மதுரையைச் சேர்ந்த புகழ்பெற்ற ஒளிப்படக் கலைஞர் செந்தில்குமரன். மனித - உயிரின எதிர்கொள்ளல்; புலிகள் பாதுகாப்பு, புலிகள் காப்பகங்களைச் சுற்றியுள்ள மக்களின் வாழ்வாதாரப் பிரச்சினைகள்; தென்னிந்தியா, வட கிழக்கு மாநிலங்களில் மனித-யானை இணக்கமான வாழ்வு சார்ந்த பிரச்சினைகள் குறித்து ஒளிப்பட ஆவணங்களை உருவாக்கிவருகிறார்.
நேஷனல் ஜியாகிரபிக் சொசைட்டி, வேர்ல்டு பிரெஸ் போட்டோ, பிக்சர்ஸ் ஆஃப் தி இயர், ஜியாகிரபிகல் போட்டோகிராபர் ஆஃப் தி இயர், வேர்ல்டு ரிப்போர்ட் அவார்டு உள்ளிட்ட 20 சர்வதேச விருதுகளைப் பெற்றுள்ளார். அவருடனான நேர்காணல்:
பொறியாளராக இருந்த நீங்கள் எப்படி ஒளிப்படத் துறைக்குள் வந்தீர்கள்? - சின்ன வயதிலிருந்தே ஒளிப்படக் கலையில் ஆர்வம் இருந்தது. ஒளிப்படக் கலை என்றால், ஒளி, நிழல் ஆகியவற்றைக் கட்டுப்படுத்திப் படம் எடுப்பது என்றுதான் ஆரம்பத்தில் நினைத்துக்கொண்டிருந்தேன். தெரு ஒளிப்படக் கலை, மக்கள் சார்ந்த ஒளிப்படக் கலைக்குக் காஞ்சனை ஆர்.ஆர்.சீனிவாசன்தான் என்னைத் திருப்பினார்.
காட்டுயிர் ஒளிப்படங்களை எடுத்தால், மாற்றத்தை உருவாக்க முடியும் என்றார் ராஜபாளையம் டி.எஸ்.சுப்ரமணிய ராஜா. தெரு ஒளிப்படக் கலை போலவே, இதையும் அணுகினேன். காட்டுயிர் ஒளிப்படக் கலையில் மனிதர்கள், உயிரினங்கள் ஊடாடக்கூடிய விஷயங்கள், அதில் எழும் சிக்கல்கள், நிலப்பரப்பு, வாழிடத்தை மையப்படுத்திப் படங்களை எடுக்கத் தொடங்கினேன். இது எனக்குத் தனித்துவத்தை உருவாக்கியது.
உயிரினங்களை அழகாகப் படம் எடுப்பதைவிட அவற்றுக்கு மக்களோடு ஏற்படும் பிரச்சினைகளைப் பற்றி எப்போது படம் எடுக்க ஆரம்பித்தீர்கள்? - சின்ன வயதில் பிபிசியின் புலிகள் குறித்த ஆவணப்படத்தைக் கறுப்பு - வெள்ளைத் தொலைக்காட்சியில் பார்த்திருந்தேன். அந்தக் காட்சி இன்னும் மனதில் ஆழப் பதிந்திருக்கிறது. அது போன்ற ஒரு புலியைக் காட்டுக்குள் பார்க்க வேண்டும் என்பது என் ஆசையாக இருந்தது. 20-25 ஆண்டுகளாகப் புலியைப் பார்க்க அலைந்திருக்கிறேன்.
புலியைப் பார்க்கவே முடியாதோ என நினைத்தபோது, வால்பாறையில் ஊருக்குள் ஒரு புலி வந்துவிட்டதாக, கால்நடை மருத்துவர் கலைவாணன் அழைத்தார். வனத் துறையின் ஆவணப்படுத்தும் பணிக்காக என்னையும் அழைத்துச்சென்றார். மயக்க ஊசி போட்டுப் புலியைப் பிடித்துக் காட்டுக்குள் விடுவதே திட்டம்.
அப்போதுதான் முதன்முதலில் புலியைப் பார்த்தேன். அருகில் ஒரு பெரிய காடு, அந்தக் காட்டை விட்டுவிட்டு, ஊருக்குள் மாட்டுத்தொழுவம் அருகில் அது படுத்திருந்தது. மெலிந்துபோய், நடக்கவே முடியாமல் இருந்தது. அதன் பிறகு மனித - உயிரின எதிர்கொள்ளல் என்பது என் கவனக்குவிப்பு சார்ந்ததாக மாறியது. புலியை அழகாக மட்டும் படம் எடுக்கப் போகிறோமா, புலிக்குப் பின்னால் இருக்கும் பிரச்சினைகளை வெளிப்படுத்தும் படத்தை எடுக்கப்போகிறோமா என்கிற கேள்வி முக்கியம்.
ஒளிப்படக் கலைஞராக இயங்குவதற்குப் பதில், காட்டுயிர்ப் பாதுகாப்பு சார்ந்தே நான் இயங்குகிறேன். மனித-உயிரின எதிர்கொள்ளல் சார்ந்து வேலை பார்க்கும் ஆராய்ச்சியாளர்கள், யானையுடன் வேலை பார்க்கும் அஜய் தேசாய் போன்ற நிபுணர்களுடன் சேர்ந்து வேலை பார்த்திருக்கிறேன். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக இது சார்ந்த ஆவணப்படுத்துதல் மூலம் பிரச்சினைகளைப் பரவலாகக் கொண்டுசேர்க்க முயன்றுவருகிறேன்.
ஆட்கொல்லிப் புலிகள் குறித்துப் படம் எடுத்திருக்கிறீர்கள். இந்த விவகாரத்தில் மக்கள் பார்வை, வனத் துறையினர் பார்வைகள் முரணாக இருக்கின்றனவே... நகர்ப்புறத்தில் ஒரு வீட்டுக்குள் சாதாரண பாம்பு வந்தாலே பயப்படுகிறோம். காட்டை ஒட்டிய ஒரு பகுதியில் புலியோ சிறுத்தையோ யாரோ ஒருவரை அடித்துவிட்டால், அது எப்படிப்பட்ட பயத்தை மக்களிடையே ஏற்படுத்தும் என்பதைப் புரிந்துகொள்ள வேண்டும். மக்களின் பாதுகாப்பும் இந்த இடத்தில் முக்கியமாகிறது. மக்கள் மனதில் புலியைக் கொல்ல வேண்டும் என்கிற எண்ணம் வலுப்பட்டுவிடக் கூடாது.
அப்படித் தோன்றிவிட்டால், புலிகளுக்கு எதிரான மனோபாவம் நிலைபெற்றுவிடும். அதிலிருந்து மக்களை வெளியே கொண்டுவர வேண்டும். எனவே, ஊருக்குள் வந்துவிட்ட புலியை அப்புறப்படுத்துவதே முதல் நடவடிக்கையாக இருக்க வேண்டும். நகரங்களில் இருந்தபடி புலியைக் காப்பாற்ற வேண்டும் எனச் சொல்வது தவறு. புலிகளுக்கு அருகில் வாழும் மக்களிடம் அந்த மனோபாவத்தை உருவாக்கவே உழைக்க வேண்டும்.
கடைசியாக, டி 23 என்கிற புலியைக் கைப்பற்றும் திட்டத்தில் பங்கேற்றேன். 2021இல் மசினகுடி காட்டுப் பகுதியில் இது ஆட்களைக் கொன்றது. இதைப் பிடிக்க 21 நாள்களை வனத் துறை செலவிட்டது. 100-120 சதுர கி.மீ. பரப்பளவு உள்ள காட்டுக்குள், அது எங்கிருக்கிறது என்பதையே கண்டறிய முடியாது. இரண்டு, மூன்று முறை அதை நெருங்கிவிட்டோம். எங்கள் கண்ணில் 4-5 விநாடிகளுக்கே அது தென்பட்டது.
இதில் மயக்க ஊசி போட்டு எப்படி அதைப் பிடிக்க முடியும்? மிகவும் கஷ்டப்பட்டே அது பிடிக்கப்பட்டது. இந்தியாவில் 3,500 புலிகள் உள்ளன. இவற்றில் 2,300 புலிகள் மட்டுமே காடுகளுக்குள் உள்ளன. 1,200 புலிகள் காடுகளுக்கு வெளியே உள்ள கிராமங்களில் வாழ்கின்றன. இந்தப் புலிகளின் வாழ்க்கை, பழங்குடிகள், உள்ளூர் மக்களுக்கு உள்ள பிரச்சினைகள், இந்தக் கதைகளை வெளியே சொல்ல வேண்டுமென நான் நினைக்கிறேன்.
யானை-மனித எதிர்கொள்ளலில் யானை ஊருக்குள் வருவதைத் தடுக்க மரபு சார்ந்த, நவீனத் தடுப்பு முறைகள் என்னென்ன கையாளப்படுகின்றன? - இந்தியாவில் 16-20 மாநிலங்களில் யானைகள் வாழும் காடுகள் உள்ளன. யானைகள் குறிப்பிட்ட பருவ காலத்தில் நகரக்கூடியவை. அவற்றின் வழித்தடங்கள் அடைக்கப்படும்போது, அவை திசைமாறி ஊருக்குள் வருகின்றன. யானை ஒரு பகுதியில் இருந்து குறிப்பிட்ட வழித்தடம் வழியாக வேறொரு பகுதிக்குச் செல்லவே முனைகிறது.
சென்றடைய வேண்டிய பகுதிக்குச் சென்றுவிட்டால் பிரச்சினையில்லை. மனித-உயிரின எதிர்கொள்ளலில் இரு தரப்பினரின் நலனையும் பரிசீலித்து, இரு தரப்புக்கும் பாதிப்பைக் குறைக்கும் வகையில் செயல்பட வேண்டும். ஒரே நிலப்பரப்பில் யானைகள், மக்கள் இரு தரப்பினரும் வாழ்ந்தாக வேண்டியிருக்கும். இதன் அடிப்படையில் நீண்ட காலத்துக்குப் பலன் அளிக்கும் தகவமைப்புத் திட்டங்களை யோசிக்க வேண்டும்.
யானைகள் வயல் பகுதிக்கு வருவதைத் தடுக்க, திசைதிருப்ப உள்ளூர் மக்கள் முன்பு கையாண்ட முறைகள் ஆபத்தானவையாக, கொடூரமானவையாக இருந்தன. அந்த முறைகளால் மனிதர்களை வெறுக்கும் மனநிலை குட்டி யானைகளிடம் உருவாகிவிடும். அது வளர்ந்த பிறகு மனிதர்களைப் பார்த்தாலே விரட்டி வந்து அடிக்கும்.
யானைக்கு ஆபத்தை ஏற்படுத்தாமல் அவற்றின் வருகையைத் தடுக்க அறிவியல்பூர்வமாகவும், முறைசார்ந்தும் கையாள்வதற்கு நிறைய முறைகள் வந்துவிட்டன. சூரியசக்தி வேலியிடுவது நல்லதொரு முறை. காட்டு எல்லை, வயல் எல்லைகளில் எலுமிச்சை மரங்களை உயிர்வேலிகளாக வரிசையாக நட்டால், அவற்றின் வாசத்தால் யானை வருகை குறைகிறது என அசாம் விவசாயிகள் கூறுகிறார்கள்.
அதேபோல் நெல், கேழ்வரகுக்குப் பதில் மஞ்சள், கடுகு போன்ற மாற்றுப் பயிரிட்டாலும் யானை வருகை குறையும்.
அதேபோல் யானைகளைக் கண்காணித்து எச்சரிக்கை செய்யச் செயற்கை நுண்ணறிவு, உயிரினத்தின் உடல் வெப்பத்தை அடிப்படையாகக் கொண்டு இருட்டில் பார்க்கக்கூடிய ஒளிப்படக் கருவிகள் போன்ற வசதிகள் வந்துவிட்டன. கோவை வாளையாறு, ஓசூரில் இது செயல்படுத்தப்பட்டிருக்கிறது. அதேபோல் ட்ரோன், யானை நடக்கும்போது எழும் அதிர்வலைகளை வைத்து சமிக்ஞை கொடுக்கக்கூடிய கருவிகளும் வந்துள்ளன.
மனித - உயிரின எதிர்கொள்ளலில் இரு தரப்பினரின் நலனையும் உறுதிப்படுத்துவது சாத்தியமா? - பொதுவாக நகர்ப்புற மக்களும், வெளிநாட்டினரும் புலிகளுக்கு ஆதரவாகவே பேசுவார்கள். அது அழியும் நிலையில் இருக்கிறது, வேட்டையாடப்படுகிறது, காட்டில் இடமில்லை, இரை குறைந்துவிட்டது போன்றவற்றுக்குக் காரணமாகவோ எதிர்நிலையிலோ பழங்குடிகள் நிறுத்தப்படுவார்கள். அதேநேரம், பழங்குடிகள் முன்வைக்கும் நியாயமான காரணங்களை, வலி-வேதனைகளை ஒளிப்படங்களில் நான் பதிவுசெய்தேன்.
புலிகளின் பாதுகாப்பு முக்கியம் என்றாலும், பழங்குடிகளின் வலிகளையும் சேர்த்தே சொல்ல வேண்டும் என்பதே என் நோக்கம். மனிதர்களிடமிருந்து காட்டுயிர்களைப் பாதுகாக்க வேண்டுமென்றால், காட்டுயிர்களிடமிருந்து மனிதர்களைப் பாதுகாக்க வேண்டும். இரண்டும் ஒன்றை ஒன்று சார்ந்தவை.
புலிகளையும் பழங்குடிகளையும் எதிர் எதிர் நிலையில் நிறுத்துவதே தவறு. பழங்குடிகளுக்குப் பல கிராமங்களில் மின்சாரம், போக்குவரத்து என எந்த வசதியுமே இருக்காது. காடுகள், காடுகளைச் சுற்றி கனிமச் சுரங்கம், அணைக்கட்டுகள், சாலைகள் போன்றவற்றால் புலிகளுக்கான நிலப்பரப்பு சீரழிக்கப்படுகிறது. காடுகள் அழிக்கப்பட்டதற்கு அடிப்படைக் காரணம் நகர்மயத் தேவைகள்தான்.
சுரங்கம், அணை, சாலைகளால் நகர்ப்புற மக்கள்தான் பயன் பெறுகிறார்கள். புலிகளுக்கு முதன்மை /மறைமுக எதிரிகள் நாம்தான். பழங்குடிகள் அல்ல. நாம் வாழ்வதற்கு எவ்வளவு இயற்கை வளத்தைச் சீரழிக்கிறோம்? ஆனால், மோதல் காட்டு உயிரினங்களுக்கும் பழங்குடிகளுக்கும் நிகழ்கிறது.
மனித-உயிரின எதிர்கொள்ளலுக்குத் தீர்வுகாண, தடுப்பதற்குப் பல வேலைகள் நடைபெற்றுவருகின்றன. வேலியிடும் முறைகள், உள்ளூர் மக்கள் வனத் துறையுடன் இணைந்து முன்னெடுப்பவை, காப்பீட்டுத் திட்டங்கள், தொழில்நுட்பம் சார்ந்த முன்னெச்சரிக்கை அறிவிப்புத் திட்டங்கள் என 15 தீர்வுகளை ஆவணப்படுத்தி நான் வேலை பார்த்துவருகிறேன். இதற்கு நேஷனல் ஜியாகிரபிக் சொசைட்டி நிதிநல்கை அளித்துள்ளது. இந்தத் தீர்வுகளை மற்ற பகுதிகளுக்கும், கொள்கை வகுப்பாளர்கள், வனத் துறை, சமூகத்தினரிடம் தெரியப்படுத்துவது முக்கியம்.
- தொடர்புக்கு: valliappan.k@hindutamil.co.in