வாதி, பெரியாரியக் கொள்கைகளில் ஈடுபாடு கொண்டவர். ‘புதிய குரல்’ அமைப்பின் நிறுவனர். பெண்ணுரிமைகளுக்காகவும் சாதியற்ற சமூகம் அமைவதற்காகவும் பல்வேறு பணிகளைச் செய்துவருகிறார். ஏராளமான சாதி மறுப்பு - சுயமரியாதைத் திருமணங்களை நடத்தி வைத்திருக்கிறார். சமூகத்தில் நிலவும் ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் பகுத்தறிவுச் சிந்தனையைத் தூண்டும் விதத்திலும் பல புத்தகங்களை எழுதியிருக்கிறார். சர்வதேச உழைக்கும் மகளிர் நாளை (மார்ச் 8) முன்னிட்டு அவருடன் நடத்திய நேர்காணலில் இருந்து:
ஆணுக்கென்று ஒரு நாள் இல்லாதபோது பெண்களுக்காக ஒரு நாள் தேவையா? - இது இந்தத் தலைமுறையின் கேள்வி. பெரும்பாலான வீடுகளில் ஆணும் பெண்ணும் சமமாகத்தானே நடத்தப்படுகிறார்கள் என்று தோன்றலாம். ஆனால், சமூகத்தில் அனைத்துப் படிநிலைகளிலும் இது நடக்கிறதா? அப்படியே நடந்தாலும் இந்தச் சமத்துவம் எதுவரை? கல்லூரிப் படிப்பு, திருமணம், பிள்ளைப்பேறு, சொத்து பிரிப்பது போன்றவற்றின்போது ஆணுக்கும் பெண்ணுக்கும் சமத்துவம் இருக்கிறதா? வாழ்க்கையின் அனைத்து நிலைகளிலும் சமத்துவம் இல்லாத நிலையில், இன்னொரு புறம் சிறு குழந்தைகள்கூடப் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்படுகிறார்களே.
இதை எப்படிப் புரிந்துகொள்வது? ஆணுக்கு ஏதோவொரு வன்மம் இருக்கிறது. ஓர் இனம் இன்னும்கூட மற்றொரு இனத்தை இவர்கள் என் ஆதிக்கத்துக்கு உட்பட்டவர்கள், எனக்குக் கட்டுப்பட்டவர்கள், இவர்கள் வளர்ந்துவிடக் கூடாது என்கிற உளவியல் காரணம் இல்லாமல் இதுபோன்ற கொடூரங்கள் நடக்காது. இந்தப் பூமி இதில் இருக்கும் அனைவருக்கும் பொதுவானது என்பதைச் சொல்வதற்காகவும் இந்த நாள் அவசியமாகிறது.
பல்வேறு போராட்டங்கள் இல்லாமல் இந்த நிலை மாறாது. சர்வதேச அளவில் பெண்கள் எட்டு மணி நேர வேலை கேட்டும் கூலி உயர்வுக்காகவும் போராடிய வரலாறு இருக்கிறது. பெண்களின் வாழ்நிலையை மேம்படுத்தவும் நினைவுகூரவும் இந்த நாளை நாம் கொண்டாட வேண்டிய தேவை இருக்கிறது.
இந்திய அளவில் நடைபெற்ற பெண்ணுரிமைப் போராட்டங்கள் என்னென்ன? - பலரும் அறிந்தது ‘சதி’ ஒழிப்பு. ஆனால், இது மக்கள் எழுச்சியால் விளைந்தது என்று சொல்லிவிட முடியாது. ராஜாராம் மோகன்ராய் போன்ற தலைவர்கள் முன்னெடுத்தாலும் சதி கொடுமையைப் பார்த்து அதிர்ந்த பிரிட்டிஷ் அரசு நிறைவேற்றிய சட்டம் அது. பெண்ணுரிமைக்கான குறிப்பிடத்தக்க போராட்டங்கள் நாட்டின் தென்பகுதியில்தான் நடைபெற்றுள்ளன.
கேரள மாநிலத்தின் சில பகுதிகளிலும் தமிழகத்தின் கன்னியாகுமரி, நாகர்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் பெண்கள் மேலாடை அணிவதற்காக முன்னெடுத்த ‘தோள்சீலை’ போராட்டம் முக்கியமானது. பெண்ணடிமைத்தனத்தை எதிர்க்க வேண்டுமென்றால் சாதியை எதிர்க்க வேண்டும் என்பதற்கான உதாரணமும் இந்தப் போராட்டம்தான்.
தமிழ்நாட்டில் பெண்களுக்குக் கல்வி கொடுத்ததும் பிள்ளைப்பேறுக்காக அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றதும்கூட மிகப்பெரிய மாற்றங்கள். மக்கள் திரளாக நடைபெற்ற போராட்டங்களில் முக்கியமானது மூவலூர் ராமாமிர்தம் அம்மையார் முன்னெடுத்த தேவதாசி முறை ஒழிப்புப் போராட்டம். டாக்டர் அம்பேத்கர் முன்மொழிந்த இந்து சட்ட மசோதா, சொத்துரிமை, ஜீவாதார உரிமை, வாரிசுரிமை உள்ளிட்ட பெண்ணுரிமைக்கான சட்ட உரிமைகள் அடங்கிய தொகுப்பு.
மதத்தின் அடிப்படையில் பெண்களை அடிமைப்படுத்திய அனைத்து நடைமுறைகளையும் மாற்றுவதற்காக அவர் கொண்டுவந்த மசோதா ஏற்றுக்கொள்ளப்படவில்லை. ‘பெண்களுக்கு ஆதரவாக ஒரு சட்டத்தைக் கொண்டுவந்ததற்கு இரண்டு பெண்கள்கூட எனக்கு ஆதரவாக இல்லையே’ என்று வருத்தப்பட்டார் அம்பேத்கர். ஒருவேளை அன்றைக்கு இந்தியாவின் தலைநகரம் சென்னையாக இருந்திருந்தால் அந்த மசோதா நிறைவேறியிருக்கும். காரணம், வீரியமான பெண் உரிமைப் போராட்டங்களையும் சிந்தனைகளையும் கொண்டிருந்த மாநிலம் இது.
உங்களைக் கவர்ந்த பெண்ணுரிமைப் போராளிகள் யார்? - பலர் இருக்கிறார்கள். இருவரைக் குறிப்பிட்டுச் சொல்லலாம். எந்தப் பெண்ணும் செய்யத் துணியாத தியாக வாழ்க்கையை ஏற்றுக்கொண்ட அன்னை மணியம்மையார். பெரியாரை மணந்துகொண்டால் எவ்வளவு பெரிய இழிவை இந்தச் சமூகம் தன் மீது சுமத்தும் என்பதை அறிந்தே அதைச் செய்தார். சமூகத்துக்காகத் தனது சுக துக்கங்களை எல்லாம் இழந்து தலைமைப் பொறுப்பை ஏற்றார்.
அடுத்ததாக, மூவலூர் ராமாமிர்தம் அம்மையார். இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டம், சாதி மறுப்பு மணம், கைம்பெண்
மறுமணம் என்று எத்தனையோ சீர்திருத்தங்களை அவர் முன்னெடுத்திருக்கிறார். அவருக்கு அவர் சமூகத்தைச் சேர்ந்தவர்களே விஷம் கொடுத்தனர்.
அப்போது அவர்கள் மீது புகார் கொடுக்கும்படி ராமாமிர்தம் அம்மையாரிடம் சிலர் சொன்னபோது, அதை உறுதியாக அவர் மறுத்துவிட்டார். “நான் அவர்களுக்காகத்தான் போராடுகிறேன். அவர்கள் மீதே புகார் கொடுப்பது என் கொள்கைக்கே விரோதமானது” என்றார். இப்படி ஒரு மனம் யாருக்கு வரும்?
பெண்ணியம் என்பது காலாவதியாகிவிட்ட சொல் என்று சிலர் சொல்கிறார்களே? - பெண்ணியம் யாருக்கும் எதிரானதல்ல. ஆணாதிக்கச் சமூகத்தில் அனைத்து ஆண்களும் சமமாக நடத்தப்படவில்லை. சாதிரீதியாக அவர்களும் அடிமைப்படுத்தப்படுகிறார்கள். அதனால், பெண்ணுரிமை என்பது ஆணின் விடுதலையையும் உள்ளடக்கியதே. தற்போது உலகம் முழுவதும்
வலதுசாரிச் சிந்தனை வலுப்பெற்றுவரும் சூழலில், பெண்கள் தங்களுக்கு இருக்கும் உரிமைகளைத் தக்கவைத்துக்கொள்ளவே போராட வேண்டியிருக்கிறது. ஆணாதிக்கம் முழுவதுமாக விலகாத நிலையில் பெண்ணியம் எப்படிக் காலாவதியாகும்?
பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பது உண்மையா? - சிறையில் ‘கன்விக்டட் வார்டன்’ என்று ஒரு பொறுப்பு இருக்கிறது. கைதிகளில் ஒருவர் மற்றவர்களைக் கண்காணிப்பார். வீடுகளில் மாமியார் என்பவர் அதைத்தான் செய்கிறார், தானும் ஒரு கைதிதான் என்பதை மறந்து. இதற்குப் பெண்களின் தனிப்பட்ட மனநிலை மட்டுமே காரணமல்ல. குடும்பம், சாதியச் சூழல் என்று பல காரணங்கள் உண்டு.
இன்று அலுவலகங்களில் பெண்களுக்கிடையே நல்ல ஒருங்கிணைவு உண்டு. பெண்களுக்கான அணிதிரட்டல் இல்லாதது பெரும் பின்னடைவு. ஆண்களுக்குக் கட்சி, ரசிகர் மன்றம், பூங்கா போன்ற பொது இடங்களில் கூடுவது என்று எத்தனையோ வழிகள் உண்டு. பெண்கள் அப்படி ஒன்றுபடுவதற்கான வாய்ப்பும் சூழலும் குறைவு. உண்மையில் இது அரசியல் பிரச்சினை. பெண்ணுக்குப் பெண்ணே எதிரி என்பது ஏமாற்று வாசகம்.
அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களைச் சொல்லிப் பெண்களை அடிமைப்படுத்துகிறார்கள். இதை எப்படிக் கடந்து வருவது? - பெண்ணின் உடலைத் தீட்டு என்று சொல்வதே அறிவியலுக்குப் புறம்பானது. மாதவிடாய் தொடங்கி மெனோபாஸ் வரை உடல் பற்றிய புதிர்களுக்குள் பெண் நிறுத்தப்படுகிறாள். அதைச் சரிகட்டத்தான் அழகு என்கிற கற்பிதமும் உருவாக்கப்பட்டது. ‘நீ எல்லா இடத்துக்கும் தகுதியானவள் அல்ல.
நாங்கள் அனுமதிக்கும் இடத்துக்கு, நாங்கள் அனுமதிக்கும் நேரத்துக்கு மட்டும் வந்தால் போதும்’ என்று சொல்வதே அறிவியலுக்கு எதிரானதுதானே. பெண்களைப் புனிதப்படுத்தும் எதுவாக இருந்தாலும் அது அறிவியலுக்குப்புறம்பானதாக இருந்தால், அதைப் பெண்கள் புறக்கணிக்க வேண்டும். இந்த மனப்பான்மையை வளர்க்கவும் அரசியலில் பெண்களின் பங்களிப்பு அதிகரிக்க வேண்டும்.
பெண்களை அடிமைப்படுத்தும் சாதியைக் கடந்து வருவது எப்படி? - சாதியை ஒழிப்பதுதான் அதற்கு ஒரே வழி. சாதி மறுப்பு மணங்கள், சாதி அடிப்படையிலான இட ஒதுக்கீடு ஆகிய இரண்டும்தான் அடிப்படையான வழிகள். சாதி மறுப்பு மணங்கள் மூலம் சாதியை இல்லாமல் ஆக்கலாம். இடஒதுக்கீடு மூலம் அனைவரும் சமமான நிலையை எய்தும்போது சாதிக்கு இடமில்லாமல் போகும்.
இன்றைக்கு நிலைமை ஓரளவுக்கு மாறியிருக்கிறது. சாதியின் அடிப்படையில் நாம் இன்னொருவரைத் தாழ்த்த முடியாது என்பதைப் பலர் புரிந்துகொண்டிருக்கிறார்கள். ஆனால், இன்னொருபுறம் சாதி என்பது அரசியல்ரீதியாக மறுகட்டமைப்பு செய்யப்படுகிறது.
மகளிர் தினத்தை முன்னிட்டு ஆண்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்? - பெரியாரிடம் ஒருவர் பெண்ணுரிமை என்றால் என்ன எனக் கேட்டார். ‘எதையெல்லாம் உங்கள் உரிமை என்று நினைக்கிறீர்களோ... அதெல்லாம் பெண்களின் உரிமை’ என்றார் பெரியார். பெண்கள் இரக்கத்தைக் கேட்கவில்லை. அவர்களது உரிமையைக் கேட்கிறார்கள்.
பெண்களுக்கு இழைக்கப்பட்ட வரலாற்றுரீதியான கொடுமைகளை ஆண்கள் புரிந்துகொள்ள வேண்டும். பெண் உரிமை என்பது பெண்களுக்கான உரிமை மட்டுமல்ல; ஆண்களுக்கான உரிமையையும் உள்ளடக்கிய மனித உரிமை அது. அதை அடைய பெண்களுக்கு ஆண்கள் துணைநிற்க வேண்டும்.
- தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in