நீட்சே என்றொரு ஜெர்மானிய மெய்யியலாளர். அவரது நூல்களில் ஒன்று ‘களிப்பின் அறிவியல்’ (The Gay Science). தன் நெஞ்சுக்கு நெருங்கிய நூல் என்று அவரே குறிப்பிடும் அந்நூலில், ‘மாறாத மீள்நிகழ்வு’ (eternal recurrence) என்று ஒரு வெடியைக் கொளுத்திப்போடுகிறார்.
அதென்ன? ஒரு நாள் உங்கள் கனவிலோ நனவிலோ ஒரு பூதம் வந்து, ‘இப்போது வாழ்ந்துகொண்டிருக்கும் இதே வாழ்வைத்தான் நீங்கள் திரும்பத்திரும்ப வாழ வேண்டியிருக்கும்; இந்த வாழ்வில் நீங்கள் பட்ட துன்பங்கள், பெற்ற இன்பங்கள், எண்ணிய எண்ணங்கள், அலுத்துச் சலித்த அற்ப நிகழ்வுகள் என்று அனைத்தையும், அச்சுப்பிசகாமல், அதே நிகழ்முறையில், திரும்பத்திரும்ப எண்ணற்ற முறை வாழ வேண்டியிருக்கும்’ என்று உங்கள் காதோரம் கிசுகிசுத்தால் என்ன சொல்வீர்கள்?
‘திரும்பத் திரும்பக் கவிழ்த்து வைக்கப்படுகிற மணல் கடிகாரத்தில் மாற்றமே இல்லாமல் மேலிருந்து கீழாய் உதிர்ந்துகொண்டே இருக்கிற மணலைப் போலத்தான் திருப்பி வைக்கப்பட்ட உங்கள் வாழ்க்கையின் துகளான நீங்களும்’ என்று சொன்னால் என்ன செய்வீர்கள்? ‘ஆகா, பெற்றேன் பெரும்பேறு’ என்று திருமூலரைப் போல மகிழ்வீர்களா அல்லது ‘ஆஆ, செத்தேன் சிறியேன்’ என்று மாணிக்கவாசகரைப் போல அதிர்வீர்களா? பிழைகளோடும் சரிகளோடும் வாழ்ந்த வாழ்க்கையையே அச்சுப்பிசகாமல் மீளவும் வாழ ஏங்கிநிற்கும் நற்றிணைக் காதலி ஒருத்தியை அம்மூவனார் காட்டுகிறார்:
தோளும் அழியும்; நாளும் சென்றன;
நீள்இடை அத்தம் நோக்கி, வாள்அற்றுக்
கண்ணும் காட்சி தௌவின; என்நீத்து
அறிவும் மயங்கிப் பிறிது ஆகின்றே;
நோயும் பேரும்; மாலையும் வந்துஅன்று;
யாங்கு ஆகுவென்கொல் யானே? ஈங்கோ
சாதல் அஞ்சேன்! அஞ்சுவல், சாவின்
பிறப்புப் பிறிது ஆகுவது ஆயின்,
மறக்கு வென்கொல்என் காதலன் எனவே! - (நற்றிணை, 397).
இந்நேரத்தில், இவ்வழியில் வருவேன் என்ற தலைவன் வரவில்லை. காலம் கழிந்துகொண்டே இருக்கிறது. தலைவன் வரும் வழியைப் பார்த்துப்பார்த்துக் கண்கள் பூத்துவிட்டன. தோள்கள் ஒடுங்கித் தளர்ந்துவிட்டன. அறிவு கைவிட்டுப் போய்விட்டது. மாலை முற்றி இரவு வந்துவிட்டது. இனி என்ன ஆவேன் நான்? இறப்பேன். இறப்பதற்கு நான் அஞ்சவில்லை. இறந்தால் மீளவும் பிறக்க வேண்டியிருக்குமே! அவ்வாறு பிறக்கும்போது பெறும் வாழ்வு புதுவாழ்வாகி, என் தலைவனை ஒரு வேளை மறந்துவிட்டால்? அதற்காகவே அஞ்சுகிறேன்.
ஒரு துளி இன்பத்திற்காகப் பல குடம் துன்பத்தைப் பருகத் துணியும் இந்தப் போக்குதான், வாழ்வை நேர்நிலையாகப் பார்க்கும் செம்மாந்தப் போக்கு என்கிறார் நீட்சே. சிறுவனாக இருக்கையில் உச்ச நடிகரின் படம் பார்த்துவிட்டு, ‘சீவிடுவேன்’ என்று அவர் பேசிய அழகுக்கே கொடுத்த காசு சரியாகப் போய்விட்டது; அதற்காகவே இந்தப் படத்தை எத்தனை முறை வேண்டுமானாலும் திரும்பத்திரும்பப் பார்க்கலாம் என்று பள்ளித் தோழர்களிடம் பேசியபோது, நீட்சேவின் ‘மாறாத மீள்நிகழ்வு’ என்னும் கருத்தையே பேசுகிறோம் என்று எனக்குத் தெரியாதுதான். அது ஒருபுறம் இருக்க, நெடுங்களத்துப் பரணர் காட்டுகிற இந்தப் புறநானூற்றுக் காதலியையும் கருதுங்கள்:
சிறாஅஅர்! துடியர்! பாடுவல் மகாஅஅர்!
தூவெள் அறுவை மாயோன் குறுகி
இரும்புள் பூசல் ஓம்புமின்! யானும்
விளரிக் கொட்பின் வெள்நரி கடிகுவென்!
என்போல் பெருவிதுப்பு உறுக வேந்தே!
கொன்னும் சாதல் வெய்யோற்குத் தன்தலை
மணிமருள் மாலை சூட்டி அவன்தலை
ஒருகாழ் மாலை தான்மலைந் தனனே. (புறம் 291)
போருக்கு அழைத்தான் தலைவன். வீரர்கள் புறப்பட்டார்கள். அதில் ஒரு வீரனுடைய மனைவி காதலால் அவன் அணிந்திருந்த மாலையைத் தான் அணிந்துகொண்டு, தான் அணிந்திருந்த மாலையை அவனுக்கு அணிவித்து, வாழ்த்தி வழியனுப்பினாள். போருக்குச் சென்ற வீரன் தன் தலைவனைக் கண்டான். உணர்ச்சி மிகுதியால் தன் மாலையைத் தலைவன்மீது எறிய, அதை ஏற்றுக்கொண்ட தலைவன் பதிலுக்குத் தன் மாலையை அவன்மீது வீச, அதை ஏற்று அணிந்துகொண்டு போருக்குள் புகுந்த வீரன், வேலால் துளைக்கப்பட்டுக் களத்தில் மாண்டான்.
கணவன் பிணம் கிடந்த களத்துக்கு வந்த மனைவி பேசினாள்: “சிறுவர்களே, துடியர்களே, பாடல்வல்ல பாணர்களே, கொத்தித் தின்னச் சுற்றிச்சுற்றிவரும் இந்தப் பறவைகளை விரட்டுங்கள். ஒப்பாரி பாடி நானும் நரிகளை விரட்டுகிறேன். விழுந்துகிடக்கும் இந்த வெள்ளாடைக் கருப்பனுக்கு நான் மாலையோடு உள்ளமும் கொடுத்தேன். இன்று இவன் இறந்ததால் உள்ளம் அழிந்தேன். இவனோ தனக்கு மாலை கொடுத்த தலைவனுக்கு ஒரு பயனும் இல்லாமல் உயிரையே கொடுத்திருக்கிறான்.
மாலை மாற்றிய நான் நோவதைப் போலவே தலைவனும் நோகட்டும். நடுங்கட்டும்” அப்பிக்கொள்கிற இந்தத் துயர நிகழ்வு மாறாத மீள்நிகழ்வாகத் திரும்பத்திரும்ப நடக்க வேண்டுமா? திரும்பத்திரும்ப நிகழும் மீள்நிகழ்வு (recurrence) மேலை மரபிலோ கீழை மரபிலோ புதிய கருத்தொன்றும் இல்லை. நிகழ்வுகள் ஓரெழுத்தும் மாறாமல் நிகழ்ந்த வண்ணமே நிகழும் (eternally) என்பதுதான் புதியது.
உண்டதே உண்டும் உடுத்ததே உடுத்தும்
அடுத்துஅடுத்து உரைத்ததே உரைத்தும்
கண்டதே கண்டும் கேட்டதே கேட்டும்
கழிந்தன கடவுள் நாள்எல்லாம்...
- என்று பட்டினத்தார் பாடும்போது, அலுக்கச்சலிக்க அச்சுப்பிசகாமல் திரும்பத் திரும்ப நிகழும் மாறாத மீள்நிகழ்வைத்தான் சுட்டுகிறார் என்றாலும் அது அப்படி நிகழ வேண்டாம், மாறட்டும் என்று அதில் பிழைதிருத்தமும் கோருகிறார். கேள்விக்குத் திரும்புவோம்: பூதத்திடம் என்ன சொல்வீர்கள்? நிகழ்ந்தவண்ணமே நிகழட்டும் என்றா அல்லது திரும்ப நிகழும் வாய்ப்பிருந்தால், அதன் குறைநீக்கிச் செம்மையாக்கி நிகழ்த்தலாம் என்றா? தமிழே நிகழ்ந்தவண்ணமே நிகழாமல் செம்மையாக்கம் பெற்று நிகழும் செம்மொழிதானே!
- தொடர்புக்கு: arumugatamilan@gmail.com