சிறப்புக் கட்டுரைகள்

ஜெயச்சந்திரன்: கனிவான காதல் குரல்! | அஞ்சலி

வெ.சந்திரமோகன்

ஓர் இசைக் கலைஞர் மறையும்போது, அவரைப் பற்றிய உரையாடல்களில் - சில நேரம் மிகை மதிப்பீடுகள் அல்லது பொருத்தமில்லாத ஒப்புமைகள் இடம்பெறுவது உண்டு. சமீபத்தில் மறைந்த பாடகர் பி.ஜெயச்சந்திரன் குறித்தும் இப்படியான உரையாடல்கள் நிகழ்ந்தன.

ஜெயச்சந்திரனுக்கு அஞ்சலிக் குறிப்பு எழுதிய கவிஞர் வைரமுத்து, ஜெயச்சந்திரன் பாடிய சில பாடல்களைப் பட்டியலிட்டு நெகிழ்ந்ததுடன் அவரை ‘ஏழைகளின் யேசுதாஸ்’ என்றும் குறிப்பிட்டிருந்தார். ஃபேஸ்புக் நண்பர் ஒருவர், யேசுதாஸைவிடவும் நல்ல பாடகர் ஜெயச்சந்திரன் என்று எழுதியிருந்தார். ஜெயச்சந்திரன் ஒருபோதும் இப்படியான ஒப்பீடுகளை விரும்பியதில்லை.

தனித்துவம் மிக்​கவர்: ஜெயச்​சந்​திரன் பாடிய சில பாடல்களை யேசு​தாஸ் பாடிய​தாகக் கருதிக்​கொள்​பவர்கள் உண்டு. ‘காதல் மயக்​கம்’ (புது​மைப் பெண்) ஓர் எடுத்​துக்​காட்டு. யேசு​தாஸ் பாடிய ‘உறவுகள் தொடர்​கதை’ பாடல் ஜெயச்​சந்​திரன் பாடியது​தான் எனச் சவால் விட்​ட​வர்கள் உண்டு. இந்த ஒப்பு​மை​கள், குழப்​பங்கள் தவிர்க்க முடி​யாதவை​தான். ஆனால், ஜெயச்​சந்​திரன் இதில் தெளிவாக இருந்​தார்.

“எங்​களுக்கு முன்னர் கமுகாரா, உதயபானு, பி.பி.ஸ்ரீனி​வாஸ், ஏ.எம்.​ராஜா போன்ற திறமையான பாடகர்கள் இருந்​தார்​கள். ஆனால், நாங்கள் சொந்த பாணி​யில்​தான் பாடினோம்.” இதில் அவர் தன்னுடன் யேசு​தாஸை​யும் சேர்த்தே ‘நாங்​கள்’ எனக் குறிப்​பிட்​டார். இசைக் கலைஞர்​களின் செயல்​பாடு​களில் இருக்​கும் பொருத்​தப்​பாடுகளை ஒப்பிடலாம். ஆனால், அவர்​களின் தனித்​திறன்களை ஒப்பிட்டுவிட முடி​யாது. அதிலும் ஜெயச்​சந்​திரனின் தனித்துவம் மிக முக்​கிய​மானது.

திரையுல வருகை​யில் யேசு​தாஸ் மூத்​தவர் என்றாலும், அவரும் ஜெயச்​சந்​திரனும் இசையுல​கில் ஏறத்தாழ சமகாலத்​தில் உருவானவர்​கள். யேசு​தாஸின் இசைப் பயணத்​தில் பெரிய தொய்​வுகள் இருந்​த​தில்லை. ஆனால், ஜெயச்​சந்​திரன் ஏனோ சில காலம் திரைப் பாடல்​களி​லிருந்து ஒதுங்கி​யிருந்​தார். சில காரணங்​களால் வாய்ப்பு கிடைக்க​வில்லை என்றும் பேசப்​பட்​டது. ஆனால், இசையிட​மிருந்து தான் ஒதுங்கி​யிருக்க​வில்லை என்றும் மேடை நிகழ்ச்​சிகள், பக்திப் பாடல்கள் என்று இயங்​கிக்​கொண்​டிருந்​த​தாக​வும் பின்​னாட்​களில் அவர் குறிப்​பிட்​டார்.

2024 ஜூலை​யில், ஜெயச்​சந்​திரனின் உடல்​நிலை குறித்த வதந்​திகள் பரவிய​போது அதை மறுத்த அவரது குடும்பத்​தினர் முதுமை காரணமாக ஏற்பட்​டிருக்​கும் பிரச்​சினை​தான் என்று விளக்கம் அளித்​தனர். மலையாளப் பாடலாசிரியர் ரவி மேனன் அப்போது ஒரு தகவலைக் குறிப்​பிட்​டிருந்​தார் - “ஜெயச்​சந்​திரன் இப்போதும் தனது நண்பர்​களுடன் அலைபேசி​யில் பேசிக்​கொண்​டு​தான் இருக்​கிறார். தனது உடல்​நலக் குறைவை இசை மூலம் கடந்​துவர அவர் முயல்​கிறார்.” ஒவ்வொரு இசைக் கலைஞரும் தன்னை மீட்​டெடுக்க இசையைப் பற்றிக்​கொண்​டிருப்​ப​தைத் தவிர வேறொன்​றும் செய்திருக்க முடி​யாது. ஜெயச்​சந்​திரனும் அதற்கு விதி​விலக்​கல்ல!

சமகாலப் பாடகர்கள் மீதும், புதிய தலைமுறை இசையமைப்​பாளர்கள் மீதும் ஜெயச்​சந்​திரன் கறாரான மதிப்​பீட்​டைக் கொண்​டிருந்​தார். வாய்ப்புகள் சார்ந்​தும் அவருக்​குச் சில வருத்​தங்கள் இருந்​த​தாகவே உணர முடிகிறது. பிரபலமான பாடகர் என்றாலும் அதிகப் பாடல்கள் பாடாதது அவரைப் பற்றிய சித்திரங்​களில் ஒன்று. எனினும், தனக்​குக் கிடைத்த வாய்ப்பு​களி​லும், எளிமையான வாழ்க்கை​யிலும் அவர் நிறைவான மனதுடனே வாழ்ந்​தார். விருதுகள், பட்டங்கள் குறித்து அவர் அதிக ஆர்வம் காட்​டிய​தில்லை. தான் ஒரு சோம்​பேறி என்று சொல்​லிக்​கொண்​டாலும், கைக்​கொண்ட பணியில் அவர் காட்டிய முனைப்பும் அர்ப்​பணிப்பும் மகத்​தானவை.

பாரம்​பரியமான இசைக் குடும்பத்​தில் பிறந்​திருந்​தா​லும் முறையாக இசையைக் கற்றுக்​கொள்ள​வில்லை என்கிற வருத்தம் ஜெயச்​சந்​திரனுக்கு இருந்​தது. எனினும், மலையாளத்​தில் ‘பாவ காயகன்’ என்ற பெயரைப் பெறும் அளவுக்​குப் பாடல்​களில் நுட்​பமான பாவங்​களை, உணர்ச்​சிகளை அவர் வெளிப்​படுத்​தி​னார். திரைப் பாடல்​களில் கதாபாத்​திரங்​களின் உணர்வு வெளிப்​பாடு முக்​கிய​மானது என்ப​தில் உறுதியாக இருந்​தார். திரை​யிசையைத் தொழில்​நுட்ப ரீதி​யில் மிகவும் உன்னிப்​பாகக் கவனித்​தார்.

இசையமைப்​பாளர்கள் எம்.எஸ்​.​விஸ்​வ​நாதன், ஜான்சன் ஆகியோர் மீது மிகுந்த மரியாதை வைத்​திருந்​தார். இளைய​ராஜா, ஏ.ஆர்​.ரஹ்​மான், வித்​யா​சாகர் போன்ற கலைஞர்களை அவர்​களின் தனித்​தன்​மையை முன்​வைத்​துப் போற்றி​னார். தேவை​யின்றி வேண்டு​மென்றே சிக்​கலாகப் பாடல்கள் உருவாக்​கப்​படு​வ​தில் அவருக்கு விருப்பம் இருந்​த​தில்லை. அதேவேளை​யில், குரல்களை நவீனத் தொழில்​நுட்​பத்​தில் பயன்​படுத்தி பாடலுக்​குப் புதிய பரிமாணம் சேர்த்த ஏ.ஆர்​.ரஹ்​மான் மீது ஜெயச்​சந்​திரனுக்கு நிறைய மதிப்பு இருந்​தது.

கனிவான குரல்: 1970களில் எம்.எஸ்​.​வி-​யின் இசையில் தமிழில் பாடத் தொடங்கி​யிருந்த ஜெயச்​சந்​திரனுக்கு ‘பொன்னென்ன பூவென்ன கண்ணே’ (அலைகள்), ‘வசந்​தகால நதிகளிலே’ (மூன்று முடிச்சு) போன்ற அழகான பாடல்கள் கிடைத்தன. அந்தா​திப் பாடலாக அமைந்த ‘ஆடி வெள்ளி தேடி உன்னை’ (மூன்று முடிச்சு) பாடலை அத்தனை இலகு​வாக, ருசி​யாகப் பாட மொழி மீதும் உச்சரிப்பு மீதும் ஜெயச்​சந்​திரன் கொண்​டிருந்த கவனம் மிக முக்​கிய​மானது.

இளைய​ராஜா​வின் வருகைக்​குப் பின்னர் ஜெயச்​சந்​திரனுக்கு அமைந்த பாடல்கள் தனித்த சுவையைக் கொண்​டிருந்தன. ‘ஒரு வானவில் போலே’ (காற்றில் வரும் கீதம்), ‘தவிக்​குது தயங்​குது’ (நதி​யைத் தேடிவந்த கடல்), ‘கீதா சங்கீதா’ (அன்பே சங்கீ​தா), ‘ராஜா பொண்ணு அடி வாடி​யம்மா’ (ஒரே முத்​தம்) போன்ற பாடல்களை உதாரணங்​களாகச் சொல்​லலாம். புகழ்​பெற்ற பாலிவுட் இசையமைப்​பாளர் சலீல் செளத்ரி தமிழில் ஒரு சில படங்​களுக்கே இசையமைத்​திருந்​தா​லும், ஜெயச்​சந்​திரனுக்கு அற்புதமான பாடல்​களைத் தந்தார்.

‘உள்​ளமெல்​லாம் தள்ளாடுதே’ (தூரத்து இடிமுழக்​கம்), ‘பூவண்ணம் போல நெஞ்​சம்’ (அழியாத கோலங்​கள்) ஆகிய பாடல்கள் இருவரும் தமிழுக்கு அளித்த அற்புதப் பரிசுகள். வழக்​கமான டூயட் பாடல்​களை​விட​வும், ஏதேனும் ஒரு விதத்​தில் நுட்​பமான உணர்வு வெளிப்​பாட்​டைக் கோரும் பாடல்கள் ஜெயச்​சந்​திரனுக்கு இயல்​பாகவே அமைந்தன.

புகழ்​பெற்ற ‘ராசாத்தி உன்ன’ பாடல் மிகப் பெரிய உதாரணம். இழந்​து​விட்ட தனது காதலின் நினை​வு​களைப் பாடலாக உருவாக்கி ஒரு கிராமத்​தையே தாலாட்டும் கதாபாத்​திரத்​துக்கு மிகப் பொருத்​த​மானதாக அமைந்​திருந்தது ஜெயச்​சந்​திரனின் குரல். காதலி மீது காதல் மட்டுமல்ல, கனிவும் கொண்​டிருக்​கும் நாயக​னின் குரல் என்றால் அதில் ஜெயச்​சந்​திரனுக்கு முன்னுரிமை என்ற விதியை இசையமைப்​பாளர்கள் பின்​பற்றி​யிருக்க வேண்​டும்.

எம்.எஸ்​.வி. இசையில் ஜெயச்​சந்​திரன் பாடிய, ‘நான் தாயு​மானவன் தந்தை​யானவன்’ (தாம்பத்யம் ஒரு சங்கீதம்) பாடலைக் கேட்​டிருப்​பவர்கள் இதை மறுபேச்​சின்றி ஒப்புக்​கொள்​வார்​கள். ‘தாலாட்டுதே வானம்’ (கடல் மீன்​கள்) பாடலில் இளைய​ராஜா​வின் வளமான இசைக்​கோவையை​யும் தாண்டி ஜெயச்​சந்​திரனின் கனிவான குரல் ஈர்க்​கும்.

‘சொன்னது நீதா​னா?’ படத்​தில் இளைய​ராஜா இசையில் ஜெயச்​சந்​திரன் பாடிய, ‘வெள்ளி நிலா​வினிலே தமிழ் வீணை வந்தது’ பாடலைக் கேட்டுப் பாருங்​கள். அதில் இருக்​கும் தந்தைமை​யின் உருக்கம் ஒரு கணமேனும் கண்ணில் நீரைக் கொணர்ந்​து​விடும். ஏ.ஆர்​.ரஹ்​மான் இசையமைத்த ‘ஒரு தெய்வம் தந்த பூவே’ பாடலிலும் அந்தத் தந்தைமை​யின் உருக்​கத்தை உணர முடி​யும்.

‘மார்பில் ஊரும் உயிரே’ என்று முடி​யும் பல்ல​வி​யில் ஜெயச்​சந்​திரனின் குரலில் இருக்​கும் நெகிழ்வு, தந்தை​களால் மட்டுமே உணரக்​கூடியது. ‘ரோசாப்பூ சின்ன ரோசாப்பூ’ (சூரிய​வம்​சம்) பாடலின் காதல் வடிவத்தை ஹரிஹரனுக்​கும், அதே பாடலின் சோக வடிவத்தை ஜெயச்​சந்​திரனுக்​கும் அளித்த எஸ்.ஏ.​ராஜ்கு​மார், ‘வானத்​தைப் போல’ படத்​தின் ‘காதல் வெண்​ணிலா கையில் சேருமா’ என்னும் காதல் பாடலை ஹரிஹரனுக்​கும், அதன் சோக வடிவத்தை ஜெயச்​சந்​திரனுக்​கும் அளித்​தார்.

தான் இசையமைத்த முதல் படமான ‘சின்னப்​பூவே மெல்லப் பேசு’ படத்​தின் தலைப்புப் பாடலை​யும் ஜெயச்​சந்​திரனின் குரலிலேயே பதிவுசெய்​தார். அவரது இசையில் வந்த ‘பூந்​தென்றலே நீ பாடிவா’ (மனசுக்​குள் மத்தாப்பூ) பாடல் காதல் பாடல்​களி​லேயே மிகவும் க​னி​வானது.

‘பகல் நிலவு’ படத்​தில் ​காட்சி வடிவம் பெறாத ‘பூ​விலே மேடை’ ​பாடல், ​நாயகி​யின் ​காதலனுக்​கானதா, அண்​ணனுக்​கானதா என ஒரு குழப்​பம் உண்டு. பரிவான குரல் ​கொண்ட ஜெயச்​சந்​திரன் ​பாடிய​தால் அந்த இனிய குழப்​பம்​ நேர்​ந்​தது எனக்​ கருதிக்​கொள்​ளலாம்​. அன்​பின்​ அசரீரி அது!

- தொடர்புக்கு: chandramohan.v@hindutamil.co.in

SCROLL FOR NEXT