தலையங்கம்

தீபாவளித் திருநாளின் தித்திப்பு நிலைத்திருக்கட்டும்!

செய்திப்பிரிவு

தேசம் முழுவதும் கொண்டாடப்படும் இந்தத் திருநாளில் உற்சாகத்துடன் சில உறுதிமொழிகளையும் ஏற்போம். எந்த ஒரு திருநாளையும் தனிநபருக்கான மனநிலையோடு அணுகாமல், ஒரு சமூகத்தின் பிரதிநிதியாக அணுகினால், அதில் கிடைக்கும் இன்பம் அளவில்லாதது. ஒளிமயமான தீபாவளியும் அதற்கு விதிவிலக்கல்ல.

சமயம், குடும்பம், தொழில், வேலை போன்றவற்றின் அடிப்படையில் ஏதேனும் ஒரு கொண்டாட்டம் ஒவ்வொருவருக்கும் தவிர்க்க முடியாததாக உள்ளது. ஒருவர் தன்னைப் புதுப்பித்துக்கொள்வதற்கும் தனது குடும்பத்தினர், நண்பர்களோடு உறவாடுவதற்கும் பண்டிகைகள் வாய்ப்பு அளிக்கின்றன.

இந்துக்களுக்கு நரகாசுரன் விஷ்ணுவால் வதம் செய்யப்பட்ட நாளாகவும் சமண சமயத்தினருக்கு மகாவீரர் முக்தி அடைந்த நாளாகவும் தீபாவளி கொண்டாடப்படுகிறது. தனிநபராகவும் சமூகமாகவும் தீபாவளியில் கவனம் செலுத்தப் பல விஷயங்கள் உள்ளன. தன்னிறைவு என்பதன் வெளிப்பாடாகத்தான் எந்த ஒரு பண்டிகையும் அமைகிறது. எனினும் காலப்போக்கில் அதிகச் செலவுகளுக்கு வழிவகுப்பதாக தீபாவளி மாறிவிட்டது.

இந்தியாவில் தீபாவளியை முன்வைத்து வீட்டுமனையிலிருந்து திறன்பேசிவரைக்கும் விற்பனை பெருமளவில் அதிகரிக்கிறது. சற்றுக் கவனம் தவறினாலும், கடன்களில் சிக்கவைக்கும் சாத்தியக்கூறுகள் உண்டு. பிறருடைய அதீதச் செலவுகள் தங்களைத் தூண்டாமல் பார்த்துக்கொள்வது மிகமிக அவசியம்.

பட்டாசு வெடிப்பதில் தவறான அணுகுமுறைகளால் சிறார் தீக்காயங்களுக்கு உள்ளாவது ஆண்டுதோறும் நிகழ்கிறது. பெரியவர்களும் தீக்காயங்களுக்கு உள்ளாவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்துள்ளது. இதற்கு அவர்களது குடிப்பழக்கம் முக்கியக் காரணம் என மருத்துவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஒரு அற்புதமான திருநாளில் குடிப்பழக்கம், குடும்பத்தின் மகிழ்ச்சியைத் தடம்புரளச் செய்ய அனுமதிக்கக் கூடாது. பட்டாசு வெடிப்பதிலும் சுயக் கட்டுப்பாடு அவசியம். சுவாசக் கோளாறு உள்ளவர்கள், இதய அறுவைசிகிச்சை செய்துகொண்டவர்கள், முதியவர்கள், கைக்குழந்தைகள் போன்றோருக்கு வெடியோசை சிரமத்தை ஏற்படுத்தலாம். கொண்டாட்ட வேகத்தில் இவர்களின் நலம் மறக்கப்பட்டுவிடக் கூடாது.

சுற்றுச்சூழல் மாசுபாடு கை மீறிப் போய்விட்டது என்கிற நிலையில்தான், தீபாவளி நாளில் பட்டாசு வெடிக்க மத்திய, மாநில அரசுகள் பல கட்டுப்பாடுகள் விதித்துள்ளன. இதில் நீதிமன்றத்தின் குறிப்பிடத்தக்க பங்கும் உண்டு. எனினும் இவை நடைமுறையில் மீறப்படுவதாகவே உள்ளன. விதிமுறைகளைப் பெரியவர்கள் மதிப்பது குழந்தைகளுக்கு நல்ல முன்மாதிரியாக இருக்கும். பட்டாசுக் குப்பையை அகற்றுவதும் நம் பொறுப்புதான் என்கிற உணர்வு கட்டாயம் வேண்டும்.

ஒரே வீட்டில் இருந்தாலும்கூட ஒருவருக்கொருவர் வாட்ஸ்அப்பில் செய்தி அனுப்பி வாழ்த்தும் அளவுக்குத் திறன்பேசியின் தாக்கம் உள்ளது. தீபாவளியின்போது நவீனத் தகவல்தொடர்பு சாதனங்கள் மூலம் சாத்தியமான கொண்டாட்டங்களும் நமக்குத் தேவைதான். எனினும், ஒட்டுமொத்த நாளையும் அவற்றிலேயே இழந்துவிடக் கூடாது. அண்டை வீட்டாரிடம் பேசுவதும் நண்பர்களையோ உறவினர்களையோ சந்திப்பதும் பண்டிகைகளை அர்த்தமுள்ளதாக்கும்.

தீபாவளி வேலைகளைப் பெண்களோடு ஆண்கள் பகிர்ந்துகொள்வது, பலகாரங்களை அளவுடன் உண்பது, நெரிசல் உள்ள இடங்களுக்குச் செல்வதைத் தவிர்ப்பது, தேவை உள்ளவர்களுக்கு இயன்ற உணவை அளிப்பது என தீபாவளியை மனிதநேயத்துடன் கொண்டாடப் பல்வேறு விஷயங்கள் உள்ளன. இருளை அகற்றி, வாழ்வில் ஒளிதீபம் ஏற்றும் தீபாவளி வெற்று ஆரவாரமாக முடிந்துவிடாமல், மகிழ்ச்சிக்குரிய நினைவுகளில் ஒன்றாக நிலைத்திருப்பது நம் கையில்தான் உள்ளது.

SCROLL FOR NEXT