சிறப்புக் கட்டுரைகள்

கட்டிடங்களில் நீர்க்கசிவு - எங்கு தவறுகிறோம்?

சி.கோதண்டராமன்

கட்டிடங்களின் வாழ்நாள் குறித்த கவலை நம் எல்லோருக்கும் உண்டு. கட்டிடங்களின் வாழ்நாளை - அதன் நீர் எதிர்க்கும் திறன் தீர்மானிக்கிறது. நீர் எதிர்க்கும் திறனைத் தரக்கட்டுப்பாடு தீர்மானிக்கிறது.

நீரின் தன்மை, கட்டுமானப் பொருள்களின் இயல்பு பற்றிய புரிதல் இன்றி நீர்க்கசிவைக் கட்டுப்படுத்த இயலாது. இதை நிறுவ மூன்று கதைகள் என்னிடம் உண்டு. 45 ஆண்டு கால இடைவெளியில் வெவ்வேறு காலக்கட்டங்களில் நிகழ்ந்தேறிய இந்தக் கதைகளை ஓர் இழை இணைக்கிறது.

‘ரோடியர் மில்’ விபத்து: புதுவையில் ‘ரோடியர் மில்’ என்று அழைக்கப்படுகின்ற ஏ.எஃப்.டி. ஆலையில் 2000ஆம் ஆண்டு ஒரு விபத்து நடந்தது. நூற்பாலை மேற்கூரையின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. விபத்து குறித்து ஆய்வு செய்வதற்காக நான் அழைக்கப்பட்டேன். பளுத்தூக்கி வளைவு (Jack Arch) என்கின்ற அமைப்பினால் 102 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட கூரை அது. செங்கற்களால் ஆன சிறுசிறு வளைவுகளை எஃகு உத்திரங்கள்

(I-Beam) தாங்கிக்கொண்டிருந்தன. உடைந்து விழுந்த எச்சங்களை நான்கு விதமாகப் பிரிக்கலாம். செங்கற்கள், கரிப்பினால் (Corrosion) உருக்குலைந்த எஃகு உத்திரம், கூரையின் மேல் போடப்பட்ட செங்கல்-சுண்ணாம்பு கான்க்ரீட். நான்காவதாக, நீர்க்கசிவைத் தடுக்க வெவ்வேறு காலக்கட்டங்களில் போடப்பட்ட செங்கல்-சுண்ணாம்பு கான்க்ரீட் அடுக்குகள். இந்த அடுக்குகளின் மொத்தத் தடிமன் ஒன்றரை அடியைத் தாண்டியிருந்தது.

அவ்வளவு முயற்சிகளும் நீர்க்கசிவுக்கு எதிராக எவ்வித தாக்கத்தையும் உண்டாக்க முடியவில்லை. பளு கூடிய கூரை, உருக்குலைந்த உத்திரம் - கூரை இடிவதற்கு இவற்றைத் தாண்டி வேறு தனிக் காரணங்கள் அவசியமேயில்லை. நடந்தேறியிருந்த தவறுகளின் தாண்டவத்தைப் பார்த்த எனக்கு ஆச்சரியம் என்னவென்றால், நூற்பாலையின் மீதிப் பகுதி ஏன் விழவில்லை என்பதுதான்.

விருத்தாசலம் பேருந்து நிலையம்: விருத்தாசலம் பேருந்து நிலையத்தில் மழைநீர் ஒழுகுவதைச் சீர்செய்யும் திட்டம் 2024இல் செயல்படுத்தப்பட்டது. ஒப்பந்தத் தொகை ரூ.90 லட்சம், திட்டத்தை நிறைவேற்ற மூன்று மாத கால அவகாசம், ஜூன் மாதம் பணி ஆணை வழங்கப்பட்டுள்ளது. ஐந்து மாதங்கள் கழித்து வேலை தொடங்கப்பட்டது. ‘இந்து தமிழ் திசை’யில் (11.12.2024) விளக்கப் படத்துடன் மேற்சொன்ன செய்தி வந்துள்ளது.

கான்க்ரீட் கூரையின் மேல் செங்கல் சல்லி பரப்பப்பட்டிருந்தது. சிமென்ட் / சுண்ணாம்பு ஏதும் கண்ணில் தென்படவில்லை. மழைநீர் தேங்கியிருந்தது. மிகவும் தாமதமாக - மழைக்காலத்தில் பணியைத் தொடங்கியிருக்கிறார்கள் என்று மக்கள் ஆதங்கப்படுவதாகச் செய்திகள் வெளியாகின.

இதில் பல முரண்பாடுகள் தென்படுகின்றன. மழைநீர்க் கசிவைச் செங்கல்-சுண்ணாம்பு கான்க்ரீட் எவ்விதத்திலும் தடுக்க உதவாது. இந்தத் திட்டத்தால் ஒப்பந்தக்காரரைத் தவிர வேறு யாருக்கும் எந்தப் பயனும் இல்லை. பணியை எப்போது ஆரம்பித்தாலும் பலன் ஒன்றுதான். இத்திட்டத்துக்கு மூன்று மாத கால அவகாசம் அதிகம். மக்கள் தினமும் கூடுகின்ற இடங்களில் போர்க்கால அடிப்படையில் வேலைகளை முடிப்பது மிகவும் அவசியம்.

கிராமத்துக் கதை: அப்போது 1979 ஜூன் மாதம். கோடை விடுமுறைக்குக் கல்லூரி விடுதியிலிருந்து வீட்டுக்கு வந்திருந்தேன். என் அம்மாவைப் பார்ப்பதற்காக அவரது தோழி ராஜாமணி அம்மாள் என்பவர் வந்திருந்தார். என் படிப்பைப் பற்றி விசாரித்தார். பின்விளைவை உணராமல் என் பொறியியல் படிப்பைப் பற்றி பெருமை பேசியதன் பலன் கைமேல் கிட்டியது.

அவர்கள் வீட்டுக் கூரையில் நீர்க்கசிவுப் பிரச்சினை; தீர்வு வேண்டி ஆய்வுசெய்ய (உரிமையுடன்) உத்தரவிட்டார். தப்பிக்க வழியின்றி ஆய்வுக்குச் சென்றேன். வீடு கட்டி 7-8 வருடங்கள் ஆகியிருந்தன. கான்க்ரீட் தளத்தின் மேல் செங்கல்-சுண்ணாம்பு கான்க்ரீட் போடப்பட்டிருந்தது.

“தாமதிக்காமல் அப்போதே ஓடு பதித்துவிட வேண்டும் என்று வலியுறுத்தினேன். பணத் தட்டுப்பாடு என்று என் கணவர் தள்ளிப்போட்டார். சில வருடங்களாகக் கூரையிலிருந்து மழைநீர் கசிகிறது. ஒருவேளை கான்க்ரீட் தளத்தோடு நிறுத்தியிருந்தால் நீர்க்கசிவு விரைவில் நின்றுவிடும்.

செங்கல்-சுண்ணாம்பு கான்க்ரீட் மழைநீரை வாங்கி வைத்துக்கொண்டு நீர்க்கசிவைப் பல மாதங்களுக்கு நீட்டிக்கிறது. கம்பிகள் வேறு துருப்பிடிக்க ஆரம்பித்துள்ளன. இதற்கு என்ன தீர்வு?” என்று என்னிடம் ராஜாமணி அம்மாள் கேட்டார். உரிய தீர்வு அவருக்குத் தெரிந்திருந்தும் வருங்காலப் பொறியாளரிடம் புதுமையான ஒன்றை எதிர்பார்த்தார் போலும். அப்போதைக்கு ஏதோ சொல்லிச் சமாளித்தேன்.

நீரகம் (aquifer) - பொதுவாக, கான்க்ரீட் தளங்கள் கிடைமட்டமாக அமைக்​கப்​படும். மழைநீரை விரைவாகக் கடத்த வேண்டி செங்கல்​-சுண்ணாம்பு கான்க்​ரீட்டை வாட்டம் கொடுத்துப் போடுவார்கள். இதனுள் தண்ணீர் எளிதில் ஊடுரு​வும். மேலும், இதன் மேற்பரப்பு கரடுமுரடாக இருப்​பதால் நீர் மெதுவாக வழியும்; அதிகமாகவும் உட்பு​கும். மேற்பரப்பை இழைவாக்க செங்கல் ஓடு பதிப்​பார்கள். இருப்​பினும் நீர் உட்புக வாய்ப்புகள் உண்டு. தரமான கான்க்​ரீட்டுக்குள் தண்ணீர் புக முடியாது. தரமற்ற கான்க்​ரீட்டாக இருந்​தாலும் ஆரம்பத்தில் பிரச்சினை தெரியாது. சில காலம் கழித்து மெல்ல கசியத் தொடங்கும், பிறகு விஸ்வரூபம் எடுக்​கும்​.

மேற்சொன்ன பண்புகள் ராஜாமணி அம்மாவுக்குத் தெரிந்திருந்தது. பெரிய அளவில் படிப்பு இல்லாத அந்தக் கிராமத்துப் பெண்மணி கான்க்ரீட்டின் பலம், செங்கல்-சுண்ணாம்பு கான்க்ரீட்டின் பலவீனம், செங்கல் ஓட்டின் நோக்கம் அனைத்தையும் அறிந்துவைத்திருந்தார்.

ஓடு பதிக்காவிட்டால் செங்கல்-சுண்ணாம்பு கான்க்ரீட் நீரை உள்வாங்கி வைத்துக்கொண்டு நீரகமாகச் (aquifer) செயல்படும் என்கின்ற அறிவியலையும் விளக்கி எனக்கு அன்று பொறியியல் பாடம் எடுத்துள்ளார் என்கின்ற உண்மையை 21 ஆண்டுகள் கழித்து ரோடியர் மில் ஆய்வுக்குச் சென்றபோது உணர்ந்தேன்.

​விருத்​தாசலம் செய்தியைப் படித்​ததும், திறனாக இருக்க வேண்டிய கான்க்ரீட் தரக்குறை​வினால் நீரைக் கடத்து​கிறது; அதற்குத் தீர்வாக திறனில் தாழ்ந்த பொருளை எப்படி இக்காலத்​தில்​கூடத் தேர்ந்​தெடுக்​கிறார்கள் என்றே தோன்றியது. ஒரு கிராமத்துப் பெண்மணி அனுபவ அறிவால் தெரிந்து​கொண்ட விஷயங்​களைத் துறை சார்ந்த, அனுபவம் மிக்க அதிகாரிகள் எப்படித் தெரிந்து​கொள்​ளாமல் இருக்​கிறார்கள் என்கிற ஆதங்கமும் ஏற்பட்​டது!

- தொடர்புக்கு: skramane@gmail.com

SCROLL FOR NEXT