சிறப்புக் கட்டுரைகள்

“காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ளத் திட்டங்கள் இல்லை!” - கணிதவியலாளர் ஆர்.ராமானுஜம் நேர்காணல்

எஸ்.சுஜாதா

முனைவர் ஆர்.ராமானுஜம் கணித-கணினிக் கோட்பாட்டியலாளர். அசிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தில் பேராசிரியராகப் பணியாற்றிவருகிறார். 30 ஆண்டுகளுக்கும் மேலாக மக்களிடம் அறிவியல் பரப்புரை செய்துவருகிறார். தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் நீண்ட காலத் தலைவராக இருந்தவர், ‘துளிர்’ இதழின் ஆசிரியர். ராயல் நெதர்லாந்து அகாடமி ஆஃப் சயின்ஸின் (KNAW) மதிப்புமிக்க ‘லோரன்ட்ஸ் ஃபெல்லோ’ (2010) விருதைப் பெற்றவர்.

அறிவியல் பரப்புரைகளில் இவரின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக, 2020இல் இந்திய தேசிய அறிவியல் அகாடமி (INSA) அவருக்கு ‘இந்திரா காந்தி’ விருதை வழங்கியிருக்கிறது. வாழ்நாள் சாதனையாளருக்கான ‘டைம்’ விருது (International Conference on Technology and Innovation in Mathematics Education) 2021இல் இவருக்கு வழங்கப்பட்டது. ஆர்.ராமானுஜம் அளித்த நேர்காணலிலிருந்து...

ஆராய்ச்சியாளர்கள் பெரும்பாலும் தங்கள் தொழில்சார்ந்து இயங்கும் சூழலில், கணித-கணினி அறிவியலாளரான நீங்கள் மக்கள் பணியில் தொடர்ச்சியாக, நீண்ட காலம் ஈடுபட்டுவருவதற்கான காரணம் என்ன?

எனக்குள் இருக்கும் ஜனநாயக உணர்வுதான் காரணம். நான் எளிய பின்னணியில்தான் வளர்ந்தேன். எனக்குச் சிலர் வழிகாட்டினார்கள். அதன் மூலம் கல்லூரியில் கல்வி உதவித்தொகை கிடைத்தது. அரசாங்கமும் மக்களும் கொடுத்ததுதான் இந்தப் படிப்பும் கல்வி உதவித்தொகையும்.

அதனால், மக்களுக்காகப் பணியாற்ற வேண்டும் என்று நினைத்தேன். மும்பையில் பணியாற்றிக்கொண்டிருந்தபோது, சென்னை கணித அறிவியல் நிறுவனத்தில் பணியாற்றும் வாய்ப்பு வந்தது. அப்போது அது மிகச் சிறிய நிறுவனம்தான். ஆனாலும், மக்களுடன் பழகும் வாய்ப்புக்காகவும் மக்களுக்காகப் பணியாற்றுவதற்காகவும் அந்தப் பணியை ஏற்றுக்கொண்டேன்.

மும்பையில் இருந்தபோது ஒரு மதக் கலவரத்தைப் பார்த்தேன். தமிழ்நாட்டில் இதுபோன்று நடக்காது என்று நினைத்தேன். ஆனால், திருவல்லிக்கேணியில் ஒரு மதக் கலவரத்தைக் கண்டபோது மிகவும் பாதிக்கப்பட்டேன். மக்களின் சிந்தனையை மாற்ற வேண்டும், அறிவியல் மனப்பான்மையை உருவாக்க வேண்டும் என்கிற எண்ணம் எனக்குள் வலுக்கத் தொடங்கியது. புதுச்சேரியில் நடைபெற்ற அறிவியல் பயிற்சி முகாம் எனக்குப் புதிய நம்பிக்கையை அளித்தது.

‘ஜாதா’ எனப்பட்ட அறிவியல் பயணக் குழுவில் இணைந்து பணியாற்றினேன். அப்படியே அறிவியல் இயக்கம், அறிவொளி இயக்கம், ‘துளிர்’, ‘ஜந்தர் மந்தர்’ இதழ்கள் எனப் பயணித்துவருகிறேன். அறிவொளி இயக்கத்தின் மூலம் எளிய மக்களுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைத்ததை மிக முக்கியமானதாகக் கருதுகிறேன்.

ஆராய்ச்சியையும் அறிவியல் செயல்பாட்டையும் இணைக்க உங்களைத் தூண்டியது எது?

அறிவியல் மக்களுக்கானது. கல்விக்கும் நடைமுறை வாழ்க்கைக்கும் நிறைய இடைவெளி இருப்பதைக் கண்டேன். அறிவியலை அன்றாட வாழ்க்கையோடு இணைக்கும் விதத்தில் பரிசோதனைகளை உருவாக்கி, மாணவர்களைச் செய்ய வைத்தோம். அப்போதுதான், மக்களுக்கு ஆர்வம் அதிகம் இருக்கிறது. அவர்களிடம் அறிவியலைக் கொண்டுசேர்க்கும் திட்டம்தான் நம்மிடையே இல்லை என்பது புரிந்தது.

கடந்த 30 ஆண்டுகளில் மக்களிடம் அறிவியல் மனப்பான்மை வளர்ந்திருக்கிறதா?

இன்று நன்கு படித்தவர்கள், பெரிய பொறுப்புகளில் இருப்பவர்கள்கூட அறிவியலுக்குப் புறம்பான விஷயங்களை எந்தவிதத் தயக்கமும் இன்றிப் பேசுகிறார்கள். நாடு முழுவதும் இந்தப் போக்கு உருவாகியிருக்கிறது. 20 ஆண்டுகளுக்கு முன் இப்படி யாரும் பேசியதில்லை.

யாரும் எந்தக் கருத்தையும் சொல்லட்டும். ஆனால், அவர்களுக்கு எதிராகப் போர்க்கொடி உயர்த்துபவர்கள்கூட அவர்களிடம் அதற்கான தரவுகளைக் கேட்பதில்லை. தரவுகளைக் கேட்டால் அப்படிப் பேசியவர்களால் கொடுக்க முடியாது. அறிவியலுக்குப் புறம்பாகப் பேசுபவர்களைக் கையாள்வதற்கு இதுதான் வழி.

இன்று அறிவியல் தொழில்நுட்பம் வளர்ந்திருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் ஒரே நொடியில் பலரிடம் பரப்பிவிட முடியும். அந்த அளவுக்கு அறிவியல் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துபவர்கள், அறிவியல் மனப்பான்மையுடன் இருக்கிறார்களா என்றால் இல்லவே இல்லை.

அறிவியல் பயன்பாடு என்பது வேறு, அறிவியல் சிந்தனை என்பது வேறு. கல்வி மிக அவசியம் என்று நாம் வலியுறுத்திக் கொண்டிருக்கும்போது, படிக்காமலே வாழ்க்கையில் முன்னேறலாம் எனக் கூறும் சில திரைப்படங்களால் அதை முறியடித்துவிட முடியும். அதனால், அனைத்து வழிகளிலும் தொடர்ச்சியான அறிவியல் பரப்புரையைச் செய்துகொண்டே இருக்க வேண்டியது அவசியம்.

அறிவியல் பரப்புதலின் மூலம் மூடநம்பிக்கைகள் எந்த அளவுக்கு மாறியிருக்கின்றன? இதில் அறிவியல் இயக்கங்களின் பங்கு என்ன?

20-30 ஆண்டுகளுக்கு முன் சூரிய கிரகணம் வரும்போது தெருவில் ஒருவரையும் பார்க்க முடியாது. வீட்டு ஜன்னல்கள்கூட மூடப்பட்டிருக்கும். வெளியே வந்தால் ஏதாவது ஆகிவிடுமோ என்கிற அச்சம் இருந்தது. தொடர்ச்சியான அறிவியல் பரப்புரைகள் மூலம் இன்று ஓரளவுக்கு விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. இன்று சூரிய கிரகணம் என்றால் அந்த அளவுக்கு மக்கள் பயப்படுவதில்லை. கிரகணம் என்பது வெறும் நிழல்தான் என்கிற புரிதல் ஏற்பட்டிருக்கிறது.

ஆனால், இப்படி விழிப்புணர்வு பெற்றவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவுதான். அறிவியல் இயக்கங்கள் போன்ற ஓரிரு இயக்கங்களால் மட்டுமே மூடநம்பிக்கைகளையும் தவறான எண்ணங்களையும் முழுமையாக மாற்றிவிட முடியாது. ஏராளமான இயக்கங்கள் உருவாகி, தொடர்ச்சியாகப் பரப்புரை செய்துகொண்டே இருக்கும்போது, மக்களிடம் சிந்தனை மாற்றம் ஏற்பட்டு, இந்த எண்ணிக்கை அதிகரிக்கும்.

பத்திரிகை நடத்துவதில் கடினமான சூழல் நிலவும் இந்தக் காலக்கட்டத்தில் ‘துளிர்’, ‘ஜந்தர் மந்தர்’ போன்ற அறிவியலுக்கென்றே பிரத்யேகமாக வெளிவரும் இதழ்கள் எப்படிச் சாத்தியமாகின்றன?

‘துளிர்’, ‘ஜந்தர் மந்தர்’ என இரண்டுமே வணிகப் பத்திரிகைகள் அல்ல. கடைகளில் கிடைக்காது. இந்த இதழ்கள் ஆரம்பம் முதல் இன்றுவரை தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் தன்னார்வலர்களால் மாணவர்களுக்கும் மக்களுக்கும் கொண்டு சேர்க்கப்படுகின்றன. அதனால், இன்றைய வணிகப் பத்திரிகைகளுக்கு ஏற்பட்டிருக்கும் தொய்வு துளிருக்கும் ஜந்தர் மந்தருக்கும் ஏற்படவில்லை.

எங்கள் எழுத்தாளர்களும் பணியாளர்களும் தன்னார்வத்துடன் மட்டுமே செயல்பட்டு, இந்த இதழ்களைக் கொண்டுவந்துகொண்டிருக்கிறார்கள். மக்கள் அறிவியல் இயக்கங்களில் கேரளத்தில் கேரள சாஸ்திர சாஹித்ய பரிஷத்தும் தமிழ்நாட்டில் தமிழ்நாடு அறிவியல் இயக்கமும் மட்டுமே இப்போதும் பத்திரிகைகளைக் கொண்டுவருகின்றன. தமிழ்நாட்டில் படைப்பிலக்கியம் சிறப்பாக இருப்பதைப் போலவே அறிவியல் இலக்கியமும் உருவாக வேண்டும்.

காலநிலை மாற்றம் போன்ற சமகாலப் பிரச்சினைகளை அறிவியல் இயக்கங்கள் எவ்வாறு எதிர்கொள்ள இருக்கின்றன?

‘மரம் வளர்ப்போம், மழை பெறுவோம்’ என்று கூறப்படுவதைப் போன்று காலநிலை மாற்றம் போன்ற பெரும் சூழலியல் பிரச்சினைகளை நாம் சுருக்கிவிட்டோம். இன்று மிகப் பெரிய பிரச்சினையாக இருப்பது காலநிலை மாற்றமே. லாஸ் ஏஞ்சலிஸில் காட்டுத்தீ பரவுவதை நாம் கண்டுகொள்ளாவிட்டாலும் சென்னையில் இரண்டு முறை வெள்ளம் வந்ததையாவது கருத்தில்கொள்ள வேண்டாமா? இந்தியாவைப் பொறுத்தவரை காலநிலை மாற்றத்தைப் புரிந்துகொள்வதற்கான, கையாள்வதற்கான பெரிய, நிலையான திட்டங்கள் ஏதும் அறிவியல் இயக்கங்களிடம் இல்லை. இது பற்றி இன்னும் நிறையப் பேசவும் செய்யவும் வேண்டும் என்பது மட்டும் உறுதி.

- தொடர்புக்கு: sujatha.s@hindutamil.co.in

SCROLL FOR NEXT