சிறப்புக் கட்டுரைகள்

பறக்கும் சோப்புக்குமிழ் | நாவல் வாசிகள் 29

எஸ்.ராமகிருஷ்ணன்

ஒடியா இலக்கியத்தின் மகத்தான நாவல்களை எழுதியவர் என்று கோபிநாத் மஹாந்தி கொண்டாடப்படுகிறார். இவரது ‘தனாபானி’ என்ற நாவல் ‘சோறு தண்ணீர்’ என்ற பெயரில் பானுபந்த்தால் மொழியாக்கம் செய்யப்பட்டிருக்கிறது. ஞானபீட விருதைப் பெற்ற முதல் ஒடியா நாவலாசிரியர் கோபிநாத் மஹாந்தி.

வியாபார நிறுவனம் ஒன்றில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றும் பலிதத் என்ற இளைஞன், தனக்குப் பதவி உயர்வு கிடைப்பதற்காக மேற்கொள்ளும் தந்திரங்களைப் பேசுகிறது இந்த நாவல். நாவலின் தொடக்கத்தில் உயரதிகாரி வீட்டிற்குச் செல்கிறான் பலிதத். அங்கே துரையின் மனைவி, தனது தோட்டத்திலுள்ள ரோஜாச் செடிகளுக்குப் பன்றி எரு போட்டால் பெரிய பூக்களாக மலரும் என்கிறாள். இதற்காகப் பன்றி எரு சேகரிக்கப் போகிறான் பலிதத்.

அவள் இந்த வேலையைச் செய்யும்படி பலிதத்திடம் சொல்லவில்லை. ஆனால் துரையின் மனைவியைச் சந்தோஷப்படுத்தினால், அவள் தன்னைப் பற்றி உயர்வாகத் துரையிடம் சொல்வாள்; அது பதவி உயர்விற்கு வழிவகுக்கும் என்று எண்ணுகிறான். இதற்காக அலைந்து திரிந்து எருவை சேகரித்து வருகிறான். அவள் கண்முன்னால் செடிகளுக்கு எருவைப் போட வேண்டும் என்று நீண்ட நேரம் காத்திருக்கிறான்.

பலிதத்தைப் போன்றவர்கள் எல்லா அலுவலகத்திலும் இருக்கிறார்கள். அவர்கள் அதிகாரிகளைக் குளிரவைக்க எதையும் செய்யக்கூடியவர்கள். மான அவமானத்தையும் பற்றிக் கவலைப்படாதவர்கள். சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் உயரதிகாரியை புகழ்ந்து பேசி, தனது காரியத்தைச் செய்து கொள்வார்கள்.

பலிதத் இப்படி நடந்து கொள்வதோடு தனது மனைவி சரோஜினியும் அதற்குத் துணை நிற்க வேண்டும் என நினைக்கிறான். அவனுடன் வேலை செய்யும் ஏங்கட்ராவ் வித்தியாசமான மனிதன். அவன் அனாவசிய செலவு செய்யமாட்டான். மிகவும் கஞ்சம். இருட்டும் முன்பாகவே சாப்பிட்டு முடித்துவிடுவான். இதனால் விளக்கு எரியும் செலவு குறையும் என்பான்.

அலுவலகத்தில் யார், எதைச் செய்யச் சொன்னாலும் ‘‘யெஸ் சார்’’ என்றுதான் ஏங்கட்ராவ் சொல்லுவான். வருமானத்திற்குள் சிக்கனமாகச் செலவு செய்ய வேண்டும்; திட்டமிட்டு வாழ்வைக் கொண்டு செல்ல வேண்டும் என நினைப்பவன். அலுவலகத்தில் வேறு ஊழியர்கள் பதவி உயர்வு பெறும்போது அவன் பொறாமை கொள்வதில்லை. தனக்கு உரிய இடம் நிச்சயம் கிடைக்கும் என நம்புகிறான்.

ஏங்கட்ராவின் மனைவி அவனுக்கு உற்ற துணையாக நடந்து கொள்கிறாள். அவள் எப்போதும் நேர்த்தியாகப் புடவை அணிந்துகொண்டு, பூச்சூடி, சிரித்துப் பேசியபடி அன்பாக நடந்து கொள்கிறாள். அப்படித் தனது மனைவியும் நடந்துகொள்ள வேண்டும் எனப் பலிதத் ஆசைப்படுகிறான். அவளிடம் இதனை வற்புறுத்துகிறான்.

தங்கள் குடும்பத்திற்குப் பல்வேறு வசதிகள் வேண்டும் எனச் சரோஜினி ஆசைப்படுகிறாள். ஆனால் அவற்றைக் குறுக்குவழியில் அடைய வேண்டுமா எனக் கவலைப்படுகிறாள். அதிகாரத்துவச் சிவப்பு நாடா, ஊழல், அலுவலகப் போட்டி, பொறாமைகள் என மாறாத அலுவலக உலகினை நாவல் உண்மையாகச் சித்தரித்துள்ளது.

ஒவ்வொரு பெரிய மனிதனும் தனித்தனி அவதாரம்தான். சமயம் பார்த்து மகிழ்வித்தால் அதன் பலன் கிட்டுவது நிச்சயம் என்று பலிதத் உணர்ந்திருக்கிறான். “அதிகாரியை ‘சார்’ எனக் கூப்பிடும்போது அது ஒரு பேரரசனை அழைப்பதைப் போல மிகவும் பவ்வியமாக வெளிப்பட வேண்டும்” என்று சொல்கிறான் பலிதத்.

சமயத்திற்குத் தகுந்தாற்போல முகத்தில் பேதைமையை வெளிப்படுத்திக் கொள்வதும், தேன் தடவியதுபோலப் பேசுவதும், அறிவாளிபோலத் தன்னைக் காட்டிக் கொள்வதும், தனக்கு வேலை செய்ய வராவிட்டாலும், பிறரை மிரட்டி அதட்டி வேலை செய்ய வைக்கக்கூடிய திறமை கொண்டவர்களே அலுவலகத்தில் பதவி உயர்வு பெறுகிறார்கள். தானும் அப்படி நடந்து கொள்ள வேண்டும் என பலிதத் நினைக்கிறான்.

அவனது சாதுர்யம் மற்றும் அடிபணிதல் வழியே பதவி உயர்வு, அந்தஸ்து, வசதிகள் எல்லாமும் கிடைக்கின்றன. ஆனால் சொந்த வாழ்வில் ஏற்பட்ட கறையினை, அவமானங்களை அவனால் மறக்க முடியவில்லை. “மூங்கில் வளர்ந்தால் அதனுள் வெற்றிடமும் வளரத்தானே செய்யும்” என்கிறார் மஹாந்தி. பலிதத்தின் வளர்ச்சியை இதைவிடச் சிறப்பாகச் சொல்லிவிட முடியாது.

இதே அலுவலகத்தில் வேலை செய்யும் பனு புத்திசாலி. வேலையில் கெட்டிக்காரன். நன்றாக ஆங்கிலம் பேசுவான். ஆனால் மேலதிகாரிகளிடம் மனதில் உள்ளதை வெளிப்படையாகப் பேசிவிடுவான். அதிகாரிகளின் கருத்துக்கு எதிராக வாதிடுவான். வீட்டில் இருக்கும்போது பனு எப்போதும் புத்தகம் படித்துக் கொண்டிருப்பான். அதனைக் காணும் பலிதத், ‘வேலைக்குச்சேர்ந்த பிறகும் பனு ஏன் படித்துக் கொண்டேயிருக்கிறான்?’ என்று கோபித்துக் கொள்கிறான். ‘‘மேலதிகாரிகளைக் குஷிப்படுத்தினால் பதவி உயர்வு கிடைக்குமே’'என ஆலோசனை சொல்கிறான். பனு அதனை விரும்பவில்லை.

அவன் நேர்மையாக நடந்து கொள்கிறான். பலருக்கும் தன்னால் முடிந்த உதவிகளைச் செய்கிறான். எவரையும் முகஸ்துதி செய்வதில்லை. இப்படிப் பனு நடந்து கொள்வதைப் பலிதத்தால் புரிந்துகொள்ள முடியவில்லை. தன்னைப்போல நடந்து கொள்ளாதவர்களைப் பிழைக்கத் தெரியாத முட்டாள்கள் என்றே பலிதத் எண்ணுகிறான்.

பதவி உயர்வில் அவனுடன் மூன்று பேர் போட்டியிடுகிறார்கள். அவர்களைப் பற்றி தவறான செய்திகளை மேலதிகாரியிடம் சொல்லி வெறுப்பை உருவாக்குகிறான். முடிவில் அவன் விரும்பிய பதவி உயர்வு கிடைத்துவிடுகிறது. அதனைத் தனது ஆளுமையின் வெற்றியாக நினைக்கிறான். இனி அலுவலகத்தில் கைகட்டி கூனிக்குறுகி நிற்க வேண்டியதில்லை என எண்ணியதும் அவனது நடையில் மாற்றம் உருவாகிறது.

பதவி உயர்வுக்குப் பின்பாக அவனிடம் ஏற்படும் மாற்றங்களை மஹாந்தி சிறப்பாக விவரித்துள்ளார். அவனுக்குத் தனது பழைய குமாஸ்தா வாழ்க்கையை நினைத்தால் ஏளனமாக இருக்கிறது. ‘எத்தனை பேருக்குச் சல்யூட் அடித்திருக்கிறோம். இப்போது நமக்கு யாரோ சல்யூட் அடிக்கிறார்கள். நன்றாக அடிக்கட்டும். ஆபீஸர் என்பது வெறும் சொல் இல்லை. அது ஒரு தங்க கிரீடம்’ எனக் கர்வம் கொள்கிறான் பலிதத்.

அதிகாரப் படிநிலைகள், அதில் நடக்கும் போட்டிகள், திறமையில்லாதவன் அடையும் அவமானம் என எல்லாவற்றையும் பலிதத் சந்திக்கிறான். யாரோ ஊதிவிட்ட சோப்புக்குமிழை போல அவனது ‘தன்னிலை’ உப்பியிருந்தது என்கிறார் நாவலாசிரியர். நாவலில் பலிதத்தும், சரோஜினியும் தங்கள் வாழ்வின் இலக்கை அடைந்து விடுகிறார்கள். உயர் பதவி, செல்வம், மாளிகை வாசம், எடுபிடி ஆட்கள், கார் எனச் சகலமும் கிடைத்து விடுகின்றன. ஆனால், அவர்களுக்குக் குழந்தையில்லை. யாருக்காக இந்த வாழ்க்கை, யாருக்காக இவ்வளவு சம்பாத்தியம் என்ற மனக் குழப்பமும், குற்றவுணர்வும் ஏற்படுகின்றன.

தனது வாழ்க்கை வெற்றிகரமானதா அல்லது தோல்வியடைந்ததா என பலிதத் சுய விசாரணை செய்து கொள்கிறான். ஏமாற்றமே மிஞ்சுகிறது. அதுதான் சோப்புக்குமிழ் தன்னை உணரும் தருணம். ஆகாயத்தில் பறப்பதால் சோப்புக்குமிழ் பறவையாகி விடாது அல்லவா?

SCROLL FOR NEXT