தலையங்கம்

நெல் கொள்முதலில் சிக்கல்கள்: தேவை நிரந்தரத் தீர்வு!

செய்திப்பிரிவு

தமிழக அரசு கொள்முதலில் செய்த தாமதத்தால் பல இடங்களில் மழைநீரில் நெல் வீணாகிக்கொண்டிருப்பதாக முறையீடுகள் ஓங்கி ஒலிக்கின்றன. விவசாயிகளைத் துவண்டுபோக வைக்கிற இந்தச் சூழல், விரைவில் முடிவுக்கு வர வேண்டும்.

பருவமழை தொடங்கிவிட்ட சூழலில், நெல் கொள்முதல் நிலைய வளாகங்களில் காத்திருப்பில் உள்ள நெல் மூட்டைகள் மழைநீரில் நனையும் காட்சிகள் வேதனையில் ஆழ்த்துகின்றன. கடலூர் மாவட்டம் விருத்தாசலம் போன்ற இடங்களில் பல நாள் காத்திருப்பால் லாரிகளில் உள்ள நெல் முளைவிடும் அளவுக்கு நிலைமை உள்ளது.

நெல்லுக்கு அரசு குறைந்தபட்ச ஆதார விலை நிர்ணயிப்பதும் அரசே நெல்லைக் கொள்முதல் செய்துகொள்வதும்தான் பலரை நெல் விவசாயத்தில் தொடர்ந்து ஈடுபட வைத்துள்ளன. தமிழ்நாட்டில் முதன்மையாக நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் 50 ஆண்டுகளுக்கும் மேலாகக் கொள்முதல் - விநியோகப் பணி நடைபெற்றுவருகிறது.

எனினும், நெல்லில் ஈரப்பதம் அதிகம் இருப்பதாகக் கூறிப் புறக்கணிக்கப்படுவது, குறைந்த எண்ணிக்கையில் கொள்முதல் நிலையங்கள் இருப்பது, முன்னறிவிப்பு இன்றி நிலையங்களை மூடுவது, பணியாளர் பற்றாக்குறை, இடைத்தரகர்களின் ஆதிக்கம் போன்ற குறைபாடுகள் நீண்ட காலமாகவே பேசப்பட்டுவருகின்றன.

நெல் கொள்முதலில் தற்போது ஏற்பட்டுள்ள தேக்கம் குறித்து தமிழகச் சட்டமன்றத்தில் எதிர்க்கட்சியான அதிமுக கவன ஈர்ப்புத் தீர்மானம் கொண்டுவந்தது. அரசின் அடிப்படைப் பணிகளில் ஒன்றான நெல் கொள்முதலில் நிர்வாகத் தவறுகள் இன்றிப் பின்னடைவு ஏற்பட்டிருக்க முடியாது. கட்சி அரசியலைக் கடந்து தீர்வு காண வேண்டிய சிக்கல் இது என்றே சில தரவுகள் தெரிவிக்கின்றன.

தகவல் பெறும் உரிமைச் சட்டத்தின் கீழ் 2025 ஜூன் மாதம் ஒரு நாளிதழ் பெற்ற விவரங்களின்படி, 2019-20லிருந்து 2023-24 வரைக்கும் நேரடிக் கொள்முதல் நிலையங்களிலும் சேமிப்புக் கிடங்குகளிலுமாக 3.72 லட்சம் டன் நெல் பல்வேறு காரணங்களால் வீணாகியுள்ளது. திறந்தவெளிப் பராமரிப்பும் அவற்றில் ஒன்று. 2025 பிப்ரவரியில் 10.41 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்து தமிழக அரசு கவனம் ஈர்த்தது.

இது கடந்த ஆண்டு பிப்ரவரியைவிட 3 லட்சம் டன் அதிகம். குறைந்தபட்ச ஆதார விலையை உயர்த்தியதும் 2,444 கொள்முதல் நிலையங்களை இயக்கியதுமே இந்த வளர்ச்சிக்குக் காரணம். இப்படிச் சிரத்தையோடு கொள்முதல் செய்யப்படும் நெல், அதே சிரத்தையோடு காப்பாற்றப்படவும் வேண்டும்.

இது ஒருபுறம் இருக்க 2009 ஏப்ரல் - 2014 மார்ச் வரை இந்தியாவில் நெல் கொள்முதலில் ரூ.50,000 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக மத்தியத் தணிக்கைக் குழு மத்திய, மாநில அரசுகளின் ஆவணங்களை முன்வைத்து நாடாளுமன்றத்தில் கூறியது. அது தொடர்பாக அடுத்த கட்ட நடவடிக்கைகளை எடுப்பது நெல் கொள்முதலைச் சீர்படுத்தும்.

அனுமதிக்கப்பட்ட நெல்லின் ஈரப்பத அளவை 17%லிருந்து 22% ஆக உயர்த்துவது பற்றி ஆராய்வதற்கு மத்திய அரசு மூன்று குழுக்களை அமைத்துள்ளது. செறிவூட்டப்பட்ட அரிசிக்கு அனுமதி வழங்க மத்திய அரசு தாமதம் செய்வதும் தேக்க நிலைக்குக் காரணம் எனத் தமிழக உணவு மற்றும் உணவுப் பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி கூறியிருப்பதும் கவனிக்கத்தக்கது. மொத்தத்தில், அறுவடைக்குக் காத்திருந்த நெற்பயிர்கள் நீரில் மூழ்கியுள்ள நிலையில், இன்னொருபுறம் கொள்முதல் குழப்பங்களும் சேர்ந்து விவசாயிகளை நிர்கதியில் நிறுத்திவிடக் கூடாது.

SCROLL FOR NEXT