இந்தியாவின் பதிப்பு ஓவியங்கள் என ஆவணப்படுத்தினால், அந்த வரிசை ஆர்.எம். பழனியப்பன் என்கிற பெயரில்லாமல் பூர்த்தியடையாது. சென்னை தக் ஷிணசித்ராவில் இவரது நாற்பது வருடக் கலைப்படைப்புகளின் தொகுப்புக் கண்காட்சி நடைபெற்றுவருகிறது.
வேறு எந்த ஓவியர்களின் படங்களோடு இருந்தாலும், இவரது ஓவியத்தைக் கண்டுபிடிக்க இயலும். அதைக் கண்டுபிடிக்க உதவுவது அவரது கோடுகளின் அமைப்பே. அதற்கு அவர் சூட்டியிருக்கின்ற தலைப்பும், பதிப்போவியத்தில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பல்வேறு ஊடகங்களும் இதை உள்வாங்கிக் கொள்ள எனக்குப் பயிற்சியை அளித்திருந்தது.
அவரது ஆரம்பகால உருவப்பட ஆய்வுகளிலிருந்து, நேர்த்தியான கட்டமைப்பிலிருந்து வெளியேறித் தப்பிக்கும் பிரசித்தி பெற்ற அவரது விமானத் தொகுப்பு காட்சிகள், பல்-ஊடகப் பதிப்போவியங்கள், உலோகங்களால் உருவாக்கப்பட்டவை. சட்டகங்களில் பொருத்திவைத்த கம்பியால் ஆன கோடு, காண்பியல் மாயைகளை உருவாக்கும் நிழற்படப் பதிப்போவியங்கள் எனச் சென்னை சிந்தனைப் பள்ளியின் பிரதான ஆளுமை ஒருவரின் பிரதிநிதித்துவமாக இதை வரிசைப்படுத்தலாம்.
ஒரு கலைஞன் எங்கு வந்துசேர்கிறானோ, தற்போது எங்கு பயணிக்கிறானோ அதையே அவரது படைப்பெனக் கொண்டால் அதை இரு பகுதிகளாகப் பிரித்துக்கொள்ளலாம்; ஒன்று நிலம்; மற்றொன்று அவரது கருத்துருவாக்கம். அவர் படைப்புகளுக்கு வைத்த தலைப்புகளைக் கொண்டு படைப்பு பேசும் பரிமாணத்தைப் புரிந்துகொள்வது ஒரு புதிர்த்தன்மை கொண்டதாகவும் ஈடுபட வைப்பதாகவும் இருக்கிறது. இன்னும் சரியாகச் சொல்லப்போனால் ஒரு விளையாட்டுத் தன்மையும் கொண்டதாக இருக்கிறது.
இதுவரை முற்றிலும் யோசிக்காத பரிமாணம் இதுவே. முதல்நாள் எனது கலையுலக நண்பர்களோடும் இரண்டாவது நாள் எனது இரண்டு வயது மகளோடும் அவ்வோவியங்களை அணுகினேன்.
ஒரு கோட்டினை எந்த முன்முடிவுகளும் இல்லாமல் முழுமையாகவும், கவனம் குன்றாமலும் ஓர் ஓவியத்தைப் பார்க்க அவளால் முடிந்தது. அந்த ஓவியத்தின் கோடுகள் விடுதலையான ஒன்றாகவும் விளையாட்டுத்தனமுடனும் பொருள் தந்தன.
பிக்காஸோவின் ஒரு கூற்று நினைவுக்கு வந்தது: “நான் ரஃபேலைப் போல ஒரு ஓவியத்தை வரைய நான்கு ஆண்டுகள் ஆயிற்று, ஆனால் ஒரு குழந்தையைப் போல ஒரு ஓவியத்தை வரைவதற்குத்தான், என் ஆயுள் முழுக்கத் தேவைப்படும்”. பழனியப்பனின் ஓவியங்கள் புரிதலுக்குக் கடினமானதாகவும், உணர்வதற்கு மறைவாய் இருந்தாலும் மிக நெருக்கமானதாகவும் இருக்கின்றன. தேவக்கோட்டையிலிருந்து வந்து, சென்னை கவின்கலை கல்லூரி மாணவராய்த் தொடங்கிய இவரது கலைப்பயணம் பல்வேறு கண்காட்சிகள், பயிற்சிப் பட்டறைகள், கருத்தரங்கங்கள் எனச் சர்வதேச அளவில் விரிவடைந்துள்ளது.
(ஆர்.எம்.பழனியப்பனின் ஓவியக் கண்காட்சி, சென்னை, கிழக்குக் கடற்கரைச் சாலை, முட்டுக்காட்டில் உள்ள தக் ஷிணசித்ராவில் நடைபெறுகிறது. இது மார்ச் 31இல் நிறைவடைய உள்ளது.)
-பதிப்பாளர், யாவரும் பதிப்பகம்
தொடர்புக்கு: kaalidossan@gmail.com