சிறப்புக் கட்டுரைகள்

சொற்களில் எழும் பாலஸ்தீனம்

செய்திப்பிரிவு

அடையாள அட்டை

எழுது

நான் ஒரு அராபியன்

எனது அடையாள அட்டை எண் 50000

எனக்கு எட்டுக் குழந்தைகள்

அடுத்த கோடையில் ஒன்பதாவது

இதில் உனக்கென்ன கோபம்?

எழுது

நான் ஒரு அராபியன்

தோழர்களுடன் கல் உடைப்பவன்

எனக்கு எட்டுக் குழந்தைகள்

அவர்களுக்காக

ஒரு ரொட்டித் துண்டை

ஆடைகளை நோட்டுப் புத்தகத்தைப்

பாறையிலிருந்து பிய்த்தெடுத்தவன்

உனது கதவைத் தட்டி யாசித்து நிற்பவனல்ல

உனது வாசற்படிகளில் முழந்தாளிடுபவனும் அல்ல

இதில் உனக்கென்ன கோபம்?

எழுது

நான் ஒரு அராபியன்

எனக்கொரு பெயருண்டு: பட்டம் இல்லை

கோபத்திலும் சுழலும் இந்த மண்ணில்

பொறுமையைக் கடைப்பிடிப்பவன்

எனது வேர்கள் ஆழப் புதைந்துள்ளன

யுகங்களுக்கு அப்பால்

காலத்துக்கு அப்பால்

நாகரிகங்கள் உதிப்பதற்கும் முன்னதாக

ஸைப்ரஸ் மரமும் ஒலிவ மரமும்

தோன்றுவதற்கு முன்னதாக

களைகள் பரவுவதற்கு முன்னதாக

எனது மூதாதையர் கலப்பையின் மைந்தர்கள்

மேட்டுக்குடியினரல்லர்

எனது பாட்டனார் ஒரு விவசாயி

பெருமை வாய்ந்த வம்சாவழியில் பிறந்தவர் அல்லர்

நாணலும் குச்சிகளும் வேய்ந்த

காவல்காரனின் குடிசையே என் வீடு

தந்தை வழிச் செல்வத்தைச் சுவீகரிக்கும்

பெயரல்ல என்னுடையது.

எழுது

நான் ஒரு அராபியன்

முடியின் நிறம்: கறுப்பு,

கண்கள்: மண் நிறம்,

எடுப்பான அம்சங்கள்:

கஃபியேவைழ என் தலையில் இறுக்கிப்பிடிக்கும்

இந்த முரட்டுக் கயிறு,

முகவரி: மறக்கப்பட்டுவிட்ட ஒரு தொலைதூரக் கிராமம்

அதன் தெருக்களுக்குப் பெயர்கள் இல்லை

கிராமத்து ஆண்கள் வயல்களில் வேலை செய்கிறார்கள்

கல் உடைக்கிறார்கள்

இதில் உனக்கென்ன கோபம்?

எழுது

நான் ஒரு அராபியன்

எனது குடும்பத்தின் பழத்தோட்டத்தை

நானும் என் பிள்ளைகளும் உழும் நிலத்தை

நீ திருடிக்கொண்டாய்

எங்கள் பேரக் குழந்தைகளுக்காக

நீ விட்டுவைத்ததோ வெறும் பாறைகளே

நீ சொல்வதுபோல்

அவற்றையும் கூட உனது அரசாங்கம் எடுத்துக்கொள்ளுமோ?

எனவே

எழுது

முதல் பக்கத்தில், முதலில்:

நான் யாரையும் வெறுப்பவன் அல்ல

யாருடைய நிலத்தின் மீதும் அத்துமீறி நடப்பவன் அல்ல

ஆனால், நான் பசியால் துடிக்கும்போது

எனது மண்ணை அபகரித்தவர்களின் சதையை விழுங்குபவன் நான்

அச்சம் கொள்

எனது பசியைக் கண்டு

அச்சம் கொள்

எனது சினத்தைக் கண்டு.

- மஹ்மூத் தர்வீஷ்
(மஹ்மூத் தர்வீஷ், பாலஸ்தீனக் கவிதையுலகு இவரால் அறியப்பட்டது எனலாம். அந்த அளவுக்குப் புகழ்பெற்ற பாலஸ்தீனக் கவிஞர். களப் போராளியாகவும் இருந்தவர்)
(தமிழில்: வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை)

----------------------------------------------------------

போர்

வானில் ஒரு நிலவு

எனது புறங்கையில் ஒரு ஆறு

பெர்லின் நகரமோ எல்லையற்றது

கடவுளற்றது

நான்

அங்குச் சந்தித்த

அந்த அந்நியனுக்கு

அவன் தப்பித்தோடி வந்த பாலைவனம்

வெண்மையில் மூழ்கிக்கொண்டிருக்கிறது

என்பது தெரியாது.

எங்கள் நகரத்துப் பனி

கருமையானது

இங்குள்ள தோட்டங்கள்

ஷெல்லடிபட்டு இறந்துபோன

குழந்தையின் நிழலிலிருந்து வெளிப்பட்டு

மெல்லச் சாகின்றன

- காஸாவில் உள்ளதுபோல…

- தலியா தாஹா
(ஜெர்மனியில் பிறந்த இவர், நாடக ஆசிரியரும்கூட. இப்போது பாலஸ்தீனத்தில் வசிக்கிறார்)
(தமிழில்: வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை)

------------------------------------------------

ஏனெனில் நான் ஓர் அராபியன்

நான் தடுப்புக்காவலில் இருக்கிறேன்.

ஐயா, அதற்குக் காரணம்

நான் ஓர் அராபியன் என்பதே.

தன் ஆன்மாவை விற்க மறுத்த

ஓர் அராபியன்.

ஐயா, விடுதலைக்காக எப்போதும் முயன்ற

ஓர் அராபியன்.

தனது மக்களின் துயர்களை

எதிர்த்து நின்ற ஓர் அராபியன்

நீதியான சமாதானத்தில் நம்பிக்கை கொண்டவன்

ஒவ்வொரு மூலையிலும்

மரணத்தை எதிர்த்துப் பேசியவன்

ஒரு சகோதரத்துவ வாழ்வைக் கோரி

அதற்காக வாழ்ந்தவன்.

ஆகவேதான்

நான் தடுப்புக்காவலில் இருக்கிறேன்.

ஏனெனில் நான் போராடத் துணிந்தவன்.

இன்னும் ஏனெனில்

நான் ஓர் அராபியன்.

- பௌசி அல் அஸ்மார்
(பௌசி அல் அஸ்மார், புகழ்பெற்ற பாலஸ்தீனக் கவிஞர்களுள் ஒருவர், இந்தக் கவிதை அவரது சிறைவாசத்தில் எழுதப்பட்டதாகும்)
(தமிழில்: எம்.ஏ.நுஃமான், இ.முருகையன்)

--------------------------------------------------------

இருபதாண்டுகளுக்குப் பிறகு

இங்குப் பாதச் சுவடுகள் முடிவடைகின்றன.

இங்கு நிலா

ஓநாய்கள், நாய்கள், கற்கள் ஆகியவற்றுடன்

பாறைகளுக்கும் கூடாரங்களுக்கும் பின்னால்

மரங்களுக்குப் பின்னால் படுத்துறங்குகிறது.

இங்கு நிலா

தனது முகத்தை ஒவ்வொரு இரவிலும் விற்கிறது

ஒரு கத்திக்காக, மெழுகுவத்திக்காக, மழைப் பின்னலுக்காக

அவர்கள் மூட்டியுள்ள நெருப்பில் கல்லைத் தூக்கி எறியாதே

ஜிப்ஸிகளின் விரல்களிலிருந்து

கண்ணாடி மோதிரங்களைத் திருடாதே

அவர்கள் உறங்கினர்.

மீன்களும் கற்களும் மரங்களும் உறங்கின

இங்கு பாதச் சுவடுகள் முடிவடைகின்றன.

இங்கு நிலா பிரசவ வேதனையில்

ஜிப்ஸிகளே! நிலாவிற்குக் கண்ணாடி மோதிரங்களையும்

நீலநிற வளையல்களையும் தாருங்கள்.

- ஃபத்வா டுக்வான்
(புகழ்பெற்ற பாலஸ்தீனப் பெண் கவிஞரான இவர், இஸ்ரேலால் ஆக்கிரமிக்கப்பட்ட பகுதியைச் சேர்ந்தவர்)
(தமிழில்: வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை)

----------------------------------------------------------------

குழந்தைப் பருவத்திற்கு மேலே

நிலவு எழுந்தது

குழந்தைப் பருவமோ நிலவொளியின் கீழ்

குருவிகளையும் பூக்களையும்

கூடைகளில் சேர்க்கும் மலைகள்.

நான் குழந்தைப் பருவத்தைப் பின்தொடர்வேன்

அழுதுகொண்டும் கூரான கற்களின் மீது விழுந்தவாறும்,

அது பறிமுதல் செய்யப்பட்டுவிட்ட குழந்தைப் பருவம்

புத்தகங்களிலிருந்தும் எண்ணெய் ஊற்றிய விளக்கிலிருந்தும்

சில சமயம், சிறைச்சாலைக்குப் பயணம்

பிறகு விடுதலை, சில சமயம்

சில சமயம், எனது வாழ்க்கை போலியானதாகிறது -

காவலர்களால் முற்றுகையிடப்பட்டுள்ள நகரத்தில்

குழந்தைப் பருவத்திற்கு மேலே

நிலவு எழுந்தது குழந்தைப் பருவமோ கடலோரம் சாய்ந்து நிற்கும்

ஊசியிலை மரம்

அந்த மரத்திற்கு மேலே, கனவுகளில் இலயித்துக்

கண் சிமிட்டும் நட்சத்திரம் தனது ஆயிரம் இரகசியங்களுடன்

பனி மழையில் அந்த மரத்தில்

ஓர் இரவு முழுவதையும் கழிப்பேன்

தூங்காமல்.

அது பறிமுதல் செய்யப்பட்டுவிட்ட குழந்தைப் பருவம்

புத்தகங்களிலிருந்தும் எண்ணெய் ஊற்றிய

விளக்குகளிலிருந்தும்

சில சமயம், சிறைச்சாலைக்குப் பயணம்

பிறகு விடுதலை, சில சமயம்

சில சமயம், எனது வாழ்க்கை போலியானதாகிறது

முற்றுகையிடப்பட்டுள்ள நகரத்தில்.

- ஹுஸெய்ன் பர்கூட்டி
(அமெரிக்காவில் முனைவர் பட்டம் பெற்ற இவர், பாலஸ்தீனத்தின் புகழ்பெற்ற கவிஞர்களில் ஒருவர்)
(தமிழில்: வ.கீதா, எஸ்.வி.ராஜதுரை)

SCROLL FOR NEXT