்​தாலும் அதைத் தள்ளி​விட்டு, உண்மைக்கு மாறான தகவல்​களைப் பற்றிக்​கொள்​கிறோம்.

ஆளுமைப் பண்புகள்: எல்லாரும் தவறான தகவல்களை நம்புவ​தில்லை, பின்னூட்டம் இடுவதில்லை, பகிர்​வ​தில்லை. அவரவரின் கல்வி, பகுத்​தறியும் பண்பு இதில் முக்கியப் பங்காற்றுகிறது. ஆனாலும், தவறான ஒன்றை நம்பும்போது மன உளைச்சல் அதிகரிக்​கிறது. இளைஞர்​களை​விடப் பெரிய​வர்கள் எது சரி தவறு எனச் சீர்தூக்கிப் பார்க்​கிறார்கள். ஆனாலும், இளைஞர்களைப் போலப் பெரிய​வர்​களுமே தவறான தகவல்​களைப் பகிர்ந்து​விடு​கிறார்கள்.

இதிலிருந்து நம்மைத் தற்காத்​துக்​கொள்ள ஒரு செய்தி, ஊடகங்​களில் வந்தா​லும், நம்பிக்கைக்கு உரியவர் சொன்னாலும் அதன் உண்மைத்தன்மையை உறுதிப்படுத்த வேண்டும். எதிர்​மறைச் செய்தி​களைத் தொடர்ந்து கேட்ப​தை​யும் பின்னூட்​டங்களை வாசிப்​ப​தையும் தவிர்க்க வேண்டும். நீங்கள் பயன்படுத்தும் வார்த்தை உங்கள் குடும்ப - சமூக விழுமி​யங்​களைப் பிரதிபலிக்​கிறதா என்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

முறையான கல்வி, மக்களைச் சென்று சேரும் விளம்பரம் - நிகழ்ச்சிகள் வழியாக நிதான​மாகச் செய்திகளை அணுகவும் நற்பண்​புடன் பின்னூட்டம் இடவும் விழிப்பு​ணர்வு ஏற்படுத்த வேண்டும். மறைமுக​மாகவோ பின்னூட்​டங்​களாலோ பிறரைக் காயப்​படுத்​தாமல் வாழ்வது நமது மனநலனுக்கு மிகவும் நல்லது.

- தொடர்புக்கு: sumajeyaseelan@gmail.com

SCROLL FOR NEXT