சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவில் தொழிலாளர் உரிமைகள் | சொல்... பொருள்... தெளிவு

ம.சுசித்ரா

கடந்த அக்டோபர் 8ஆம் தேதி, சத்தீஸ்கர் மாநிலம் சக்தி மாவட்டத்தில் தனியார் மின் உற்பத்தி நிலையம் ஒன்றில் மின்தூக்கி கட்டுமானப் பணியின்போது நேர்ந்த விபத்தில் நான்கு தொழிலாளர்கள் உயிரிழந்தனர். செப்டம்பர் 30இல் சென்னை எண்ணூர் அனல் மின் நிலையத்தில் 40 அடி உயரத்தில் கட்டுமானப் பணியின்போது திடீரென சாரம் சரிந்ததில், ஒன்பது தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.

சிவகாசியில் உள்ள பட்டாசு ஆலையில் ஜூலை 1இல் ஏற்பட்ட விபத்தில் எட்டுத் தொழிலாளர்கள் உயிரிழந்தனர். இதற்கு ஒரு நாள் முன்னர் தெலங்கானாவில் உள்ள தனியார் வேதிப்பொருள் தொழிற்சாலையில் ஏற்பட்ட விபத்தில் 40 ஊழியர்கள் உயிரிழந்தனர்.

இப்படி, இந்தியாவின் பல்வேறு பகுதி​களில் பணியிடங்​களில் ஏற்படும் விபத்து​களால் தொழிலா​ளர்கள் படுகாயமடைவதும் பலியா​வதும் தொடர்​கதையாக உள்ளது. அமைப்பு​சாராத் தொழிலா​ளர்கள் பணியிடத்தில் மரணித்தால் வழக்கு​கள்கூட பல நேரங்​களில் பதிவு செய்யப்​படு​வ​தில்லை.

ஏனெனில், அவர்களுக்குச் சட்டரீதியிலான பாதுகாப்பு இல்லை. உலகெங்​கிலும் பணியிடங்​களில் நிகழக்​கூடிய விபத்து​களில் நான்கில் ஒன்று இந்தியாவில் மட்டுமே ஏற்படு​கிறது என பிரிட்டிஷ் பாதுகாப்பு கவுன்​சிலின் ஆய்வில் தெரிய​வந்துள்ளது.

பணியிட விபத்துகள் எதனால்? - தொழிலாளர்களை முதலாளிகள், ஒப்பந்ததாரர்கள் பாதுகாக்கத் தவறுவதுதான் இத்தகைய விபத்துகளுக்கு முதன்மையான காரணம். முறையான பணியிட வடிவமைப்பு, இயந்திரப் பராமரிப்பு, பாதுகாப்புக் கவசம் உள்ளிட்ட அம்சங்களை முறையாகப் பின்பற்றுதல், அபாயகரமான சூழலில் பணிபுரியும் ஊழியர்களுக்கு உரிய பயிற்சி அளித்தல் போன்றவற்றை நிறுவனங்கள் செய்யத் தவறுகின்றன.

தெலங்கானா வேதி உலை வெடி விபத்தில் அனுமதிக்கப்பட்ட வெப்பநிலையைக் காட்டிலும் இரு மடங்கு கூடுதல் வெப்பநிலையில் உலை இயக்கப்பட்டிருக்கிறது. கிட்டத்தட்டக் காலாவதியான இயந்திரமாக அது இருந்துள்ளது.

பலமுறை புகார் அளித்தும் பலன் இல்லை. உலை வெடித்துச் சிதறிய நேரத்தில் தொழிற்சாலையின் சுவர் ஏறிக் குதித்து உயிர்தப்பத் தொழிலாளர்கள் முயன்றுள்ளனர். தொழிற்சாலைத் தளத்தில் எந்நேரமும் முதலுதவிக்காக இருந்திருக்க வேண்டிய ஆம்புலன்ஸ் சம்பவ நேரத்தில் அங்கு இல்லை.

விபத்து ஏற்பட்டு ஒரு வார காலத்துக்குப் பிறகும்கூட இதனால் பாதிக்கப்பட்டு ‘காணாமல்’ போனவர்கள் எத்தனை பேர் என்கிற அடிப்படைத் தகவலைக்கூட அதிகாரிகளால் கண்டறிய முடியவில்லை. இதிலிருந்து, அந்த வேதி உலையில் விதிமுறைகளுக்குப் புறம்பாகத் தொழிலாளிகள் பணியமர்த்தப்பட்டிருப்பது அம்பலமாகி இருக்கிறது. எண்ணூரில் ஏற்பட்ட சம்பவமும் கிட்டத்தட்ட இதேபோன்றதுதான்.

தொழிற்சாலை விபத்துகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக எதிர்பாராமல் நடப்பவை அல்ல என்றே சர்வதேசத் தொழிலாளர் அமைப்பு சுட்டிக் காட்டுகிறது. பன்மடங்கு லாப நோக்கில் தொழிலாளர் பாதுகாப்புக்கான செலவினத்தை நிர்வாகங்கள் மிகவும் குறைப்பதன் பின்விளைவுதான் தொழிற்சாலை விபத்துகள்.

‘மனிதப்பிழை’ எனச் சாக்குப்போக்கு சொல்லி இதிலிருந்து நிறுவன உரிமையாளர்கள் தப்பித்துக் கொள்கின்றனர். கூடுதல் பணி நேரம், ஓய்வின்மை, கடுமையான வேலைப் பளு, சொற்ப ஊதியத்தினால் கூடுதல் முறைமாற்றுப் பணிகள் (shifts) தொழிலாளர்கள் வேலை செய்ய நிர்ப்பந்திக்கப்படும் நிலை ஆகியவையே உண்மைக் காரணிகள்.

தொழிலாளர் நலச் சட்டங்கள்: தொழிற்​புரட்சிக் காலம் தொட்டே பாதுகாப்பான பணியிட வசதி கோரித் தொழிலா​ளர்கள் பல போராட்​டங்கள் நடத்தி​யுள்​ளனர். இந்தியாவின் முதல் தொழிற்​சாலைச் சட்டம் 1881இல் நடைமுறைக்கு வந்தது. சுதந்​திரத்​துக்குப் பிறகு தொழிற்​சாலைச் சட்டம் 1948 தொழிலாளர் பாதுகாப்​புக்குச் சீரான அடித்​தளமிட்டது.

இதன்படி கண்ணியமான பணிச்​சூழலுக்கும் பாதுகாப்​புக்கும் உத்தர​வாதம் அளிக்​கக்​கூடிய தொழிற்சாலை உரிமம், இயந்திரப் பராமரிப்பு, பணிநேரம், இடைவேளை, பணியிட உணவகம், மழலையர் காப்பகம் முதலான சட்டதிட்​டங்கள் வகுக்​கப்​பட்டன. காலச்​சூழலுக்கு ஏற்ப இரு முறை சட்டத்​திருத்​தங்​களும் இதில் கொண்டு​வரப்​பட்டன. இதில் 1976இல் முதல் திருத்​த​மும், போபால் விஷவாயுக் கசிவு பேரழி​வுக்குப் பிறகு 1987இல் இரண்டாம் சட்டத்திருத்தமும் நிறைவேற்​றப்​பட்டன.

இதுபோன்ற சட்டதிட்​டங்கள் தொழிலா​ளர்​களின் உரிமைகளை முழுமையாக மீட்டுத் தந்து​விட்டன எனச் சொல்வதற்​கில்லை. இருப்​பினும், தொழிற்​சங்​கத்தில் உறுப்​பினர்களான தொழிலா​ளர்கள் தங்களுடைய உரிமைகள் பறிக்​கப்​படும்​போது, புகார் அளிக்​கவும் முதலா​ளி​களுக்கு அழுத்தம் கொடுக்​கவும் இந்தச் சட்டம் கைகொடுத்தது. ஆனாலும், வரலாற்றின் கறுப்புப் பக்கமான போபால் பேரழிவு, தொழிலாளர் சட்டத்தின் ஓட்டைகளை அம்பல​மாக்​கியது.

சோதனை நடத்தி உண்மை அறிய வந்த அதிகாரிகள் சம்பந்தப்பட்ட தொழிற்​சாலையில் விதிமீறல்கள் நிகழ்ந்​ததைக் கண்டு​கொள்ள​வில்லை. லஞ்சம் பெற்றுக்​கொண்டு, பொய்த் தரவுகள் அடங்கிய, உண்மைக்குப் புறம்பான அறிக்கையை வெளியிட்​டனர். பணியிடத்தில் காயமடைந்​தவர்கள், மரணமடைந்​தவர்​களின் குடும்பத்​தா​ருக்கு வாழ்நாள் ஊதியம் வரையிலான இழப்பீடுகளை வழங்க வேண்டும் எனத் தொழிலாளர் இழப்பீட்டுச் சட்டம் (1923), ஊழியர்​களுக்கான மாநிலக் காப்பீட்டுச் சட்டம் (1948) ஆகியவை சுட்டிக்​காட்டு​கின்றன. ஆனால், நடைமுறையில் இவை அரிதாகவே கடைப்​பிடிக்​கப்​படு​கின்றன.

இவை தவிர, நடந்த சம்பவத்​துக்கு நிறுவன உரிமை​யாளர்கள் பொறுப்​பேற்க வேண்டும் என்கிற நிபந்​தனையை இதுபோன்ற சட்டங்கள் விதிக்கவே இல்லை. ஒருவேளை, இத்தகைய சம்பவங்கள் ஊடக வெளிச்​சத்​துக்கு வரும்​பட்​சத்​தில், பொது நிதியி​லிருந்து அரசுகளே இழப்பீடுகளை வழங்கிவரு​கின்றன.

இன்றைய சூழ்நிலை: 90களி​லிருந்து தொழிலாளர் பாதுகாப்பு நீர்த்​துப்போக வைக்கப்​பட்டு​வரு​கிறது. தொழிலா​ளர்​களைப் பணியில் நியமித்தல், பணிநீக்கம் செய்தல், உழைப்பைக் கண்மூடித்​தன​மாகப் பெறுதல் முதலானவற்றில் தங்களுக்கு ‘நெகிழ்வுத்​தன்மை’ அவசியம் என நிறுவனங்கள் வற்புறுத்து​கின்​றன.

இதற்கு வளைந்து கொடுக்கும் அரசுகள் அமலில் உள்ள சட்டங்கள், விதிமுறைகளில் சமரசம் செய்துகொள்ளும் போக்கு நிலவுகிறது. பாதுகாப்பு விதிமுறை​களைத் தொழில் நிறுவனங்கள் பின்பற்றும்படி நிர்ப்​பந்​திப்பதே வணிகத்துக்குப் போடும் முட்டுக்​கட்டை என்னும் பொதுக்​கருத்து ஏற்படுத்​தப்​படு​கிறது.

தொழில்சார் பாதுகாப்பு, உடல்நலன், வேலை நிலைமைகள் குறியீடு, 2020 (OSHWC) நடைமுறைக்கு வரும்​பட்​சத்தில் தொழிற்​சாலைச் சட்டம் முழுவது​மாகக் காலாவ​தி​யாகி​விடும். ஒரு காலத்தில் தொழிலா​ளரின் உரிமையாக இருந்தவை, இனிமேல் அரசின் கரிசனமாக மாறிப்​போகும் நாள் வெகு தூரத்தில் இல்லை.

SCROLL FOR NEXT