இந்தாண்டுக்கான சாகித்திய அகாடமி தமிழ் மொழிபெயர்ப்பு நூலுக்கான விருது பேராசிரியர் ப.விமலா மொழிபெயர்த்த ‘எனது ஆண்கள்’ (வெளியீடு:காலச்சுவடு பதிப்பகம்) நூலுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. நளினி ஜமீலா எழுதி 2018இல் வெளிவந்த ‘என்டே ஆணுங்கள்’ என்கிற மலையாள நூலின் தமிழ் மொழிபெர்ப்பு இது. விமலா பாளையங்கோட்டை தூய சவேரியார் கல்லூரியில் தமிழ்ப் பேராசிரியராகப் பணிபுரிகிறார். ப.விமலாவிடம் இது குறித்த உரையாடியதன் சுருக்கம்:
மொழிபெயர்ப்பு ஆர்வம் எப்படி வந்தது?
டெல்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தில் படித்தபோது அங்கு ஆய்வுகளை இருமொழிகளில் ஒப்பிட்டு எழுதச் சொல்வது வழக்கம். அப்படித்தான் மலையாளம்-தமிழ் மொழிபெயர்ப்பு குறித்து எழுதத் தொடங்கினேன். மலையாளத்திலிருந்து தமிழுக்கு மொழிபெயர்க்கப்பட்ட ஆக்கங்கள் குறித்து ஒரு நூல் எழுதியிருக்கிறேன். கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்தவள் என்பதால் மலையாளம் பேசத் தெரியும். பிறகு வாசிக்கவும், எழுதவும் கற்றுக்கொண்டேன். இப்போது மலையாளம் முதுகலை பயின்று வருகிறேன்.
வேறு என்ன மாதிரி மொழிபெயர்ப்புகள் செய்துள்ளீர்கள்?
‘விவேகானந்தம்’ என்கிற மலையாள நாவலையும் ’மலையாள மொழி தொல்காப்பியத்தில்’ என்கிற கட்டுரை நூலையும் தமிழில் மொழிபெயர்த்துள்ளேன். தமிழிலிருந்து சங்கக் கவிதைகளை மலையாளத்துக்கு மொழிபெயர்த்து வருகிறேன். விருது கிடைத்த இந்த நூல் எனது மூன்றாவது மொழிபெயர்ப்பாகும்.
மலையாளம்-தமிழ் மொழிபெயர்ப்புச் சவால்கள் என்னென்ன?
மலையாளமும், தமிழும் நிறைய ஒற்றுமைகள் உள்ள மொழிகள். அதனால் பல இடங்களில் மலையாளத்தைத் தமிழில் மொழிபெயர்ப்பது எளிது. ஆனால், சில பண்பாட்டுக் கூறுகளை ஒற்றைச் சொல்லில் மொழிபெயர்க்க முடியவில்லை. அதற்கு விளக்கம் கொடுக்க வேண்டியிருக்கிறது. மலையாளத்தில் உள்ள சமஸ்கிருதச் சொல்லை மொழிபெயர்ப்பதிலும் இம்மாதிரிச் சிக்கல் இருக்கிறது.
விருது கிடைத்துள்ள இந்த நூல் குறித்து...
காலச்சுவடு பதிப்பகம்தான் இந்த நூலை மொழிபெயர்ப்புக்காக அளித்தது. நளினி ஜமீலாவின் இந்த நூல் பாலியல் தொழிலாளி பற்றிய நமது பொது அபிப்ராயத்தை மாற்றுவதாக இருந்தது. மொழிபெயர்த்தது நல்ல அனுபவமாக இருந்தது. எளிமை
யான மலையாளத்தில் எழுதப்பட்டுள்ளதால் இந்த நூலை மொழிபெயர்ப்பதில் பெரிய சிக்கல் இல்லை. மொழிபெயர்ப்பதில் சந்தேகங்கள் வந்தபோது நளினியிடம் நேரடியாக உரையாடி அதைக் களைந்தேன்.