சிறப்புக் கட்டுரைகள்

சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி 2025: இலக்கிய முகவர்களாகக் களமிறங்கும் இளம் படை

ஜெய்

சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் இலக்கிய முகவர்களாக இளம் படை களமிறங்கவுள்ளது. தமிழ்நாடு அரசு இளைஞர்களைத் தேர்வுசெய்து, பயிற்சி கொடுத்துப் புத்தகக் காட்சிக்குத் தயார்ப்படுத்தும் அரும்பணியைச் செய்துள்ளது. இந்திய, சர்வதேசப் பதிப்பாளர்களுடன் தங்கள் பேச்சுவார்த்தையை இவர்கள் ஏற்கெனவே தொடங்கிவிட்டனர். அவர்களில் சிலரைப் பற்றிய அறிமுகம்:

தேன்மொழி: ஓராண்டாக இலக்கிய முகவராகப் பணியாற்றிவருகிறார். தமிழின் மூத்த எழுத்தாளர் கி.ராஜநாராயணனின் ‘கோபல்ல கிராமம்’. ‘கோபல்லபுரத்து மக்கள்’ ஆகிய இரு நாவல்களுக்கான உரிமங்களை வைத்திருக்கிறார். இவை அல்லாமல் சு.தமிழ்ச்செல்வியின் இரு நாவல்கள் உள்ளிட்ட நான்கு எழுத்தாளர்களின் உரிமங்களையும் வைத்திருக்கிறார். கிராவின் நாவலை மலையாளத்தில் மொழிபெயர்க்க வெற்றிகரமான முகவராகச் செயல்பட்டுள்ளார்.

சென்ற ஆண்டு சிறார் இலக்கியம், புனைவிலக்கியம், கட்டுரைகள் எனப் பல ஆக்கங்களைக் கையாண்டுள்ளார். இம்முறை ஏதாவது ஒன்றைக் கையாள்வதுதான் வெற்றிக்கு வழிவகுக்கும் என நினைக்கிறார். உதாரணமாக, மானுடவியல் சார்ந்த நாவல்களுக்கு சு.தமிழ்ச்செல்வியைப் பரிந்துரைக்கலாம். அதுபோல் சர்வதேசப் பதிப்பாளர்களின் விருப்பம் அறிந்து செயல்பட்டால் உரிமங்களை வெற்றிகரமாக விற்க முடியும் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

ரஞ்சித் ராஜன்: எழுத்தாளர் சார்வாகனின் கதைகளுக்கான உரிமங்களை வைத்திருக்கும் ரஞ்சித்துக்கு இதுதான் முதல் அனுபவம். தமிழ்நாடு பாடநூல் வெளியீட்டுக் கழகத்துக்காக இரு சிறார் நூல்களை மொழிபெயர்த்துள்ளார்.

தனக்குப் பிடித்த எழுத்தாளர்களின் நூல்களை ஆங்கிலத்தில் கொண்டுசேர்க்கும் முயற்சியில் களமிறங்கியுள்ளார். ஆய்வாளர் ஸ்டாலின் ராஜாங்கத்தின் மூன்று கட்டுரைத் தொகுப்புகளுக்கான உரிமங்களையும் வைத்துள்ளார். பன்னாட்டுப் புத்தகக் காட்சி ஒருங்கிணைத்த முகவருக்கான பயிற்சி, நம்பிக்கை அளிக்கக்கூடியதாக இருந்ததாகச் சொல்கிறார்.

தாளமுத்துகுமார்: சென்ற ஆண்டு நடைபெற்ற பன்னாட்டுப் புத்தகக் காட்சிவழி இரு நூல்களை விற்ற அனுபவம் உள்ளவர் தாளமுத்துகுமார். புலம்பெயர் ஈழ எழுத்தாளர் ஷோபாசக்தியின் ‘கொரில்லா’ நாவலின் மலையாள மொழி உரிமத்தையும் எழுத்தாளர் நக்கீரனின் ‘காடோடி’ நாவலின் துருக்கிமொழி உரிமத்தையும் சென்ற ஆண்டு விற்றுள்ளார்.

சூழலியல் எழுத்தாளர் பிரபாகர் வீரஅரசுவின் நேபாள் பயணம் சார்ந்த நூலை நேபாள மொழியில் விற்றுள்ளார். இம்முறை ஷோபாசக்தியின் நாவலை மற்ற மொழிகளில் விற்க முயலவிருப்பதாகச் சொல்கிறார். அதுபோல் லிவிங் ஸ்மைல் வித்யாவின் ‘நான் வித்யா’ நூலுக்கான உரிமத்தையும் விற்கப் பேச்சுவார்த்தை நடத்திவருகிறார். சென்னைப் புத்தகக் காட்சிக்கு ஆங்கிலப் பதிப்பகங்கள் வராதது ஒரு குறை என்கிறார்.

வி.ஐஸ்வர்யா: ந.பிச்சமூர்த்தியின் கதைகளுக்கான உரிமத்தை வைத்திருக்கிறார் ஐஸ்வர்யா. இவர் சென்ற ஆண்டு பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் பங்கேற்ற அனுபவம் உள்ளவர். இலக்கியத்தின் மீதான ஆர்வம் காரணமாக இந்தத் துறையைத் தேர்ந்தெடுத்ததாகச் சொல்கிறார். சென்ற ஆண்டு பல நூல்களுக்கான உரிமங்களை விற்றிருக்கிறார்.

ஆனால், அந்த நூல்கள் நூலாக்கம் ஆவதில் சிறு சுணக்கம் உள்ளதாகச் சொல்கிறார். அந்த நூல்கள் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்படாதது ஒரு காரணம். மற்றபடி இது தனக்கு நல்அனுபவமாக இருப்பதாகச் சொல்கிறார்.

கீர்த்திவாசன்: மொழிபெயர்ப்பாளரான கீர்த்திவாசனுக்கு இதுதான் முதல் பன்னாட்டுப் புத்தகக் காட்சி அனுபவம். அரசு ஒருங்கிணைத்த பயிற்சியில் எந்த மாதிரியான புத்தகங்களுக்குச் சந்தை இருக்கிறது என்பதைப் பற்றிய ஒரு புரிதல் ஏற்பட்டது என்கிறார் இவர். குறு நாவல்கள், க்ரைம் நாவல்கள், சிறார் நாவல்கள் போன்றவற்றுக்குக் கிராக்கி இருப்பதாகச் சொல்கிறார்.

நரனின் ‘பராரி’, முத்துராசா குமாரின் ‘கங்கு’ ஆகிய ஆக்கங்களுக்கான உரிமங்களை வைத்திருக்கிறார். இந்திய மொழிகளில் இந்த ஆக்கங்களை விற்பதற்கான பேச்சுவார்த்தையைத் தொடங்கியிருக்கிறார்.

SCROLL FOR NEXT