சிறப்புக் கட்டுரைகள்

அமெரிக்கக் காட்டுத் தீ: காலநிலை மாற்றம் காரணமா?

நாராயணி சுப்ரமணியன்

அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தின் லாஸ் ஏஞ்சலீஸ் நகரத்தில் பரவியது மிக மோசமான காட்டுத்தீ. இதுவரை 40க்கும் மேற்பட்டோர் இந்தப் பேரிடரால் இறந்திருக்கிறார்கள். 12,000 கட்டிடங்கள் உள்படப் பல கட்டுமானங்கள் சேதமடைந்திருக்கின்றன. 1.80 லட்சம் பேர் வேறு இடத்தில் தங்கவைக்கப்பட்டிருக்கிறார்கள். 163 சதுர கிலோமீட்டர் பரப்பளவு தீக்கிரையாகியிருக்கிறது. 200 பில்லியன் அமெரிக்க டாலர்களுக்கும் (ரூ.17,29,581 கோடி) அதிகமான பொருள்சேதம் ஏற்பட்டிருக்கிறது. நச்சுப்புகையின் பாதிப்பிலிருந்து தப்பிக்க வீட்டிலேயே இருக்குமாறு மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள். தீயை அணைக்கும் பணியில் வீரர்கள் இரவும் பகலும் போராடிக்கொண்டிருக்கிறார்கள்.

​காரணம் என்ன? - அமெரிக்​கா​விலேயே மிகவும் அடர்த்தியான மக்கள்தொகை கொண்ட பெருநகரங்​களில் லாஸ் ஏஞ்சலீஸ் முதன்​மை​யானது. ஆகவே, பொருள்சேதமும் உயிரிழப்பும் அதிகமாக இருக்​கிறது. கலிஃபோர்​னி​யாவில் அவ்வப்போது காட்டுத்தீ நிகழ்வுகள் ஏற்படும் என்றாலும் இது மிகவும் தீவிர​மானது. பொதுவாக, ஜனவரி மாதம் என்பது காட்டுத்தீ ஏற்படும் காலக்​கட்​டமும் அல்ல. இதன் பின்னணியில் என்ன நடந்தது என்பதைப் பல வல்லுநர்கள் ஆராய்ந்​திருக்​கிறார்கள்.

சாண்டா அனா என்பது பொதுவாக கலிஃபோர்​னி​யாவின் கடற்கரையை நோக்கி வீசும் ஒருவகைப் புயல்​காற்று. ஓர் ஆண்டில் பல சாண்டா அனா நிகழ்வுகள் ஏற்படலாம். இம்முறை ஏற்பட்ட காட்டுத்​தீயின் பரவலுக்கு சாண்டா அனா ஒரு முக்கியமான காரணம். அதிலும் குறிப்பாக மணிக்கு 128 கிலோமீட்டர் வேகத்தில் ஒரு சூறைக்​காற்றாக சாண்டா அனா வீசியடித்​திருக்​கிறது. காட்டுத்தீ எல்லா இடங்களிலும் வேகமாகப் பரவுவதற்கு இது ஒரு முக்கியக் காரணமாக அமைந்​து​விட்டது. காட்டுத்தீ பரவிய பின்னரும் சாண்டா அனாவின் வேகம் குறையாததால் தீயை அணைப்​பதும் சவாலாகி​யிருக்​கிறது. 2021ம் ஆண்டு ‘சயின்ஸ்’ இதழில் சாண்டா அனா பற்றிய ஒரு விரிவான ஆய்வுக் கட்டுரை வெளியானது. இதில் 71 ஆண்டு கால சாண்டா அனா தரவுகள் ஆராயப்​பட்டன. வருடாந்திர சாண்டா அனாவின் அம்சங்​களைத் தொகுத்துப் பார்த்த ஆய்வுக் குழுவினர், சமீபகாலமாக சாண்டா அனா ஏற்படும் காலக்​கட்டம் மாறியிருக்​கிறது என்பதைக் கண்டறிந்​தனர். குறிப்பாக டிசம்பர், ஜனவரி மாதங்​களில் சாண்டா அனா நிகழ்வுகள் அதிகரித்​திருக்​கின்றன.

பொதுவாக, சாண்டா அனா ஏற்படும்போது காற்றில் ஈரப்பதம் இருந்தால் அதன் தீவிரம் குறையும். ஆனால், இம்முறை அது நிகழவில்லை. வழக்க​மாகக் கலிஃபோர்​னி​யாவில் ஜனவரி மாதத்தில் மழை பெய்யும். ஆனால், இந்த முறை வறண்ட வானிலையே நிலவியது. அது மட்டுமில்​லாமல் கலிஃபோர்​னி​யாவின் மழைக் காலமும் சரிவர அமையவில்லை. வருடாந்திர மழைப்​பொழிவில் இரண்டு விழுக்​காட்டுக்கும் குறைவான மழையே பெய்திருக்​கிறது. இந்தச் சூழல் சாண்டா அனாவுக்குச் சாதகமாக அமைந்​து​விட்டது.

வெப்பநிலை அதிகரிப்பு: இன்னொரு​புறம், 2022-2024 காலக்​கட்​டத்தில் கலிஃபோர்​னி​யாவின் குளிர்​காலத்தில் எதிர்​பாராத அளவுக்கு அதீத மழைப்​பொழிவு இருந்தது. இதனால் அந்த மாகாணம் முழுவதுமே தாவரங்கள் நன்கு வளர்ந்​திருந்தன. காட்டுத்தீ நிகழ்வு தொடங்​கியதும், அதன் அடுத்​தடுத்த பரவலுக்கு இந்த அடர் தாவரங்கள் காரணமாகி​விட்டன.

எதிர்​பாராத அளவுக்கு அதீத மழையும் வறண்ட காலக்​கட்​டமும் மாறிமாறி ஏற்படுவது மழை-காலநிலை சட்டென மாறும்​தன்மை (Hydroclimatic volatility) என்று அழைக்​கப்​படு​கிறது. மழை சார்ந்த காலநிலை எதிர்​பாராத விதத்தில் இரண்டு துருவங்களாக அடுத்​தடுத்து ஏற்படுவதே இப்படிக் குறிப்​பிடப்​படு​கிறது. அவ்வப்போது இது நடக்கும் என்றாலும் சமீபகாலமாக இது அதிகரித்​திருக்​கிறது. 20ஆம் நூற்றாண்டின் மத்தியி​லிருந்து இப்போதுவரை உள்ள காலக்​கட்​டத்தில் இந்த நிகழ்வுகள் 30% அதிகரித்​திருக்​கின்றன. உலகளாவிய சராசரி வெப்பநிலை அதிகரித்​திருப்பதே இதற்குக் காரணம் என்றும், வெப்பநிலை உயரும்போது இதுபோன்ற நிகழ்வுகள் இன்னும் பல்கிப் பெருகும் என்றும் ‘நேச்சர்’ இதழில் ஜனவரி 2025இல் வெளியான ஆய்வுக் கட்டுரை தெரிவிக்​கிறது.

எதிர்​பாராத பேரிடர்: வறண்ட சூழலும் பெருமழையும் அடுத்​தடுத்து ஏற்படும்போது பேரிடர்கள் நிகழ்​வதற்கான சாத்தியம் அதிகரிக்​கும். கலிஃபோர்​னி​யா​விலும் இதுவே நடந்திருக்​கிறது. மழைக்​காலத்தில் செழித்து வளர்ந்த தாவரங்கள், வறண்ட காலத்தில் ஏற்பட்ட காட்டுத்​தீயின் எளிதான பரவலுக்கு உதவின. இதனால் காட்டுத்​தீயின் பரவல் இரண்டு மடங்கு அதிகரித்​திருப்பதாக ஓர் ஆய்வு சொல்கிறது. ஒருவேளை வறண்ட காலக்​கட்​டத்​துக்குப் பிறகு பெருமழைக்​காலம் வந்தால் அதுவும் ஆபத்தையே ஏற்படுத்​தும். ஈரப்பதம் வெகுவாகக் குறைந்​ததால் வறண்டு வெடித்​திருக்கும் பூமியில் வெள்ள​மாகப் பாயும் மழைநீரால் உடனே உள்புக முடியாது. அது எதிர்​பாராத தீவிர வெள்ளமாக (Flash floods) மாற சாத்தியம் உண்டு.

ஒரே நேரத்தில் இரண்டு பேரிடர்கள் ஏற்படு​வது கூட்டுப் பேரிடர் (Compound disaster) என்று அழைக்​கப்​படு​கிறது. கலிஃபோர்​னி​யாவைப் பொறுத்தவரை சாண்டா அனா புயலோடு வறண்ட சூழலும் சேர்ந்​து​கொண்​டதால் பாதிப்பு பல மடங்காகி​விட்டது. அது மட்டுமல்​லாமல், ஜனவரி மாதத்தில் பொதுவாகக் காட்டுத்தீ நிகழ்வுகள் இருக்காது என்பதால், தீயணைப்புப் படையினர் தயார் நிலையில் இருக்க​வில்லை. ஆகவே, மீட்புப் பணியை அவர்கள் தொடங்​கு​வ​திலும் தாமதம் ஏற்பட்​டிருக்​கிறது. இனி வரும் காலத்தில் இதுபோன்ற கூட்டுப் பேரிடர்​களும் எதிர்​பாராத இயற்கை மாறுபாடு​களும் அதிகரிக்கும் என்று காலநிலை வல்லுநர்கள் கணித்​திருக்​கிறார்கள். இவற்றை நாம் எவ்வாறு எதிர்​கொள்​ளப்​போகிறோம் என்பது மிகப்​பெரிய கேள்வி.

காலநிலை மறுப்​பாளரான டொனால்டு டிரம்ப், அமெரிக்​காவின் அதிபராக அமர்வதற்கு முன்பாகவே காலநிலை மாற்றத்தின் கைரேகை அழுத்​த​மாகப் பதிந்​திருக்கும் ஒரு பேரிடரை எதிர்​கொண்​டிருக்​கிறார். எங்கேயோ மூன்றாம் உலக நாடுகளில் நடக்கும் பாதிப்​பாகக் காலநிலை மாற்றத்தைப் பார்த்த அமெரிக்​கர்கள் பலரும், இயற்கைச் சீற்றத்தால் தங்களது வீடுகளை விட்டு வெளியேறிக்​கொண்​டிருக்​கிறார்கள். கலிஃபோர்​னி​யாவில் காட்டுத்தீ அடிக்கடி நிகழும் என்றாலும் எதிர்​பாராத காலத்​திலும் தீவிரத்​துடன் இது நிகழ்ந்​திருப்​பதால் மாகாண நிர்வாகம் திணறிக்​கொண்​டிருக்​கிறது. 2024ஆம் ஆண்டில் உலகளாவிய வெப்பநிலை அதிகரிப்பு 1.5 டிகிரி செல்சியஸை எட்டி​விட்டதாக அதிகாரபூர்வமாக அறிவிக்​கப்​பட்​டிருக்​கிறது. இந்நிலை​யில், இந்த ஆண்டின் தொடக்​கத்​திலேயே இப்படி ஒரு பேரிடரை உலகம் சந்தித்​திருக்​கிறது. இது வரப்போகும் மோசமான காலத்​துக்கான முன்னோட்டமாக இருந்​து​விடக் கூடாது என்பதே காலநிலை வல்லுநர்​களின் கவலை.

அதேநேரம், அதைத் தீவிரமடையச் செய்யும் செயல்​பாடுகளை நாம் மாற்றிக்​கொள்ளத் தயாராக இல்லாத நிலையில், இதுபோன்ற எதிர்​பாராத பெரும் பேரிடர்கள் உலகை ஆட்​டிப்​படைக்கப் ​போகின்றன என்​பதையும் ​நாம் மறந்​துவிடக் கூ​டாது.

SCROLL FOR NEXT