சிறப்புக் கட்டுரைகள்

புதிய அரசிடமிருந்து இலங்கை மக்கள் எதிர்பார்ப்பது என்ன?

ஜி.ராமகிருஷ்ணன்

அநுர குமார திசாநாயக்க இலங்கையின் அதிபராகப் பொறுப்பேற்று நான்கு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. தெற்காசிய நாடுகளில் நேபாளத்துக்கு அடுத்ததாக, இலங்கையில் இடதுசாரிக் கட்சியின் தலைமையில் (ஜேவிபி) ஆட்சி அமைந்துள்ளது.

இலங்கை வரலாற்றில், இதுவரை கண்டிராத அளவுக்கு 225 நாடாளுமன்றத் தொகுதிகளில் 159இல் தேசிய மக்கள் சக்தி கூட்டணி வெற்றிபெற்று, மூன்றில் இரண்டு பங்குக்கு மேல் இடங்களைப் பிடித்ததும், ராஜபக்‌ச, சஜித் பிரேமதாசா, ரணில் விக்ரமசிங்க போன்ற தலைவர்களை மக்கள் நிராகரித்ததும் நாம் அறிந்ததே. இன்றைய சூழலில், அநுர குமார அரசின் செயல்பாடுகள் குறித்துப் பேச வேண்டியது அவசியமாகிறது.

வெற்றியின் பின்னணி: கடந்த சில ஆண்டு​களில், அந்நியக் கடன் தவணைகளைக் கட்ட முடியாமல் இலங்கை அரசின் நிதி நிலைமை திவாலானது உண்மை. மூச்சு முட்டும் அந்நியக் கடன், விண்ணை முட்டும் விலைவாசி உயர்வு, தினமும் 13 மணி நேர மின்வெட்டு, அந்நியச் செலாவணி கையிருப்பில் வீழ்ச்சி ஏற்பட்டு உணவுப் பொருள்கள், உரம், பெட்ரோல், டீசல், மண்ணெண்ணெய் போன்ற அத்தி​யா​வசியப் பொருள்களை இறக்குமதி செய்ய முடிய​வில்லை.

நியூஸ் பிரின்ட் பற்றாக்​குறையால் கல்வி நிலையங்​களில் தேர்வுகள் ரத்து செய்​யப்​பட்டன. ராஜபக்ச அரசுக்கு எதிராக மக்களின் பேரெழுச்சி (அரகலய) ஏற்பட்டது. அதிகாரத்தில் இருந்த ராஜபக்ச குடும்பம் நாட்டை விட்டே ஓடியது. இப்பின்னணி​யில், மூன்று ஆண்டு​களுக்குப் பிறகு நடைபெற்ற தேர்தலில் அநுர குமார தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணி மகத்தான வெற்றியை ஈட்டியது. அதிலும் இம்முறை இலங்கை மக்கள் மதம், இனம், மொழி கடந்து வாக்களித்​திருந்​தார்கள்.

மக்களின் எதிர்​பார்ப்பு: ‘ஒரு செழிப்பான தேசம், ஓர் அழகான வாழ்க்கை’ என்கிற முழக்​கத்தை முன்வைத்து ஜேவிபி கட்சி தேர்தலைச் சந்தித்தது. ‘முந்தைய அரசு பன்னாட்டு நாணய நிதியத்​துடன் ஏற்படுத்திய ஒப்பந்தம் தொடரும் என்றாலும், மக்களுக்குப் பாதகமான வரியைக் குறைத்திட முயற்சி மேற்கொள்​ளப்​படும்’ என்றும், ‘அரசமைப்புச் சட்டத்தை விரைவாகத் திருத்தி, மாநிலங்​களுக்​கும், மாவட்​டங்​களுக்​கும், உள்ளாட்சி அமைப்பு​களுக்கும் அரசியல், நிர்வாக அதிகாரத்தை வழங்கி, அரசு நிர்வாகத்தில் மக்களின் பங்கேற்பை உத்தர​வாதப்​படுத்து​வோம்’ எனவும் ஜேவிபியின் தேர்தல் அறிக்கை உறுதி​யளித்தது.

இலங்கையின் மொத்த மக்கள்​தொகையில் 80 சதவீதத்​தினர் கிராமங்​களில் வசித்து​வரு​கின்​றனர். ஒரு பகுதி மக்கள் நகரங்​களில் வேலைசெய்​தா​லும், அவர்களின் வாழ்விடங்கள் கிராமங்களே. நாட்டின் மக்கள்​தொகை​யில், பெரும்​பகு​தி​யினர் முறைசாராத் தொழிலாளர் குடும்​பங்கள்.

மலையகத் தேயிலைத் தோட்டங்​களில் உள்ள தமிழர்​களின் வறிய நிலை துயரமானது. மக்கள்​தொகையில் 25 சதவீதத்​தினர் வறுமைக்​கோட்டுக்கும் கீழே உள்ளதாக அரசின் அதிகாரபூர்வ மதிப்பீடு கூறுகிறது. ஆனால், அரசு போட்ட கோடு வறுமைக்கோடு அல்ல, அது பட்டினிக்​கோடு. வறுமையில் உள்ளோர் எண்ணிக்கை அதைவிட அதிகம் என இலங்கைப் பொருளாதார வல்லுநர் ஒருவர் குறிப்​பிடு​கிறார். மேலும், இலங்கையில் 50 சதவீதத்​துக்கும் மேலான மக்கள் வறுமையில் வாடுவ​தாகவும் அந்த வல்லுநர் கூறுகிறார்.

எதிர்​கொள்ளும் பிரச்சினை: பல தளங்களில் இலங்கை நெருக்​கடியைச் சந்தித்​துக்​கொண்​டிருக்​கிறது. அரசு கடைப்​பிடிக்கும் அரசியல் சமூகப் பொருளா​தாரக் கொள்கை உள்நாட்டின் வளர்ச்​சிக்கு அடிப்​படை​யானது என்றாலும், அரசினுடைய வெளியுறவுக் கொள்கைக்கும் முக்கியப் பங்குள்ளது. இலங்கை அதிபர் அநுர குமார, இந்தியப் பிரதமர் மோடியைச் சந்தித்து, இரு நாடுகளுக்கும் இடையில் சுமுகமான உறவு நீடிக்கும் என்பதை உத்தர​வாதப்​படுத்​தி​னார்.

பல ஒப்பந்​தங்​களும் கையெழுத்தாகி உள்ளன. இதைப் போலவே, சீனாவுக்கும் சென்று அந்நாட்டு அதிபர் ஷி ஜின்பிங்கைச் சந்தித்து அநுர குமார உரையாடி​யிருக்​கிறார். இலங்கையின் பொருளாதார வளர்ச்​சிக்கு சீன அரசு உதவி செய்யும் என்கிற அடிப்​படை​யில், இரு தரப்பு ஒப்பந்​தங்​களும் உருவாக்​கப்​பட்​டுள்ளன. 10 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்​பிலான முதலீட்டை இலங்கையில் சீன நிறுவனங்கள் செய்ய​வுள்ளன என்பது குறிப்​பிடத்​தக்கது.

மக்களின் வாங்கும் சக்தி, வாழ்வா​தாரம், வாழ்க்கைத்தரம் ஆகியவற்றை உயர்த்திட தேசிய மக்கள் சக்திக் கூட்டணி அரசு எத்தகைய கொள்கையைக் கடைப்​பிடிக்​கப்​போகிறது என்பதை மக்கள் ஆவலோடு எதிர்​பார்த்திருக்​கிறார்கள். வறுமையில் வாடும் மக்களின் அன்றாட வாழ்க்கைச் செலவை சில மாதங்​களில் குறைத்​திட எந்த அரசாலும் தீர்வு காண முடியாது என்றாலும், இதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கையை அரசு தொடங்க வேண்டும் என எதிர்​பார்க்​கிறார்கள்.

இலங்கை விடுதலை பெற்ற​போது, பிரிட்டிஷ் காலனி​யா​திக்க அரசு விடுதலைக்​காகப் போராடிய மக்களின் கைகளுக்கு அதிகாரம் சென்று​விடக் கூடாது என்பதில் உறுதியாக இருந்தது. சமூகப் பொருளா​தாரக் கட்டமைப்பின் அதிகாரத்தை மேல்தட்டில் இருந்​தவர்​களிடமே காலனி​யா​திக்க அரசு ஒப்படைத்தது.

கடந்த காலத்தில் முதலா​ளித்துவ அரசியல் கட்சிகள் கடைப்​பிடித்த நவீன, தாராளமயப் பொருளா​தாரக் கொள்கை​களி​லிருந்து விலகி, மக்கள் நலன்காக்கும் மாற்றுக்​கொள்கையை இடதுசாரி அரசான தேசிய மக்கள் சக்தி அரசு நடைமுறைப்​படுத்தும் என மக்கள் எதிர்​பார்க்​கிறார்கள்.

தமிழர்கள் பிரச்சினை: நாட்டின் அனைத்துப் பகுதி​களுக்​கும், அனைத்து இனத்தைச் சார்ந்த மக்களுக்​கும், அனைத்து சமூகப் பொருளா​தாரப் பிரிவினருக்கும் உரிய அரசியல், சமூக, பொருளா​தாரக் கொள்கைகளை இதுவரையில் இலங்கையை ஆண்ட எந்த அரசும் கடைப்​பிடிக்க​வில்லை. உள்நாட்டுப் போர் முடிவடைந்து 15 வருடங்கள் ஆன பின்பும், இலங்கைத் தமிழர் பிரச்​சினைக்கு இன்னும் முழுமையான தீர்வு காணப்​பட​வில்லை, அதிகாரப் பரவல் நடைபெற​வில்லை. நாடாளு​மன்றத் தேர்தலுக்கு முன்பு தமிழர் பகுதியில் அநுர குமார உரையாற்றிய​போது, அவர் அளித்த வாக்குறுதி முக்கி​யத்துவம் வாய்ந்தது.

“இதுவரை ஆட்சி செய்தவர்கள் தமிழர்​களுக்குப் போதுமான அளவில் உதவவில்லை. ராணுவத்​தா​லும், பல்வேறு அரசுத் துறைகளாலும் கைப்பற்​றப்பட்ட நிலங்களை ஒப்படைக்க நடவடிக்கை எடுப்​பேன்” எனவும் உறு​தி​யளித்​தார். இதன் அடிப்​படை​யில்தான் தமிழர்கள் வாழும் பகுதி​களிலும் தேசிய மக்கள் சக்தி கூட்டணி பெரும்​பான்​மையாக வெற்றி​பெற்றது.

சமீபத்தில் விழுப்பு​ரத்தில் நடைபெற்ற மார்க்​சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24ஆவது மாநில மாநாட்​டில், இலங்கைத் தமிழர் பிரச்​சினை​களுக்குத் தீர்வு காணக் கோரிக்கை​விடுத்துத் தீர்மானம் நிறைவேற்​றப்​பட்டது. இலங்கையில் மாகாணங்​களுக்கு அதிகாரப் பரவல் – கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, நிலம், காவல் துறை போன்ற அம்சங்​களில் மாகாண அரசுகளுக்கு அதிகாரம் வழங்கப்பட வேண்டும் எனவும் அதில் வலியுறுத்​தப்​பட்​டுள்ளது.

நெருக்கடி மிகுந்த பின்னணியில் இடதுசாரிக் கட்சித் தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கூட்டணியை இலங்கை மக்கள் ஆட்சியில் அமர்த்தி​யுள்​ளனர். மக்களின் வாழ்வா​தாரம், வாழ்க்கைத் தரம் உயர்ந்திட, இனப் பிரச்​சினை​களுக்கு விரைந்து தீர்வுகாண வேண்டும் என்று மக்கள் எதிர்​பார்க்​கிறார்கள். தாமதமானால் உலகின் பல நாடுகளில் ஏற்பட்​டதுபோல் மக்கள் மத்தியில் உருவாகும் அதிருப்​தியை, பிற்போக்கு​வா​திகள் பயன்படுத்​திக்​கொள்ளும் ஆபத்து ஏற்படலாம். இச்சூழலில், புலம்​பெயர்ந்த இலங்கைத் தமிழர் கவிஞர் சேரன் ஒரு பேட்டியில் கூறிய கருத்து பொருள் பொதிந்த ஒன்று.

“இந்த மக்களாட்​சியில் நியாயமான, சமத்துவமான ஒரு தீர்வை வழங்கி, எல்லாரையும் இணைத்​துக்​கொள்​வதற்கு ஒரு வாய்ப்​பிருக்​கிறது. இந்த வாய்ப்பை அரசு தவறவிட்​டால், இது போன்ற வாய்ப்பு இனிமேல் கிடைக்​காது, வராது.” கவிஞர் சேரனின் கவலையையும் எச்சரிக்கை​யையும் இலங்கையின் இடதுசாரி அரசு கவனத்தில் கொண்டு செயல்பட வேண்டும்​.

- தொடர்புக்கு: grcpim@gmail.com

SCROLL FOR NEXT