இருபதாம் நூற்றாண்டின் மத்தியில் தொடங்கி ஏறக்குறைய அறுபது வருடங்களுக்கும் மேலாக எழுதி வந்திருக்கும் ராஜம் கிருஷ்ணன், தனக்கென்று தனித்துவமான பாதையை வகுத்துக் கொண்டார். புனைவை உணர்ச்சியின் வெளிப்பாடாக மட்டும் பார்க்காமல், புனைவுக்குள் இருக்கும் களமும் காரணமும் ஆராயப்பட வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். முற்றிலும் கற்பனைப் பொதியாக இருக்கும் புனைவை ஏற்றுக் கொள்ளாமல், எதார்த்தங்களைக் கண்டடைவதற்காகப் பயணப்பட்டுக் கொண்டே இருந்தார்.
அதற்கான மெனக்கெடலின் விளைவாகத்தான் புனைவினூடே ‘காலந்தோறும் பெண்’, ‘காலந்தோறும் பெண்மை’, ‘இந்திய சமுதாய வரலாற்றில் பெண்மை’, ‘உயிர் விளையும் நிலங்கள்’, ‘புதியதோர் உலகம் செய்வோம்’, ‘நட்புறவின் அழைப்பு’, ‘காலம்’ முதலிய அல்புனைவுகளை எழுதினார்.
‘காலந்தோறும் பெண்’ (1989) நூலில் வேதங்களை மையமாகக் கொண்டு ராஜம் கிருஷ்ணன் வைக்கும் வாதங்கள் நுணுக்கமானவை. பெண்ணின் வீழ்ச்சி ரிக் வேத காலத்திற்குப் பிந்தையது என்பதை ரிக் வேதத்திலிருந்து மேற்கோள் காட்டி நிறுவுகிறார். ரிக் வேதத்துக்கும் அதர்வண வேதத்துக்கும் இடைப்பட்ட காலத்தில் பெண்ணின் வீழ்ச்சி தொடங்கியதாகக் குறிப்பிடுகிறார். ரிக் வேதத்தில், பெண் குழந்தைகளை விரும்பாத மனநிலை பற்றிய பதிவு இல்லை; ஆனால் அதர்வண வேதத்தில், பிறக்கும் குழந்தை பெண்ணாக இருக்கக் கூடாது என்று வேண்டிக் கொள்ளும் செய்திகள் கிடைக்கின்றன என்கிறார். ரிக் வேதத்தில், பூப்பெய்திய பிறகே பெண்ணுக்கு திருமணம் நடந்திருக்கிறது; குழந்தைத் திருமணம் நடந்ததாகத் தகவல் இல்லை எனச் சுட்டுகிறார். இப்படியான சான்றுகளைக் கொண்டு பெண்ணின் பூர்விகச் சமூக இருப்பைக் காண்பதற்கான முயற்சியை அல்புனைவின் வழி அவரது வாழ்நாளெல்லாம் தொடர்ந்திருக்கிறார்.
மானுடத்தினுடைய அபரிமிதமான வளர்ச்சியின் விளைநிலமாக அறிவியலைச் சொல்லிக்கொண்டிருந்த போது ராஜம் கிருஷ்ணன், ‘பெண் வழுக்கி விழும் நிலையை நியாயப்படுத்துவதற்கு மட்டுமே அறிவியல் உதவியிருக்கிறது’ என்றார். அறிவியல் யுகத்தில் ஆணின் உலகம் ‘உயர்கல்வி’, ‘அறிவாற்றல்’, ‘ஆய்வுப் பயிற்சி’ என்பதாக இருக்க, பெண்ணின் உலகம் ‘பண்பாடு’, ‘கலாச்சாரம்’, ‘சமய மரபுகள்’ என்பதாக ஆக்கி வைக்கப்பட்டிருக்கின்றன என்று முரணை விளக்கினார்.
‘காலந்தோறும் பெண்’ நூலில் ராகுல சாங்கிருத்தியாயனை அதிகமாக மேற்கோள் காட்டும் ராஜம் கிருஷ்ணன், அவரின் ‘மனித குல வரலாறு’ குறித்த பார்வையில் தாமும் உடன்படுகிறார். வேத காலத்தில் பெண்களுக்குக் கால்நடைகளிடமிருந்து பால் கறக்கும் உரிமை இருந்தது பற்றிய தகவலைத் தருகிறார். ‘குறிஞ்சித்தேன்’ நாவலில் மலைவாழ் மக்களிடம் பால் கறக்கும் உரிமை கெளரவமானதாகவும், அதைத் தனது வாரிசுகளுக்குக் கைமாற்றி அளிக்கும் நிகழ்வு பண்பாட்டு நிகழ்வாக இருந்ததையும் விவரிப்பார்.
இப்படி வரலாற்று / ஆய்வு நூல்களின் வாசிப்பில் கிடைத்த தகவல்களையும், களஆய்வில் கிடைத்தத்தகவல்களையும் இணைத்துப் பார்த்து வரலாற்றின் மெய்ப்புள்ளியை அனுமானிக்கும் பழக்கத்தை ராஜம் கிருஷ்ணன் ஒருபோதும் விட்டுவிடவே இல்லை. நிறுவன அமைப்பாக ‘குடும்பம்’ உருவாகாத பண்டைய காலத்தில், பெண்ணுக்குரியதாக இருந்த உரிமைகள் காலந்தோறும் எப்படியெல்லாம் ஆணுக்குரியதாக மாற்றப்பட்டு வந்திருக்கின்றன என்பதைத் தக்கச் சான்றுகளுடன் விவரிக்கிறார். பெண்ணிடமிருந்து பூர்விகப் பண்பாட்டு உரிமையை கொஞ்சங்கொஞ்சமாகப் பறித்துக்கொண்டே வந்திருக்கும் சமூகம், 1960களில் பசுமைப்புரட்சியின் கண்டுபிடிப்புகளான புதிய விவசாய உத்திகள், செயற்கை உரங்கள்,இயந்திரமயமாக்கல் முதலியவற்றால் வேளாண்மையிலிருந்தும் பெண்ணை அப்புறப்படுத்திவிட்டது என்பதாகக் கூறுகிறார் (உயிர் விளையும் நிலங்கள், ப.எண்.65). காலந்தோறும் பெண்ணின் உழைப்பின் மதிப்பு இறக்கம் செய்யப்பட்டதற்கும், பெண்ணின் மீதான குடும்ப, சமூக வன்முறை அதிகரிப்புக்கும் தொடர்பிருக்கிறது என்பது அவரது துணிபு.
“நீதிநெறிக் கதைகளும், புராணங்களும் பெண்ணின் அறிவை மங்கச் செய்தன. கல்வியால் கிடைக்கும் மேன்மையான வாழ்க்கை குறித்த யோசனைகளை அழித்துவிட்டன. இன்று பெண், கல்வி கற்றிருக்கிறாள். ஆனால் மூடநம்பிக்கை, சடங்கு, பத்திரிகை, திரைப்படம், தொலைக்காட்சி ஆகியவற்றால் விதைக்கப்படும் பிற்போக்குக் கலாச்சாரத்தின் பிடியிலிருந்து அவள் விடுபடவில்லை” என்று பழைய இலக்கியங்கள் மீதான தனது பார்வையை பதிவு செய்துள்ளார்.
உடலும் கட்டுப்பாடும்: மக்கள் பெருக்கத்தைக் கட்டுப்படுத்த வேண்டுமானால் பெண்ணின் உடலைக் கட்டுப்படுத்த வேண்டும் என்று உருவாக்கப்பட்டிருந்த சிந்தனை மீது கடும் அதிருப்தி கொண்ட ராஜம் கிருஷ்ணன், 2005இல் ‘உயிர் விளையும் நிலங்கள்’ எழுதினார். அதில், 1950களில் தொடங்கப்பட்ட குடும்பக் கட்டுப்பாடு திட்டம் அமல்படுத்தப்பட்டு அரை நூற்றாண்டு கடந்த நிலையில், அந்தத் திட்டத்தால் பெண்கள் எதிர்கொண்ட சிக்கல்கள், குடும்ப வன்முறைகள், உடல் நலிவு, அகால மரணங்கள் போன்றவற்றை விரிவாகப் பதிவு செய்தார். மருத்துவர்களின் உதவியோடு பெண்ணின் உடல்கூறுகளையும், கர்ப்பத்தடைச் சாதனங்கள், மருந்துகளால் அவர்களுக்கு நேரும் மன, உடல் தொந்தரவுகளையும் புள்ளி விவரங்களோடு எழுதி, பல அதிர்ச்சி தரும் உண்மைகளைப் புலப்படுத்தினார். அரசு, சமயம், குடும்பம், சமூகம் என யாவற்றிலும் பெண்ணின் உடல் கையாளப்
படும் விதம் குறித்த கேள்விகள் அவரிடமிருந்து வெளிப்பட்டுக்கொண்டே இருந்தன.
பெண்சிசுக் கொலைத் தடுப்பு: பிரிட்டிஷ் இந்தியாவில் 1870இல் அமல்படுத்தப்பட்ட பெண்சிசுக் கொலைத் தடுப்புச் சட்டம் 1952இல் விலக்கிக் கொள்ளப்பட்டது. அடுத்த 30 ஆண்டுகளில் பெண்களின் சராசரி பிறப்பு விகிதம் குறைந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இந்தப் பின்னணியில் 1980களில் பெண்சிசுக் கொலை பற்றிய களத் தகவல்களைச் சேகரிக்கத் தொடங்கிய ராஜம் கிருஷ்ணன், அந்தத் தகவல்களின் அடிப்படையில் 1988இல் ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’ நாவலை வெளியிட்டார். அதன் பிறகு 1991இல் உருவான அறிவொளி இயக்கம், கிராமங்கள்தோறும் எழுத்தறிவித்தலோடு பல
முற்போக்குச் சிந்தனைகளைப் பரப்பியது. அதில் பெண்சிசுக் கொலைத் தடுப்புக்கான சிந்தனையும் இடம்பெற்றது. அரசால் 1992இல் ‘பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம்’, ‘தொட்டில் குழந்தை திட்டம்’ ஆகியன தொடங்கப்பட்டன. 1994இல் ‘கருத்தம்மா’ திரைப்படம் வெளியானது. தவிர, அதே காலகட்டத்தில் ‘மண்ணகத்துப் பூந்துளிகள்’ நாவல் பல கல்லூரிகளில் பாடமாக வைக்கப்பட்டது. அந்த வகையில், பெண்சிசுக் கொலைத் தடுப்புக்கான தொடர் செயல்பாடுகளில் தனது எழுத்தின் மூலமாக ராஜம் கிருஷ்ணன் பெரும் தாக்கம் செலுத்தியிருக்கிறார். ஓர் எழுத்தாளரால் சமூகத்தில் என்ன செய்துவிட முடியும் என்கிற கேள்விக்குச் சமகால பதிலாகத் திகழ்பவர் ராஜம் கிருஷ்ணன்.
அக். 20 - ராஜம் கிருஷ்ணன் நினைவு நாள்
நவ. 5 - நூற்றாண்டு நிறைவு