சிறப்புக் கட்டுரைகள்

நாவலும் சினிமாவும்

ஜெய்

அமெரிக்க எழுத்தாளர் கென் கேசியின் ‘ஒன் ஃப்ளு ஓவர் தி குக்கூ’ஸ் நெஸ்ட்’ (one flew over the cuckoo’s nest), பிப்ரவரி 1, 1962இல் வெளிவந்து பெரும் கவனம் பெற்ற நாவல். இந்த நாவல் இதே பெயரில் படமாகவும் வெளிவந்து வெற்றிபெற்றது. இந்த நாவலின் பாதிப்பில் ஒரு இந்தியப் படம் உள்ளிட்ட பத்துக்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகியுள்ளன.

இந்த நாவல் ஒரு மன நல விடுதியை மையமாகக் கொண்டது. அந்த மன நல விடுதிக்கு வந்துசேரும் ஒரு இளைஞன் அந்தச் சூழலையே மாற்றிவிடுகிறான். அங்குள்ள சட்ட திட்டங்கள் எல்லாம் தவிடுபொடியாகின்றன. அந்த மன நல மருத்துவமனையை ஆட்சிசெய்துவரும் ஒரு செவிலிக்கு இதெல்லாம் பிடிக்கவில்லை. அதனால் அவன் மெளனிக்கப்படுகிறான். மன நல மருத்துவமனையை ஒரு உருவகமாகக் கொண்டால் இந்தச் சூழலை எவற்றுடனும் ஒப்பிட்டுப் பார்க்கலாம். ஒரு வீட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம்; ஒரு நாட்டுடன் ஒப்பிட்டுப் பார்க்கலாம். மெக்மர்பி என்கிற அந்த இளைஞனின் வெள்ளந்தித்தனமும் துறுதுறுப்பும் நாவலில் சிறப்பாகச் சொல்லப்பட்டிருக்கும்.

இந்த நாவலின் பாதிப்பில் மலையாளத்தில் ப்ரியதர்ஷன் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் ‘தாளவட்டம்’ உருவாக்கப்பட்டது. இந்தப் படம் இந்தியத் தன்மைக்கு ஏற்றவாறு மாற்றியமைக்கப்பட்டிருக்கும். முன்பாதியில் நகைச்சுவை, பின்பாதியில் சென்டிமெண்ட், சோகமான முடிவு என்கிற அன்றைய ப்ரியதர்ஷன் பாணியில் இந்தப் படம் உருவாக்கப்பட்டிருக்கும். ஆனாலும், மூல நாவலில் உள்ள ஜீவனை இந்தப் படம் கைக்கொண்டிருக்கும். மன நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்படும் மோகன்லாலுக்கும் அந்த மருத்துவமனையின் மருத்துவர் கார்த்திகாவுக்கும் ஒரு காதல்.

ஏற்கெனவே ஒரு காதலால்தான் மனநலம் பாதிக்கப்பட்டு இந்த நிலைக்கு வந்திருப்பார் மோகன்லால். மீண்டும் காதல். மருத்துவமனையின் தலைமை மருத்துவரின் மகள்தான் கார்த்திகா. துறுதுறுவென மருத்துவமனையின் கட்டுப்பாடுகளுக்குள் நிற்காத மோகன்லால் மீது ஏற்கெனவே தலைமை மருத்துவருக்கு ஒவ்வாததன்மை இருக்கும். இந்தக் காதல் அவரை வில்லனாக்கிவிடுகிறது. இறுதியில் குணமடைந்த மோகன்லால் மின்சாரம் கொடுக்கப்பட்டு படுத்தபடுக்கையாக்கப்படுவார். அவர் காதலிக்கோ மனநலம் பாதிக்கப்பட்டுவிடும்.

SCROLL FOR NEXT