இந்திய ஆட்சிப் பணி அதிகாரியான பமேலா சத்பதி, அவர் வேலை செய்துகொண்டிருக்கும் மேஜை மீது தன்னுடைய மகன் ஓடியாடி விளையாடுகிற காணொளிப் பதிவை இரண்டு வாரங்களுக்கு முன் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்தார். கூடவே, அவர் ஆவலோடு எதிர்பார்த்த கோடை விடுமுறை நாள்கள் அச்சமூட்டும் நாள்களாக மாறிவிட்டதாகச் சிறு குறிப்பும் எழுதியிருந்தார்.
வீட்டையும் அலுவலக வேலையையும் அவர் சரியான விதத்தில் பராமரிப்பதாகப் பலர் பாராட்டுத் தெரிவிக்க, ஐஏஎஸ் அதிகாரியான அவருக்கு இருக்கும் இந்தச் சலுகை அந்த அலுவலகத்தின் கடைமட்ட ஊழியர்களுக்குக் கிடைக்குமா எனப் பலர் கேள்வி எழுப்பியிருந்தனர்.
விவாதங்கள் வலுத்ததைத் தொடர்ந்து, அது தன் வீட்டில் உள்ள அலுவலக அறை எனவும் இரவு எட்டு மணிக்கு மேல் வேலைசெய்ய வேண்டிய சூழலில் இருந்ததையும் குறிப்பிட்டுப் பமேலா விளக்கமளித்தார்.
தவறான அணுகுமுறை: உயர் பதவி வகிப்பவர்கள் தத்தமது குழந்தைகளோடு அலுவலகத்துக்கு வருவது புதிதல்ல. குழந்தைக்குப் பாலூட்டியபடியே நாடாளுமன்றக் கூட்டத்தில் பங்கேற்ற அரசியல் தலைவர்கள் பலர் உண்டு. 2023இல் பிரதமர் பதவியைத் துறந்த நியூசிலாந்து முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஆடர்ன், ‘இந்த ஆண்டு நீ பள்ளிக்குச் செல்லும்போது அம்மா உன்னுடன் இருப்பேன்’ எனத் தன் குழந்தைக்குச் சொல்லியிருந்தார்.
இதுபோன்ற சம்பவங்களைச் சிலாகித்துப் பெருமிதப்படும் பலரும் வளர்ந்த குழந்தைகளைத் தவிர்க்க முடியாத காரணங்களால் அலுவலகத்துக்கு அழைத்துச் செல்லும் பெண்களைக் குற்றவாளிகள்போல் பார்ப்பது தவறான அணுகுமுறை.
‘கிரெச்சில் (குழந்தைப் பராமரிப்பு மையம்) மகனை விடும் அளவுக்குப் பொருளாதார வசதி படைத்த ஐஏஎஸ் அதிகாரியான பமேலா,ஏன் அவனை அலுவலகத்துக்கு அழைத்துச் செல்ல வேண்டும்’ என்றுதான் பலரும் கேட்டிருந்தனர். இதைப் பொருளாதார நிலையுடன் மட்டும் சுருக்கிப் பார்த்துவிட முடியாது.
குழந்தைவளர்ப்பு என்பது தாயுடனான உணர்வு சார்ந்தபந்தமாகக் காலம்காலமாகச் சொல்லப்பட்டு வருகிறது. பாலூட்டுவதைத் தவிர மற்ற அனைத்தையும் தந்தை செய்ய முடியும் என்கிறபோதும், குழந்தைகள் வளர்ந்து பெரியவர்களாகும்வரை மொத்தப் பொறுப்பும் தாயின் கடமையாகிவிடுகிறது. அதனால்தான் ஆண்களைவிடப் பெண்களே தங்கள் பணியிடங்களுக்குக் குழந்தைகளை அழைத்துச் செல்ல வேண்டிய கட்டாயத்துக்குத் தள்ளப்படுகின்றனர்.
பாரபட்சமான பார்வை: வசதி இருப்பவர்கள் குழந்தைகள் காப்பகங்களில் குழந்தைகளை விட்டுவிட்டு அலுவலகம் செல்லலாம் என்றால், வசதி குறைவானவர்கள் என்ன செய்வது? தவிர, வெளிவேலைகள் என்றதுமே எட்டு மணி நேர அலுவலக வேலைக்குச் செல்வோர் மட்டுமே பெரும்பான்மையினர் கண்களுக்குத் தெரிகிறார்கள். முறைசாராத் தொழில்களில் ஈடுபடும் பெண்களும் வேலைக்குத்தான் செல்கின்றனர்.
கட்டுமானப் பணி, விவசாய வேலை, கல்லுடைத்தல் போன்றவற்றில் ஈடுபடும் பெண்கள் தங்கள் குழந்தைகளையும் உடன் அழைத்துச் செல்கிறார்கள். அங்கே போதிய பாதுகாப்பும் கவனிப்பும் இல்லாத நிலையில், சில குழந்தைகள் தண்ணீர்த் தொட்டிக்குள் விழுந்தோ விஷப் பூச்சிகள் கடித்தோ இறந்த சம்பவங்களைச் செய்தியாக மட்டுமே நாம் கடந்து வந்திருப்போம்.
அப்போதெல்லாம் வேலைக்குச் செல்லும் பெண்கள் பணியிடத்துக்குத் தங்கள் குழந்தைகளை அழைத்துச் செல்வது குறித்தோ அந்தக் குழந்தைகளின் பாதுகாப்பு குறித்தோ பலருக்கும் எந்தக் கேள்வியும் எழுவதில்லை.
உயர் பதவியில் இருக்கும் பெண்களோ முறைசாராத் தொழில்களில் ஈடுபடுவோரோ யாராக இருந்தாலும் வீட்டு வேலையோடு வெளி வேலைகளிலும் ஈடுபடும் பெண்கள் இரட்டைச் சுமையைச் சுமக்கிறார்கள். ஐஏஎஸ் அதிகாரி ஏன் அவருடைய குழந்தையை அலுவலகத்துக்கு அழைத்து வந்தார் எனக் கேள்வி எழுப்புகிறவர்கள், 50 பெண்களுக்கு மேல் வேலை பார்க்கும் அலுவலகங்களில் சட்டபூர்வமாக இருக்க வேண்டிய குழந்தைப் பராமரிப்பு மையங்கள் ஏன் அமைக்கப்படவில்லை எனக் கேள்வி எழுப்புவதில்லை.
இந்தியாவைப் பொறுத்தவரை வேலைக்குச் செல்லும் பெண்களின் எண்ணிக்கை உலக அளவில் ஒப்பிடும்போது மிகக் குறைவு. குழந்தைகளைப் பார்த்துக்கொள்ள ஆள் இல்லாததே இந்தப் பின்னடைவுக்குக் காரணம் என மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் நல மேம்பாட்டு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
சட்டங்களும் நடைமுறையும்: தொழிற்சாலைகள் - சுரங்கப் பணியாளர்கள், பயிர்த்தொழிலில் ஈடுபடுவோர், மாநிலங்களுக்குள்ளேயே புலம்பெயர்ந்து பணிபுரிவோர், மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்டப் பணியாளர்கள் உள்ளிட்டோருக்கான குழந்தைப் பராமரிப்பு மையங்கள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களால் அமைக்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால், இந்தியாவில் எத்தனை நிறுவனங்கள் இதுபோன்ற சட்டங்களைக் கடைப்பிடிக்கின்றன? அவற்றை அரசு ஏன் கண்காணிப்பதில்லை?
இவை தவிர, வேலைக்குச் செல்லும் பெண்களை ஊக்குவிக்கும் வகையில் மத்திய அரசின் நிதியுதவியோடு மாநில அரசுகள் ‘கிரெச்’ அமைக்கும் திட்டம் 2017இல் அறிவிக்கப்பட்டது. வறுமைக்கோட்டுக்குக் கீழே இருப்பவர்கள் மாதம் ரூ.20 கட்டணத்தில் தங்கள் குழந்தைகளை இங்கே விட்டுவிட்டு வேலைக்குச் செல்லலாம். வீட்டில் இருந்து பணிபுரியும் பெண்களும் இதைப் பயன்படுத்திக்கொள்ளலாம்.
6 மாதங்கள் முதல் 6 வயது வரையுள்ள குழந்தைகளின் நலனைக் கருத்தில்கொண்டு இத்திட்டம் அறிவிக்கப்பட்டது. ஆனால், 2020 நிலவரப்படி இந்தியாவில் 6,453 ‘கிரெச்’கள் மட்டுமே அமைக்கப்பட்டுள்ளன; அதிகபட்சமாகக் கேரளத்தில் 479 ‘கிரெச்’கள் செயல்பட்டுவருகின்றன.
அதே போல் எந்தப் பிரச்சினையானாலும் அதைத் தனிமனிதப் பிரச்சினையாக அணுகுவது முறையல்ல. வேலைக்குச் செல்லும் பெண், தன் குழந்தையைப் பணியிடத்துக்கு அழைத்துச் செல்வது அவரது தனிப்பட்ட பிரச்சினை அல்ல. அவர் வேலைக்குச் சேரும்போதே மகப்பேறு விடுப்பு, குழந்தைப் பராமரிப்பு மையம் உள்ளிட்ட உத்தரவாதங்களை அவருக்கு அளிக்காத நிறுவனங்களின் பிரச்சினையும்தான்.
நிறுவனங்களில் பணிபுரியும் பெண்களின் எண்ணிக்கை அடிப்படையில் ‘கிரெச்’கள் அமைக்கப்பட வேண்டும் என்று சட்டம் சொல்வதால், ‘கிரெச்’ அமைப்பதைத் தவிர்ப்பதற்காக அந்தக் குறைந்தபட்ச எண்ணிக்கையைப் பராமரிக்கும் நிறுவனங்களும் உண்டு.
மாறாக, குழந்தை வளர்ப்பு என்பது தாய்-தந்தையின் கூட்டுப் பொறுப்பு என்பதன் அடிப்படையில், ஆண்களும் தங்கள் குழந்தைகளை ‘கிரெச்’சில் விடலாம் என்பதை நோக்கி நாம் நகர்ந்தால், அனைத்து நிறுவனங்களிலும் இத்திட்டத்தைச் செயல்படுத்த வேண்டியது கட்டாயமாகிவிடும். இது குறித்தும் அரசுகள் கவனத்தில்கொள்ள வேண்டும்.
முறைசாராத் தொழில்களில் ஈடுபடுவோரின் குழந்தைகளைப் பராமரிப்பது வேலை வழங்குவோர் - அரசு ஆகிய இருவரது கூட்டுப் பொறுப்பாக இருக்க வேண்டும். குழந்தைகள் இந்தச் சமூகத்தின் சொத்து என்பதால், குழந்தை வளர்ப்பு என்பது சமூகப் பொறுப்பு என்பதை உணர்ந்து அதற்குரிய வழிகாட்டுதல்களையும் சட்ட நடவடிக்கைகளையும் தொடர் கண்காணிப்பையும் அரசுகள் மேற்கொள்ள வேண்டும்.
- தொடர்புக்கு: brindha.s@hindutamil.co.in