சிறப்புக் கட்டுரைகள்

வாடிக்கையாளரை வதைக்கிறதா கேஒய்சி?

ஆனந்தன் செல்லையா

வங்கிகளில் வாடிக்கையாளர்களின் அடிப்படை விவரங்களைப் பதிவுசெய்கிற கேஒய்சி (Know Your Customer) நடைமுறையால், வாடிக்கையாளர்கள் அலைக்கழிக்கப்படுவதும் அவர்களின் வங்கிக் கணக்குகள் முடக்கப்படுவதும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றன. கூடவே இணையவழி மோசடிகளுக்கு அவர்கள் உள்ளாவதும் இன்னொரு பெரும் பிரச்சினையாகி வருகிறது.

கேஒய்சியின் தேவை: வங்கி, காப்பீடு, பரஸ்பர நிதி முதலீடு, பங்குச்​சந்தை சார்ந்த சேவைகளைப் பெறுவதற்கு ஒருவரது அடையாளம், முகவரி குறித்த சான்றுகளை சம்பந்தப்பட்ட நிறுவனத்​துக்கு அளிப்பதே கேஒய்சி. ஒருவரது கைபேசி எண், முகவரி உள்ளிட்டவை மாற்றப்​பட்​டாலும், கேஒய்சி புதுப்​பித்தல் அவசியம்.

இதற்காக வங்கிக்கு நேரடி​யாகச் செல்ல முடியாதவர்கள் இணையவழி​யிலும் சான்றுகளைச் சமர்ப்​பிக்​கலாம். வாடிக்கை​யாளரின் வங்கிக் கணக்கு விவரங்​களின் ரகசியத்​தன்​மைக்கும் சேமிப்​புக்கும் கேஒய்சி உத்தர​வாதம் அளிக்​கிறது என்பதோடு, சமூக விரோதி​களின் பொருளாதார மோசடிகளி​லிருந்து நிதி நிறுவனங்​களைப் பாதுகாக்​கவும் செய்கிறது.

வங்கி​களின் சேவைகள் மின்னணுமய​மாக்​கப்​பட்டு​விட்ட சூழலில், மோசடிகள் நடப்பதைத் தடுக்க கேஒய்சி கூடுதல் தேவை என்பதில் மாற்றுக்​கருத்து இல்லை. மக்களின் பொருளாதார நடவடிக்கைகள் வங்கி இன்றி ஓர் அங்குலம்கூட நகர முடியாத இன்றைய சூழலில், கேஒய்சி அவர்களை மிகுந்த மன உளைச்​சலுக்கும் பல வேளைகளில் இழப்பு​களுக்​கும்கூட உள்ளாக்குவது தவிர்க்​கப்பட வேண்டும்.

வாடிக்கை​யாளரின் வேலை, வருவாய்க்கான ஆதாரம் போன்ற​வற்றின் அடிப்​படையில் அவரது பணப்பரி​மாற்​றத்தால் நிகழச் சாத்தி​ய​முள்ள இடரைக் குறைந்த​பட்சம், நடுத்​தரம், அதிகம் என வங்கிகள் வகைப்​படுத்து​கின்றன. குறைந்தபட்ச இடர் வகையில் வருவோர் 8 ஆண்டு​க்கு ஒரு முறையும் நடுத்தர இடர் வகையினர் 5 ஆண்டுக்கு ஒரு முறையும் அதிகபட்ச இடர் வகையினர் 2 ஆண்டுக்கு ஒரு முறையும் கேஒய்சி புதுப்​பிக்க வேண்டும்.

கொடுங்​கோன்மை ஆகிவிட்டதா கேஒய்சி? - அண்மையில் கர்நாடக மாநிலம் பெல்காம் மாவட்​டத்தைச் சேர்ந்த ஒரு விவசாயி, இணையவழியிலான கேஒய்சி சரிபார்ப்பு என்கிற பெயரில் ஒரு மோசடியில் சிக்கி ஒன்றரை லட்ச ரூபாயைப் பறிகொடுத்​தார். அவர் தன் மகளின் திருமணத்​துக்​காகச் சேமித்து வைத்திருந்த தொகை அது.

மகாராஷ்டிரத்தின் டிஆர்டிஓ நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு மென்பொருள் பொறியாளர்கூட, ஜனவரியில் இதே வகை மோசடியில் சிக்கி 13 லட்ச ரூபாய் இழந்திருக்​கிறார். 2024இல் கேஒய்சி விவரங்​களைப் புதுப்​பிக்​காததால் ஜார்க்​கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஏழு கிராமங்​களைச் சேர்ந்த பலரின் வங்கிக்​கணக்​குகள் முடக்​கப்பட்ட நிகழ்வு, பரபரப்​பாகப் பேசப்​பட்டது. ஒரே குடும்பத்தில் ஆறு வங்கிக்​கணக்​குகள் வரைக்​கும்கூட முடக்​கப்​பட்​டிருந்தன.

அதனால் ஜார்க்​கண்ட் மாநில அரசு பெண்களுக்கு மாதந்​தோறும் வழங்கும் உதவித்​தொகை, ஓய்வூ​தியம், கல்லூரி மாணவருக்கான உதவித்தொகை போன்ற​வற்றை அவர்கள் பெற இயலவில்லை. வேதனை​களின் உச்சமாக, கடந்த ஜனவரியில் உத்தரப் பிரதேச வங்கி ஒன்றில் கேஒய்சி புதுப்​பித்​தலுக்காக நீண்ட நேரம் காத்திருந்த 59 வயது நபர் ஒருவர், சுயநினைவை இழந்து அங்கேயே விழுந்து இறந்தார். அவர் மூன்று நாள்கள் வங்கிக்கு அலைக்​கழிக்​கப்​பட்டதே இதற்குக் காரணம் என அவரது குடும்பத்​தினர் குற்றம்​சாட்​டினர்.

இந்தத் துயர நிகழ்வை அடுத்து, காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்​பரம், “வங்கிக் கணக்கு விவரங்​களில் எந்த மாற்றமும் இல்லா​விட்​டாலும் கேஒய்சி புதுப்​பித்தலை மக்கள் மேற்கொள்ள வேண்டி​யுள்ளது. இந்தக் கொடுங்​கோன்மை முடிவுக்கு வர வேண்டும்” எனக் கருத்து தெரிவித்​திருந்​தார். ஏற்கெனவே வங்கிச் சீர்திருத்த மசோதா மக்களவையில் விவாதத்​துக்கு வந்தபோது, கேஒய்சியை அவர் விமர்சனம் செய்திருந்​தார்.

சிக்கல் ஆக்கும் காரணிகள்: சமூகத்தில் பெரும்​பாலானவர்கள் வேலை, தொழில் சார்ந்து பல வகையான நெருக்​கடிகளில் இருப்​பதுதான் இன்றைய யதார்த்தம். சீரான கால இடைவெளியில் கேஒய்சி விவரங்​களைப் புதுப்​பிப்​ப​தற்கு நேரம் ஒதுக்கப் பலரால் இயலுவ​தில்லை. கிராமப்புற மக்களில் பலருக்கு இது குறித்துப் போதுமான புரிதல் இருக்கும் என எதிர்​பார்க்க இயலாது.

வாடிக்கை​யாளரால் உரிய காலத்தில் வங்கிக்கு வர முடிந்​தா​லும், கேஒய்சி தகவல்​களைத் தாக்கல் செய்ய நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி​யிருப்​பதுதான் பல வங்கி​களில் நிதர்சன நிலை. நம் நாட்டு அரசு அலுவல​கங்​களில் நிலவுகிற பணியாளர் பற்றாக்குறை பல துறைகளின் செயல்​பாட்டை மந்தப்​படுத்தும் போக்கு, கேஒய்சி சிக்கலிலும் பிரதிபலிக்​கிறது.

தேவையைவிட, மிகக் குறைவான எண்ணிக்கையில் இருக்கும் பணியாளர்​களால் வங்கி வழங்கும் பல்வேறு சேவைகளுக்கான வேலைகளோடு, கேஒய்சி புதுப்​பித்​தலையும் சேர்த்து மேற்கொள்ள முடிவ​தில்லை. விண்ணப்பம் பெறப்படாத வாடிக்கை​யாளர்​களில் பலர் ஓரளவுக்கு மேல் பொறுமையை இழந்து கேஒய்சி புதுப்​பிக்கும் முடிவைக் கைவிடு​வதும் அதன் விளைவாக அவர்களது வங்கிக்​கணக்கு முடக்​கப்​படு​வதும் நிகழ்​கின்றன.

ஜார்க்​கண்ட் போன்ற மாநிலங்​களில் கேஒய்சி புதுப்​பித்​தலில் வங்கிக்கும் வாடிக்கை​யாள​ருக்கும் இடையே பாலம்​போலச் செயல்பட வேண்டிய சேவை மையங்கள், அதற்காக லஞ்சம் பெறுவதும் அவ்வப்போது செய்தி​களில் இடம்பெறுகிறது. சில குறிப்​பிட்ட வெளிநிறு​வனங்கள் வங்கி​களோடு ஒப்பந்தம் இட்டு லாபம் பார்க்கும் தொழிலாக கேஒய்சி புதுப்​பித்தல் ஆகிவிட்​ட​தாகவும் விமர்​சிக்​கப்​படு​கிறது.

கேஒய்சி விவரங்களை வாடிக்கை​யாளர்கள் ஏற்கெனவே தாக்கல் செய்திருந்​தா​லும், முகவரி போன்ற விவரங்களை மாற்றாமல் இருந்​தாலும் வங்கிக்கு வருமாறு அவர்களைக் கட்டாயப்​படுத்​தக்​கூடாது என ரிசர்வ் வங்கி அவ்வப்போது அறிவுறுத்​தி​னாலும், இந்தப் பிரச்சினை நீடிக்கவே செய்கிறது.

கேஒய்சி புதுப்​பித்​தலுக்காக அலைபேசி வழியாகவோ, மின்னஞ்சல் வழியாகவோ வங்கிக் கணக்கு விவரங்​களைக் கேட்கும் போலி நபர்கள், மக்களின் சேமிப்பைச் சில நிமிடங்​களில் அபகரித்து​விடு​கின்​றனர். சைபர் குற்றத் தடுப்புக் காவல் துறையில் நீடிக்கும் பணியாளர் பற்றாக்குறை இன்னொரு சவால். இதுவும் குற்ற​வாளி​களுக்குச் சாதகமாக இருக்​கிறது.

தீர்வுக்கான நம்பிக்கை: 2016இல் மத்திய கேஒய்சி ஆவணங்கள் பதிவகம் தொடங்கப்பட்டது. இதன் மூலமாக வாடிக்கையாளருக்கு 14 இலக்க எண் ஒன்று ஒதுக்கப்படுகிறது. புதிய கணக்குக்காக கேஒய்சி புதுப்பிக்க நேரும்போது, இந்த எண்ணை மட்டும் தெரிவிப்பதன் மூலமே சரிபார்ப்பு வேலைகள் முடிந்துவிடும். ஒவ்வொரு தேவைக்கும் கேஒய்சி விவரங்களைத் தனித்தனியாக சமர்ப்பிக்கத் தேவை இல்லை. எனினும், இந்த வசதி முதலீட்டுச் சந்தை தொடர்பான கணக்குகளுக்கு மட்டுமே அமலுக்கு வந்துள்ளது.

கேஒய்சி சிக்கல்களை மக்கள் அதிக அளவில் எதிர்கொள்ளும் வங்கித் துறைக்கு வரவில்லை. கேஒய்சியை மக்கள் ஏடிஎம், வாட்ஸ் அப் மூலமாகக் கூட செய்துகொள்ள தற்போது வசதி இருப்பினும், அதற்குக் குறைந்தபட்ச தொழில்நுட்பப் புரிதலாவது தேவை. மிகக் குறைந்த அவகாசத்தில் வாடிக்கையாளர் நிரப்பும்வகையில் கேஒய்சி விண்ணப்பங்களை எளிமைப்படுத்தச் சில நடவடிக்கைகள் வங்கிகள் தரப்பில் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. இவை விரைவில் செயல்பாட்டுக்கு வருவது நல்லது.

நிதி நிலைத்​தன்மை - வளர்ச்சிக்கான மன்றம், முன்னாள் மத்திய நிதிச்​செயலர் டி.வி.சோமநாதன் தலைமையில் ‘ஒரே மாதிரியான கேஒய்சி’ (Uniform KYC) முறை குறித்து ஆராய்​வதற்கு ஒரு குழுவை 2024 மார்ச் மாதத்தில் நியமித்தது.

இது நடைமுறைக்கு வந்தால் பல முறை கேஒய்சி புதுப்​பித்தலை மக்கள் மேற்கொள்ளும் சிரமம் தவிர்க்​கப்​படும் என எதிர்​பார்க்​கப்​படு​கிறது. வங்கி​களுக்கும் வாடிக்கை​யாளர்​களுக்​குமான இடைவெளியை அதிகப்​படுத்தும் கேஒய்சி சிக்கலை ரிசர்வ் வங்கி சீக்கிரமே முடிவுக்குக் கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்​டும்​.

- தொடர்புக்கு: anandchelliah@hindutamil.co.in

SCROLL FOR NEXT