சிறப்புக் கட்டுரைகள்

கோடை காலத்தை எதிர்கொள்ள என்ன செய்யலாம்?

ஜூரி

கோ

டைகாலம் வந்துவிட்டது; வழக்கத்தைவிட வெப்பம் அதிகமாக இருக்கப்போகிறது என்று வானிலை நிபுணர்கள் மட்டுமல்லாமல் - சாதாரண மக்களே பேசத் தொடங்கிவிட்டார்கள். ஆனால், அரசுதான் இன்னும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்ததைப் போலத் தெரியவில்லை.

இப்போதே தினமும் ‘10 நகரங்களில் வெயில் 100 டிகிரியைத் தாண்டியது’ என்று ஐபிஎல் செஞ்சுரிக்கு இணையாக ஸ்கோர் கார்டுகளை வெளியிடுகின்றன பத்திரிகைகள். சென்னை 98 – 99 டிகிரியில் இருக்கிறது. திருத்தணி, வேலூர், திருச்சி, மதுரையிலெல்லாம் வெயில் கொளுத்தத் தொடங்கிவிட்டது. சாலை அகலப் பணிக்காகவும் மின்சார வயர்களுக்கு இடையூறு இருப்பதாலும் மரங்களை வெட்டி வீழ்த்திவிட்டோம்.

வெயிலில் சுருண்டு விழுந்து யாராவது இறந்தால் அவர்களுடைய குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் கொடுத்துவிட்டால்போதும், வேறு அனாவசியச் செலவு வேண்டாம் என்று அரசுகள் நினைக்கலாம். ஆனால் அரசியல் சட்டப்படி மக்களுடைய உயிரைக் காப்பாற்ற வேண்டிய கடமை இருக்கிறது என்று வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் இதற்காக வழக்கு தொடுத்திருக்கிறார் சிரவண்குமார் என்ற வழக்கறிஞர். 1992 தொடங்கி 2016 வரையில் கடும் வெயிலுக்கும் அனல் காற்றுக்கும் இரையாகி இந்தியாவில் 25,716 பேர் இறந்திருக்கிறார்கள். அவருடைய மனுவைப் பரிசீலித்த உச்ச நீதிமன்ற அமர்வு, இந்த மனுவை அரசுக்கு அனுப்புங்கள், அவர்கள் முன் நடவடிக்கை எடுப்பார்கள் என்று ஆலோசனை கூறியிருக்கிறது.

2016-ல்தான் இந்தியாவில் கடும் வெயிலும் அனல் காற்றும் பாதிப்பை ஏற்படுத்தின. 1901-க்குப் பிறகு 2016-ல்தான் வெப்பம் மிக அதிகமாக அதிகரித்தது என்று இந்திய வானிலைத் துறையும் தெரிவிக்கிறது. இந்த வெயிலும் அனல் காற்றும் மக்களுடைய உடலிலிருக்கும் நீர்ச்சத்தை உறிஞ்சி அவர்களைக் கடுமையான மயக்கத்துக்கும் பிறகு இறப்புக்கும் உள்ளாக்கிவிடும். வெப்ப மயக்கம் என்பது உயிரைப் பறிக்கும் அளவுக்குக் கடுமையானது என்பதால் இதைத் தவிர்க்க முன்னெச்சரிக்கையாக இருப்பது நல்லது.

பள்ளி, கல்லூரிகளை கோடை விடுமுறைக்காக மூடுவதைக் கட்டாயமாக்க வேண்டும். எல்லா ஊர்களிலும் பேருந்து நிலையங்கள், ரயில் நிலையங்கள், அரசு அலுவலகங்கள், மருத்துவமனைகள், சந்தைகள் போன்ற மக்கள் கூடும் இடங்களில் நிழல்தரும் வகையில் தென்னம் பந்தல்களையாவது போட்டு இளைப்பாற வழிசெய்ய வேண்டும். தூய்மையான குடிநீர் இங்கெல் லாம் இலவசமாகக் கிடைப்பதை உள்ளாட்சித் துறை உதவியுடன் மேற்கொள்ள வேண்டும். எல்லா அரசு மருத்துவமனைகளிலும் வெப்ப மயக்கத்துக்கு ஆட்பட்டவர்களை உடனடியாகச் சேர்த்து சிகிச்சைகளை அளிக்க தனிப் பிரிவை ஏற்படுத்த வேண்டும். வெப்ப மயக்கத்துக்கு ஆளானவர்களுக்கு உடனடி சிகிச்சை தர ஆம்புலன்ஸ் வழங்கப்பட வேண்டும்.

கடும் கோடைக் காலத்தில் நண்பகலில் வீதிகளில் நடமாட்டத்தைக் குறைக்கும் விதத்தில் பணி நேரத்தை அரசு அலுவலகங்கள் மட்டுமின்றி, கடைகள், வணிக நிறுவனங்கள், தனியார் நிறுவனங்களிலும் மாற்ற உத்தர விட வேண்டும். கோடைக் காலங்களில் தீயணைப்பு வண்டிகளைத் தண்ணீருடன் தயார் நிலையில் வைத்திருப்பதைப் போல, வைக்கோல் படப்பு உள்ளிட்ட எளிதில் தீப்பிடிக்கக்கூடியவற்றை அடையாளம் கண்டு மக்களையும் எச்சரிப்பது தீ விபத்துகளைக் குறைக்க உதவும். வெல்டிங் போன்ற பற்ற வைப்பு வேலைகளை வெயில் உச்சத்தில் இருக்கும்போது மேற்கொள்ளக் கூடாது.

கையில் குடை, காலில் செருப்பு, பையில் குடிநீர் பாட்டில் இல்லாமல் வெளியில் புறப்படக் கூடாது. தலைக்கு தொப்பி, கருப்பு கூலிங் கிளாஸ் பயன்படுத்துவதும் நல்லது. பருத்தி ஆடைகளையே அணிய வேண்டும். காபி – டீ மற்றும் மதுபானங்களை அறவே தவிர்க்க வேண்டும். நீர்மோர், பானகம், மோர் கலந்த கூழ் போன்றவற்றைப் பருகலாம். அடிக்கடி நீர் பருக வேண்டும். எட்டு வயதுக்குள்பட்ட சிறு குழந்தைகள், நோயாளிகள், உடல் ஊனமுற்றோர், வயதானவர்களை கோடைக் காலத்தில் நீண்ட நேர பயணத்தில் ஈடுபடுத்தி அலைக்கழிக்கக் கூடாது.

உச்சிவெயில் நேரத்தில் திறந்த வெளியில் விவசாய வேலை, சாலை அமைப்பது, கேபிள் – குழாய்கள் பதிப்பது, கட்டிட வேலை போன்றவற்றைச் செய்வதைத் தவிர்க்க அரசும் தனியாரும் முன்வர வேண்டும். தொழிலாளர்களை காலில் செருப்பு அணியாமல் வேலை செய்ய அனுமதிக்கக் கூடாது. வேலை செய்யும் இடத்திலேயே போதிய குளிர் நீர், வெள்ளரிப் பிஞ்சு, நுங்கு, பழங்கள் போன்றவற்றை அளித்து வெயிலின் பாதிப்பு அதிகம் நேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். விலைமதிப்பற்ற உயிரைக் காக்க சில நூறு ரூபாய்களை ஓரிரு மாதத்துக்குச் செலவழிப்பது பெரிய சுமை இல்லை. திரையரங்குகளில் காலைக்காட்சி, பகல் காட்சிகளை ரத்து செய்துவிட்டு மாலைக்காட்சி, முதலாவது ஆட்டம், இரண்டாவது ஆட்டத்துக்கு அனுமதி வழங்கலாம். கார், ஸ்கூட்டர், பைக் உரிமையாளர்கள் தங்களுடைய வாகனங்களை நிழலில் நிறுத்திவிட்டு பாதசாரிகளை வெயிலில் நடக்க வைக்காதீர்கள். கோடைகாலத்தில் கார்கள், வேன்களில் குழந்தைகளைத் தனியாக விட்டுவிட்டு மால்களுக்கும் ஹோட்டல்களுக்கும் செல்லாதீர்கள். குழந்தைகளை உடன் அழைத்துச் செல்லுங்கள்.

மனிதர்கள் மட்டுமல்ல பிராணிகள், பறவைகள், கால்நடைகள் போன்றவையும் வெயிலால் வதங்கி சுருண்டுவிடும். அவை குடிப்பதற்கென்று வாயகன்ற சட்டி, பானைகளில் தண்ணீர் வைத்துக் காப்பாற்றவும். தெரு நாய்கள் மீது நமக்கு தனிப்பட்ட விரோதம் இருந்தாலும் இந்தக் கோடையில் அவை இளைப்பாற வீட்டோரத்தில் நிழல் இருந்தால் விரட்டாமல் அனுமதியுங்கள். அவை குடிப்பதற்கு குளிர்நீரைத் தொட்டி அல்லது வாளியில் வையுங்கள்... புண்ணியம்!

SCROLL FOR NEXT